Published:Updated:

உங்கள் குழந்தைகளைப் பணக்காரர் ஆக்கும் ‘365 நாள்’ சேமிப்புச் சூத்திரம்!

சேமிப்புச் சூத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
சேமிப்புச் சூத்திரம்

கவர் ஸ்டோரி

நம்முடன் இருப்பவர்களில் பலரும் 40 வயதுக்குப் பிறகுதான் பணத்தின் தேவை பற்றி உணரத் தொடங்கு கிறார்கள். 24 வயதில் சம்பாதிக்கத்தொடங்கி 40 வயது வரை சேமிப்பு பற்றியோ, முதலீடு பற்றியோ பெரிய அளவில் அக்கறை கொள்ளாமல், வரும் வருமானத்தில் பெரும் பகுதியைச் செலவு செய்துவிடுகிறார்கள். 40 வயதுக்குப் பிறகு, பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பு, திருமணத்துக்கான செலவு ஆகியவற்றை உணரும்போதுதான் வேகமாகப் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். காலம் கடந்துவிட்ட நிலையில் பணம் சேர்க்க பதற்றத்துடன் அவர்கள் மேற்கொள்ளும் வழிகள் எதிர்பார்த்த வருமானம் தராமல் விடுவதுடன், சில திட்டங்கள் முதலுக்கே மோசம் செய்துவிடுபவையாக அமைந்துவிடுகின்றன. இதனால் சரியான வயதில் ஓய்வு பெற முடியாமல் போவதுடன், ஓய்வுக்காலத்தில் தேவையான அளவு பணம் கையில் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

என்.விஜயகுமார் 
நிதி ஆலோசகர், 
https://www.vbuildwealth.com/
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர்,  https://www.vbuildwealth.com/

இப்படிப்பட்ட வாழ்க்கையை ஒருவர் வாழக் காரணம், போதிய நிதிக் கல்வி (Financial Education) இல்லாமல் இருப்பதுதான். நம் நாட்டில் நிதி நிர்வாகம் தொடர்பான அடிப்படை அறிவானது பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்களிடம்கூட முழுமையாக இல்லை. இதனால் அவர்கள் சம்பாதித்த பணத்தையெல்லாம் ஏதோதோ திட்டங்களில் போட்டு, இழக்கின்றனர்.

இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு, பள்ளி மற்றும் கல்லூரி களில் மாணவர்கள் படிக்கும்போதே அவர்களுக்கு நிதிக் கல்வியைக் கற்றுத் தருவதுதான். இன்றைய நிலையில் சில சி.பி.எஸ்.இ பள்ளியில் நிதிக் கல்வி கற்றுத் தரப்படுகிறது. மற்ற பள்ளிகளில் அதுபற்றி எதுவும் கற்றுத் தரப் படுவதில்லை.

இந்த நிலையில் பிள்ளைகளுக்கு நிதிக் கல்வியைக் கற்றுத்தரும் வேலையைப் பெற்றோர்களே செய்ய வேண்டி யிருக்கிறது. நம் பிள்ளைகளை டாக்டர், இன்ஜினீயருக்குப் படிக்க வைக்கும் நாம், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்படிச் செலவு செய்ய வேண்டும், எப்படிச் சேமிக்க வேண்டும், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று சொல்லித் தருவதில்லை. நம் பிள்ளைகள் பெரும் பணக்காரனாக ஆக வேண்டும் என்று நாம் ஆசைப் படுகிறோமே தவிர, அதற்கான வழிகளை அவர்களுக்குச் சொல்லித் தருவதில்லை. பிள்ளைகளிடம் நல்ல நிதிப் பழக்கங்கள் வளர பெற்றோர் வழிகாட்ட வேண்டும். இதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

உங்கள் குழந்தைகளைப் பணக்காரர் ஆக்கும் ‘365 நாள்’ சேமிப்புச் சூத்திரம்!

உழைத்துச் சம்பாதிக்கக் கற்றுக் கொடுங்கள்...

உங்கள் பிள்ளைகளுக்கு உழைத்துச் சம்பாதிக்கும் வழி களைக் கற்றுக்கொடுங்கள். தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, வீடு, பைக், கார் போன்றவற்றை சுத்தப்படுத்துவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைக் கொடுத்து, அதற்கு சன்மானமாகப் பணம் கொடுங்கள். இப்படிச் செய்வதன் மூலம், உழைத்தால் பணம் கிடைக்கும் என்கிற எண்ணம் அவர்களுக்குள் வரும். இப்படிச் சம்பாதிக்கும் பணத்துடன், நீங்கள் தரும் பாக்கெட் மணியில் ஒரு பகுதியை ஒரு உண்டியலில் சேர்க்கக் கற்றுக்கொடுங்கள்.

பணத்தின் மதிப்பு...

உங்கள் பிள்ளைகள் பெரிய பணக்காரராக ஆக வேண்டும் என்று நினைக்கும் நீங்கள், அவர்களுக்கு பணத்தின் மதிப்பை சொல்லிக்கொடுங்கள். பணத்தின் கால மதிப்பு (Time Value of Money) என்றால் என்ன என்பதை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். அது என்ன, பணத்தின் கால மதிப்பு?

20 ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய்க்குக் கூடை நிறைய காய்கறிகள் வாங்க முடிந்தது. ஆனால், இன்று அதே 100 ரூபாய்க்கு ஒரு சிறிய பையில் கொள்கிற அளவுக்கே வாங்க முடிகிறது. இதன் அர்த்தம், 100 ரூபாயின் மதிப்பானது இன்றைய மதிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவு. அடுத்துவரும் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இப்போது இருப்பதைவிட மிகக் குறைவாகவே இருக்கும். என்றாலும் 100 ரூபாய், 100 ரூபாய்தான்.

இதிலிருந்து என்ன தெரிகிறது. காலம் செல்லச் செல்ல பணத்தின் மதிப்பு குறையும் என்பதே. பணத்தை முதலீடு செய்து வருமானம் ஈட்டுவதன்மூலம் அல்லது மூலதன மதிப்பை அதிகரிப்பதன் மூலம் பணத்தின் மதிப்பைக் குறையாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும். இதன்மூலம் நீங்கள் அன்று வாங்கிய அளவுக்கு இன்றும் பொருள்களை வாங்க முடியும்.

ஆண்டு முழுவதும் சேமிப்பு...

பணத்தின் மதிப்பை பிள்ளைகளுக்கு உணரச் செய்ய விளையாட்டு போல சில விஷயங்களை அவர்களைச் செய்ய வைக்கலாம். வீட்டுக்கு அருகில் இருக்கும் கடைகளுக்கு அவர்களை அனுப்பி, அவசரத் தேவைக்கான பொருள்களை வாங்கிவரச் சொல்லலாம். மீதம் கொண்டு வரும் சில்லறை நாணயங்களை உண்டியலில் சேமிக்கப் பழக்கலாம்.

அடுத்து, புதிய ஆண்டில் முதல் நாளில் ரூ. 1, இரண்டாம் நாளில் ரூ.2, மூன்றாம் நாளில் ரூ.3 என்று தொடங்கி, வருடத்தின் கடைசி நாளில் ரூ.365 என ஒரு உண்டியலில் சேமிக்கப் பழக்குங்கள். 1 முதல் 365 கட்டங்களை ஒரு பெரிய அட்டையில் போடச் சொல்லி, அந்தந்த தினத்தில் அதற்குரிய உண்டியலில் பணத்தைப் போட வைத்து, கட்டத்தில் ‘டிக்’ அடிப்பதன்மூலம், எந்தவொரு நாளையும் தவறவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு ‘எக்ஸெல் ஷீட்’டை உருவாக்கி, அதிலும் நாள்களின் எண்ணிக்கையைக் குறித்து வைக்கலாம்.

இதைத் தினமும் செய்வது ஒரு வழிமுறை; ஆனால், தினமும் செய்தாக வேண்டுமா என்றால், இல்லை. முதல் தினம் ரூ.1, இரண்டாவது தினம் ரூ.2-வை உண்டியலில் போட்டபின், திடீரென ரூ.10 கிடைத்தால், அதை உண்டியலில் போட்டுவிட்டு, 10-வது கட்டத்தை ‘டிக்’ செய்துவிடலாம். அல்லது ரூ.100 கிடைத்தால், அதை உண்டியலில் போட்டு விட்டு, 100-வது கட்டத்தை ‘டிக்’ செய்துவிடலாம்.

ஒரு நாளைக்கு ஒரு கட்டத்தைத்தான் நிரப்ப வேண்டும் என்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஓரிரு தினங்களில் உண்டியலில் போட பணம் இல்லை எனில், அடுத்து வரும் தினங்களில் சேர்த்து போட வேண்டும். இப்படித் தொடர்ந்து உண்டியலில் சேமித்து வரும்போது, வருடக் கடைசியில் எவ்வளவு தொகை சேர்ந்திருக்கும் தெரியுமா?

உங்கள் குழந்தைகளைப் பணக்காரர் ஆக்கும் ‘365 நாள்’ சேமிப்புச் சூத்திரம்!

ஜனவரி மாதத்தில் 31 நாள்களில் ரூ.496 சேர்ந்திருக்கும்; டிசம்பர் மாதத்தில் ரூ.10,850 என 12 மாதங்களில் ரூ.66,795 சேர்ந்திருக்கும். (அட்டவணை 1-ஐ பாருங்கள்)

இந்தப் பண விளையாட்டை ஆண்டு ஆரம்பத்தில்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அன்றைக்கே ஆரம்பிக்கலாம். நீங்கள் பணம் சேர்க்க ஆரம்பிக்கும் தேதி யிலிருந்து 365 என்பதைக் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். பிள்ளையின் பிறந்த நாள் அன்று பலரும் பணம் கொடுக்கத் தொடங்குவார்கள் என்பதால், அன்றைக்கே ஆரம்பித்து விடுவதுகூட நல்லது.

இந்த முறையில் ஆரம்பத்தில் சிறிய தொகையாக இருக்கும்போது, தினமும் பணம் சேர்த்துவிட முடியும். ஆனால், தொகையின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க கஷ்டமாகிவிடுமே என்கிறவர்கள், முதலில் ரூபாய் கணக்கில் சேர்க்காமல், முதல் நாள் 50 பைசா, இரண்டாம் ரூ.1, மூன்றாம் நாள் ரூ.1.50, நான்காம் நாள் ரூ.2 என்றுகூட சேர்க்கத் தொடங்கலாம்.

இந்த விளையாட்டின் நோக்கம், பிள்ளைகள் பணம் சேர்ப்பதல்ல. பணம் சேமிக்கும் பழக்கத்தைப் பிள்ளைகளிடம் கொண்டுவருவதுதான்.

உங்கள் குழந்தைகளைப் பணக்காரர் ஆக்கும் ‘365 நாள்’ சேமிப்புச் சூத்திரம்!

உண்டியல் டு வங்கி...

சரி, பணத்தைச் சேமிக்கும் பழக்கம் உங்கள் பிள்ளைகளுக்கு வந்துவிட்டது. அவர்கள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, அவர்கள் பெயரில் ஏதாவது ஒரு வங்கியில் ஜூனியர் சேமிப்புக் கணக்கைத் தொடங்குங்கள். உண்டியலில் அவர்கள் சேர்த்த பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துங்கள். பணம் செலுத்து வது, திரும்ப எடுப்பது தொடர் பான விண்ணப்பங்களை அவர்களையே பூர்த்தி செய்யச் சொல்லுங்கள். ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் போடும் மற்றும் எடுக்கும் வசதி இருந்தால், அதையும் சொல்லிக் கொடுங்கள். இப்படிச் சிறு வயதிலே வங்கிக் கணக்கைக் கையாள தெரிந்திருக்கும் பட்சத்தில், பிற்காலத்தில் கல்விக் கடன் வாங்க வங்கிகளை அணுகுவது சுலபமாக இருக்கும். மேலும், நீண்ட நாள் வாடிக்கை யாளர், பணத்தைச் சேமிக்கும் நல்ல பழக்கம் இருப்பவர் என்பதால், கல்விக் கடன் எளிதில் கிடைக்க வாய்ப்புண்டு.

வட்டி என்றால் என்ன?

உண்டியலில் நாம் சேர்த்த பணமே இருக்கும். ஆனால், வங்கிக் கணக்கில் நாம் பணம் சேர்த்து வைக்கும்போது நமக்கு வட்டி கிடைக்கும். இந்த வட்டி எப்படிக் கிடைக்கிறது என்பதை பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்வது அவசியம். இதற்கு வட்டி என்றால் என்ன என்பதையும் விளக்கிச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காலாண்டு, அரையாண்டு அல்லது முழு ஆண்டில் எவ்வளவு வட்டி கிடைத்திருக் கிறது என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் சேமித்த பணம் எப்படி வளர்கிறது என்பதை அவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். இதனால், இன்னும் அதிகமான பணம் சேர்க்க வேண்டும் என்கிற உந்துதல் அவர்களிடம் உருவாகும்.

கூட்டு வட்டியின் வளர்ச்சி...

சாதாரண வட்டியில் (Simple Interest), அசலுக்கு மட்டுமே வட்டி வருமானம் கிடைக்கும். அதாவது, நீங்கள் ஆரம்பத்தில் முதலீடு செய்த தொகைக்கு மட்டுமே வட்டி கிடைக்கும். கூட்டு வட்டியில் அசல் மற்றும் சேர்ந்த வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். இதனால், கூட்டு வட்டி முறையில் வட்டிக்கு வட்டி போடப்படுவதால், தொகை வேகமாகவும் அதிகமாகவும் பெருகுகிறது.

உங்கள் குழந்தைகளைப் பணக்காரர் ஆக்கும் ‘365 நாள்’ சேமிப்புச் சூத்திரம்!

அட்டவணை 2-ஐ கவனி யுங்கள். ஆரம்ப முதலீடு ரூ.1,000 எவ்வாறு ரூ.31,409 ஆகப் பெருகு கிறது என்பதை விளக்குகிறது. வட்டி மறுமுதலீடு செய்யப்படும் போது, வட்டிக்கு வட்டி கிடைக் கிறது. அசல் + முதல் ஆண்டின் வட்டி கூட்டாக இரண்டாம் ஆண்டுக்கான அசலாக மாறுகிறது. மேலும், இரண்டாம் ஆண்டின், அசல் + வட்டி அது மூன்றாவது ஆண்டின் அசலாக மாறுகிறது என்பதைப் பிள்ளைகளுக்கு நாம் புரிய வைத்துவிட்டால், அவர்கள் பணக்காரர் ஆவதற்கான அடிப்படையை நாம் ஆழமாக அமைத்துத் தந்த மாதிரி ஆகிவிடும்.

இதன்மூலம் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான பின்பு, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தைக் கூட்டு வட்டியில் வளரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை உணர்வார்கள். பிற்காலத்தில் அவர்கள் பெரும் பணக்காரராக மாறுவதற்கு இந்தப் புரிந்து கொள்ளல் அவர்களுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கும். இந்த உண்மையை இன்றைக்குப் பலரும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான், ஏழையாகவே இருக்கிறார்கள்!

பரிசைப் பணமாகக் கொடுங்கள்...

பிள்ளைகளுக்குப் பிறந்த நாள், பண்டிகைகளின்போது அதிக விலையுள்ள ஆடைகள், ஆபரணங்களைப் பரிசளிப்பதற்கு பதில் அவர்களுக்குத் தேவைக்கு ஏற்ற ஆடைகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, மீதித் தொகையை அவர்களுக்கு பணமாகக் கொடுத்து சேமிக்க வைக்கலாம்.

பிள்ளைகள் உண்டியல் உடன் இருக்கும் காட்சி, சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்க வங்கிக்குச் சென்றிருக்கும் காட்சி, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்துடன் இருக்கும் காட்சி ஆகியவற்றை ‘வாட்ஸ்அப்’ ஸ்டேடஸ் ஆக வைக்கலாம். இதைப் பார்க்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பிள்ளைகளும் இப்படி சேமிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

பிள்ளைகள் சேர்க்கும் பணத்தை எஃப்.டி அல்லது மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் ரிஸ்க் இல்லாத முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வைத்து பணம் பெருகுவதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

இப்படிச் செய்யும்போது பிள்ளைகள் சேமிக்கும் பழக்கத்தையும், முதலீட்டின் அடிப்படைகளையும் நன்கு கற்றுக்கொள்வார்கள். இதன்மூலம் பணத்தின் மதிப்பை அறிந்துகொள்வார்கள்.

இதனால் படித்து முடித்து வேலைக்குச் சேரும் காலம் மற்றும் திருமணமாகி குடும்பமாக இருக்கும் காலத்தில் கடன் வாங்கும் பழக்கம் வராது. எந்தப் பொருளையும் பணம் சேர்த்துதான் வாங்குவார்கள். எந்தச் செலவையும் திட்டமிட்டுச் செய்பவர்களாக இருப்பார்கள்.

இந்த விஷயங்களை எல்லாம் உங்கள் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்லி வளர்த்தீர்கள் எனில், உங்கள் பிள்ளைகள் பணக்காரராக ஆவது நிச்சயம் என்பதில் சந்தேகமில்லை!