Published:Updated:

ஸ்கோர்ஸ் குறைதீர்க்கும் வழிமுறை... ஏன், எதற்கு, எப்படி..?

புகார்
பிரீமியம் ஸ்டோரி
புகார்

புகார்

ஸ்கோர்ஸ் குறைதீர்க்கும் வழிமுறை... ஏன், எதற்கு, எப்படி..?

புகார்

Published:Updated:
புகார்
பிரீமியம் ஸ்டோரி
புகார்

நாணயம் விகடன் கடந்த இதழில் ‘பங்குச் சந்தை, ஃபண்ட், காப்பீடு, தங்கம்... எந்தப் புகார், எங்கு தெரிவிக்க வேண்டும்?’ (https://bit.ly/38wogan) என்கிற கட்டுரையை வெளியிட்டிருந்தோம். இதைப் படித்த பல வாசகர்கள், செபி அமைப்பின் ஸ்கோர்ஸில் எப்படி புகார் செய்வது என்று கேட்டிருக்கிறார்கள். எனவே, அதுபற்றி இப்போது பார்ப்போம்.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ்  நிறுவனர்,  www.gururamfinancialservices.com

செபி புகார் நிவாரண அமைப்பு - ஸ்கோர்ஸ்

இந்தியப் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் துறை, கமாடிட்டி வர்த்தகம் உள்ளிட்டவற்றை நெறிமுறைப்படுத்தும் செபி (SEBI) அமைப்பு, இணையதளம் மூலம் பங்கு, ஃபண்ட் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் புகார்களை நிவர்த்தி செய்ய ஸ்கோர்ஸ் (SCORES) என்ற முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இது 2018 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ‘Sebi COmplaints REdress System’ என்பதன் சுருக்கம்தான் SCORES.

முதலீட்டாளர்களின் குறைபாடுகள், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கமாடிட்டி உள்ளிட்ட பத்திரச் சந்தை தொடர்பானவை, சம்பந்தப்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனம் அல்லது பதிவு செய்யப்பட்ட இடைத்தரகர் ஆகியோரை நேரடியாக அணுகியும் தீர்க்கப் படாமல் இருக்கும் பிரச்னைகளுக்கு இந்த ஸ்கோர்ஸ் மூலம் தீர்வு காண முடியும்.

முதலீட்டாளர் பிரச்னையைச் சந்திக்கும் போது அவர் முதலில் தன் புகார் தொடர்புடைய நிறுவனம், பங்குச் சந்தை, பங்குத் தரகர், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களை முதலில் தொடர்புகொள்ள வேண்டும். முதலீட்டாளருக்கு வழங்கப்பட்ட தீர்வில் திருப்தியில்லை எனில், அவர் தனது புகாரை செபி அமைப்பின் ஸ்கோர்ஸில் தாக்கல் செய்யலாம்.

ஸ்கோர்ஸ் குறைதீர்க்கும் வழிமுறை... ஏன், எதற்கு, எப்படி..?

யார் மீதெல்லாம் புகார் செய்ய முடியும்?

 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பதிவாளர் & பரிமாற்ற முகவர்கள் (Registrar & Transfer Agents - RTAs).

 பங்குத் தரகர்கள் / பங்குச் சந்தைகள்.

 வைப்பகப் பங்கேற்பாளர்கள் (Depository participants).

 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்.

 போர்ட்ஃபோலியோ மேலாளர்கள்.

 பிற நிறுவனங்கள் - கூட்டு முதலீட்டுத் திட்டம் (Collective investment scheme), வணிக வங்கியாளர் (Merchant banker), தரக்குறியீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (Foreign institutional investor).

எப்படி புகார் செய்வது?

ஸ்கோர்ஸில் புகார் அளிக்க, https://scores.gov.in/scores/Welcome.html -ஐ அணுக வேண்டும். உங்களிடம் ஏற்கெனவே இந்த இணைய தளத்துக்குள் நுழைவதற்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் (User Name and Password) இருந்தால் ‘பதிவு / புகார்களைப் பதிவு செய்ய ‘Register/ login to lodge complaints’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். நீங்கள் முதல் முறை பயனர் எனில், இதுவரை பதிவு எதுவும் செய்யவில்லை எனில், ‘Not Registered yet?’ என்ற தலைப்பில் ‘Register Here’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்யுங்கள். பின்னர், பின்வரும் விருப்பங்களில் நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் / கூட்டு முதலீட்டுத் திட்டங்கள் / பிற குறிப்பிட்ட நிறுவனங்கள் ஆகியவையாகும். பிரிவைத் தேர்வு செய்து, விவரங்கள் உள்ளீடு செய்தவுடன், உங்கள் புகாரைத் தாக்கல் செய்ய வேண்டும்.

உங்கள் புகார் செபி அமைப்பின் அதிகாரிகளால் ஆராயப்படும். இந்தப் புகார் அதன் வரம்புக்குள் வருகிறதா என்று உறுதி செய்யப்படும். முதலீட்டாளரின் புகார் சரி என்றால், தொடர்புடைய நிறுவனம் எழுத்துப் பூர்வ பதிலை 30 நாள்களில் அனுப்பும்.

புகாருக்கான ஆதார ஆவணங்கள் இணைப்பு

ஆதார ஆவணங்களை 2 MB வரை, PDF வடிவத்தில் மட்டுமே இணைக்க முடியும். ஒவ்வொரு பிரிவுக்கும் தர வேண்டிய விவரங்கள் 2 MB-க்குமேல் இருந்தால், அதைச் சுருக்கிப் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகாரைத் தாக்கல் செய்யும்போது, பிரத்யேகப் பதிவு எண் உருவாக்கப்படும். இது எதிர்காலத் தகவல்தொடர்புக்குப் பயன்படுத்தப் படலாம். புகார் பதிவு எண், புகார் பதிவு படிவத்தில் சேர்க்கப்பட்ட முதலீட்டாளரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும். முதலீட்டாளர் அவரின் ஸ்கோர்ஸ் கணக்கில் உள் நுழைந்து, அவரின் புகாருக்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக் கிறது என்பதைப் பார்க்கலாம்.

ஸ்கோர்ஸ்-ல் புகார்களாகக் கருதப் படாத விஷயங்கள்...

 தெளிவற்ற அல்லது முழுமையற்ற புகார்கள்.

 ஆதாரம் இல்லாமல் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்.

 பரிந்துரைகளை வழங்குதல் அல்லது வழிகாட்டுதல் / விளக்கம் கேட்பது.

 வர்த்தகம் நடைபெறாத நிறுவனப் பங்குகள், பணமாக்க முடியாத பங்குகள் குறித்து விளக்கம் கேட்பது.

 நிறுவனங்களின் பங்கு களின் வர்த்தக விலையில் (மிகவும் இறங்கியுள்ள நிலையில்) திருப்தி இல்லாமல் இருப்பது.

 பட்டியலிடப்படாத பங்குகள்.

 வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட், வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஃபிக்ஸட் டெபாசிட்.

 காப்பீடு நிறுவனங்கள், காப்பீட்டுத் திட்டங்கள், இன்ஷூரன்ஸ் புரோக்கர்கள் மற்றும் ஏஜென்டுகள்.

 வீட்டு வசதி நிறுவனங்கள்,

முதலீட்டாளர்கள் தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண் பதில் இனி சிக்கல் இருக்காதுதானே?

உதவிக்கு அழைக்க..!

ஸ்கோர்ஸில் புகார் செய்வது தொடர்பான ஏதாவது சந்தேகம் இருந்தால் கட்டணமில்லாத 1800 266 7575 அல்லது 1800 22 7575 எண்களில் கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் 022-2644 9188, 022- 2644 9199, 022- 4045 9188, 4045 9199 எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் அல்லது sebi@sebi.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பலாம்.