நடப்பு
Published:Updated:

பணக்கஷ்டம் இல்லாத ஓய்வுக்காலத்துக்கு... பளிச் 8 கேள்விகள்! நிதி ஆலோசகர்களிடம் கேளுங்கள்...

ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓய்வுக்காலம்

RETIREMENT

கா.ராமலிங்கம், இணை நிறுவனர், Holisticinvestment.in

பணி ஓய்வுபெற்ற நான்கு பேரில் ஒருவர் 90 வயது வரை வாழக்கூடும். இதற்காக, ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வாழும் சூழ்நிலை இருப்பதால், அதற்கு ஏற்ற அதிக ஓய்வூதிய தொகுப்பு நிதிக்கு (கார்பஸ்) அவர் திட்டமிட வேண்டும். ஓய்வூதியத் திட்டமிடல் என்பது மிக முக்கிய மானது. ஆனால், நம்மில் பெரும்பாலோர் ஓய்வுக்காலத்துக்கு சரியாகத் திட்டமிடவில்லை.

முறையான நிதித் திட்டம் இல்லாதவர்கள், ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, லைஃப் ஸ்டைலை மாற்றி, எளிதான வாழ்க்கைக்கு மாற வேண்டும். தேவையான செலவுகளுக்கு பணம் இல்லாத சூழ்நிலை ஏற்படும். மேலும், ஓய்வுக்காலம் என்பது கவலை நிறைந்ததாக மாறக்கூடும். இதைத் தவிர்க்க, ஓய்வூதியத் திட்டமிடல் மேற்கொள்ளும் ஒருவர் கீழ்க்காணும் எட்டுக் கேள்விகளை அவரது நிதி ஆலோசகர்களிடம் அவசியம் கேட்க வேண்டும்.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
Holistic
investment.in
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், Holistic investment.in

1. எவ்வளவு தொகுப்பு நிதி தேவை?

தொகுப்பு நிதி (Corpus) என்பது ஓர் இலக்கை நிறைவேற்ற தேவைப்படும் மொத்த தொகையைக் குறிக்கும். உங்களின் தற்போதைய வயது, ஓய்வு பெறும் வயது, ஆயுள் காலம், தற்போதைய மாதச் செலவுகள், எதிர்பார்க்கப்படும் பணவீக்கம், முதலீட்டின் மூலம் எதிர்பார்க்கப் படும் வருமானம் மற்றும் ஓய்வுக் காலத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படை யில் உங்கள் தொகுப்பு நிதி கணக்கிடப் பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தொகுப்பு நிதி ரூ.1 கோடி வேண்டும் எனில், நீங்கள் விரும்பிய வாழ்க்கைமுறை மற்றும் ஓய்வூதிய இலக்குகளைப் பூர்த்தி செய்ய, ஓய்வுக்குப் பிறகு வழக்கமான மாத வருமானத்தைப் பெற இந்தத் தொகை போதுமானதாக இருக்கும். உங்கள் தொகுப்பு நிதிக்கான திட்டத்தில் உங்கள் துணைவரையும் (கணவன் / மனைவி) சேர்க்க வேண்டும். அப்படிச் செய்யும்போது ஓய்வூதியத் தொகுப்பு நிதி அதிகரிக்கும். அதற்கேற்ப முதலீட்டை அதிகரிக்க வேண்டிவரும்.

2. தொகுப்பு நிதியை அடைய என்ன வழி..?

ஓய்வுக்காலத் தேவைக்காக நீங்கள் சேர்க்க வேண்டிய மொத்தத் தொகை இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தத் தொகுப்பு நிதியை உருவாக்கும் முதலீட்டு யுக்தியை நிதி ஆலோசகரிடம் கேட்க வேண்டும். தொகுப்பு நிதி, நிறைவேறுவது நிதித் திட்டமிடலைப் பொறுத்திருக்கிறது. ஓய்வூதியத்துக் கான உங்கள் முதலீட்டு யுக்தி உங்கள் தற்போதைய வாழ்க்கை முறையுடன் - வருமானம், செலவுகள், சேமிப்பு, பணவீக்கம், கடன்கள் மற்றும் சொத்துகளுடன் இணைந்து போவதாக இருக்க வேண்டும்.

உங்கள் நிதி ஆலோசகர், முதலீட்டில் உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் ஓய்வூதியத் தொகுப்பு நிதியை அடைய இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கிறது என்பதன் அடிப்படையில் ஒரு முதலீட்டு யுக்தியை உருவாக்கித் தருவார். இது ஓய்வு பெற்ற பிறகு, உங்கள் செலவுகள் அனைத்தையும் ஈடுகட்டும் விதமாக இருக்கும். ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டத்தை முடிந்தவரை விரைவில் இளம் வயதிலேயே, வேலைக்குச் சேர்ந்த உடனே தொடங்குவது சிறந்தது. ஒருவரின் 30 மற்றும் 40 வயதுகளில் ஓய்வுக்காலத் திட்ட மிடலை அதிக சிக்கல் இல்லாமல் சுலபமாகத் திட்டமிடலாம்.

வருமானத்திலிருந்து மாதம் எவ்வளவு முதலீடு செய்வது, தேவையான தொகுப்பு நிதியை அடைய இப்போது செலவை எவ்வளவு குறைக்க வேண்டும், ஊக்கத் தொகை போன்ற உபரி வருமானத்தைப் புத்திசாலித்தனமாக எங்கே முதலீடு செய்வது, வருமான வரி மற்றும் இலக்கை மனதில்கொண்டு முதலீட்டிலிருந்து பணத்தை எப்போது எடுக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளை நிதி ஆலோசகரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.

3. கடன்களை எப்படிக் கையாள வேண்டும்?

உங்களுக்கு தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், கார் கடன், வீட்டுக் கடன் போன்றவை இருக்கக்கூடும். இந்தக் கடன்களில் எதை முதலில் அடைக்க வேண்டும் என நிதி ஆலோசகரிடம் கேளுங்கள். பொதுவாக, வீட்டுக் கடனுக்கு வட்டி குறைவாக இருக்கும். கூடவே திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது என்பதால், இதர வட்டி அதிகமான கடன்களை முதலில் கட்டுவது லாபகரமாக இருக்கும். தேவைப்பட்டால் மட்டுமே கடன் வாங்க வேண்டும். பொதுவாக, ஒருவரது வருமானத்தில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் கடன்கள் இருக்கக் கூடாது.

ஓய்வுக்காலம்
ஓய்வுக்காலம்

4. போர்ட் ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா?

உங்கள் தற்போதைய முதலீடுகள் கடந்த ஆறு மாதங்களாகச் சிறப்பாகச் செயல்படவில்லை எனில், உங்கள் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க நிதி ஆலோசகர் வழிகாட்டுவார்.முதலீட்டை இலக்குகளுடன் இணைக்க வேண்டும். எனவே, எதிர்பார்த்தபடி வருமானம் வராவிட்டால், உங்கள் இலக்குகளில் நீங்கள் சமரசம் செய்ய வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க முதலீட்டுக் கலவையை மாற்றியமைக்க வேண்டிவரும். இங்குதான் முதலீட் டாளர்கள் உணர்ச்சிக்கு உள்ளாகி மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அந்த நேரத்தில் முதலீட்டு ஆலோசரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகிறது. அவர் தன் அனுபவத்திலிருந்து வழிகாட்டுவார்.

நிதி ஆலோசகர், உங்களுடைய தற்போதைய அனைத்து முதலீடு களையும் (காப்பீட்டுத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் போன்றவை) ஆராய்ந்து, இந்த முதலீடுகள் உங்கள் நிதி இலக்கு களை எந்தளவுக்கு அடைய உதவும் என்பதைக் கண்டு பிடிப்பார். உங்கள் முதலீடுகளின் மோசமான வருமானத்தைச் சரிசெய்ய, சிறந்த மாற்று இருந்தால், உங்கள் போர்ட் ஃபோலியோவைப் புதுப்பிக்க நிதி ஆலோசகர் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்.

5. பணி ஓய்வுக்காலத்ததில் மருத்துவக் காப்பீடு தேவையா?

பணி ஓய்வுக்குப் பிறகு, நீங்கள் புதிதாக மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்தால், காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் உடல்நிலை யின் அடிப்படையில் அதிக பிரீமியம் வசூலிக்கக்கூடும் அல்லது பாலிசி மறுக்கக்கூடும். மேலும், பாலிசி எடுக்கும் பட்சத்தில் முக்கிய நோய்களுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும்.

ஓய்வு பெறுவதற்கு முன் நீங்கள் மருத்துவக் காப்பீடு எடுக்கவில்லை என்றால், ஓய்வுக்குப் பிறகு, எந்தக் காப்பீட்டு பாலிசியை எடுக்க வேண்டும் என்று நீங்கள் நிதி ஆலோசகரிடம் கேட்கலாம். பொதுவாக, மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது பிரீமியம், எந்த மருத்துவச் சிகிச்சை விலக்கு, புதுப்பித்தல், கோ பேமென்ட், அதிகபட்ச கவரேஜ் வரம்பு ஆகிய அடிப்படை விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

6. பணி ஓய்வுக்காலத்தில் அவசரகால நிதி வேண்டுமா?

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், உங்களுக்கு வழக்கமான மாதச் சம்பளம் வராது. அதே நேரத்தில், உங்கள் மாதச் செலவுகள் அப்படியே இருக்கக்கூடும். அது ஆண்டு தோறும் அதிகரிக்கும். தீவிர உடல்நலப் பிரச்னை அல்லது ஏதேனும் முக்கியமான குடும்பச் செலவு போன்ற திடீர் பணத் தேவையை ஈடுசெய்ய உங்கள் மாதச் செலவைப்போல 3 - 6 மடங்கு தொகையை அவசரக் கால நிதியாக வைத்திருக்க உங்கள் நிதி ஆலோசகர் அறிவுறுத்துவார். எதிர்பார்க்கக் கூடிய உங்களின் மருத்துவச் செலவுகளுக்காக அவசரகால நிதி அவசியம் இருக்க வேண்டும். குறிப்பாக, கண்புரை அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் போன்ற வற்றைக் குறிப்பிடலாம்.

உங்கள் வழக்கமான மாதச் செலவுகளுக்கு இந்த அவசரக் கால நிதியைப் பயன்படுத்தக் கூடாது. திடீர்த் தேவை ஏற்பட்டால் விரைவாக பணத்தை எடுக்கக்கூடியதாக அவசரக் கால நிதியை முதலீடு செய்ய உங்களுக்கு நிதி ஆலோசகர் உதவி செய்வார். பொதுவாக, சுமார் 25% தொகையை உடனே எடுக்கும் படியாக வங்கிச் சேமிப்பு கணக் கிலும், சுமார் 25% தொகையை லிக்விட் ஃபண்டிலும், மீதியை எஃப்டி.டி, குறுகியகால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களிலும் முதலீடு செய்ய உங்கள் நிதி ஆலோசகர் வழிகாட்டுவர்.

7. பணி ஓய்வுக்குப் பிறகு வருமான வரியை மிச்சப்படுத்துவது எப்படி?

ஓய்வுக்காலத் திட்டமிடலில் அடுத்த முக்கியமான அம்சம், வருமான வரியை மிச்சப்படுத்த திட்டமிடுவதாகும். பல முதலீட்டுத் திட்டங்கள் குறிப்பாக, 60 அல்லது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரிச் சலுகைகளை வழங்குகின்றன. உங்களின் முதலீட்டு யுக்தி அடிப்படையில் நிதி ஆலோசகர் உங்களுக்கு அதிகபட்ச வருமான வரியை மிச்சப்படுத்தும் சரியான முதலீட்டுத் திட்டங்களைப் பரிந்துரை செய்வார். உங்கள் நிதித் திட்டத்தில் உங்கள் முதலீடுகளைத் தேவைக்கு எடுத்துச் செலவு செய்யும்போது வரி கட்டாமல் இருக்க அல்லது குறைவாக வரி கட்டும் யுக்தியாக இருக்க வேண்டும். இது பணி ஓய்வுக்காலத்தில் நீங்கள் பணத்தை எடுக்கும்போது வருமான வரிகளைக் குறைக்கும். குறிப்பாக, ஈக்விட்டி ஃபண்டுகளில் ஓராண்டு கழித்தும், கடன் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் கழித்தும் பணத்தைச் செலவுக்கு எடுத்தால் வரி கட்ட வேண்டியிருக்காது; அல்லது குறைவாகக் கட்ட வேண்டியிருக்கும்.

8. ஓய்வுக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்...

உங்கள் நிதி ஆலோசகரிடம் ஓய்வுக் காலத்தில் சந்திக்கும் சவால்கள் என்ன என்று கேளுங்கள். அவரின் அனுபவத்தில் அவர் உங்களுக்குத் தெளிவான பதில் அளிப்பார். ஓய்வுக்கால தொகுப்பு நிதியில் வருமானப் பெருக்கத்துக்கு ஒரு பகுதி பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டு களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சந்தை இறங்கி இருக்கும் சமயத்தில் அல்லது ஏற்றத்தில் இருக்கும்போது, உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் முன்கூட்டியே பணி ஓய்வுப் பெறக் கூடாது. ஓய்வுபெற 20, 25 ஆண்டுகளுக்கு குறைவான காலம் இருக்கும்பட்சத்தில் சற்றுக் கூடுதல் கவனத்துடன் திட்டமிட வேண்டும். துணைவரின் (கணவர் / மனைவி) வயதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நிதித் திட்டமிடல் மேற்கொண்டால் ஓய்வுக்கால செலவுகளைச் சமாளிப்பது சவாலாக இருக்கும்.

பிட்ஸ்

கிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நம் இந்தியாவுகு 139-வது இடம் கிடைத்துள்ளது. 2019-ல் 140 இடத்தைப் பெற்றிருந்தது நம் நாடு. மொத்தம் 149 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்று உள்ளன!