Published:Updated:

இ.டி.எஃப் Vs நேரடிப் பங்கு முதலீடு... எது பெஸ்ட்..? முதலீட்டுக்கு வழிகாட்டும் ஒப்பீடு...

இ.டி.எஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
இ.டி.எஃப்

I N V E S T M E N T

சிந்தன் ஹரியா தலைவர், திட்ட மேம்பாடு மற்றும் வியூகம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஏ.எ.ம்சி

ஒரு முதலீட்டாளராக, முதலீட்டு முடிவை எடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. பொதுவாக, ரிஸ்க் குறைவான, நிலையான வருவாயைத் தேடும் முதலீட்டாளர்கள், மூலதனத்தைப் பாதுகாக்க விரும்பும் முதலீட்டாளர்கள் கடன் சார்ந்த முதலீடுகளை நோக்கிச் செல்கிறார்கள். அதிக வருமானம் வேண்டும் எனில், முதலீட்டில் ரிஸ்க் எடுக்க வேண்டும். அந்த வகையான பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் சந்தையில் உள்ளன.

சிந்தன் ஹரியா தலைவர், திட்ட மேம்பாடு மற்றும் வியூகம், 
ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. 
ஏ.எ.ம்சி
சிந்தன் ஹரியா தலைவர், திட்ட மேம்பாடு மற்றும் வியூகம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஏ.எ.ம்சி

நீண்டகாலத்தில் வருவாயைப் பெருக்கிச் செல்வத்தை உருவாக்க விரும்பும் முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளைத் தேர்வு செய்கிறார்கள். பங்கு சார்ந்த முதலீடு என்கிறபோது நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் குறியீடு சார்ந்த பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் இ.டி.எஃப் ஃபண்டுகள் (Exchange Traded Funds - ETFs) உள்ளன.

நேரடிப் பங்கு முதலீடு அல்லது இ.டி.எஃப் - இந்த இரண்டில் யாருக்கு எது ஏற்றது என்பதை விரிவாக ஒப்பிட்டுப் பார்ப்போம்.

பின்வரும் ஐந்து விதமான காரணி களை ஒப்பீட்டுப் பார்த்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டாளர் ஆராயும்பட்சத்தில் தங்களுக்கேற்ற முதலீட்டு முடிவை அவர்களால் தாராளமாக எடுக்க முடியும்.

இ.டி.எஃப்
இ.டி.எஃப்

1. ரிஸ்க்

இ.டி.எஃப்: பங்குகளின் விலை குறுகிய காலத்தில் அதிக ஏற்ற இறக்கத்தைக் காணலாம். இது உங்கள் போர்ட்ஃபோலியோவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இ.டி.எஃப்கள் பன்முகப்படுத்தப் பட்ட போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதால் சந்தையின் ஏற்றத்தாழ்வைக் குறைக்கிறது.

நேரடிப் பங்கு முதலீடு: நீங்கள் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்யும்போது, பங்குச் சந்தையின் தினசரி ஏற்ற இறங்கங்களைப் புறக்கணிப்பது சவாலாக இருக்கும். இதன் விளைவாக, நீங்கள் சந்தையின் போக்குக்கு எதிராகச் செயல்படலாம் மற்றும் சிந்தித்து முடிவெடுப்பதைவிட உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக் கலாம். இது நீண்ட காலத்தில் முதலீட்டை பாதிப்புக்கு உள்ளாக்கி, பங்குகள் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க ஒரு தடையாக உள்ளது.

2. முதலீட்டுப் பரவலாக்கம்

இ.டி.எஃப்: இண்டெக்ஸ் இ.டி.எஃப்கள், பெஞ்ச்மார்க் குறியீட்டின் அனைத்துப் பங்கு களிலும், குறியீட்டின் அதே விகிதாச் சாரத்திலும் முதலீடு செய்கிறது.

பொதுவாக, பெஞ்ச்மார்க் குறியீடு என்பது பல்வேறு துறைகள் மற்றும் பல தொழில்கள் சார்ந்த நிறுவனப் பங்குகளில் நன்கு பரவலாக முதலீடு செய்யப்பட்டதாக இருக்கும்.இதன்மூலம் எந்தவொரு துறை அல்லது நிறுவனத்தின் அதிக ஏற்ற இறக்கம் ஒட்டுமொத்த வருவாயில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இ.டி.எஃப்கள் ஒரு குறியீட்டைப் பிரதிபலிப்பதால், அதே பரவலாக்க லாபத்தை வழங்குகின்றன.

நேரடி பங்கு முதலீடு: பங்குகளில் நேரடியாக முதலீடு செய்து நீங்கள் ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கும்போது, சரியான பரவலாக்கத்தை உறுதி செய்வது சவாலானதாக இருக்கும். நீங்கள் வைத்திருக்கும் போர்ட்ஃபோலி யோவில் பங்குகளின் எண்ணிக்கை போதுமானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இந்த நிறுவனப் பங்குகள், பல துறைகள் மற்றும் தொழில்களில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

3. வருமானம்

இ.டி.எஃப்: இ.டிஎஃப்கள் கண்காணிப்புப் பிழை (tracking error) மற்றும் நிதி மேலாண்மை செலவுகள் போக, பங்குச் சந்தையுடன் இணைந்த வருமானத்தை வழங்குகின்றன.

உதாரணமாக, நிஃப்டி 50 இண்டெக்ஸ் இ.டி.எஃப்பில், நிஃப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் பங்குகளும் குறியீட்டுக்கு ஒத்த விகிதத்தில் வைத்திருக்கும்.

பி.எஸ்.இ 500 இ.டி.எஃப் என்பது பி.எஸ்.இ 500 இண்டெக்ஸில் இடம் பெற்றிருக்கும் பங்குகளின் குறியீட்டு விகிதாச்சார விகிதத்தில் இடம் பெற்றிருக்கும். இதன் விளைவாக, இ.டி.எஃப்-களின் வருமானம், அந்தக் குறியீட்டின் செயல்திறனையொட்டி இருக்கும்.

நேரடி பங்கு முதலீடு: பங்குகளில் நேரடியாக முதலீடு செய்யும்போது, வருமானம் மிகவும் நிலையற்றதாக இருக்கும். தனிப்பட்ட பங்கு விலைகளைப் போலவே வருமானமும் அதிக ஏற்ற இறக்கமாகவும் இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும் பங்குகள் நன்றாகத் தெரியும். மோசமாக வருமானம் கொடுக்கும் பங்குகள் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோ வருமானத்தைக் கணிசமாகக் குறைத்துவிடும்.

4. ஆராய்ச்சி

இ.டி.எஃப்: நீங்கள் ஒரு இ.டிஎஃப்பில் முதலீடு செய்யும்போது, பங்குத் தேர்வு என்பது குறியீட்டை வழங்கும் நிறுவனங் களின் இணையதளத்தில் கிடைக்கும். முன்பே தீர்மானிக்கப்பட்ட வெளிப் படையான முறையின் அடிப்படையில் இந்தக் குறியீடு வடிவமைக்கப் பட்டிருக்கும்.

இந்தத் தேர்வு முறை, குறிப்பிட்ட பங்கின் வெயிட்டேஜ், ஸ்மார்ட் பீட்டா குறியீடுகள் அல்லது துறை குறியீடுகள் ஆகியவற்றைக் கொண்டு முன்வரையறுக்கப்பட்ட அளவுகோல்களுடன் பரவலாக்கப்பட்ட பங்குகளைத் தேர்வு செய்யும்.

நேரடி பங்கு முதலீடு: நீங்கள் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்யும் போது, பங்குத் தேர்வு மற்றும் ஆராய்ச்சியின் பொறுப்பு உங்களைச் சார்ந்தாக இருக்கும். இதன் அர்த்தம், நிறுவனத்தின் ஆண்டு அறிக்கைகள், ஆராய்ச்சி அறிக்கைகள் ஆகியவற்றைப் படிக்க உங்களுக்கு நேரமும் விருப்பமும் இருக்க வேண்டும். மேலும், லாபம் தரக்கூடிய பங்குகளைத் தேர்வு செய்ய நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டங்களில் நிறுவனத்தின் தலைவர்களின் பேச்சைக் கூர்ந்து கேட்க வேண்டும். இது முதலீட்டாளருக்கு மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

5. செலவு

இ.டி.எஃப்: பொதுவாக, இ.டி.எஃப்கள் குறைந்த நிதி மேலாண்மை செலவுகளைக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், இது ஒரு குறியீட்டைப் பிரதிபலிக்கிறது; குறியீடு மறு சமநிலைப் படுத்தும் செயல்பாடு இருக்கும் போது மட்டுமே பங்குகளை வாங்க / விற்க தரகுக் கட்டணம் கொடுக்க வேண்டும்.

நேரடி பங்கு முதலீடு: பங்கு களை வாங்கவும் விற்பனை செய்யவும் பங்குத் தரகுக் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் எனப் பல செலவுகள் இருக்கும். இந்த அளவீடுகளின் அடிப்படையில், இ.டிஎ.ஃப்கள், நேரடிப் பங்கு முதலீட்டைவிட அதிக மதிப்பெண் பெறுகின்றன.

செலவு குறைவாக, ரிஸ்க் குறைவாக, பரவலாக்கப்பட்ட முதலீடாக, கிட்டத்தட்ட பங்குச் சந்தையின் வருமானத்தைக் கொடுப்பதாக, அதிகம் ஆராய்ச்சி தேவைப்படாத முதலீடாக இ.டி.எஃப்கள் உள்ளன.

எனவே, நீங்கள் புதிய முதலீட்டாளராக இருந்தாலும், ஈக்விட்டி முதலீடு மூலம் லாபம் அடைய விரும்பும் அனுபவமுள்ள முதலீட்டாளராக இருந்தாலும் உங்கள் முதலீட்டுக் கலவையில் இ.டி.எஃப்களைச் சேர்த்துக் கொள்வது லாபகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

பிட்ஸ்

முக்கியமான பிராண்டுகள் வைத்துள்ள பெரிய நிறுவனங் களில் சைபர் அட்டாக் நடப்பதன் மூலம் 93 பில்லியன் டாலர் முதல் 223 பில்லியன் டாலர் வரை நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளதாக இன்டர் பிராண்ட் ஆய்வு சொல்கிறது!