Published:Updated:

ஏராளமான இலக்குகள்... 20 ஃபண்டுகள்... என் முதலீடு சரியா..? நிபுணரின் ஆலோசனை

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி பதில் - Q & A

தங்கராஜ், தூத்துக்குடி

நான் அவசரத் தேவை, குறுகிய காலத் தேவை, நடுத்தரக் கால தேவை, நீண்டகாலத் தேவை, வரிச் சேமிப்பு எனப் பல்வேறு இலக்குகளுக்கு கடன் ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்ட், பங்குச் சந்தை ஃபண்ட், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், குளோபல் ஃபண்ட் என 20 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறேன். என்னுடைய இந்த முதலீட்டு முறை சரியா?

ஶ்ரீதேவி கணேஷ், ஜி.கார்த்திகேயன்
ஶ்ரீதேவி கணேஷ், ஜி.கார்த்திகேயன்

ஶ்ரீதேவி கணேஷ், நிதி ஆலோசகர், Financialplanners.co.in

‘‘உங்கள் இலக்குகளை நீங்கள் கண்காணித்து, ஒவ்வொரு முதலீட்டையும் குறிப்பிட்ட குறிக்கோள்களுடன் இணைத்திருக் கிறீர்கள் எனில், பல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

முதலீட்டின் குறிக்கோள்கள் மற்றும் முதலீட்டுக் காலத்தின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி செய்யலாம். ஒரே பிரிவில் வெவ்வேறு இலக்குகளுக்கு வெவ்வேறு ஃபண்டுகளைப் பயன் படுத்தலாம். உதாரணத்துக்காக, நீங்கள் உங்களின் ஓர் இலக்குக்காக வளர்ச்சி சார்ந்த லார்ஜ்கேப் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மற்றொரு இலக்குக்காக வேல்யூ சார்ந்த ஃபிளக்ஸி கேப் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஒரு போர்ட்ஃபோலியோவின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்ய முயற்சி செய்யும்போது, பல ஃபண்டுகளில் நிர்வகிப்பது கடினமாக இருக்கும். இலக்கு அடிப் படையிலான முதலீடு எளிதானது, வசதியானது மற்றும் பல சந்தர்ப் பங்களில் போர்ட் ஃபோலியோவை விட முதலீட்டாளர்களுக்கு அதிக நிம்மதி அளிக்கிறது.

நீங்கள் ஒரு அனுபவமிக்க முதலீட்டாளராக இருந்தால், லார்ஜ் கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகள் எனப் பலவற்றுக்குக் குறிப்பிட்ட ஒதுக்கீட்டைக் கொண்ட திட்டங்களின் போர்ட்ஃபோலியோ வில் முதலீடு செய்யலாம் மற்றும் உங்கள் இலக்குகளுக்கேற்பவும் முதலீடு செய்யலாம்.

இது தனிப்பட்ட முதலீட் டாளர்களின் வசதிக்கேற்ப இருக்கலாம். பணத்தை நிர்வகிக்க பொதுவான விதிமுறை என்று எதுவும் இல்லை என்பதை நீங்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.”

நிவேதா சங்கர், அம்பாசமுத்திரம்

என் மகன் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறான். என்.ஆர்.ஐ ஆகிய அவன் அனுப்பிய பணத்தைக் கொண்டு நான் இந்தியாவில் வீடு வாங்கினால், நான் வரி கட்ட வேண்டி வருமா?

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், www.karthikeyanjayaram.in

“வரி செலுத்துபவர், வெளிநாட்டு வாழ் இந்தியராக (என்.ஆர்.ஐ) இருக்கும்போது, வெளிநாட்டில் சம்பாதிக்கும் எந்தவொரு தொகைக்கும் இந்தியாவில் வரி விதிக்கப் படாது. வெளிநாட்டிலிருந்து அங்கு சம்பாதித்த பணத்தை இந்தியாவுக்கு வங்கி மூலம் அவர் தன் தாய்க்கு அனுப்புகிற தொகைக்கும் கிஃப்ட் டாக்ஸ் கிடையாது. எனவே, வீடு வாங்க உங்கள் மகன் அனுப்பிய பணத்தைப் பயன்படுத்துவது வரிக்கு உட்பட்டதல்ல.”

அ.சத்யா, தூத்துக்குடி

நான் மாதம்தோறும் 5,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். இந்தத் தொகை எனக்கு 10 ஆண்டுகள் கழித்து தேவையாக இருக்கும். நான் ஒரே ஒரு மல்ட்டிகேப் அல்லது ஃபிளக்ஸி கேப் ஃபண்டில் இந்தப் பணத்தைப் போடலாமா?

சி.குமார், நவநீதகிருஷ்ணன் கிருஷ்ணசாமி
சி.குமார், நவநீதகிருஷ்ணன் கிருஷ்ணசாமி

சி.குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், நாமக்கல்

“நீங்கள் முதல்முறை முதலீட்டாளர் எனில், மல்ட்டிகேப் மற்றும் ஃபிளக்ஸிகேப் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்வதே நல்லது.

தலா ரூ.2,500 வீதம் இரண்டு ஃபண்டுகளில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதன் மூலம் ரிஸ்க்கைக் குறைத்து, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்டுகளின் வளர்ச்சியை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.”

சா.ஶ்ரீதர், அம்மாபேட்டை, தஞ்சாவூர்

சில கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தற்சமயம் நெகட்டிவ் வருமானம் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. இது எதனால் ஏற்படு கிறது என்று கவனித்துப் பார்க்கும் போது, யீல்டு என்ற குறியீடு தற்சமயம் ஏற ஆரம்பித் துள்ளது. இந்த ஏற்றத்தால் மியூச்சுவல் ஃபண்டின் என்.ஏ.வி-யின் மதிப்பு சரிவைச் சந்திக்கிறது மற்றும் நமது கடன் சார்ந்த ஃபண்டுகளில் மதிப்பு குறைகிறது. இது என்ன காரணத்தால் ஏறு கிறது, இதைக் கட்டுப் படுத்துவது யார், இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக விளக்கிச் சொன்னால் பயனுடையதாக இருக்கும்.

எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், wealthladder.co.in

“கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதியானது கடன் பத்திரங் களில் முதலீடு செய்யப் படுகின்றன. பத்திரங்களின் யீல்டுக்கும் பத்திரங்களின் விலைக்கும் நேர்மாறான தொடர்பு உண்டு. அதாவது, பத்திரங்களின் யீல்டு ஏறும் பட்சத்தில் பத்திரங்களின் விலை குறையும்.

இந்த நேரத்தில் பத்திரத்தில் முதலீடு செய்திருக்கும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களின் என்.ஏ.வி குறையும். இதுவே, யீல்டு குறையும் பட்சத்தில் பத்திரங்களின் மதிப்பு ஏறுமுகமாக இருக்கும். இந்தத் தருணத்தில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பு அதிகமாக இருக்கும்.

இதை இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், வங்கிகளின் வைப்பு நிதியின் வட்டி 6% அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் லிக்விட், அல்ட்ரா ஷார்ட் அல்லது லோ டியூரேஷன் ஃபண்டுகளிலும், வட்டி விகிதம் ஏறும் தருவாயில், நீண்டகாலக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு நல்ல நேரம் ஆகும்.”

அன்புக்கரசி, விழுப்புரம்

எங்கள் ஊரில் புதிதாக சிட் ஃபண்ட் கம்பெனி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த கம்பெனி முறையாகப் பதிவு செய்யப்பட்ட கம்பெனிதானா என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?

நவநீதகிருஷ்ணன் கிருஷ்ணசாமி, சென்னை பிராந்திய தலைவர், டி.என்.சி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்

‘‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சிட் ஃபண்ட் கம்பெனியை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விவரத்தை எந்தச் செலவும் இல்லாமல், நாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே www.tnreginet.gov.in என்ற இணைய முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு சீட்டையும் தனியே சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது அதற்குப் பிணையத் தொகை கொடுக்க வேண்டும். அந்த வகையில், பதிவு செய்யப்பட்ட சிட் ஃபண்ட் நிறுவனங்கள் அவ்வளவு சுலபமாக பொதுமக்களை ஏமாற்றி விட்டு ஓடிவிட முடியாது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com