நடப்பு
Published:Updated:

என்.பி.எஸ் திட்டத்தில் குடும்பத் தலைவிகள் முதலீடு செய்ய முடியுமா? வழிகாட்டும் ஆலோசனை

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில் - Q & A

அ.அனிதா, கல்லிடைக்குறிச்சி

என்.பி.எஸ் திட்டத்தில் குடும்பத் தலைவிகள் முதலீடு செய்ய முடியுமா?

கோகுல்நாத், ஹெட்- என்.பி.எஸ், Fundsindia.com

“நேஷனல் பென்ஷன் சிஸ்டத்தில் (என்.பி.எஸ்) 18 முதல் 65 வயதான குடும்பத் தலைவிகள் முதலீடு செய்ய முடியும். அவர்கள் என்.எஸ்.டி.எல் நிறுவனத்தின் இணையதளத்தில் இ-என்.பி.எஸ் (eNPS) அல்லது கேஃபின்டெக் (KFintech) அல்லது ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) பதிவு செய்திருக்கும் ஃபண்ட்ஸ் இந்தியா போன்ற பாயின்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் (Points of Presence) மூலம் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.”

வி.பாலு, மெயில் மூலம்

வெளிநாடு வாழ் இந்தியரான (என்.ஆர்.ஐ) நான் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்து வருகிறேன். குறுகியகால ஆதாயத்துக்கு உடனுக்குடன் வரி பிடித்துவிடுகிறார்கள். நீண்டகாலம் ஆதாயம் ஒரு லட்சத்தைத் தாண்டினால் எவ்வாறு வரி செலுத்துவது? அதை ஆன்லைனில் செலுத்த முடியுமா, செலுத்த முடியும் எனில் எப்படிச் செலுத்த வேண்டும்?

ஆடிட்டர் ஜி.கே.சீனிவாஸ், gkmtax.com, கோவை

“என்.ஆர்.ஐ-க்களுக்கு குறுகியகால மூலதன ஆதாயத்துக்கு 15% வரிப் பிடித்தம் செய்வது போலவே, நீண்டகால ஆதாயத்துக்கும் 10% வரிப்பிடித்தம் செய்யப் படும். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில், முன்கூட்டியே வரி செலுத்தும் முறையில் அதாவது, அட்வான்ஸ் டாக்ஸ் மூலம் உங்கள் நீண்டகால ஆதாயத்துக்கான வரியைக் கணக்கிட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்ட வேண்டும். இதை ஆன்லைனில் https://onlineservices.tin.egovnsdl.com/etaxnew/tdsnontds.js என்ற இணைய தளத்தில் தங்களது வருமான வரிக் கணக்கு எண் மற்றும் மதிப்பீடு ஆண்டைக் குறிப்பிட்டுச் செலுத்தலாம்.”

சா.ஶ்ரீதர், அம்மாபேட்டை, தஞ்சாவூர்

‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்-தன்’ திட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகக் கூறவும். இதை எப்படிச் செயல்படுத்துவது, இந்தத் திட்டத்தில் சேர்வதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எல்லாரும் இந்தத் திட்டத்தில் இணைய முடியுமா என்பதைக் கொஞ்சம் விரிவாகக் கூறவும்.

கோகுல்நாத், ஜி.கே.சீனிவாஸ், தெய்வானை ராஜ்பாண்டியன்
கோகுல்நாத், ஜி.கே.சீனிவாஸ், தெய்வானை ராஜ்பாண்டியன்

தெய்வானை ராஜ்பாண்டியன், அரசு அங்கீகாரம் பெற்ற தபால் அலுவலக முதலீட்டு ஆலோசகர்

‘‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்-தன் (Pradhan Mantri Shram Yogi Maan-dhan)மாதம்தோறும் 3,000 ரூபாய் ஓய்வூதியம் தரும் திட்டம். இந்தத் திட்டம் பிப்ரவரி 15, 2019-ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 18-40 வயதில் உள்ளவர்கள் சேரலாம்.

உதாரணமாக, ஒருவரின் வயது 18-ஆக இருந்தால், மாதம்தோறும் கட்ட வேண்டிய தொகை 55 ரூபாய்; வயது 40-ஆக இருந்தால், மாதம்தோறும் கட்ட வேண்டிய தொகை 200 ரூபாய். 60 வயது வரை மாதம் தோறும் சேமிப்புக் கணக்கி லிருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும்.

உங்கள் வயதுக்கேற்ப எவ்வளவு தொகையை நீங்கள் கட்டுகிறீர்களோ, அதே தொகையை மத்திய அரசும் பென்ஷன் பெறப்போகிறவர் கணக்கில் செலுத்தும்.

இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மட்டுமே சேரமுடியும். மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்குக்கீழ் இருக்க வேண்டும். 60 வயது முடிந்தவுடன் மாதம்தோறும் 3,000 ரூபாய் ஓய்வூதியமாகக் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் சேர அலைபேசி எண், ஆதார் எண், வங்கிச் சேமிப்புக் கணக்கு ஆகியவை தேவை. அரசின் வேறு எந்த ஓய்வூதியத் திட்டத்திலும் பங்கு பெறா தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேரலாம்.”

எஸ். ராஜன், சென்னை

நான் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் கடந்த 2020 வருடம் ஏப்ரல் 15-ம் தேதி முதலீடு செய்தேன். லாக்இன் பிரீயடு 3 வருடங்கள் என்று எனக்குத் தெரியும். என் சந்தேகம் என்னவெனில், இந்த மூன்று ஆண்டு்கள் எப்படிக் கணக்கிடப்படும்? அதாவது, மூன்று ஆண்டுகள் என்பது நான் முதலீடு செய்த தேதியில் இருந்தா அல்லது நிதி ஆண்டு முடியும் தேதியில் இருந்தா (மார்ச் 31)..? நான் முதலீடு செய்த பணத்தை எப்போது திரும்பி எடுக்க முடியும்?

அபுபக்கர் சித்திக், அனிதா மோகன்
அபுபக்கர் சித்திக், அனிதா மோகன்

அபுபக்கர் சித்திக், செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர், Wealthtraits.com

“இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, உங்களுக்கு அந்த ஃபண்டின் யூனிட்டுகள் வரவு வைக்கப்பட்ட தேதி யிலிருந்து மூன்று வருடங்கள் லாக்இன் இருக்கும். நிதி ஆண்டுக்கும், லாக்இன் காலத்துக்கும் சம்பந்தம் இல்லை.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் அடுத்த வருடம் மார்ச் 31 வரை நீங்கள் முதலீடு செய்யும் பணம் அந்த நிதியாண்டுக்கான வரிச் சலுகை கணக்குக்கு உதவும். நீங்கள் 15, ஏப்ரல் 2020 அன்று இ.எல்.எஸ்.எஸ்ஸில் முதலீடு செய்துள்ளதால், உங்கள் முதலீட்டை 2020-21-ம் நிதியாண்டுகான வரிச் சலுகைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். 15, ஏப்ரல் 2023 முதல் நீங்கள் உங்கள் யூனிட்டுகளை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.”

ஆர்.சுதா, சைதாப்பேட்டை

குடும்பத்தினருக்கான ஒருங்கிணைந்த ஹெல்த் பாலிசி பற்றி சற்று விரிவாகச் சொல்லவும்.

அனிதா மோகன், நிதி ஆலோசகர், www.investmentsolution.co.in

“இதை ஒருங்கிணைந்த ஃப்ளோட்டர் (comprehensive floater) பாலிசி என்பார்கள். இந்தத் திட்டத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு 65. கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வரை ஒரு குடும்பமாகக் கருத்தப் பட்டு, சேரலாம். ஒரு குடும்பத் தில் நான்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.

பெற்றோரை இந்த பாலிசி யில் சேர்க்க முடியாது. ஆனால், இரண்டு குழந்தை களைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, ஒரு பெரியவர் மற்றும் ஒரு குழந்தை எனத் திட்டத்தைப் பிரித்து பிரீமியத்தைத் தனித்தனியாக செலுத்தலாம். குழந்தைகள் 25 வயது வரை குடும்பத் திட்டத்தில் இருக்க அனுமதிக் கப்படுகிறார்கள். 25-க்குப் பிறகு, இது தனிப்பட்ட பாலிசியாகக் கருதப்படு கிறது.

பல் சிகிச்சை, கண்ணாடி சிகிச்சை, கருவுறாமை சிகிச்சை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நன்மை களைப் பெற முடியும். தனிப்பட்ட விபத்துக்கான காப்பீட்டுத் திட்டத்தில், அவர் குடும்பம் காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு சமமான நன்மைகளைப் பெறலாம்.

இந்த பாலிசியில் கட்டும் பிரீமியத்துக்கு 80டி பிரிவின் கீழ் வரிச் சலுகை கோரலாம். சில காப்பீட்டு நிறுவனங்களில் மட்டுமே இந்த அனைத்து அம்சத் திட்டம் உள்ளது.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com