இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது. சர்வதேச நிதியத்தின் (I.M.F) சமீபத்திய அறிக்கை, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதமாகவே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. பொதுவாக, பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் நேரத்தில், பங்கு அல்லது பங்கு சார்ந்த ஃபண்டுகளில் குறிப்பிடத் தகுந்த அளவில் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

சரி, வங்கி எஃப்.டி-யில் பணத்தைப் போட்டுவைக்கலாம் என்றால், அவற்றுக்கான வட்டி விகிதத்தையும் குறைத்துவருகிறது ரிசர்வ் வங்கி. இப்போதிருக்கும் பணவீக்கத்தை ஈடுசெய்யும் அளவுக்குக்கூட வங்கி வைப்புத் திட்டத்தின் மூலம் வருமானம் கிடைப்பதில்லை என்பது வருத்தம் தரும் உண்மை. நம் பாரம்பர்ய முதலீடுகளான ரியல் எஸ்டேட், தங்கம் வாங்குவது போன்ற முதலீடுகளிலும் நல்ல லாபம் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே தற்போது நிலவுகிறது. இந்த நிலையில், `சாதாரண முதலீட்டாளர் ஒருவர் எதில்தான் முதலீடு செய்வது?’ என்ற கேள்வி எழுகிறதல்லவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கேள்விக்கான பதில், கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்வதுதான். ஆனால், கடன் ஃபண்டுகளிலும் அண்மைக்காலமாக சிலபல குளறுபடிகள் நடந்து, முதிர்வுக்காலம் முடிந்த பின்னரும் பணம் கிடைக்காத நிலை இருந்துவருகிறது. சில திட்டங்களில் ‘ரைட் ஆஃப்’ (Write off) என ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்து சமாளிக்க வேண்டிய நிலை இருந்துவருவது அதிர்ச்சி அளிக்கும் செய்தி. என்றாலும், கடன் சார்ந்த மிகச் சில ஃபண்டுகளே இப்போது சிக்கலில் சிக்கியிருக்கின்றன. இது போன்ற கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

தவிர்க்க வேண்டியதும் தேர்வு செய்ய வேண்டியதும்
தற்போது, கடன் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் (Credit Risk Fund) என்ற திட்டத்தில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வகை ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். தற்போதிருக்கும் நிலையில், பேங்கிங் அண்டு பி.எஸ்.யூ டெப்ட் (Banking and PSU Debt) ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த வகை ஃபண்டில் செய்யப்படும் தொகை வங்கி மற்றும் அரசு நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். ஆகவேதான், கடந்த ஆறு மாதங்களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஃபண்டுகளின் முதலீட்டுத் தொகை கிரெடிட் ரிஸ்க் திட்டங்களில் குறைந்துவருவதுடன், பேங்கிங் அண்டு பி.எஸ்.யூ கடன் ஃபண்டுகளில் அதிகரித்துவருகிறது.
இரண்டு வகை ரிஸ்க்
கடன் ஃபண்டுகளில் இரண்டு வகை ரிஸ்க் உண்டு. ஒன்று, கிரெடிட் ரிஸ்க் (Credit Risk); மற்றொன்று, இன்ட்ரஸ்ட் ரேட் ரிஸ்க் (Interest Rate Risk). கிரெடிட் குவாலிட்டி அதிகமாக இருக்கும் திட்டங்களிலும் இன்ட்ரஸ்ட் ரேட் ரிஸ்க் குறைவாக உள்ள திட்டங்களிலும் முதலீடு செய்ய வேண்டும்.
முதலீட்டுத் தொகை தொடர்ந்து குறைந்து வரும்பட்சத்தில் கவனம் தேவை. இப்படி குறைந்துவரும் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், அந்தத் திட்டங்களில் சிக்கலான கடன் பத்திரங்கள் இருக்க வாய்ப்புண்டு.
நம்பகத் தன்மை குறைவாக உள்ள நிறுவனங்கள்
இரண்டு வெவ்வேறு கடன் திட்டங்கள், AAA தரக்குறியீடுகொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கலாம். அந்த நிறுவனங்களின் தரத்தைப் பொறுத்து, திட்டத்தின் தரமும் மாறுபடும். அதாவது, வட்டியையும் அசலையும் திருப்பித்தரும் தண்மையுள்ள நிறுவனங்கள் மற்றும் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் கடன் திட்டங்களைத் தேர்வுசெய்வது நல்லது. நம்பகத் தன்மை குறைவாக அல்லது தற்போது சிக்கலிலுள்ள அல்லது வருங்காலத்தில் சிக்கலில் மாட்டக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கடன் திட்டத்தைத் தவிர்த்துவிடுவதே சிறப்பு.
திட்டத்தின் முதலீட்டுத் தொகை
ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்போது, அந்தத் திட்டத்தின் மொத்த முதலீட்டுத் தொகை (Scheme AUM) கடந்த ஒரு வருடத்தில் சீராக இருந்தால் நல்லது. முதலீட்டுத் தொகை தொடர்ந்து அதிகரித்துவந்தால் அதுவும் நல்லதே. ஆனால், தொடர்ந்து குறைந்துவரும்பட்சத்தில் கவனம் தேவை. முதலீட்டுத் தொகை குறைந்துவரும் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், அந்தத் திட்டங்களில் சிக்கலான கடன் பத்திரங்கள் இருக்க வாய்ப்புண்டு.

பரவலான முதலீடு
நாம் முதலீடு செய்யும் கடன் ஃபண்ட் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் அதிகமாக முதலீடு செய்யாமல் இருக்க வேண்டும், ஏனெனில், ஏதாவது ஒரு காரணத்தால் கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வராமல் போகும்போது, அதனால் ஏற்படும் நஷ்டத்திலிருந்து நாம் தப்பிக்க உதவும்.
நிர்வாகத் திறமை
கடன் ஃபண்டுகளை நிர்வகிக்கும் திறமையும் முறையும் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். கடந்த ஒரு வருடத்தில் எந்தச் சிக்கலிலும் சிக்காத கடன் சார்ந்த ஃபண்ட் திட்டங்கள் நிறையவே இருக்கின்றன. இவற்றை வழிநடத்தும் நிதி மேலாளர் யார் என்பதைக் கண்டறிந்து, அவற்றில் முதலீடு செய்யலாம். சரியான கடன் ஃபண்டுகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்தால், எப்போதும் கவலைப்படத் தேவையில்லை!