நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பாலிசி முதிர்வுத் தொகைக்கு ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா? வழிகாட்டும் ஆலோசனை

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

Q and A - கேள்வி - பதில்

மு.தமிழரசி, அம்பத்தூர், சென்னை – 53

நான் ஆயுள் காப்பீடு எண்டோவ்மென்ட் பாலிசி ஒன்றில் ஆண்டு பிரீமியம் ரூ.8,300 கட்டி வந்தேன். ஜி.எஸ்.டி வந்த பிறகு, ரூ.8,500 கட்டி வருகிறேன். இன்னும் 10 வருடங்களுக்கு ஜி.எஸ்.டி மட்டும் ரூ.3,200 கூடுதலாகக் கட்ட வேண்டும். எனக்குக் கிடைக்கும் முதிர்வுத் தொகைக்கும் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா? அப்படிக் கட்டினால் எனக்குக் கிடைக்கும் தொகை மிகவும் குறைந்துவிடுமே!

அருள்சிவம், ஆயுள் காப்பீடு ஆலோசகர், சேலம்.

“மத்திய அரசால் 1.7.2017-ல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியமும் அடங்கும். 2017-ம் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. அதன் பிறகு எடுக்கப்பட்ட, எடுக்கப்படும் புதிய பாலிசிகளுக்கு முதல் வருடம் 4.5%, அடுத்த ஆண்டு முதல் 2.25% வசூலிக்கப்படுகிறது. பாலிசி முதிர்வுத் தொகைக்கு ஜி.எஸ்.டி கிடையாது. பாலிசி பிரீமியத் தவணையை சரியான நேரத்தில் கட்டத் தவறினால், அபராத தொகைக்கு ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்.’’

மா.அருணாசலம், மதுரை – 16

என் நண்பர் ஒருவருக்காக நான் ரூ.20 ரூபாய் முத்திரைத் தாள் வாங்கச் சென்றேன். ஏதாவது, அடையாள ஆதாரம் இருந்தால்தான் தர முடியும் என்றார்கள். என் செல்போன் நம்பர் கொடுத்து, நண்பருக்காக அந்த முத்திரைத்தாளை வாங்கினேன். இவ்வாறு வாங்கிக் கொடுத்தால் பிற்காலத்தில் பிரச்னை ஏதாவது வருமா? முத்திரைத் தாளின் முக்கியத்துவம் என்ன விளக்கிச் சொல்லவும்.

டி.ஜீவா, வழக்கறிஞர்

“பொதுவாக, முத்திரைத்தாளை யார் பயன்படுத்த இருக்கிறார்களோ, அவர்கள் பெயரில்தான் வாங்க வேண்டும். ரூ.20, ரூ.50 என்பதுபோல் வாங்கினாலும் யார் பயன்படுத்த இருக்கிறார்களோ, அவர்களின் ஆதாரத்தை (ஆதார் எண் போன்றவை) கொடுத்து வாங்க வேண்டும். சொத்துப் பத்திரப் பதிவுக்காக அதிக மதிப்புகொண்ட பத்திரங்களை வாங்கும்போது அந்த விவரத்தை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது காட்ட வேண்டும்.”

அருள்சிவம், டி.ஜீவா, எஸ்.வெங்கட்ராமன்,  சி.பாரதிதாசன், ச.ராமலிங்கம்
அருள்சிவம், டி.ஜீவா, எஸ்.வெங்கட்ராமன், சி.பாரதிதாசன், ச.ராமலிங்கம்

விவேக்குமார், நாகர்கோவில்

புதிய பங்கு வெளியீட்டில் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் விவரத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வது எப்படி?

எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com

“பங்குச் சந்தைகளான பி.எஸ்.இ அல்லது என்.எஸ்.இ-யின் இணையதளங்களிலும், ஐ.பி.ஓ ரெஜிஸ்ட்ராரின் இணையதளத்திலும் ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் வெளியாகும். அதைப் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.”

சாந்தி கிருஷ்ணன், காரைக்கால்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த 15 வருடங்களாக முதலீடு செய்துவரும் தொகை ரூ.1 கோடியாக இருக்கிறது. இந்தத் தொகையை நான் எப்படி எனது ஓய்வுக்கால செலவுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்?

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர்

“ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் என்கிற போது, அதில் ரிஸ்க் அதிகம் உண்டு. அவற்றில் முதலீடு செய்து 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி கிடைத்திருக்கும் பட்சத்தில் அந்தத் தொகையை நீங்கள் எடுத்து ரிஸ்க் குறைவான மற்றும் பாதுகாப்பான ஃபிக்ஸட் டெபாசிட்களில் மறுமுதலீடு செய்ய வேண்டும். அதாவது, கடன் சார்ந்த ஃபண்டுகளுக்கு அந்தத் தொகையை மாற்றி முதலீடு செய்ய வேண்டும். அதிலிருந்து மாதம் குறிப்பிட்ட தொகையை சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) முறையில் எடுத்து செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்களுக்கு பென்ஷன் போல, மாதமொருமுறை குறிப்பிட்ட தொகை வேண்டும் என்றால், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் பிளான்களில் முதலீடு செய்து மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைப் பெறலாம். மொத்த முதலீடு ரூ.1 கோடியை ஒரே ஒரு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது பென்ஷன் பிளானில் முதலீடு செய்துவிட வேண்டாம். ரிஸ்க்கைக் குறைக்க கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட், பென்ஷன் பிளான் இவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம்.”

ம.தமிழ்ச்செல்வன், புதுக்கோட்டை

நான் (வயது 38) மற்றும் மனைவி (36) பள்ளி ஆசிரியர்கள். மகளின் (14) உயர் கல்வி மேற்படிப்புக்காகத் தலா ரூ.3,000 ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட், எஸ்.ஐ.பி ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் மாதம் மொத்தம் ரூ.12,000 முதலீடு செய்து வருகிறோம். இதை இன்ஃப்ரா மற்றும் பார்மா ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறைக்கு மாற்றிக்கொள்ளலாமா? எங்களது ஃபண்டுகளின் தற்போதைய நல்ல வருமானத்தைப் பார்க்கும்போது மாத எஸ்.ஐ.பி தொகையை இன்னும் ரூ.5,000 அதிகரிக்கவும் மொத்தமாக ரூ.1 லட்சமும் முதலீடு செய்யலாம் எனவும் திட்டமிட்டிருக்கிறோம். தகுந்த ஆலோசனை கூறவும்.

ச.ராமலிங்கம், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், என்.ஜே.பார்ட்னர்

“மகள் கல்லூரியில் சேருவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும்பட்சத்தில் நீங்கள் இருவரும் ஆறு ஆண்டுகளாக லார்ஜ்கேப், லார்ஜ் & மிட்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் என ஓர் அருமையான போர்ட்ஃபோலியோவை நன்கு செயல்படும் ஃபண்டுகளைக் கொண்டு அமைத்திருக்கிறீர்கள்.

2,000 ரூபாயை எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் மற்றும் 3,000 ரூபாயை கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்டுகளிலும் மொத்தத் தொகையாக ரூ.50,000 வீதம் டி.எஸ்.பி ஹெல்த்கேர் ஃபண்ட், நிப்பான் இந்தியா பார்மா ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வாருங்கள்.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

பிட்ஸ்

2021-ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனம் அடைய இருக்கும் நஷ்டம் ரூ.10,000 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ஆண்டுக்குள் இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு!