Published:Updated:

அன்பளிப்பாகக் கிடைத்த தங்க நகை... விற்றால் வரி உண்டா? விளக்குகிறார் ஆடிட்டர்

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

Q & A - கேள்வி - பதில்

மீரா, கும்பகோணம்

என் திருமணத்தின்போது 50 பவுன் நகை அன்பளிப்பாக என் பெற்றோர்கள் கொடுத்தார்கள். திடீர் நிதி தேவைக்காக அதை இப்போது விற்க உள்ளேன். இந்தத் தொகைக்கு ஏதாவது வரி கட்ட வேண்டுமா, இதற்கான வரியை எப்படிக் கணக்கிடுவது?

கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

“தங்க நகைகளை விற்று கிடைக்கும் மூலதன ஆதாயத்துக்கு நீங்கள் வரி கட்ட வேண்டும். 2001 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக, பெற்றோர் இந்தத் தங்க நகையை வாங்கியிருந்தால், அன்றைக்கு அதன் தோராய சந்தை மதிப்பு (Fair Market Value -FMV) எவ்வளவோ, அதுவே தங்கத்தை வாங்கிய விலையாக எடுத்துக்கொள்ளப்படும். 2001 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு, எந்தத் தேதியில் தங்கம் வாங்கப்பட்டதோ, அன்றைய விலைதான் தங்கத்தின் வாங்கிய விலையாக எடுத்துக்கொள்ளப்படும். அதே நேரத்தில், எந்தத் தேதியில் உங்களுக்குத் தங்கம் அன்பளிப்பாகத் தரப்பட்டதோ, அந்தத் தேதியிலிருந்துதான் இண்டெக்ஸ்சேஷன் (பணவீக்க விகித சரிக்கட்டல்) கணக்கிடப்படும்.

தங்க நகையை நீங்கள் விற்கும் தேதி, உங்கள் பெற்றோர் வாங்கிய தேதியிலிருந்து அல்லது நீங்கள் அன்பளிப்பாகப் பெற்ற தேதியிலிருந்து மூன்றாண்டுக்குள் இருந்தால், ஆதாயத்துக்கு உங்களின் அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். இதுவே, மூன்றாண்டுகள் கழித்திருக்கும்பட்சத்தில் ஆதாயத்தில் பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு 20% வரி கட்ட வேண்டும்.”

ராஜ்குமார், நாசரேத்

நான் புதிய கார் ஒன்று வாங்க ஷோரூம் சென்றேன். டீலர் மூலம்தான் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். இது சட்டப்படி சரியா?

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“வாகனம் வாங்குபவர்களிடம், இந்த நிறுவனத்தின் காப்பீடுதான் வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. வாகனம் விற்கும் நிறுவனங்களே, காப்பீடு புரோக்கிங் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. அதனால், வாகனம் விற்பனை செய்யும் நிறுவனமே காப்பீட்டுக்கும் ஏற்பாடு செய்துவிடுகிறது. வேறு நிறுவனங்களில் குறைந்த பிரீமியத்தில் பாலிசி எடுப்பதை இதனால் தடுக்கப்படுகிறது. சில நிறுவனங்கள் கூடுதலாகவே பிரிமீயம் வசூல் செய்கின்றன. மேலும், பெரும்பாலான வாகன டீலர்கள் காப்பீடு பிரீமியம் தொகையும் சேர்த்து தான், வாகன விற்பனை விலையாகக் கூறுகிறார்கள். இதனால் பிரீமியத்தை டீலர்களே ஏற்பதுபோன்ற தோற்றம் காணப்படுவதால், காப்பீடு இலவசம் என வாகனம் வாங்குபவர்கள் நினைக்கிறார்கள்.

கார் வாங்குவோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு காப்பீடு, டூவீலர்களுக்கு ஐந்து ஆண்டு காப்பீடு கட்டாயம் என்பதை வாகன டீலர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், காப்பீடு நிர்ப்பந்தம் தொடர்பாக சில நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. வாகனம் வாங்குபவர்களிடம் குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனத்தில்தான் பாலிசி எடுக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தால், நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி - ரூ.3 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) அண்மையில் எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் நிர்ப்பந்தம் தவிர்க்கப்பட்டு, குறைந்த பிரீமியத்தில் காப்பீடு பெற வழி கிடைத்துள்ளது.”

கோபால் கிருஷ்ண ராஜு, வி.எஸ்.சுரேஷ், க.முரளிதரன், எஸ்.வெங்கட்ராமன்
கோபால் கிருஷ்ண ராஜு, வி.எஸ்.சுரேஷ், க.முரளிதரன், எஸ்.வெங்கட்ராமன்

பொன்சேகர், உளுந்தூர்பேட்டை

எனக்கு நீரிழிவு பாதிப்பு டைப் 1 உள்ளது. ஊசி மூலம் இன்சுலின் செலுத்தி வருகிறேன். நான் ஆயுள் காப்பீடு மற்றும் ஆரோக்கிய காப்பீடு எடுக்க விரும்புகிறேன். நான் பாலிசி எடுப்பதில் சிக்கல் ஏதும் இருக்குமா?

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், Vidurawealth.com

“நீரிழிவு பாதிப்பு டைப் 1 இருந்தாலும், நீங்கள் ஆயுள் காப்பீடு பாலிசி மற்றும் மருத்துவக் காப்பீடு இரண்டும் எடுக்க முடியும். இதற்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும். அதன் முடிவு களுக்கேற்ப பாலிசி வழங்கப்படும். பாலிசி நிராகரிக்கப்பட்டால் செலுத்திய பிரீமியம் தொகையில் ஒரு சிறிய தொகை பிடித்துக்கொண்டு மீதம் வழங்கப்படும்.

ஒரு சில காப்பீடு நிறுவனங்கள், நீரிழிவு நோயாளி களுக்கு என பிரத்யேக பாலிசியை அளிக்கின்றன. டைப்-1 இன்சுலின் எடுத்துக்கொள்பவர்களும், டைப்-2 மாத்திரை எடுத்துக்கொள்பவர்களும் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.

18 வயது முதல் 65 வரை உள்ளவர்கள் இந்த பாலிசியைப் பெறலாம். 65 வயதுக்கு மேல் ஆயுள் காலம் வரை பாலிசியைப் புதுப்பித்துக்கொள்ளலாம். நீரிழிவு சார்ந்த அனைத்து சிகிச்சைகளுக்கும், சர்க்கரை நோய் அல்லாத மற்ற பிற சிகிச்சைகளுக்கும் க்ளெய்ம் பெறலாம்.”

குணசேகர், சென்னை

புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐ.பி.ஓ) விண்ணப்பத்துடன் பணம் செலுத்துவது எப்படி?

எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com

“விண்ணப்பிக்கும் பங்குகளுக்கு உண்டான மொத்தத் தொகையும் வங்கிக் கணக்கில் வைத்துக் கொண்டுதான் ஐ.பி.ஓ-க்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்போது வெளிவரும் ஐ.பி.ஓ-க்கள் ‘அஸ்பா’ (ASBA or Application Supported by Blocked Amount) என்ற முறையில் செயல்படுகின்றன. இந்த முறையில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை உங்கள் வங்கிக் கணக்கில் முடக்கி வைக்கப்படும்.

ஐ.பி.ஓ வெளியாகி முடிந்து பங்குகள் ஒதுக்கப் பட்ட பின் அந்தப் பங்குகளுக்குச் செலுத்த வேண்டிய பணம் மட்டும் உங்கள் வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். ஏற்கெனவே செய்யப் பட்டிருந்த முடக்கம் நீக்கப்படும். பங்குகள் ஒதுக்கப்படாவிட்டால், முடக்கம் உடனே நீக்கப்படும்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

பிட்ஸ்

டந்த ஆண்டு நம் நாட்டில் 32 லட்சம் ஆப்பிள் போன்கள் விற்பனை ஆகியுள்ளன. இது கடந்த 2019-ம் ஆண்டைவிட 2020-ல் 60% அதிகம் ஆகும்!