Published:Updated:

கேள்வி - பதில் : பார்மா ஃபண்டில் முதலீடு... எனக்கேற்ற ஃபண்டுகள் என்னென்ன?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

முதலீட்டுக்கான டிப்ஸ்

Q&A

நான் ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் தலா ரூ.5,000 முதலீடு செய்து வருகிறேன். இப்போது பார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறேன். முதலீட்டுத் தொகை மாதம் ரூ.6,000. எனக்கு ஏற்ற 3 பார்மா ஃபண்டுகளை பரிந்துரை செய்யவும்.

அ..தாமரை, ஐந்துவிளக்கு, காரைக்குடி

எம்.கண்ணன், ஆலோசகர், Radhaconsultancy.blogspot.com

“நீங்கள் பார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடிவு செய்தது நல்லது. பார்மா ஃபண்டுகளை நீண்டகாலமாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. மிரே அஸெட் ஹெல்த்கேர் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட், நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். கடந்த ஒரு வருடத்தில் பார்மா ஃபண்டுகள் நல்ல லாபம் தந்திருக்கிறது, அது தொடரும் என்ற நம்பிக்கையில் நாம் புதிய எஸ்.ஐ.பி தொடங்கலாம். அதேசமயம் பார்மா போன்ற செக்டார் ஃபண்டுகளில், உங்களின் மொத்த முதலீட்டில் 10 சதவிகிதத்துக்கு மேல் முதலீடு செய்ய வேண்டாம்.”

எம்.கண்ணன், ஜி.கே.சீனீவாஸ், த.முத்துகிருஷ்ணன்
எம்.கண்ணன், ஜி.கே.சீனீவாஸ், த.முத்துகிருஷ்ணன்

டாக்ஸ் ரெசிடென்ஸி சர்டிஃபிகேட் (Tax Residency Certificate - TRC) என்றால் என்ன? வரி கட்டுபவர்களுக்கு அது தேவையா..?

பொன்சேகர், இ-மெயில் மூலம்

ஜி.கே.சீனீவாஸ்,ஆடிட்டர், கோயம்புத்தூர்

“பொதுவாக, வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் 183 நாள்களுக்குமேல் வசித்தால் அவர் ‘ரெசிடென்ட்’ (Resident) என்று கூறப்படுவார். அவரது இந்திய வருமானம் மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் வரும் வருமானமும் இந்தியாவில் சேர்க்கப்பட்டு அதற்கான வரியைச் செலுத்த வேண்டும். ஆனால், மற்ற நாட்டில் செலுத்தப்பட்ட வரியைக் கழித்து மீதி வரியைச் செலுத்தினால் போதுமானது.

இதுவே அவர் இந்தியாவில் 182 நாள்களுக்கும் குறைவாக இருந்தால், மற்ற நாட்டிலிருந்து பெறும் வருமானத்துக்கு இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை. மற்ற நிபந்தனைகளும் பொருந்தும். மற்ற நாட்டில், இத்தனை நாள்கள் வசித்தார் என்பதற்கான சான்றிதழ்தான் டாக்ஸ் ரெசிடென்சி சர்டிஃபிகேட். இதை வசித்த நாடுகளிலிருந்து பெற்று வரி இலாகாவுக்கு ஆவணமாகக் கொடுக்க வேண்டும்.”

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறேன். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஒரு ஃபண்டிலிருந்து அதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வேறு ஒரு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றுவதற்கு ஏதாவது கட்டணம் உண்டா?

வி.வி.ஆர்.விஜயகுமார், இ-மெயில் மூலம்

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்

“ஒரு ஃபண்டிலிருந்து இன்னொரு ஃபண்டுக்கு மாறுவதற்கு என தனியே கட்டணம் கிடையாது. அதே நேரத்தில், சில ஃபண்டுகளில் குறிப்பிட்ட காலத்துக்குமுன் முதலீட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் வெளியேறும் கட்டணம் (எக்ஸிட் லோடு) உண்டு.

மேலும், உங்கள் முதலீட்டின் மூலம் லாபம் கிடைத்திருக்கும்பட்சத்தில், அந்த ஃபண்டின் வகை (பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட், கடன் சந்தை சார்ந்த ஃபண்ட்), முதலீட்டுக் காலம் (குறுகியகாலம், நீண்டகாலம்) ஆகியவற்றைப் பொறுத்து மூலதன ஆதாய வரி உண்டு.”

டி.ஜீவா, ச.ராமலிங்கம்
டி.ஜீவா, ச.ராமலிங்கம்

50 வருடங்களாக நாங்கள் புழங்கிவரும் இடத்துக்கு வேறொருவர் பத்திரம் கொண்டுவந்து காலி செய்ய சொல்கிறார். நாங்கள் அந்த இடத்துக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அரசுப் பதிவில் நத்தம் என்றுள்ளது. அவர்களிடம் 1945-ம் வருட பத்திரம் உள்ளது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

பிரகாஷ், கோயமுத்தூர்

டி.ஜீவா, வழக்கறிஞர்

“நத்தம் இடம் என்றால் 50 வருடங்களாக இருப்பதை ஆவணம் மூலம் நிரூபித்து உரிமை கோரலாம். மேலும், பத்திரம் வைத்திருப்பவர் இவ்வளவு நாள்களாக உரிமை கோராமல் இருப்பதும் அவருக்கு பாதகமே. மாவட்ட கலெக்டரிடம் கோரி பட்டா பெறலாம். அவசியம் எனில், சிவில் நீதிமன்றத்தை அணுகலாம்.”

கேள்வி பதில்
கேள்வி பதில்
rclassenlayouts

அவசரத் தேவைக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் நான்கு தனிநபர் கடன்கள் எடுத்துள்ளேன். குறைந்தது 16 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை இன்னும் தவணை கட்ட வேண்டியுள்ளது. 2021 பிப்ரவரியில் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி முதிர்வடைந்து வரும் பணத்தில் எல்லாக் கடனையும் அடைத்துவிடத் திட்டம். தனிநபர் கடன் என்பதால், பகுதி பணத்தைச் செலுத்தும் வசதி இல்லை. ஆனால், முன்கூட்டியே கடனை முடிக்கலாம். கணக்குப் போட்டுப் பார்த்ததில், இடையில் முன்கூட்டியே கடனை அடைப்பதால் மிக அதிக வட்டி செலுத்தும்படி வருகிறது. ஆகவே, இந்த மாதிரி தருணங்களில் கடனை அடைப்பது சரியான முடிவா அல்லது முதிர்வுத் தொகையை வேறு ஒன்றில் முதலீடு செய்வது சரியான முடிவா?

பிரபாகரன், கோவை இ-மெயில் மூலம்

ச.ராமலிங்கம், பார்ட்னர், என்.ஜே

“இன்றைய சூழ்நிலையில் கடன் இல்லாமல் குடும்ப வாழ்க்கை நடத்த இயலாது என்ற நிலைமை உருவாகிவிட்டது. அவசரத் தேவை என்பதற்காக வட்டி அதிகமாக (16-18%) உள்ள தனிநபர் கடன்களை, அதுவும் நான்கு கடனை எடுத்து உங்கள் தலைச்சுமையை அதிகரித்துள்ளீர்கள். உங்கள் கடனை நீங்கள் வேகமாக முடிப்பது விவேகம்.

பாலிசி முதிர்வுத் தொகையைக் கொண்டு கடன்களை அடைத்துவிடுவதுதான் புத்திசாலித்தனம். நிம்மதியும் கிடைக்கும். கடனை அடைக்காமல், பாலிசித் தொகையைப் பங்குச் சந்தையிலோ, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலோ முதலீடு செய்து இரட்டை இலக்க வருமானத்தை எளிதாக பெற முடியும் என ஆசைப்படாதீர்கள்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

பிட்ஸ்

மெரிக்காவில் முதல் முறையாக கூகுள் நிறுவனத்தில் தொழிலாளர் சங்கம் அமைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் தொழிலாளர் - நிர்வாகம் இடையே இருக்கும் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!