Published:Updated:

கேள்வி - பதில் : குடும்பத் தலைவிகள் டேர்ம் இன்ஷூ ரன்ஸ் எடுக்க முடியுமா? - நிபுணரின் விளக்கம்

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

Q & A

அர்ஜுன் மூர்த்தி, அம்பத்தூர், சென்னை

நான் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளர். ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறேன். என் மனைவி குடும்பத் தலைவி. என் மகளை பள்ளிக் கூடத்துக்கு அழைத்துச் சென்று வருகிறார். அவர் பெயரில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா, முடியும் எனில் எவ்வளவு தொகைக்கு எடுக்க முடியும்?

சிவகாசி மணிகண்டன், ஷியாம் சுந்தர், ஶ்ரீகாந்த் மீனாட்சி
சிவகாசி மணிகண்டன், ஷியாம் சுந்தர், ஶ்ரீகாந்த் மீனாட்சி

சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com

“ஒருவர் அவரின் மனைவி பெயரில் தாராளமாக ஆயுள் காப்பீடு மட்டும் அளிக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம்.

பொதுவாக, கவரேஜ் தொகை, கணவர் எடுத்திருக்கும் தொகையை விட குறைவாக இருக்கும். கணவரின் பாலிசியைக் கணக்கில் எடுக்காமல் சில நிறுவனங்கள் குடும்பத் தலைவி களுக்கு ரூ.15 லட்சம் வரைக்கும் டேர்ம் பாலிசி கொடுக்கின்றன.”

நரேஷ், சென்னை -1

ஒருவர் தங்கப் பத்திரங்களை வாங்கி, அதை உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, வேறு யாருக்குமோ அன்பளிப்பாகத் தர இயலுமா?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

“கவர்ன்மென்ட் செக்யூரிட்டீஸ் ஆக்ட் 2006, 2007-க்கு உட்பட்டு யாருக்கு வேண்டுமானாலும் அன்பளிப்பாக அளிக்க முடியும். தொடக்கத்தில், பத்திரம் விண்ணப்பம் செய்த இடத்தில் அணுகி அதற்கான வழிமுறையில் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, வேறு யாராவது ஒருவருக்கோ தங்க பத்திரங்களை நன்கொடையாக வழங்கலாம்.

தனிநபருக்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், நன்கொடையாகப் பெறப்படுபவருக்கு பணவீக்க சரிகட்டல் (இண்டக்சேஷன்) முறையில் வரி விதிப்பு உண்டு.”

சா.ஶ்ரீதர், அம்மாபேட்டை, தஞ்சாவூர்

மியூச்சுவல் ஃபண்டில் பிராஃபிட் புக்கிங் செய்வது என்றால் என்ன? அதை எப்போது செய்யலாம். உதாரணமாக, கடந்த இரண்டு வருடங்களாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறேன். அதன் வருமானம் தற்சமயம் 25 சதவிகிதமாக உள்ளது. அதிலிருந்து தற்சமயம் எவ்வளவு சதவிகிதம் அல்லது தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“பிராஃபிட் புக்கிங் என்பதற்கு முதலீட்டில் கிடைத்திருக்கும் லாபத்தை வெளியே எடுத்து பத்திரப்படுத்துதல் என்று பொருள். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது இப்படி லாபத்தைப் பத்திரப்படுத்துவதற்கு சிறந்த வழி ‘ரீபேலன்ஸிங்’ எனப்படும் செயல்முறை ஆகும். ஒரு முதலீட்டுத் தொகுப்பில் 70% பங்குச் சந்தை முதலீடுகள், 30% கடன் சந்தை முதலீடு என்று இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். (உதாரணத்துக்கு). இப்போது பங்குச் சந்தை வளர்ச்சி காரணமாக இந்த 70% என்பது 80% சதவிகிதமாக உயர்ந்திருந்தால், அந்த மிகுதி 10% முதலீட்டை லாபமாக வெளியே எடுத்து முதலீட்டுத் தொகுப்பில் இருக்கும் கடன் சந்தை திட்டங்களில் மாற்றிவிடலாம்.

இப்படிச் செய்யும்போது மொத்த முதலீட்டின் ரிஸ்க் குறைகிறது; உங்கள் லாபங்களும் அவ்வப்போது பத்திரப்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர்த்து, வெறுமனே அவ்வப்போது லாபங்களை வெளியே எடுத்து வருவது சரியல்ல.”

முத்துக்குமார், சென்னை - 45

நான் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன். என் சொந்த ஊரான திருநெல்வேலியில் வீடு கட்ட விரும்புகிறேன். சென்னையில் உள்ள வங்கியில் அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் கடன் பெற முடியுமா?

ஆர்.கணேசன், முதன்மைச் செயல் அதிகாரி, நவரத்தினா ஹவுஸிங் ஃபைனான்ஸ்

“தாராளமாகக் கடன் பெற முடியும். பொதுவாக, வங்கிகள், நிதி நிறுவனங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவருக்கு அவர் பணிபுரியும் ஊர் அல்லது சொந்த ஊர் என எங்கே வீடு கட்டினாலும், வீடு வாங்கினாலும் கடன் உதவி செய்யும். சொந்த ஊரில் உள்ள வீட்டைப் பழுது பார்க்க மற்றும் புதுப்பிக்கக்கூட பணிபுரியும் ஊரில் உள்ள வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெறும் வசதியை வழங்குகின்றன.”

கேள்வி பதில்
கேள்வி பதில்

காயத்ரி பாபு, வந்தவாசி

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். என் வயது 30. முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகள். என் போர்ட் ஃபோலியோவில் லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகள் எத்தனை இருக்க வேண்டும்?

அபுபக்கர் சித்திக், ஆ.ஆறுமுக நயினார்
அபுபக்கர் சித்திக், ஆ.ஆறுமுக நயினார்

அபுபக்கர் சித்திக், செபியில் பதிவு பெற்ற நிதி ஆலோசகர், Wealthtraits.com

“முதலீடுகளைப் பிரித்துப் போடுவதன் அவசியத்தை நீங்கள் உணர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலீட்டில் எவ்வளவு ஏற்றத் தாழ்வுகளை நீங்கள் தாங்குவீர்கள் என்பதைப் பொறுத்தே சொல்ல முடியும்.

உங்கள் வயது, முதலீட்டுக் கால அளவைக் கணக்கில்கொண்டு பொதுவான அளவு: ஃபிளக்ஸி கேப் ஃபண்ட்: 30%, லார்ஜ்கேப் இண்டெக்ஸ் ஃபண்ட்: 25%, மிட்கேப் ஃபண்ட்: 25% ஸ்மால்கேப் ஃபண்ட்: 20%. ஒவ்வொன்றிலும் ஒரு ஃபண்ட் இருந்தால் போதுமானது.”

சென்னையில் இருக்கும் நான், கோவையில் இருக்கும் ஒரு சொத்தை அங்கு செல்லாமல் என் பெயரில் பதிவு செய்ய முடியுமா?

ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர் மற்றும் பதிவுத் துறை முன்னாள் கூடுதல் தலைவர்

‘‘முடியாது’ என்றுதான் பதில் சொல்ல முடியும். ஆனால், உங்கள் பெயரில் சென்னையில் ஒரு சொத்தும் கோவையில் ஒரு சொத்தும் இருந்தால், நீங்கள் இரண்டையும் ஒரே ஆவணத்தில் போடும் போது சென்னை அல்லது கோவையில் இதைப் பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்கு பதிவுச் சட்டத்தில் வழி உள்ளது. நீங்கள் கோவைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை இருந்தால், ஒரு நபரின் பெயரில் பொது அதிகார ஆவணம் எழுதி கொடுத்து, அந்த நபர் கோவைக்குச் சென்று பதிவு செய்ய முடியும்.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

பிட்ஸ்

டந்த வாரத்தில் 37,000 டாலருக்கு மேல் உயர்ந்த பிட்காயினின் விலை, கடந்த செவ்வாய்க் கிழமை அன்று 19% இறங்கி 30,700 என்கிற அளவுக்கு வர்த்தகம் ஆனது! உஷாரய்யா உஷாரு!