Published:Updated:

ரிஸ்க் இல்லாமல் ரிட்டர்ன்... பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்கள்! - மிடில் கிளாஸ் மக்களுக்கு...

cover story

பிரீமியம் ஸ்டோரி

நம் மக்களில் பலரும் பாதுகாப்பான முதலீட்டையே அதிகம் விரும்புகின்றனர். இந்தத் திட்டங்கள் மூலம் பணவீக்கம் அளவுக்கே நமக்கு வருமானம் கிடைத்தாலும் மூலதனமாகப் போட்ட பணத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்பதால், நம் மக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தை அதிகம் விரும்புகிறார்கள்.

நம் மொத்த முதலீட்டுத் தொகையில் அதாவது, நம் போர்ட்ஃபோலியோ வில் குறிப்பிட்ட சதவிகிதம் பாதுகாப்பான சேமிப்புத் திட்டங் களில் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் குழந்தைகளின் திருமணம், ஓய்வுக்காலம் என எதிர்கால இலக்குகளை நம்மால் மிகச் சரியாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

பாதுகாப்பான பல்வேறு சேமிப்புத் திட்டங்களை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் இந்தத் திட்டங்கள் சமீபத்தில் சீரமைக்கப்பட்டு, முன்பை விடவும் விதிமுறைகள் இலகுவாக்கப் பட்டு பலரும் சேர்ந்து பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சேமிப்புத் திட்டங்களைப் புரிந்துகொண்டால், மிடில் கிளாஸ் குடும்பத்தினர் தங்கள் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பயன் செய்யலாம்.

அந்த வகையில் இருக்கும் பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்கள் என்னென்ன, இந்தத் திட்டங்கள் பற்றிய அடிப்படை அம்சங்கள் என்னென்ன, குறிப்பாக வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பது பற்றி பார்ப்போம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

சுகன்யா சம்ருதித் திட்டம்

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை நோக்கமாகக் கொண்ட திட்டம் இது. பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான சேமிப்புக் கணக்கை குழந்தையின் பாதுகாவலர்களில் (Guardian) ஒருவர் தொடங்கலாம். தொடங்கப்படும் கணக்கு பெண் குழந்தையின் பெயரிலேயே இருக்கும்.

ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்குத் தொடங்க அனுமதி. என்றாலும், ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தை அல்லது மூன்று குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட தனித்தனி கணக்குகள் தொடங்க அனுமதிக்கப்படலாம்.

250 ரூபாயில் கணக்கு தொடங்கலாம். ஒரு கணக்கில், ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்ச சந்தா 1.5 லட்சம். குறைந்த பட்சம் 250 ரூபாய். சந்தா தொகை 50 ரூபாயின் மடங்குகளாக இருக்கும். கணக்குத் தொடங்கிய தேதியிலிருந்து 15 ஆண்டுகள் சந்தா செலுத்தப்பட வேண்டும். குழந்தையின் 18 வயது வரை பொறுப்பாளர் கணக்கைப் பராமரிப்பார். பிறகு, அந்தப் பெண் குழந்தையே கணக்கைப் பராமரிக்கலாம்.

நடைமுறையில் உள்ள சிறு சேமிப்புத் திட்டங்களில் அதிகமான வட்டி விகிதம் கொண்டது சுகன்யா சம்ருதிதான். தற்போதைய வட்டி விகிதம் 7.6% (31.3.21 வரைக்குமான வட்டி விகிதம் இது. ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும்). ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி முதல் மாத கடைசி தேதி வரை உள்ள இருப்பு தொகையில் எது குறைவோ அந்தத் தொகைக்கு மாதாந்தர வட்டி கணக்கிடப் படும் (எனவே, பிரதி மாதம் 5-ம் தேதிக்கு முன் சந்தா செலுத்துவது ஆதாயமாக இருக்கும்) நிதி ஆண்டு முடிவில் வட்டி, அசலுடன் சேர்க்கப்பட்டு கூட்டு வளர்ச்சி பெறும்.

இந்தக் கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து 21-வது ஆண்டில் முதிர்வடையும். என்றாலும், அந்தப் பெண் 18 வயதை அடைந்து திருமணம் செய்யப்பட இருந்தால் உரிய ஆவணங்களைத் தந்து கணக்கை முடித்துக் கொள்ளலாம். திருமணத் தேதிக்கு ஒரு மாதம் முன்போ திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகோ கணக்கை முடிக்க முடியாது என்பது கவனிக்கத் தக்கது.

முதிர்வு தேதிக்கு முன் கணக்கு வைத்துள்ள பெண் குழந்தை இறந்துவிடும்பட்சத்தில் சேமிப்புத் தொகை திட்டத்துக்கு உரிய வட்டியுடன் திருப்பித் தரப் படுகிறது. இதேபோல் உயிருக்கு ஊறு விளைவிக்கக்கூடிய நோயால் பாதிக்கப்பட்டாலும் கணக்குத் தொகை உரிய வட்டி யுடன் தரப்படுகிறது. இது தவிர, 15 ஆண்டுக்கு முன் கணக்கை (Premature) முடிக்க முடியாது.

ஆனால், அந்தப் பெண் குழந்தையின் கல்விச் செலவுக்கு சேமிப்புத் தொகையில் 50% திரும்பப் பெறலாம். குழந்தை 18 வயதை அடைதல் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி இவை இரண்டில் எது முன்போ அப்போது 50% பணம் பெறலாம் என்பதே நிபந்தனை. இந்தத் தொகையை முழுவதுமாகவோ, ஐந்து வருடங்களில் தவணை யாகவோ பெறலாம். பெறப்படும் தொகை 50 சதவிகிதத்துக்கு மேற்படலாகாது.

சேமிப்பு
சேமிப்பு

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்

ஒரு நபருக்கு ஒரு கணக்கு என்பது இதன் நியதி என்றாலும் மைனர் குழந்தைக்கோ மனநிலை பாதிக்கப்பட்டவருக்கோ அவர்களின் பொறுப்பாளியாக உள்ளவர் ஆளுக்கு ஒரு கணக்கு தொடங்கலாம். தனி கணக்கு தான். இணை கணக்கு (Joint Account) கிடையாது.

ஐந்நூறு ரூபாயில் கணக்கு தொடங்கலாம், நிதி ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்ச சந்தா 1.5 லட்சம். இந்த ஒன்றரை லட்சம் என்பது மைனர் கணக்கில் செலுத்தப்படும் தொகையையும் சேர்த்துக் கணக்கிடப்படும். சந்தா தொகை 50 ரூபாயின் மடங்குகளாக இருக்க வேண்டும். இந்த 1.5 லட்சம் ரூபாயை ஒரே தவணையாகவோ, பல தவணை களிலோ டெபாசிட் செய்யலாம்.

இதற்கான தற்போதைய வட்டி விகிதம் 7.1%. ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப் படும். இதன் சிறப்புத் தன்மை என்னவென்றால், அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்களது பிராவிடன்ட் ஃபண்ட் வட்டி விகிதம் என்னவோ, அதே வட்டி விகிதம் தான் பொதுமக்கள் பிராவிடன்ட் ஃபண்டுக்கும். மாதம்தோறும் 5-ம் தேதி முதல் மாதக் கடைசி தேதி வரை உள்ள இருப்புத் தொகையில் குறைவான தொகைக்கே வட்டி கணக்கீடு. எனவே, 5-ம் தேதிக்கு முன்பே மாதாந்தர சந்தாவைச் செலுத்த முயலலாம்.

கணக்குத் தொடங்கிய நிதி ஆண்டு தவிர்த்து 15 நிதி ஆண்டுகள் முடிந்த பின் கணக்கு முதிர்வு பெறும். அதற்குப் பிறகும் கணக்கை ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் நீட்டிக்கலாம். இத்தனை ஐந்து ஆண்டு என்ற வரம்பு கிடையாது. இவ்வாறு நீட்டிப்பு செய்வதில் இரண்டு வகை உண்டு. தொடர்ந்து சந்தா செலுத்திக்கொண்டே நீட்டிப்பது ஒருவகை. சந்தா தொடர்ந்து செலுத்தாமல் இறுதி இருப்பை அப்படியே விட்டு வைத்து வட்டி வளர்ச்சி பெறுவது மற்றொரு வகை. முதலாவது 5 ஆண்டில் சந்தா செலுத்தாமலே கணக்கை நீட்டித்தவர், பின்னர் சந்தா தொகையைச் செலுத்தி கணக்கை நீட்டிப்பு செய்ய முடியாது. கணக்கு முதிர்வு தேதிக்கு ஓராண்டுக்கு முன்பே நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கணக்கில் உள்ள பணத்தில் கடன் பெறும் வசதி மற்றும் இருப்புத் தொகையில் ஒரு பகுதி தொகையைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஆகிய இரண்டும் உண்டு.

கணக்கு ஆரம்பித்து ஓராண்டுக்குப் பிறகு, ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குள் கணக்கிலிருந்து பணம் பெறுவது கடன் என்ற வகையைச் சாரும். ஓராண்டு என்பது, எந்த நிதி ஆண்டில் கணக்கை தொடங்கினோமோ அந்த வருடத்துக்குப் பின் அடுத்த ஓராண்டு என்பதாக இருக்கும். வருடம் என்பது நிதி ஆண்டைக் குறிக்கும்.

இருப்புத் தொகையில் 25% கடன் பெறலாம். மைனர் மற்றும் மனநிலை பாதித்தவருக்காகத் தொடங்கப்பட்ட கணக்கிலும் இதே அளவு கடன் பெறலாம். உரிய சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பெற்ற கடனை ஒரே தவணையாகவோ, பல தவணைகளிலோ 36 மாத காலத்துக்குள் திருப்பிச் செலுத்தலாம். கடனுக்கான வட்டி 1%. கடன் முழுவதையும் செலுத்தி முடிந்த இரண்டு மாதத்துக்குள் வட்டி செலுத்தலாம். 36 மாதங்களுக்குள் செலுத்தப்படாத கடனுக்கு வட்டி6%-ஆக இருக்கும் என்பது கவனிக்கத் தக்கது.

கணக்கு தொடங்கிய நிதி ஆண்டு தவிர்த்து அதற்கடுத்த ஐந்து நிதியாண்டு முடிந்தவுடன் இருப்புத் தொகையில் 50% வரை பகுதி தொகையைப் (Partial Withdrawal) பெறலாம். இதைத் திருப்பி செலுத்தச் வேண்டியதில்லை. கணக்கின் முதிர்வுத் தேதிக்குப் பிறகு, கணக்கை நீட்டிப்பு செய்துள்ள காலத்திலும் 60% இருப்புத் தொகையைப் பெறலாம். இதையும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. சந்தாதாரர் இறக்கும்பட்சத்தில் அவரது கணக்கில் முந்தின மாதம் வரையான இருப்புத் தொகைக்கு, திட்டத்துக்குரிய வட்டியுடன் வாரிசுதாரர் அல்லது நியமனதாரர் தொகை பெறலாம்.

கணக்குத் தொடங்கி ஐந்து ஆண்டுக்குப் பிறகு, கணக்கை (Premeature) முடித்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். நோய்வாய்ப் படுதல், உயர்க்கல்வி இருப்பிட மாற்றம் முதலான காரணங்களுக்காக இத்தகைய இடைமுறிவு அனுமதிக்கப் படலாம். முதலீட்டுக்கு மிக மிக அதிக பாதுகாப்புக் கொண்டது இந்தத் திட்டம்.  

மாதாந்தர வருமானத் திட்டம்

மாதாந்தர வருமானம் தரும் தேசிய சேமிப்புத் திட்டம் (National Savings (Monthly) Income Account Scheme) ஐந்து வருட முதிர்வுக் காலம் கொண்டது. இதைப் பொறுத்தவரை, வருடம் என்பது காலண்டர் ஆண்டையே (Calendar year) குறிக்கும். அதாவது, 01.01.2021 அன்று தொடங்கப்பட்ட மாதாந்தர வருமானத் திட்டக் கணக்கு 31.12.2025 அன்று முதிர்வடையும்.

தனிநபராகவோ, அதிகபட்சம் மூவர் சேர்ந்த கூட்டுக் கணக்காகவோ தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மைனருக்கும் கணக்குத் தொடங்கலாம். மனநிலை பாதிக்கப் பட்டவருக்கும்கூட அவரது பொறுப்பாளி கணக்குத் தொடங் கலாம். தனிநபர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை நிர்வகிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுக் கணக்கும் பராமரிக்கலாம். தனிக் கணக்குகள் எத்தனையாக இருந்தாலும் அதன் மொத்தத் தொகை ரூ.4.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது. அதேபோல், கூட்டுக் கணக்குகளின் மொத்தத் தொகை ஒன்பது லட்சத்தைத் தாண்டக் கூடாது. குறைந்தபட்ச டெபாசிட் 1,000 ரூபாய். அதற்கு மேற்பட்ட தொகை 1,000 ரூபாயின் மடங்குகளாக இருக்க வேண்டும்.

இதற்கான இப்போதைய வட்டி 6.8%. ஒவ்வொரு மாத முடிவிலும் வட்டி வழங்கப்படும். வட்டி வழங்க வேண்டிய நாள் விடுமுறை நாள் எனில், அதற்கு முதல் நாளே வட்டி வழங்கப்படும். வாங்காமல் விடுபட்ட வட்டிக்கு வட்டி கிடைக்காது.கணக்கு தொடங்கி ஐந்தாம் ஆண்டு முடிவடைந்த பிறகு, டெபாசிட் தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும். டெபாசிட்தாரர் முதிர்வு தேதிக்கு முன் இறந்துவிட்டால், டெபாசிட் தொகை, அதற்கு முந்தைய மாதம் வரையான வட்டியுடன் திருப்பித் தரப்பட்டுவிடும்.

கணக்குத் தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு, எப்போது வேண்டுமானாலும் கணக்கை முடித்துக்கொள்ளலாம். மூன்று ஆண்டுக்குள் முடித்துக் கொள்ளப்படும் கணக்குக்கு டெபாசிட் தொகையில் இரண்டு சதவிதம் கழிவு போக நிகரத்தொகை கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கணக்கை முன்முறிவு (Premature closer) செய்தால் டெபாசிட் செய்த தொகையில் 1% கழிவு போக மீதித் தொகை கிடைக்கும்.

ரெக்கரிங் டெபாசிட்

60 மாதத் தவணைகள் கொண்ட இதன் குறைந்தபட்ச டெபாசிட் மாதம்தோறும் 100 ரூபாய். முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். தனியாகவோ, மூன்று பேர் கூட்டாகவோ, 10 வயது நிறைவடைந்த மைனர் பெயரிலோ கணக்குத் தொடங்கலாம். மைனருக்கும், மனநிலை பாதித்தவருக்கும் பொறுப்பாளி கணக்கை நிர்வகிக்கலாம். தனிக் கணக்கும், கூட்டுக் கணக்கும் ஒன்றுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம். 100 ரூபாய்க்கு மேற்பட்ட மாதச் சந்தா 10 ரூபாயின் மடங்குகளில் இருக்க வேண்டும். எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.

16-ம் தேதிக்குமுன் தொடங்கப் பட்ட கணக்குகளுக்கு மாதாந்தர சந்தா 15-ம் தேதி வரை செலுத்தப் பட வேண்டும். 16-ம் தேதி முதல் மாதக் கடைசிவரை தொடங்கப் பட்ட கணக்குக்கு மாதக் கடைசி வரை சந்தா செலுத்தலாம். கணக்கு தொடங்கும்போதோ தொடங்கிய பிறகு ஆறு மாத சந்தா முதல் ஐந்து வருட சந்தா வரையான தொகையை முன்பே (Advance Remittance) செலுத்தலாம். இதற்குத் தள்ளுபடி உண்டு. தள்ளுபடிபோக நிகரத் தொகையைச் செலுத்தினால் போதும்.

ஐந்து ஆண்டு முடிவில் முதிர்வுத் தொகை பெறலாம். விருப்பப்பட்டால் 5 ஆண்டுக்குப் பிறகும் அதே அளவு சந்தா தொகையுடன் மேலும் ஐந்து ஆண்டுகள் கணக்கை நீட்டித்து கொள்ளலாம். நீட்டிக்கப்பட்ட கணக்கை எப்போது தேவைப் பட்டாலும் முடித்துக்கொள்ளலாம். உரிய வட்டியுடன் தொகை பெறலாம். புதிய சந்தா தொகை செலுத்தா மலும்கூட நிறைவடைந்த கணக்கை மேலும் ஐந்து வருடம் தேக்கி வைக்கலாம். வட்டி வருமானம் சேர்க்கலாம்.  

தனிக் கணக்குச் சந்தாதாரரோ கூட்டுக் கணக்குச் சந்தாதாரரோ இறந்துவிட்டால் அவ்வப்போது உள்ள வட்டி விகிதத்தின்படி தயாரிக் கப்படும் அட்டவணைப்படி தொகை வாரிசுதாரர் அல்லது நியமன தாரருக்குத் திருப்பித் தரப்படும்.

தற்போதைய வட்டி 5.8%. காலாண்டுக்கு ஒருமுறை அசலுடன் சேர்க்கப்பட்டு கூட்டு வளர்ச்சி பெறும். 12 மாதத் தவணைகள் செலுத்தப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்த பிறகு, டெபாசிட் தொகையில் 50% கடன் பெறலாம். பெற்ற கடனை முதிர்வுத் தேதிக்கு முன் தவணையாகவோ, ஒட்டு மொத்தமாகவோ திருப்பிச் செலுத்தலாம். கடனுக்கான வட்டி என்பது திட்டத்துக்கான வட்டி என்னவோ, அத்துடன் மேலும் 2% வட்டி வசூலிக்கப்படும்.

முதிர்வுத் தேதிக்கு முன்பே கணக்கை முடிக்கலாம். ஆனால், கணக்குத் தொடங்கியதிலிருந்து மூன்று ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். முன்கூட்டியே (Premature) முடிக்கப்படும் கணக்குக்கு திட்டத்துக்கான வட்டி கிடைக்காது. அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கு உரிய வட்டி கிடைக்கும்.

தேசிய சேமிப்புப் பத்திரம் (VIII-வது வெளியீடு)

இதற்கான முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். தற்போதைய வட்டி விகிதம் 6.8%. வட்டியானது ஆண்டுக்கு ஒரு முறை அசலுடன் சேர்ந்து கூட்டு வளர்ச்சி பெறும்.

தனியாக, மைனர் சார்பாக, மனவளர்ச்சி குன்றியவர்களின் பொறுப்பாளி என்ற வகையிலும் தனிக்கணக்கு தொடங்கலாம். மூன்று பேர் சேர்ந்து கூட்டுக் கணக்கும் தொடங்கலாம். கூட்டுக் கணக்கு A, B என இரு வகையாக உள்ளது. கணக்கு ‘B’ என்பது, கூட்டாளிகளில் யாரேனும் ஒருவருக்கோ, பிழைத் திருப்போருக்கோ தொகை வழங்கத்தக்கது. ‘A’ வகை கணக்கு, கூட்டாளிகள் அனைவருக்கும் வழங்கத்தக்கது.

குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1,000 ரூபாயின் மடங்குகளாக எத்தனை ஆயிரம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதலீட்டுக்குப் பணம் வரம்பும் கிடையாது. இத்தனை டெபாசிட் கணக்குகள் மட்டும்தான் பராமரிக்கலாம் என்ற எண்ணிக்கை வரம்பும் கிடையாது.

சேமிப்புப் பத்திரத்தை அடகு வைக்கலாம். ஜனாதிபதி, ஆளுநர், ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் போன்ற வற்றுக்கு பிணையாக இருக்கும் வகையில் மாற்றம் செய்யலாம்.

டெபாசிட்தாரரின் இறப்பு, நீதிமன்ற ஆணை முதலான காரணங் களுக்காக டெபாசிட்டை முன்முதிர்வு செய்யலாம். டெபாசிட் செய்த ஓராண்டுக்குள் முன்முதிர்வு செய்தால் அசல் தொகை மட்டுமே கிடைக்கும். ஓராண்டுக்குப் பிறகு ஆனால், மூன்றாண்டுக்கு முன்பே முன்முறிவு செய்தால் அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கு உரிய (Savings Bank Account) வட்டியுடன் அசல் தொகையும் கிடைக்கும்.

இந்தத் திட்டத்துக்குரிய வட்டி விகிதம் பெற முடியாது. மூன்று ஆண்டுக்குப் பின் முன்முதிர்வு செய்தால் அட்டவணைப்படியான வட்டியுடன் அசல் தொகை கிடைக்கும். வட்டி விகிதப்படியான அட்டவணை அவ்வப்போது அமலாக்கம் பெறக்கூடும்.

கணக்கை மாற்றவும் செய்யலாம். அதாவது, டெபாசிட்தாரர் இறந்து போனால் அவரின் வாரிசுதாரருக்கு அல்லது நியமனதாரருக்கு மாற்றலாம். கூட்டுக் கணக்காக இருந்தால் கூட்டாளிகளின் வாரிசு மற்றும் நியமனதாரருக்கு மாற்றலாம். நீதிமன்ற ஆணைப்படி நீதி மன்றத்துக்கோ, நீதிமன்றம் ஆணையிடும் பிற நபருக்கோ கணக்கை மாற்றலாம்.

டெபாசிட்தாரர் இறந்துவிட்டால் நியமனதாரர்கள் விண்ணப்பித்து தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணம் பெறலாம்.

கிஷான் விகாஸ் பத்திரம்

தேசிய சேமிப்புப் பத்திரத்தைப் போலவே, தனிக்கணக்கு மற்றும் கூட்டுக் கணக்கு வைத்துக்கொள்ளக் கூடியது இந்த சேமிப்புப் பத்திரம். அதேபோல, பண வரம்பும், கணக்குகளின் எண்ணிக்கை வரம்பும் கிடையாது. ஆனால், குறைந்தபட்சம் 1,000 ரூபாயும், அதற்குமேல் 100 ரூபாயின் மடங்குகளாகவும் முதலீடு செய்யலாம்.

இந்த டெபாசிட் தொகையானது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் இரட்டிப்பாக இருக்கும் என்பது இதன் சிறப்பம்சம். குறிப்பிட்ட காலம் என்பது அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தைப் பொறுத்து மாறுபடும். தற்போதைய வட்டி 6.9%. இதன்படி, 124 மாதங்களில் டெபாசிட் இரட்டிப்பாகும்.

தேசிய சேமிப்புப் பத்திரம் போன்று இதையும் அடகு வைக்கலாம். பிணையாக மாற்றம் செய்யலாம். இறப்பின்போது வாரிசு களுக்கு அல்லது நியமனதாரர்களுக்கு மாற்றலாம். டெபாசிட்தாரர் இறந்து போனால், தேசிய சேமிப்புப் பத்திரம் போன்றே இதையும் வாரிசுதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

வட்டி
வட்டி

அஞ்சலக டைம் டெபாசிட்

தனிக் கணக்கு, 10 வயதான மைனர் கணக்கு, மனநிலை பாதிக்கப்பட்ட வருக்கான பொறுப்பாளியின் கணக்கு மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்த கூட்டுக் கணக்காக இருக் கலாம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை தனியாகவும் கூட்டாகவும் வைத்துக் கொள்ளலாம்.

முதிர்வு காலத்தைப் பொறுத்து இந்தக் கணக்கு நான்கு வகையாக உள்ளது. ஓராண்டு 5.5%, இரண்டாண்டு 55%, மூன்றாண்டு 5.5%, ஐந்தாண்டு டைம் டெபாசிட்  6.7% வட்டி பெறும். ஆண்டுக்கு ஒருமுறை வட்டி பெறலாம். பெற்றுக்கொள்ளாத வட்டிக்கு, வட்டி கிடையாது. விண்ணப்பத்தின் பேரில் வட்டி, சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

குறைந்தபட்சம் 1,000 மற்றும் அதன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். பணவரம்பு இல்லை. முதிர்வுக் காலம் முடிந்த பிறகு அதே கால அளவுக்கு மீண்டும் கணக்கை நீட்டிக்கலாம். ஓராண்டு டைம் டெபாசிட்டுக்கு முதிர்வுத் தேதிக்கு ஆறு மாதம் முன்பும், இரண்டு வருட டெபாசிட்டுக்கு 12 மாதம் முன்பும் மூன்று மற்றும் ஐந்து ஆண்டு டைம் டெபாசிட்டை அதே காலத்துக்கு நீட்டிக்க 18 மாதம் முன்பும் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

ஆறு மாதங்கள் முடிவதற்குள் டெபாசிட்டை முன்கூட்டியே (Premature) திரும்பப் பெற முடியாது. ஆறு மாதத்திலிருந்து ஓராண்டுக்குள் ஒருவருட டெபாசிட்டைத் திரும்பப் பெற்றால், அஞ்சலக சேமிப்பு வட்டி மட்டுமே கிடைக்கும். இதர டைம் டெபாசிட்டை முன்கூட்டியே திரும்பப் பெற்றால், வட்டி விகிதத்தில் 2% கழிக்கப்பட்டுவிடும். இதனையும் பிணை வைக்கலாம், மாற்றலாம்.

வரிச் சலுகை எவ்வளவு?

சுகன்யா சம்ருதிக் கணக்கு, பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், ஐந்தாண்டு தேசிய சேமிப்புப் பத்திரம், ஐந்தாண்டு அஞ்சலக டைம் டெபாசிட் ஆகியவை வருமான வரிப்பிரிவு 80C-யின் கீழ் 1.5 லட்சம் வரை முதலீட்டுத் தொகைக்கு வரிச் சலுகை பெறும்.

சுகன்யா சம்ருதி, பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் ஆகியவற்றின் வட்டி உள்ளிட்ட முதிர்வுத் தொகை வரிவிலக்கு பெறுகிறது. மாத வருமானத் திட்டம், அஞ்சல டைம் டெபாசிட், சேமிப்புக் கணக்கு, முதலியவற்றின் வட்டி வரிக்கு உட்படும். தேசிய சேமிப்புப் பத்திரம் முதிர்வடையும் தேதியில் பெறப்படும் வட்டியும் வரிக்குரியது.

இந்தத் திட்டங்களை நன்கு புரிந்துகொள்வது, முதலீட்டைத் தீர்மானிக்கவும், வரிச்சலுகை பெறவும் பரிசீலனைக்குப் பயன்படும்.

சேமிப்பு
சேமிப்பு

எங்கே தொடங்குவது?

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து டெபாசிட் திட்டங்களையும் அஞ்சலகத்தில் தொடங்கலாம்.

சுகன்யா சம்ருதிக் கணக்கு, பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் ஆகியவை வங்கிக் கிளைகளிலும் தொடங்கலாம்.

பிட்ஸ்

ம் பங்குச் சந்தையில் வங்கிகள், பார்மா, எஃப்.எம்.சி.ஜி, கேப்பிடல் குட்ஸ் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர் (Foreign Portfolio Investors) அதிகளவில் முதலீடு செய்திருக் கிறார்கள்!

பிட்ஸ்

வ்வோர் ஆண்டும் பட்ஜெட் டாக்குமென்ட் பிரசுரம் செய்து எம்.பி-களுக்கு தரப்படும். இந்த ஆண்டு போதிய அளவு ஊழியர்கள் இல்லாததால், பட்ஜெட் டாக்குமென்ட் பிரசுரிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு