மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 34

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று ஓவியத்தில் தென்பட்ட தண்டபாணியை அங்கு உள்ள அனைவருமே உற்று நோக்கினர்.

ஞ்சுகன் மட்டும் தன்னையும் அறியாமல் கைகளைக் குவித்து வணங்கத் தொடங்கினான். அவன் வணங்கவும் மெல்ல ஒவ்வொருவராக வணங்க முற்பட்டனர். போகர், ஒவ்வொருவரின் செயல்பாட்டையுமே கூர்ந்து கவனித்தார். அப்போது செம்போத்துப் பட்சி ஒன்று தன் அலகுகளைப் பிளந்து குரல்கொடுத்தது. மயில் ஒன்று அகவும் சத்தமும் கேட்டது. அதன் நிமித்தம் புலிப்பாணியின் முகத்தில் ஒரு கூடுதல் பரவசம் வெளிப்பட்டது.

இறையுதிர் காடு - 34

``பிரானே, தண்டபாணித் தெய்வம் உங்களைத் தொட்டு எங்களுக்குக் காட்சியளித்த இந்தத் தருணம், ஒரு பொன் தருணம். நிமித்திகங்களும் சிறப்பாக உள்ளன. பட்சிகளில் செம்போத்துவைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுணங்கள் என்பர். அதன்படி பார்த்தால், இப்போது இங்கு இருக்கும் காலகதியை பொன்வேளை எனலாம்’’ என்றான் புலிப்பாணி.

``மகிழ்ச்சி... மிகவும் மகிழ்ச்சி. நல்ல நிமித்தத்திலும் நல்ல நோக்கத்திலும் தொடங்கிடும் எந்த ஒரு செயல்பாடும், அதன் கதியை விட்டு விலகாது என்பதற்கு நீ இப்போது உறுதியளித்துள்ளாய். இந்த ஓவியத் தெய்வமே வரும் நாளில் இந்த உலகு மேவிடும் தெய்வமாய்க் கோயில் கொள்ளப்போகிறது! நான் முன்பே குறிப்பிட்டதுபோல் உலக மக்களில் ஏழு பேரில் ஒருவர், இந்தத் தெய்வ சான்னித்தியத்தின் முன் நின்று வணங்கிவிட்டுச் செல்பவராக இருப்பர். ஏழு பேரில் மூன்று பேர், நித்தமும் தாம் இருக்குமிடத்தில் வணங்குபவராய் இருப்பர். ஏழு பேருக்கு ஆறு பேர், இந்தத் தண்டாயுதபாணியை நிச்சயம் அறிந்தவராக இருப்பர். ஒருவர் மட்டும் அறியாத வட்டத்தில் இருப்பர்’’ என்று போகர் பிரான் கூறவும், அதுகுறித்தும் பல கேள்விகள் எல்லோரிடமும் எழும்பத் தொடங்கின.

அப்போது, மதியகாலச் சங்கு முழங்கும் ஓசை இடையிடத் தொடங்கியது. எல்லோரிடமும் அதன் நிமித்தம் ஒரு குதூகலம்.

உணவுக்கான சங்கொலி அது. கொட்டாரத்தில் சங்கொலி என்பது, கால நேரத்தைச் சொல்லும் ஒரு சத்தமும்கூட! காலக்கண்காணி என்று ஒருவனை போகர் நியமித்துள்ளார். அவனை வழக்குமொழியில் `கங்காணி’ என்பர். அந்தக் கங்காணிதான் சங்கு முழக்குவான். ஒரு நிமிடம்கூடப் பிசக மாட்டான். சங்கு முழக்கக்கூட ஓர் அளவு உண்டு. அவன்வசம் ஒரு பம்பரம் உள்ளது. அதைத் தரைமேல் விசையோடு சுற்ற விட்டுவிட்டு அது சுழன்று நிற்கும் வரை சங்கு முழக்குவான். போகர் பிரான் எல்லாவற்றிலுமே ஒரு கால அளவையும் ஒழுங்கையும் உருவாக்கியிருந்தார். அவனது சங்கொலி, போகர் பிரானை அந்த ஓவியத் திரைச்சீலையைச் சுற்றச்செய்தது.

இறையுதிர் காடு - 34

``பிரானே, உச்சி உணவுக்காலம் வந்துவிட்டது. நாங்கள் உண்டு முடித்து, சற்று ஓய்வெய்திய பின் திரும்ப வருகிறோம். இன்னமும் நாங்கள் கேட்க, கேள்விகள் ஏராளமாய் உள்ளன’’ என்றார் கிழார் பெருமக்களில் ஒருவர்.

``போய்விட்டு இளமாலையில் திரும்ப வாருங்கள். கதிரவன் மறையும் வரைகூடப் பேசலாம். இந்தப் பேச்சும் விவாதங்களும் இன்னமும் சில நாள்கள்தான். அதன்பின் நான் மௌனியாக ஒரு மண்டல காலம் இருக்கப்போகிறேன். அம்மண்டல காலத்தில் உயிரே பிரிவதாக இருந்தாலும் நான் மௌனத்தைக் கலைக்க மாட்டேன்’’ என்றார்.

``பிரானே, என்ன இது... எதனால் இப்படி ஒரு முடிவு?’’

``ஒரு யோகிக்கு, பேச்சைவிட மௌனம்தான் சக்திமிகுந்த ஆயுதம். இதைத் தாங்கள் அறியாதவர்களா?’’

``அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே?’’

``ஒரு காரணம்தான், ஒரே ஒரு காரணம்தான்! அந்தக் காரணம் இந்தத் திரைச்சீலையில் உள்ள தண்டபாணித் தெய்வமே!’’

``சற்று விளக்கமாய்க் கூற முடியுமா?’’

``இப்படியே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி? எப்போதும் ஒரு மனிதனின் வாழ்வில் உணவருந்தும் காலகதி துளியும் தவறக் கூடாது. உடம்பின் உள்ளுறுப்புகள் உணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவ்வேளையில், மனதில் கனமான எண்ணங்களோ கவலைகளோ இன்றி, சாப்பிடும் உணவைக் கண்ணாரக் கண்டு முதலில் மனதால் உண்டு, பின் நாவால் உண்ண வேண்டும். நேரப்பிசகின்றி உண்டாலே போதும், ரோக ராகத்துக்கு உடம்பில் இடமேயின்றிப் போய்விடும். செல்லுங்கள்... முதலில் உணவு! உயிர்களின் ரசனை மிகுந்த நல்ல நோக்கங்களில் ஐம்புலன்களில் நாவுக்கான காலம் இது. இனி பேச்சே கூடாது... செல்லுங்கள் செல்லுங்கள்!’’ - ஓர் இடையன் தன் பசுக்களைக் கோல்கொண்டு சுழற்றி ஒரு பக்கமாய்ச் செல்லப் பணிப்பது போல் போகர் செயல்படவும், மெல்லிய புன்னகையோடு எல்லோருமே ஆகாரக் கொட்டாரம் நோக்கிச் சென்றனர். போகரும் விலகி, தன் யோகக் கொட்டாரம் நோக்கித் திரும்பினார்.

ஆகாரக் கொட்டாரம், மெல்லிய குழல்மணிகள் தொங்கக் காட்சியளித்தது. நாற்புறமும் திறப்பு... எனவே, காற்றின் வீச்சு மிகுந்தும் அதன் காரணமாகக் குழல்மணிகள் ஒன்றின்மேல் ஒன்று மோதிச் சத்தமிட்டபடியும் இருந்தன.

கொட்டாரத்தைச் சுற்றிலும் புறாக்கள், சேவல்கள், கோழிகள் நிறையவே கண்ணில்பட்டன. மான் ஒன்றும் புற்களைக் கடிப்பதும், பின் நாலாபுறமும் தன் கரிய விழிகளால் பார்ப்பதுமாய்த் தென்பட்டது.

விளாமரம் ஒன்றில் பந்துபோல் காய்கள் காய்த்திருக்க, அதன்மேல் வாலாட்டிப் புள்ளும், மரங்கொத்தி களும் சில காகங்களுடன் அங்கு மிங்கும் தாவிப் பறந்தபடி இருந்தன. தரைமேல் நிழல், பொதி மரத்தின் அசைவுக்கேற்ப அசைந்தபடி இருந்தது.

கொட்டாரத்தினுள் பசுஞ்சாணம் கொண்டு நன்கு மெழுகப்பட்ட தரைமேல் வரிசையாகப் பலகைகள் போடப்பட்டு அந்தப் பலகைகள் முன் தையல் இலைகள் போடப்பட்டிருந்தன. அகண்ட வாய்கொண்ட மண்சட்டி ஒன்றில் சற்றே மஞ்சள்பொடி கலந்த நீர் அரை பாக அளவுக்குக் காணப்பட்டது. கை கழுவியிருந்தாலும் மஞ்சள்நீரில் கையை நன்கு அலசிக்கொள்ள வேண்டும்.

சாப்பிட வருபவர்கள் பலகை மேல் சப்பணமிட்டுதான் அமர வேண்டும். ஒரு பாகம் மடக்கி, மறுபாகம் நிமிர்த்தி குக்குடம்போலெல்லாம் அமர்ந்து உண்ணக் கூடாது. உண்ணத் தொடங்கும் முன் அன்னபூரணி வழிபாடு உண்டு. வணங்கிவிட்டே உண்ண வேண்டும். உண்ணும்போது பேச்சு கூடாது. நன்கு மென்று விழுங்க வேண்டும். உள்ளங்கை படாமல் உண்பது கூடவே கூடாது. உண்ட பின் விரல்களை எச்சிலால் சுத்தம் செய்துவிட வேண்டும். இடையில் நீர் அருந்துவதும் கூடாது. போகர் வரையில் எச்சில் என்பது அசுத்தமானதல்ல... அது அமுத குணமுடையது!

பனை வெல்லத்துண்டு, நெல்லித் துவையல், வாழைத்தண்டு ஊறல், வெள்ளரி - கொத்தமல்லி - வேம்பூ கலந்த பச்சடி, நாரத்தம் துண்டு, பச்சரிசிச் சோறு - காய்ச்சொதி - ஒரு மிடறு பசுநெய், மிளகுத்தக்காளி ரசம், தயிர்க்குழம்பு இதெல்லாம்தான் உணவின் வகைகள். இறுதியாக மதிய உணவில் மட்டும் பூவன் வாழைப்பழம் ஒன்றோ அல்லது இரண்டோ. சாப்பிட்டு முடிந்த பின், எக்காரணம்கொண்டும் படுக்கக் கூடாது. கொட்டாரத்தையொட்டிய பொதினிக் குன்றின் ஒரு பாகத்தில் இருக்கும் மனோன்மணி தெய்வத்தை நடந்தே சென்று வணங்கிவிட்டு அங்கு அவள் காலடியில் கிடக்கும் மஞ்சள்-குங்குமத்தைக் கட்டைவிரலால் ஒற்றி எடுத்து நெற்றியில் தீட்டிக்கொண்டு பின் திரும்பி வந்து அதன்பின் ஓய்வெடுக்கலாம். இவை, போகர் பிரான் தன் கொட்டாரத்தில் தன்னோடு தங்கியிருப்பவர்களுக்கு விதித்திருக்கும் நடைமுறைகள். சாப்பிட்ட பின் சற்றே நடக்க வேண்டும் என்றே இந்த ஏற்பாடெல்லாம்.

இளமாலையில் எல்லோரையும் பார்க்கும் சமயம், நெற்றிக்குங்குமம் அவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி நடந்திருப்பதைச் சொல்லாமல் சொல்லி விடும்.

அன்றைய இளமாலைப் பொழுதிலும் திரும்ப எல்லோரும் கூடினர். போகரும் வந்து நின்றவராய் அருகில் அமராசனம் இருந்தும் நின்றவண்ணமே பேச ஆரம்பித்தார்.

``எல்லோரும் உண்டு களித்தீர்களா?’’

``ஆயிற்று பிரானே...’’

``சுவையாக இருந்ததா?’’

``இருந்தது பிரானே...’’

``அடுத்து எப்போது உணவு வேளை வரும் என எண்ணத் தோன்றுகிறதா?’’ - இந்தக் கேள்விக்கு, சிலர் தலையசைத்தனர்; சிலர் மௌனம் காத்தனர்; சிலர் தடுமாறினர்.

``இம்மட்டில் குழப்பம் கூடாது. மனதில் தோன்றுவதைக் கூறிவிட வேண்டும். ஆம் என்போர், அதிகம் ருசித்து உண்டவர்கள் என்பது பொருள். இல்லை என்போர், அவ்வாறு உண்ணவில்லை என்பது பொருள். குழம்புபவர்கள், ஏதோ பசிக்காக உண்டிருக்கிறார்கள் என்பது பொருள். அதைத் தெரிந்துகொள்ளவே இவ்வாறு கேட்டேன். எது எப்படி இருப்பினும், கசப்பான உணவைக்கூட ருசித்து சர்வாங்கமும் சிலிர்க்க உண்பதே நல்ல உண்ணும் முறை!

எத்தனை ருசியான உணவையும் ரசித்து உண்பதுபோலவே, அதைத் துறக்கும் மனத்திண்மையும் வேண்டும். இதை `விரதம்’ என்போம். ரதம் எனில், ஓடுவதைக் குறிக்கும். விரதம் எனில், ஓட்டம் ஒடுங்குவதைக் குறிக்கும். ஒரு மனிதன் அதற்கும் பழக வேண்டும். அந்தப் பொறுப்பை அவன்வசம் அளித்தால் அவன் சரியாகப் பின்பற்றுவானோ மாட்டானோ என்றுதான் காலகதியில் விரதகால நாள்களை உருவாக்கி அளித்துள்ளனர். குறிப்பாக, மாதம் இருமுறை வரும் ஏகாதசி திதி அன்று உண்ணாமை கோடி பெற்றிடும். இந்த நாளில் மனம் ஒரு புள்ளியில் குவிந்து அடங்கிட விஷ்ணுவை உபாசிக்க வேண்டும்.

``துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறு. கருமார்களே, நீங்கள் காரியத்தில் கண்ணாய் இருங்கள். உங்களுக்கான சகலமும் நீங்கள் இருக்கும் இடம் தேடி வரும். இந்தச் செயலை மழை, வெயில் எனும் கால உலுக்கல் இன்றிச் செய்திட மலைக்குகைகளே ஏற்றவை.

உபாசனை என்பது நாம ஜபமாக இருக்கலாம். விஷ்ணுவின் சகலபரிமாண ருசிகளை மனதுக்குத் தரும் புராணக் கதைகளாகவும் இருக்கலாம். ஏகாதசி விரதம், முதுமையைத் துளியும் வலியின்றியும் சோர்வின்றியும் பார்வைக்குறைபாடு, முடக்குவாதம் முதலியன இன்றியும் கழித்திடப் பெரிதும் உதவும்.

இந்தத் திதியன்று விண்ணில் நிலவும் தட்பவெப்பத்தில்தான் ஆரோக்கிய ரகசியமே ஒளிந்துள்ளது. ஏகாதசி நாளன்று பூரண விரதமிருந்து மறுநாளான துவாதசியில் அதாவது வளர்பிறைக்கும் தேய்பிறைக்குமான 11-ம் நாளில் விரதம் முடித்து அகத்திக்கீரை மற்றும் நெல்லிப் பச்சடியுடன் சீரான உணவை உண்டிட, உடம்பில் சுரப்பிகள் நசிவின்றி திடமாய்ச் செயல்படும். சுரப்பிகள்வசமே முதுமையின் ஆரோக்கியம் பெரிதும் உள்ளது’’ - போகர் பிரான், `நன்றாகச் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்கத் தொடங்கி ஏகாதசி திதி வரை வந்துவிட்டார். அவர் வாயைத் திறந்தாலே ஏதாவது ஓர் அபார உண்மை எப்படியோ வெளிப்பட்டுவிடுகிறது.

பிறருக்கு பிரமிப்பை அளிப்பதில் அவருக்கு நிகரே இல்லை என்றே கூற வேண்டும். அந்த நொடி, உண்பது என்பதன் பின்புலத்தையொட்டி இத்தனை விஷயங்கள் இருக்கும் என்பதை அங்கு உள்ளோர் அறிந்திருக்க மாட்டார்கள்.

இப்போது அறிந்த நிலையிலோ அவர்களிடம் பிரமிப்பு. ``நாங்கள் பல கேள்விகள் கேட்க இடமேயின்றி விளக்கமளித்துவிட்டீர்கள்’’ என்று ஒரு சீடன் கூறிய தருணம், முன்பு வந்த கருமார்கள் இருவரும் திரும்ப வந்து வணங்கி நின்றனர். அவர்கள் கைவசம் உள்ள ஒரு பிரம்புத்தட்டில் உதிரிப்பூக்களும், பலவகைப் பழங்களும், ஒரு மண்குவளையில் பாலும், அத்தோடு அவர்களின் தொழிற்கருவிகளில் ஒன்றான புகையூதியும் கூடுதலாய் இரும்புச் சுத்தியலோடு, அகப்பை, சல்லடை, குத்தூசி, உலோக வெட்டி என்று சில கருவிகளும் இருந்தன.

அந்தக் கருமார்கள் பிரம்புத்தட்டை நின்றபடி இருந்த போகரின் காலடியில் வைத்துவிட்டு மண்டியிட்டு வணங்கி, மண்டியிட்ட நிலையிலேயே கைகள் இரண்டையும் மார்பு முன் கட்டிக்கொண்டு போகர்பிரானை நோக்கினர். போகர், அவர்கள் அருகில் சென்று உற்று நோக்கிவிட்டு அவர்கள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். பின் பிரம்புத்தட்டில் இருந்த பாலை எடுத்து ஒரு மடக்கு குடித்தார். அதற்கும் பின் சில பூக்களைத் தன் தலைமேல் போட்டுக்கொண்டவர், தட்டில் இருந்த கருவியில் ஒன்றைக் கையில் எடுத்துத் தன் நெற்றிமேல் வைத்து தியானித்தவராக அவர்கள் வசம் அளித்தார். பின் அவர்களை எழுந்திருக்கச் சொன்னவர், புலிப்பாணியின் பக்கம் திரும்பி ``புலி’’ என்றார்.

``பிரானே!’’

``இந்தக் கருமார்கள், நம் தண்டபாணித் தெய்வத்தின் அச்சை வார்க்கப்போகிறார்கள். அந்த அச்சில் இருந்தே பாஷாண மூர்த்தியாக யாம் தண்டபாணித் தெய்வத்தின் மூல உருவை வார்க்கப்போகிறோம். காலகாலத்துக்கும் நிலைத்து நிற்கப்போகிற ஒரு செயல்பாடு இது. இவர்களுக்கு யாம் இப்போது இங்கே தீட்சை வழங்கிவிட்டோம்.

இனி இவர்கள் திரைச்சீலை வடிவைப் பார்த்து நீள, அகல, உயரங்களைக் கணித்து அச்சை உருவாக்க வேண்டும்.

அப்படித் தொடங்கும் காலப்புள்ளி செயல்திறனுக்கு இடையூறு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டுமல்லவா?’’

``புரிகிறது பிரானே... நாளை அதற்கான காலகதியைக் கணக்கிட்டுக் கூறிவிடுகிறேன்.’’

இறையுதிர் காடு - 34

``துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறு. கருமார்களே, நீங்கள் காரியத்தில் கண்ணாய் இருங்கள். உங்களுக்கான சகலமும் நீங்கள் இருக்கும் இடம் தேடி வரும். இந்தச் செயலை மழை, வெயில் எனும் கால உலுக்கல் இன்றிச் செய்திட மலைக்குகைகளே ஏற்றவை.

புலி... இவர்களை நீ, நான் சவாசனம் புரியும் கன்னிவாடி மலைக்குகைக்கு அழைத்துச் செல். அதுவே இவர்கள் அச்சு செய்ய ஏற்ற இடமாகும்!’’ என்றார். அவர்களும் பிரம்புத்தட்டை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். புலிப்பாணி, உடன் செல்லத் தொடங்கினான்.

இன்று கடபயாதி என்கிற அந்தப் புத்தகத் தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில், மின்தாக்கம் ஏற்பட்டவள்போல் கார்க் கதவருகே தேங்கி நின்றாள் பாரதி. அந்த பிராமணர் குனிந்தபடி புத்தகக் கட்டை துரியானந்தம் முன் வைத்தார்.

துரியானந்தமும் பார்த்தான். புத்தகப் பெயர் அவனை முதலில் பாரதியைத்தான் பார்க்கவைத்தது.

``கண்ணு, நீ கேட்ட புத்தகம் மாதிரி தெரியுது பார்’’ என்றபடியே பிராமணரைப் பார்த்தான்.

``இதெல்லாம் என்கிட்ட இதுநாள் வரையில இருந்த புத்தகங்கள். நான் இந்த ஊரைவிட்டு விலகி அமெரிக்காவுல இருக்கிற என் பிள்ளைகிட்ட போகப் போறேன். மளிகைக்கடையில வீசைக்குப் போட மனசு வரலை. அவ்வளவும் அபூர்வமான புத்தகங்கள்! இதைச் சுமந்துண்டும் என்னால போக முடியாது. அதான் உன் ஞாபகம் வரவும் எடுத்துண்டு வந்துட்டேன்’’ என்று துரியானந்தம் கேளாமலே அவர் ஒரு விளக்கமும் அளித்தார்.

அதைக் கேட்டபடியே வந்த பாரதி, புத்தகங்களைப் பார்த்தாள். அதற்குள் துரியானந்தம் அந்தப் புத்தகங்களைத் தனித்தனியே எடுத்துப் பார்த்தான். கடபயாதி, வினோதரச மஞ்சரி, குண்டலகேசி, பரணீதரனின் அருணாசல மகிமை, வால்காவில் இருந்து கங்கை வரை, அன்னா கரீனினா, சிக்க தேவராயன் கதை, காண்டேகரின் யயாதி... வரிசையாய்ப் பார்க்கப் பார்க்க பாரதிக்குப் பெருவியப்பு!

``அண்ணே... இதையெல்லாம் அப்படியே நான் எடுத்துக்கிறேன்’’ என்றாள்.

``நினைச்சேம்மா... எல்லாமே லட்டு லட்டான புத்தகங்க... ஒரு தமிழ் வாத்தியார் இந்தக் குண்டலகேசிக்காகத் தினம் வருவாரு’’ என்ற துரியானந்தம், ``என்ன சாமி... எவ்வளவு கேக்கிறீங்க?’’ என்று அந்த பிராமணரைப் பார்த்தான்.

``பாத்து போட்டுக் கொடு... இதை நான் என் செலவுக்கு எடுத்துக்கப்போறதில்ல. என் வீட்டு வேலைக்காரியோட புள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட கொடுத்துடப்போறேன்’’ என்றார் அவர்.

பாரதி உடனடியாக 2,000 ரூபாயை எடுத்து அவர் முன் நீட்டினாள்.

``அய்யோடா... என்ட்ட சில்ற இல்லம்மா..!’’

``இல்லை... இதை அப்படியே ஸ்கூல் ஃபீஸ் கட்டக் கொடுத்துடுங்க!’’

இறையுதிர் காடு - 34

``ஓ... உனக்கு பொஸ்தக மதிப்பும் தெரிஞ்சிருக்கு, படிப்போட மதிப்பும் தெரிஞ்சிருக்கு. தேங்க்யூ’’ என்றபடியே அவர் வாங்கிக்கொள்ள, ஐந்நூறு ரூபாயை துரியானந்தம் முன் நீட்டினாள் பாரதி.

``கண்ணு...’’

``எடுத்துக்குங்க. உங்க மூலமாதானே நான் வாங்கணும்? உங்க லாபத்தை நான் இல்லைன்னு ஆக்கலாமா!’’

``பெரும்புத்திம்மா உனக்கு...’’ - துரியானந்தம் பரவசமானான். பாரதி, புத்தகங்களை வேகமாய் அடுக்கியபடியே அந்தக் கடபயாதியை எடுத்து விரிக்கத் தொடங்கினாள். அப்படியே ``இந்த புக்கைத்தான் தேடி வந்தேன். கிடைச்சிடுச்சு. ஆனா, இதுக்குக் காரணம் யார் தெரியுமா?’’ என்றும் கேட்டாள்.

``யார் கண்ணு?’’

``நீங்கதான்.’’

``நானா?’’

``ஆமா! ஒரு பெட்டி, ஒரு வாள்னு உங்ககிட்டதானே நான் வாங்கினேன்.’’

``வீட்டுக்குத்தானே போய்க்கிட்டிருக்கோம். பார்த்துத் தெரிஞ்சிக்கோ. கலைப்பொருள்னு நினைச்சு வாங்கின ரெண்டும் இப்ப கொலைப்பொருளா மாறி மிரட்டிக்கிட்டு இருக்கு. ஒண்ணும் புரியலை. நானே குழப்பத்துலதான் இருக்கேன்.’’

``ஆமா... நானே கேக்கணும்னு இருந்தேன். அத்த இன்னா பண்ணே கண்ணு? கத்திய, சுவத்துல மாட்டிப்புடலாம். பாக்க அழகா இருக்கும். பொட்டியில என்ன பழைய ஜாமான்லாம் போட்டு வெச்சிருக்கியா?’’

``மண்ணாங்கட்டி, அதைத் திறக்கவே முடியலை. இதுல பழைய சாமான் போடுறது எப்படி?’’

``ஆமாங்கண்ணு... அது ஒரு டைப்பான பொட்டி. அத்தோடு ஒரே மாய் மாலம் வேற!’’

``யூ ஆர் கரெக்ட்... மாய் மாலம் த ரைட் வேர்டு! சரி, நான் கிளம்புறேன். வேகமா போகணும். விரிவா பேச இப்ப நேரமுமில்ல’’ என்று புத்தகங்களைச் சுமக்க விழைந்தவளைத் தடுத்து துரியானந்தமே அந்தப் புத்தகங்களை எல்லாம் எடுத்துப் பின் சீட்டில் வைத்தான். வைக்கும்போது அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பாட்டி முத்துலட்சுமியையும் பார்த்தான். நெற்றியில் கட்டோடு சோர்வோடு பார்த்தாள் அவளும். ஒரு சிரிப்பு சிரித்தான். சிரித்தபடியே ``வணக்கம்மா’’ என்றான். முத்துலட்சுமியிடம் ஆமோதிப்பு பாவனை!

பாரதி முன்புறம் ஏறிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தாள். அதுவும் சீறத் தொடங்கியது.

காருக்குள்ளே...

``அடிக்கடி நீ பொட்டி, கத்தின்னு பேசிட்டே... என்னன்னு கேட்டா, ஒண்ணும் சொல்லவும் மாட்டேங்கிறே. ஏற்கெனவே உங்க அப்பனால மன உளைச்சல். புதுசா இதெல்லாம் என்னம்மா?’’ என்று முத்துலட்சுமி கேட்கவும், அந்த நிலையிலும் ஒரு சிரிப்பு சிரித்த பாரதி டிராஃபிக்கில் விசுக்கென்று முன் கடந்து சென்ற ஒரு பல்சர் பைக்காரன் நிமித்தம் எரிச்சலாகி ``இவங்களோடு பெரிய ரோதனை... கொஞ்சம்கூட டிராஃபிக் சென்ஸே இல்லாத கேடுகெட்டவங்க’’ என்று முணுமுணுத்தாள்.

``என் கேள்விக்கு நீ பதிலே சொல்லலை...’’ என்றாள் முத்துலட்சுமி.

``வீட்டுக்குத்தானே போய்க்கிட்டிருக்கோம். பார்த்துத் தெரிஞ்சிக்கோ. கலைப்பொருள்னு நினைச்சு வாங்கின ரெண்டும் இப்ப கொலைப்பொருளா மாறி மிரட்டிக்கிட்டு இருக்கு. ஒண்ணும் புரியலை. நானே குழப்பத்துலதான் இருக்கேன்.’’

``இதுக்குத்தான் கண்டதை வாங்கக் கூடாதுங்கிறது. இப்படித்தான் உன் தாத்தா எனக்கு ஒரு வைர மூக்குத்தி வாங்கித் தந்தாரு. அது என்னடான்னா, என்னைப் போடவே விடலை. எப்ப போட்டாலும் காய்ச்சல் வந்துடும். கழட்டிட்டா சரியாயிடும்’’ - முத்துலட்சுமி சொன்னதைக் கேட்டு பாரதி விக்கித்துவிட்டாள்.

``பாட்டி... இதுக்குமேல எதுவும் பேசாதே! இந்த மாதிரியெல்லாம் யோசிக்க இந்த ஒரு நாள்லதான் முடியும்’’ என்று சீறியபடியே காரை ஓட்டினாள்.

அதற்கு பதில் கூறு முன், அரவிந்தன் போன் புளூடூத் கனெக்‌ஷனில் மைக்கில் ஒலிப்பதுபோல் ஒலித்து அழைத்தது.

``சொல்லுங்க அரவிந்தன்...’’

``நான் திருச்சி தாண்டிட்டேன். அந்த புக் கிடைச்சுதா?’’

``உம்...’’

``வாவ்! என்ன பாரதி உம்முன்னு சாதாரணமா சொல்றே?’’

``எக்ஸைட் ஆக விரும்பலை அரவிந்தன். நான் நிஜமா இப்ப குழப்பத்துல இருக்கேன். நீங்க வாங்க நேர்ல பேசுவோம்.’’

``அதுவும் சரி... அப்புறம் அந்தப் பாம்பு இருந்தா அதை அடிச்சிடாம வெளியேத்தப் பார்...’’

``முட்டை - பால் எல்லாம்கூட கொடுக்கலாம்தானே?’’

``நீ கிண்டலா கேட்கிறது புரியுது. இருந்தாலும் சொல்றேன். டிரை பண்ணிப்பார்.’’

அதைக் கேட்ட மறுநொடி போனை கட் செய்தாள்.

அந்த டெல்லி ஜோசியர் எங்கிருந்தோ ஒரு பாம்புப் பிடாரனுடன் வந்து பார்த்தபோது பெட்டி மேல் பாம்பு இல்லை. ஜோசியரிடம் திகைப்பு.

``எங்க போச்சு அந்தப் பாம்பு?’’ என்று கேட்கவும் ``யாருக்குத் தெரியும்... அது என்னா, சொல்லிட்டா போவும்? முட்டாள்தனமா கேக்குறியேய்யா...’’ என்றான் மருதமுத்து. பானு பதிலுக்கு அவனை முறைத்தாள்.

மருதமுத்து அதைப் பொருட்படுத்தாமல் ``அம்மா பழநியில இருந்து வந்துட்டாங்க. இப்பதான் போன் பண்ணிக் கேட்டாங்க’’ என்றான்.

அதைக் கேட்ட நொடி விதிர்த்த பானு ``இதை ஏன் முதல்லயே சொல்லல..?’’ என்று வெடித்தாள். பதிலுக்கு அவன் வாய் திறக்கும்போதே பாரதியின் கார் உள்ளே நுழையும் சத்தம்.

எல்லோர் கவனமும் கார் நோக்கித் திரும்பியது. மருதமுத்து ஓடிப்போய் கார்க் கதவைத் திறக்க, பின்னால் இருந்து முத்துலட்சுமி இறங்கிட, பாரதியும் இறங்கினாள்.

ஜோசியரிடம் தர்மசங்கடம். பானுவும் பதற்றமானாள். இருந்தும் சுதாரித்தவளாக ``வாங்க மேடம்... பழநியில தரிசனமெல்லாம் நல்லபடி ஆச்சா?’’ என்று சகஜமாய்ப் பேச முயன்றாள்.

பாரதி, அதற்கு பதில் கூறாமல் ஜோசியரைத்தான் பார்த்தாள். அவரும் ``நமஸ்தே மேடம்’’ என்றார்.

``எங்க நீங்க இங்க?’’ என்று காரின் பின்னால் பானட்டைத் திறந்தாள்.

அதற்குள் மருதமுத்து அவள் அருகே வந்தவனாக ``அம்மா, அந்தப் பாம்பு இப்ப பொட்டியவிட்டுப் போயிடிச்சு. எங்க போச்சின்னே தெரியலை...’’ எனவும் முத்துலட்சுமிக்குப் புரியவில்லை. பாரதியோ அதைக் கேட்டபடி முத்துலட்சுமியை அழைத்துக்கொண்டு பங்களாவினுள் சென்றாள். பானு, ஜோசியர் பின்தொடர்ந்திட மருதமுத்து பெட்டியை எடுத்துக்கொண்டு தொடர்ந்தான். பிடாரனும்.

``பாட்டி நீ கொஞ்சம் படு... அப்புறமா விவரமா பேசுறேன். கார்ல உட்கார்ந்து வந்த களைப்பு இருக்கும்’’ என்றவள் முத்துலட்சுமியை பெட்ரூம் நோக்கி அழைத்துச் சென்றாள்.

முத்துலட்சுமியோ ``ஏதோ பெட்டின்னியே... அதுவா?’’ என்று சரியாகக் கை நீட்டிக்காட்டிக் கேட்டாள்.

``ஆமாம். நீ போய்ப் படு. எல்லாம் பின்னால பேசிக்கலாம்’’ என்று உள் நுழைந்து படுக்கையில் கிடத்தினாள் அவளை.

பின் திரும்பி வந்தாள். உற்றுப்பார்த்தபடி இருந்தார் ஜோசியர். பாரதி வாய் திறக்கும் முன் ``அந்தப் பாம்பைப் பிடிக்க இதோ பிடாரனோடு வந்திருக்கேன். பானுதான் பாம்பு வந்த விவரம் சொன்னா... அந்த மாதிரி விஷப்பூச்சிகளை விடக் கூடாது’’ என்றார்.

இறையுதிர் காடு - 34

``சரி... பிடிச்சுக் காட்டுங்க’’ என்றாள் ஒரு முடிவோடு. பிடாரனும் தயாரானான். பானுவிடம் படபடப்பு. பாரதியும் மார்பின் முன் கைகளைக் கட்டிக்கொண்டே பிடாரன் என்ன செய்யப்போகிறான் என்று பார்க்கத் தொடங்கினாள்.

துரியானந்தம் கடை முன் பலரை விசாரித்தபடியே வந்திருந்த சாந்தப்ராகாஷும் சாருபாலாவும் கடையில் எவருமே இல்லாததைக் கண்டு லேசாக அதிர்ந்தனர். பக்கத்திலேயே தள்ளுவண்டியில் ஒரு பானிபூரிக் கடை!

அந்தக் கடைக்காரனே சாந்தப்ரகாஷைப் பார்த்தவனாக, ``புக் எதுனா வாங்கணும்னா பார்த்து எடுங்க. துரியானந்தம் டீ குடிச்சிட்டு வரப் போயிருக்காரு’’ என்றான்.

நன்றாக இருட்டிவிட்ட நிலையில் அப்போது சாருபாலாவிடமும் பலமான களைப்பு. வாந்திவேறு எதிர்பாராமல் வரத் தொடங்கியது.

- தொடரும்...