
எங்கே உங்களுக்குத் தெரிந்த சித்தர்கள் சிலரின் பெயர்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம்…
அன்று அந்த முதல் பார்வையிலேயே உடையார் மனம் அதிகம் பொங்கவிட்ட சோறுபோலக் குழைந்துபோனது. நின்ற இடத்திலிருந்தபடி உள்ளே சந்நிதியிலிருந்த குற்றாலலிங்கத்தையும் தீபச்சுடர் ஒளியில் பார்க்கமுடிந்தது. நேராக குற்றாலலிங்கம்! வலப்பக்கமாய் தலையைத் திருப்பினால், பெட்டிமேல் ஜெகவலலிங்கம். இரண்டுக்கும் பொதுவாக நடுவில் விழுந்து வணங்கினார்.
காதில், பெரியபுராணப் பாடல்களும் அதன் அரும்பொருளும்… அதிலும் குறிப்பாக, பரஞ்சோதி நாயனாரிடம் இறைவன், காபாலிகனாக வந்து பிள்ளைக்கறி கேட்ட படலம்.
சாப்பிடுவதற்காக இலைமுன் அமர்ந்துவிட்ட இறைவனுக்கு, பரஞ்ஜோதியார் மனைவி தன் ஒரே பிள்ளையின் அவித்த தலைப்பாகத்தை வைத்தாள். நெஞ்சுக்குள் பெரும் துக்க அடைப்பு.
இறைவனும் தன் லீலையை விரிவுபடுத்தத் தொடங்கினான்.
“அப்பனே… இது என்ன?”
“தாங்கள் கேட்ட தலைக்கறி சுவாமி.”
“அது சரி, எங்கே உன் பிள்ளை?”
“பிள்ளை… பிள்ளை…” பரஞ்ஜோதியார் தடுமாறிட, மனைவி இடையிட்டு சமாளிக்க முயன்றாள்.
“அவன் வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறான்.”
“அப்படியானால் அவனையும் அழைத்து என் அருகில் அமரச்செய்து உணவிடுங்கள். நான் தனியே உண்ண மாட்டேன்.”
- காபாலிக வடிவிலான இறைவனின் அதட்டலான குரல், அவர்களை ஒடியச்செய்தது. பிள்ளைக்கறிக்காக பிள்ளையையே கொன்று, அப்படிக் கொன்றெடுத்த தலையும் உணவாக இலை மேலே கிடக்கும்போது, அவன் எங்கிருந்து வருவான்? எப்படி வருவான்?

“இல்லை… அவன் பிடிவாதக்காரன். பாதி விளையாட்டிலெல்லாம் வரமாட்டான் சுவாமி. நீங்கள் சாப்பிடுங்கள். எங்கள் வழக்கமும் சிவனடியார் பசியாறிய பிறகே உணவருந்துவது என்பதுதான்.”
“பரவாயில்லை, அதை இன்று மீறினால் பாதகமில்லை. மீறச்சொல்வது நான்தானே? நீங்கள் இல்லையே… அவனை அழைத்திடுங்கள்.”
“சுவாமி… தயவுசெய்து நீங்கள் உணவருந்துங்கள். அவன் வர இயலாத தொலைவில் இருக்கிறான்.”
“அப்படி என்ன தொலைவு? தொலைவிலிருக்க அது என்ன கைலாசமா? அழையுங்கள்…”
- காபாலிக இறைவனின் கிடுக்கிப்பிடி, பரஞ்ஜோதியாரை ‘சீராளா’ என்று பாசாங்குடன் அழைக்கச் செய்தது. அவன் வரமாட்டான் என்று தெரிந்தே. சொல்லிவிட்ட பொய்யில் அகப்பட்டுக்கொண்டவராய் பரஞ்ஜோதியாரும் ‘சீராளா… சீராளா…’ என்று அழைத்தார். காபாலிக இறைவனோ அதைக் கேட்டுச் சிரித்தார்.
“தொலைதூரத்தில் இருப்பவனை இப்படியா அழைப்பார்கள்? உரத்த குரலில் அழையுங்கள். நான் அழைக்கிறேன் பாருங்கள்… சீராளா... சீராளா... சீராளா…!”
- காபாலிக இறைவன் குரல், புவனமெங்கும் எதிரொலித்தது. பரஞ்ஜோதியாரும் அவர் மனைவியும் மனதுக்குள் நடுங்கியவர்களாய் கண்ணீர் உகுத்தனர்.
‘இறைவா இது என்ன சோதனை... உன் சோதனைக்கும் ஓர் அளவில்லையா?” என்று அவர்கள் கண்களை மூடிக்கொண்டு உருகிய அந்த நொடிகளில், “அம்மா… அப்பா… அழைத்தீர்களா என்னை?” என்று கேட்டபடியே சீராளன் வந்தான். கண்களைத் திறந்து பார்த்த இருவருக்கும் காண்பது கனவா இல்லை நனவுதானா என்கிற சந்தேகம். எதிரில் பளிச்சென்று விபூதி துலங்கிய சீராளன்!
‘கழுத்தை வெட்டிக் கூறுபோட்டு சமைத்தது நாமிருவரல்லவா... எப்படி வந்தான்? இவன் நம் பிள்ளைதானா?’ என்று அவர்கள் தங்களுக்குள் தடுமாறிய நொடிகளில், காபாலிக இறைவனும் விடைமேல் பார்வதிதேவியுடன் காட்சி தந்தவனாய், “பரஞ்ஜோதி… நீ பந்த பாசங்களையெல்லாமும் உதறித்தள்ள முடிந்த உன்னத பக்தன் என்பதை நிரூபித்துவிட்டாய். என்மேலான பக்தியின் முன் எதுவும் பெரிதில்லை என்பதையும் உணர்த்திவிட்டாய். இத்துணிவால் நீயும் உன் மகனும் உலகம் உள்ள அளவும் பேசப்படுவீர்கள். உங்களுக்கு எங்களின் பூர்ண நல்லாசிகள்!” என்று சிவபெருமான் கூறிட, அதைப் பெரியபுராணம் வாசித்தவர், ஏற்ற இறக்கத்தோடு சொல்லிமுடிக்க, உடையாரின் கண்களிரண்டில் கண்ணீரின் வாரிதி!
அதைக் கண்ட அருகிலிருந்தவர் உடையாரிடம் பேசலானார். அவரும் ஒரு சிவனடியார் போலத்தான் தெரிந்தார்.
“என்ன... உள்ளம் உருகிவிட்டதா?”
“ஆமாம்… பரஞ்ஜோதியாரின் பக்திச் செயல்பாடு என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. தவமிருந்து பெற்ற பிள்ளையை இப்படியா ஒருவர் வெட்டிக் கறி சமைப்பார்? அடேயப்பா என்ன ஒரு தியாகம்! என்ன ஒரு சிவ பக்தி!”
“அப்படியானால் நீங்கள் இதுபோல நடக்க நேர்ந்தால், நடப்பீர்களா, மாட்டீர்களா?”
“அது எனக்குத் தெரியாது. ஆனால், இந்தக் கதை நான் மறக்க நினைத்த என் பிள்ளையையும் குடும்பத்தையும் பெரிதாய் ஞாபகப்படுத்தி விட்டது.”
“மறக்க நினைத்த பிள்ளையா… இது என்ன விசித்திரமான பதில்?”
“என் வாழ்வில் இப்போது நடக்கிற எல்லாமே விசித்திரம்தான். என்னவோ வாழ்க்கை போங்கள்…”
“எதற்கு இவ்வளவு விரக்தி? அப்படி என்ன நடந்தது?”
“எதை மறக்க எண்ணி மாடமாளிகையைத் துறந்து வந்தேனோ, அதைப் பேசும்படி செய்கிறீர்களே… வேண்டாம் விட்டுவிடுங்கள்.”
“மனம் விடுங்கள்… இது இறை சந்நிதி. நிச்சயம் நல்வழி பிறக்கும்.”
“நல்வழியா… இனிமேலா… அதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே?”
“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஏதோ துக்கத்தில் இருப்பதுபோல் தெரிகிறதே?”
“ஆம்… தவமிருந்து ஒரு பிள்ளையைப் பெற்றேன். ஆனால், பருவ வயதில் அவனொரு அரவாணியாக மாறிவிட்டான். மிடுக்கான மீசையோடு துள்ளிக்குதித்து வரவேண்டியவன், மைப்பூசிய விழிகளோடு நெளிந்து குழைந்து வந்தால் பார்க்க சகிக்குமா அய்யா?” - உடையார் கேள்வி, கேட்டவரை அதிரச் செய்தது. சில விநாடிகளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்… உங்கள் மகன் பால் மாறிவிட்டான் என்றா?”
“ஆமய்யா… ஒரேபிள்ளை. பிரம்மாண்ட ஜமீனின் வாரிசு இப்படியானால் பார்க்க சகிக்குமா?”
“அப்படியானால் நீங்கள்?”
“அடடே… உளறிவிட்டேனே! நான் சாமான்யன்… நான் சொன்னதெல்லாம் பொய். என்னை விடுங்கள்.”
- உடையார் அங்கிருந்து வேகமாக விலகத் தொடங்கினார். உள்ளே சந்நிதிக்குள் சென்று, குருக்களிடம் விபூதி பெற்றுக்கொள்ளவும் தோன்றவில்லை. ஆனால், அவரைக் கேள்வி கேட்டவரோ விடுவதாயில்லை.
“நில்லுங்கள்… அந்த இறைவன் உங்களைக் கைவிடவில்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.”
“என்ன சொல்கிறீர்கள்? அவன் என்னைக் கைவிடவில்லையா?”
“ஆம்… அதனால்தான் நான் இங்கு வந்திருக்கும் இத்தருணத்தில் நீங்களும் மிகச்சரியாக வந்துள்ளீர்கள்.”
“தயவுசெய்து புரியும்படி கூறிடுங்கள்…”
“வாருங்கள்… அப்படி அமர்ந்து பேசுவோம்” - அவர் உடையாரோடு ஒதுங்கிச் சென்று, சரியான இடம் பார்த்து அமர்ந்தார். அருவி விழும் ஓசை அங்கே நன்கு கேட்டது. அங்கும் இங்குமாய் சிலர் நடமாடிக்கொண்டிருந்தனர். பல்லாவரத்தில் உணரமுடியாத ஒரு சிலுசிலுப்பை உடையார் உணர்ந்திருந்தார். தோளில் தொங்கிக்கொண்டிருந்தது அந்த லண்டன் லெதர் பேக்!
“உண்மையைச் சொல்லுங்கள்… நீங்கள் ஜமீன் வம்சமா?”
“ஆம்!”
“பிள்ளை பிசிராகவும் வாழ்க்கை வெறுத்துவிட்டதா?”
“எந்த அடிப்படையில் நான் மகிழ்ச்சியோடு வாழமுடியும்? எல்லாமிருந்தும் என்ன பயன்? ஏளனப் பார்வைகளை எப்படி எதிர்கொள்ள முடியும்?”
“எத்தனை நாள்களுக்குப் பார்ப்பார்கள்? எதற்கும் ஓர் அளவு உள்ளதே...”
“அய்யா… இப்படிப் பதில் சொல்வது எளிது. அனுபவித்தால்தான் புரியும். நான் என் மகன் பொருட்டு மட்டும் இப்படிச் சிந்திக்கவில்லை. ஒரு பெரும் பாவத்துக்கு நானும் என் முன்னோர்களும் ஆட்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்.”
“இப்படி ஒரு கற்பனையா?”
“இது கற்பனை இல்லை. ஜாதகக் கட்டம் கூறும் உண்மை. ஒன்றுக்கு மூன்று ஜோதிடர்களும் பெரும் தோஷம் பிடித்திருப்பதாகக் கூறிவிட்டனர்.”
“சரி, அது எப்படி வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். இப்போது நான் கூறப்போவதைக் கேளுங்கள். என் பெயர் சிதம்பர மாணிக்கம். எனது ஊர் காரைக்குடி. செட்டிநாடென்று கேள்விப்பட்டிருக்கி ன்றீர்களா?”
“நன்றாகத் தெரியும்… கோட்டைபோலக் காரைவீடு கட்டி வாழ்பவர்கள் எனும் பொருளில்தானே காரைக்குடி என்றே வந்தது.”
“வரலாறு தெரிந்திருக்கிறதே… எதுவரை படித்துள்ளீர்?”
“சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ சரித்திரம்தான் என் தனிப்பாடம்.”
“அப்படியானால் உங்களுக்கு நான் சில விஷயங்களை விளக்குவது சுலபம். நீங்கள் சித்தர் பெருமக்களைப் பற்றிக் கேள்விப்பட்டி ருக்கிறீர்களா?”
“கேள்விப்பட்டிருக்கிறேன்… அதற்கென்ன?”
“எங்கே உங்களுக்குத் தெரிந்த சித்தர்கள் சிலரின் பெயர்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம்…”
“இப்படிச் சட்டென்று கேட்டால் எப்படிச் சொல்வது? எனக்குத் தெரிந்து பளிச்சென்று கூறமுடிந்த சித்தர், போகர்தான். பழநி எங்களுக்குக் குலதெய்வம். எனவே, அங்கே போன சமயத்தில் அவர் சமாதியைப் பார்த்திருக்கிறேன்.”
“இதுபோதும் எனக்கு. யாரை இப்போது தெரியவேண்டுமோ அவரைத் தெரிந்திருக்கிறது உங்களுக்கு.”
“எதற்குக் கேட்டீர்கள்?”
“உங்களுக்கு போகரை நேரில் தரிசிக்கும் ஆசை உண்டா?”
“நேரிலா... போகரையா?”
“ஆமாம்… அவரையேதான்.”
“இது என்ன உளறல்… அவர்தான் சமாதியாகிவிட்டாரே.”
“அதனால் என்ன… சித்தர்கள் சமாதியான பிறகே அதிக சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ்கிறார்கள். அதிலும், போகர் பிரான் எங்களையெல்லாம் வழிப்படுத்துவதில் நிகரில்லாதவராகத் திகழ்கிறார். நோயற்ற உடல், சஞ்சலமில்லா மனதுடன் நானும் என் குடும்பமும் திகழ, போகர் பிரானே காரணம்.”

அந்த சிதம்பர மாணிக்கம் பேச்சை எப்படி எடுத்துக்கொள்வது என்றே உடையாருக்குத் தெரியவில்லை. வெறித்துப் பார்த்தார்.
“என்ன… நான் சொல்வதை நம்பமுடிய வில்லையா?”
“ஆம்… சித்தர்கள் விஷயமே பெரும் கண்கட்டுதானே?”
“தவறான கருத்து. நான் சொல்வது சத்யமான நிஜம். இதை நான் இதுநாள் வரையில் என் உறவினர்களிடம்கூட வெளியே சொன்னதில்லை. உங்கள் நிலையின் வேதனையை அறிந்து, பரிதாபப்பட்டு இந்த உண்மையைச் சொல்லியுள்ளேன். பெட்டிமேல் ஒரு சிறு லிங்கத்தைப் பார்த்தீர்களே… அது பாஷாண லிங்கம். போகர் பிரான் தன் கைப்படச் செய்தது. பழநி முருகனைச் செய்வதற்கு முன்பே இந்த லிங்கத்தைச் செய்துவிட்டார். இந்த லிங்கம் தினமும் பூஜிக்கப்பட வேண்டிய ஒன்று. அசாதாரணமானது. கேட்டவர்க்குக் கேட்டதைத் தரவல்லது” - சிதம்பர மாணிக்கம் சொல்வதெல்லாமே அவர் பக்தி மிகுதியில் சொல்வதாகவே உடையாருக்குத் தோன்றியது.
“இந்த லிங்கம் என்வசம் வந்து 12 வருடங்களாகிவிட்டது. வரும் சித்ரா பௌர்ணமியன்று நான் இதை போகர் பிரானிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்குத்தான் காரைக்குடியிலிருந்து இரு தினங்கள் முன்பாகவே வந்துவிட்டேன்.”
“அப்படியானால் 12 வருடங்கள் இது உங்களிடம்தான் இருந்ததா?”
“ஆம்… 12 வருடங்களுக்கு முன்பு இது இறை சித்தத்தால் எனக்குக் கிட்டியது. நான் பெரும் பாக்கியசாலி. இப்போதுகூட இதைப் பிரிய எனக்கு மனதேயில்லை. ஆனால், வேறு வழியில்லை. இதை நான் போகர் பிரானிடம் ஒப்படைக்கத் தவறினால், பெரும்பாவத்துக்கும் பழிக்கும் ஆளாகிவிடுவேன். அதனால், முறைப்படி ஒப்படைக்க வந்துள்ளேன்.”
“எல்லாமே விநோதமாக உள்ளதே… இதை ஏன் போகர் உங்களுக்குத் தர வேண்டும்? நீங்கள் எதனால் இதைத் திருப்பித் தர வேண்டும்?”
“விவரமாகக் கூறுகிறேன். இந்த லிங்கம் உங்களுக்குக் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நீங்கள் என்னோடு சித்தன் பெட்டலுக்கு வாருங்கள். அங்கு நடைபெறப்போகும் சித்ரா பௌர்ணமி பூஜையில் கலந்துகொள்ளுங்கள். உங்களுக்கு இந்த லிங்கம் வேண்டும் என்றால், ஓர் ஓலையில் உங்கள் பெயரை குலகோத்திர குறிப்புகளோடு தாருங்கள். உங்களைப்போல பலர் தருவர். இறுதியாக பாலா வந்து தேர்வுசெய்வாள். அவள் உங்கள் ஏட்டை எடுத்துத் தந்தால், லிங்கம் 12 வருட காலம் உங்களுக்குச் சொந்தம்!’’
“சரி… இது எனக்குக் கிடைப்பதால் பெரிதாக என்ன நடந்துவிடும்?”
“உங்கள் வம்சம் தழைக்கும். பாவங்கள், சாபங்கள் நீங்கும். நீங்களும் நோயற்ற வாழ்வு வாழ்வீர்கள். உங்கள் தலைமுறைகளும் செல்வச் செழிப்போடு வாழ்வார்கள்.”
“இவற்றை இந்தக் குற்றால நாதனால் தரமுடியாதா? இரு லிங்க சாந்நித்தியமும் ஒன்றுதானே? இந்த பாஷாண லிங்கத்தால்தான் தரமுடியுமா?”
“குற்றால நாதனின் இன்னொரு வடிவமே, இந்த ஜெகவலலிங்கம். இதன் பின்புலத்தில் இன்னும் பல செயல்பாடுகள் உள்ளன. விருட்சங்களை நட்டு வளர்ப்பது, வனக் கொண்டாட்டம் புரிவது, சித்த ஏடுகளைப் பாதுகாப்பது… இப்படி அநேக செயல்பாடுகள் உள்ளன.”
“என்னென்னவோ சொல்கிறீர்களே… எல்லாமே எனக்கு விநோதமாக உள்ளது.”
“ஆம்… 1908-ம் வருடம் நான் வந்தபோதும் உங்களைப் போலத்தான் நினைத்தேன். ஆனால், இப்போது பெரும் பாக்கியசாலியாக உணர்கிறேன். எனக்கு என் இறப்பு காலம்கூட இப்போது தெரியும் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.”
“நீங்கள் சொன்ன விஷயங்களில் இரு விஷயங்களை என்னால் துளியும் நம்ப முடியவில்லை. ஒன்று, போகர் பிரான் இப்போதும் இருக்கிறார் என்பது.
அடுத்து, உங்கள் மரண காலம் தெரியும் என்பது. மற்றவற்றைப் பொதுவில் எல்லோரும் கூறுகிறார்கள். எனவே, அதை நான் பெரிதாகக் கருதவில்லை.”
“அப்படியானால் நான் பொய் சொல்கிறேனா?”
“அப்படிச் சொல்லவில்லை. அதேவேளை நம்பவும் முடியவில்லை.”
“சரி… இப்போது அந்த லிங்கம் ஒச்சமின்றி 32 லட்சணங்களோடு பூர்ணமாக உள்ளது. நீங்கள் அதை வணங்கி, அதனிடம் எதைக் கேட்டாலும் அது தரும். கேட்டுப் பார்த்து, கிடைத்த பிறகு நம்புங்களேன்.”
“நிஜமாகவா?”
“பொதுவாக இப்படிப் பரிசோதிப்பது பெரும் தவறு. ஆனாலும், உங்கள் மேல் ஏற்பட்ட அக்கறையால் கூறுகிறேன். உங்கள் வசம் இந்த லிங்கம் வந்து சேர்ந்தால், இன்னொரு 12 வருடங்கள் உங்களோடு சேர்ந்து நானும் வழி படுவேன். அந்தச் சுயநலம் காரணமாகச் சொல்கிறேன்.”
“நான் எதைக் கேட்டாலும் இந்த லிங்கம் தந்துவிடுமா?”
“கேட்டுத்தான் பாருங்களேன்.”
“என் மனைவி சிட்டாள் ஞாபகமாகவே உள்ளது. அவளை இப்போது இங்கே நான் பார்க்கமுடியுமா?”
“பிரார்த்தனை செய்து பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.”
“அவள் இப்போது மதராஸின் பல்லாவர ஜமீனுக்குள் இருக்கிறாள். நான் எங்கிருக்கிறேன் என்றும் தெரியாது. அப்படி இருக்க, எப்படி முடியும்?”
“முடியாததை முடிப்பதால்தான் இது பெரும் வணக்கத்துக்குரியதாக உள்ளது. முழுமையாக நம்பிச் செயல்பட வேண்டும். அவநம்பிக்கை கூடவே கூடாது.”
“அப்படியானால் எதை வேண்டுமானால் கேட்கலாமா? இது தருமா?”
“கேட்பது பெரிதே இல்லை… அதற்குப்பின் கேட்டதற்கான தகுதி இல்லை என்றாகும்போது, நேரெதிர் விளைவுகள் உருவாகிடும்.”
“நீங்கள் இப்படியும் பேசுகிறீர்கள்… அப்படியும் பேசுகிறீர்களே.”
“சரி, பெரிதாக இல்லை. சிறிதாகவே வேண்டிக்கொள்கிறேன். உள்ளே குற்றால லிங்கத்தின் மேல் ஒரு வில்வமாலை சாற்றியுள்ளது. அந்த மாலை என் கழுத்தில் இப்போது வந்து விழ வேண்டும். விழுமா?”

“உம்… பிரார்த்தனை புரிந்துகொள்ளுங்கள்.”
“நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். அதுவே வந்து விழ வேண்டும்… விழுமா?”
“பிரார்த்தனையைத்தான் செய்துகொள்ளச் சொல்லிவிட்டேனே…” – சிதம்பர மாணிக்கம் அழுத்தம் கொடுக்க, உடையாரும் கண்களை மூடிக்கொண்டு தியானிக்கலானார். ஆனால், உள்ளே இருந்த குருக்களோ அந்த வில்வ மாலையை ஒரு பக்தர் கழுத்தில் போட்டபடி இருந்தார்.
இன்று பாரதி தன் கைப்பேசியைப் பார்ப்பதை உணர்ந்த சாருபாலாவிடம் உடனேயே ஒரு பதற்றம். சற்று ஒதுங்கிச் சென்று, தனிமையில் பேச விரும்புவதைத் தன் உடல் மொழிகளால் வெளிப்படுத்தினாள். தொடர்ந்து ஆகாஷிடம் பேசவும் செய்தாள். அவன் ஆங்கிலத்தில் குழறலான அசென்ட்களுடன் ஒரு டிபிகல் அமெரிக்கனாய் பேசினான்.
“மாம்…”
“ஹாய் ஆகாஷ்…”
“வேர் ஆர் யூ நௌ?”
“பிஃபோர் ஐ ஆஸ்கிங் யூ… இப்ப உன் கால் எப்படி இருக்கு?”
“பெய்ன் இல்ல… மாம் நான் உன்ன ரொம்பவே மிஸ் பண்றேன்… எப்ப நீ வருவே?”
“நீயா இப்படிச் சொல்றே… என்னால நம்பமுடியல!”
“ஐ ஆம் ஸாரி… நான் உங்களை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிட்டேன். மாம்… கொஞ்சம் முன்னால ஒரு கனவு. நீயும் டாடியும் ஒரு காட்டுக்குள்ளே போறீங்க. அங்க உங்களைச் சிலர் சுத்தி வளைச்சு, உங்க திங்க்ஸையெல்லாம் எடுத்துக்கிட்டுப் போயிடறாங்க. நீங்க அவங்களைத் துரத்தறீங்க. அவ்ளோதான்! கனவு கலைஞ்சிடிச்சு.’’
“ஆகாஷ்… நீ நிஜமாதான் சொல்றியா?”
“அதான் கனவுலன்னு சொன்னேனே.”
“ஆனா, இங்கே ரியலாவே அப்படி எங்களுக்கு நடந்திருச்சிடா!”
“ரியலி…?”
“யெஸ்… இங்கே எங்களுக்கு நடந்தது அங்கே உன் கனவுல எப்படி வரமுடியும்?” – சாருபாலா கேட்க, சாந்தப்ரகாஷ் அவளை அப்போது நெருங்கி, கைப்பேசியில் ஆகாஷைப் பார்த்து அவனும் இணைந்துகொண்டான்.
“சந்தா… நமக்கு இங்கே நடந்தது அப்படியே அங்கே ஆகாஷுக்குக் கனவுல வந்திருக்குது” என்று கைப்பேசியை அவன் வசம் தந்தாள் சாரு.
“வாட் எ சர்ப்ரைஸ்… ஆகாஷ், நீ நிஜமாதான் சொல்றியா?”
“யெஸ் டாட்!”
“டேய்... நீ இப்போ நார்மலா பேசறே… என் பழைய ஆகாஷ் மாதிரியே பேசறே.”
“அஃப்கோர்ஸ்… எனக்கும் உங்க ஞாபகமாகவே இருக்கு டாட்… அப்புறம் என்ன பண்ணீங்க? அவங்களைப் பிடிக்க முடிஞ்சதா?”
“இல்ல... முயற்சி செய்துட்டே இருக்கோம்.”
அந்தப் பதிலோடு சிக்னல் தொடர்பு அறுந்துபோனது. கைப்பேசியை ஒரு உதறு உதறியபடி, “முக்கியமான டயத்துலதான் இந்த சிக்னல் கட்டாகும்” என்று பலமாய் முனங்கியவனைப் பார்த்தபடியே அருகில் வந்தார் ஜெயராமன்.
“என்ன சார்… புதுசா ஏதாவது பிரச்னையா?”
“இல்ல சார்… பிரச்னைல்லாம் இல்ல. ஆனா, ஒரு த்ரில்லான எக்ஸ்பீரியன்ஸ்.”
“யாருக்கு… என்ன அது?”
“யு.எஸ்ல இருக்குற எங்க சன் கனவுல, நாம இங்கே மலைமேல பெட்டிய கோட்டைவிட்ட சம்பவம் ஃப்ளாஷ் ஆகியிருக்கு!”
“என்ன சார் சொல்றீங்க?”
“அவன் சொன்னதைச் சொல்றேன். அவன் கேஷுவலாதான் சொன்னான். ஆனா, வாட் எ கோ இன்சிடென்ஸ்!”
“அன்பிலீவபிள்… ஆமா, உங்க சன் என்ன பண்றாரு?” – ஜெயராமனின் கேள்வி, ஒரு பெரும் பிரேக் போட்டதுபோல சாந்தப்ரகாஷைத் தேக்கி நிறுத்திற்று. சாருவும் தடுமாறினாள். அரவிந்தனும் பாரதியும்கூட அருகில் வந்தனர்.
வயல்காட்டில் திவ்யப்ராகாஷ்ஜி குளித்து முடித்தவராக தலையைத் துவட்டியபடியே வந்துகொண்டிருந்தார்.
“என்ன சார்… நாங்க ஏதாவது தப்பா கேட்டுட்டோமா?”
“இல்ல சார். அதெல்லாம் இல்ல… எனக்குத்தான்… ஸாரி, எங்க ரெண்டு பேருக்குத்தான் எப்படிச் சொல்றதுன்னு ஒரு தயக்கம்…”
“காரணம்?”
“இப்போ அவன் ஒரு ட்ரான்ஸ்ஜென்டர்!”
- சன்னக் குரலில்தான் சாந்தப்ரகாஷ் குரல் ஒலித்தது. ஆனால், அதிர்ச்சி எல்லோர் முகங்களிலும் பலமானதாகவே இருந்தது. பாரதிக்கும் சாருபாலா ஏன் ஒதுங்கிப் போனாள் என்பது புரிந்தது.
“வெரி ஸாரி மிஸ்டர் சாந்தப்ரகாஷ்… உங்களுக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கும்னு நாங்க யாருமே நினைக்கல…”
“இல்ல சார்… இப்போ அதுல நிறையவே மாற்றங்கள். என் பையன் முதல்ல எங்களுக்கு போனே பண்ண மாட்டான். நாங்க பண்ணாலும் கட் பண்ணுவான். யு.எஸ்ல பிங்க்கீஸோட சேர்ந்து எங்களை ரொம்பவே கலங்க வெச்சுட்டான். ஆனா, இப்போ அவனா நெருங்கி வரான். அங்கே அவனால இப்போ ஓடியாடி நடமாட முடியாத ஒரு நிலை. ஒரு ஆக்சிடென்ட் அவனை முடக்கிப் போட்ருக்குது. இப்படி ஒரு நிலைலதான் இங்கே நமக்கு நடந்த இன்சிடென்ட் அங்கே அவனுக்கும் ஒரு கனவா வந்திருக்குது.”
- சந்துவின் பேச்சைக் கேட்டபடியே நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டே அருகில் வந்தார் திவ்யப்ரகாஷ்ஜி!
“பரபரப்பா ஏதோ பேசிக்கிட்டிருக்கீங்க போலிருக்கே?” என்று இணைந்துகொண்டார். சந்துவும் நடந்தவற்றைச் சொல்லிமுடித்தான். திவ்யப்ரகாஷ்ஜி முகத்தில் ஒரு பிரகாசம்!
“என்ன ஜி… ஏதாவது தோணுதா?”
“கேள்விப்பட்டவரைக்கும் கணக்குப் போட்டுப் பார்த்தா எல்லாம் நல்லதுக்குன்னுதான் சொல்லணும். பெட்டியைத் திருப்பிக் கொடுக்கறதுக்காக ஊரை விட்டுப் புறப்பட்டப்பவே ஒரு நல்ல காலம் எங்க பிரம்மாண்டம் ஜமீன் குடும்பத்துக்குத் தொடங்கிடிச்சு. இதெல்லாம் நல்ல சமிக்ஞைகள்!”
“என்ன நல்ல சமிக்ஞைங்கறீங்க? பெட்டி எங்கே இருக்குன்னே தெரியல. எப்படிக் கண்டுபிடிக்கப் போறோம்னும் தெரியலியே…”
“கவலை வேண்டாம். நான் இப்பவே தியானத்துல உட்கார்ந்து ட்ரை பண்றேன். நீங்கெல்லாம் அமைதியா இருங்க. நமக்கு தெய்வ சகாயம் இருக்கு” என்றபடியே எதிர் சாரிக்குள் தென்பட்ட மாந்தோப்பு ஒன்றுக்குள் நுழைய ஆரம்பித்தார்.
“ஜி…”
“பேசாம வாங்க… அமைதியான சுத்தமான மரத்தடிதான் இப்போ என் தேவை.”
அவர்களும் பின்தொடர்ந்தனர்.
பங்களாவுக்குத் திரும்பியிருந்த கணேசபாண்டியின் முகத்தில் ஏமாற்றம் கலந்த சோர்வு.
“என்னய்யா… எங்கே பானு?” என்கிற ராஜா மகேந்தரின் கேள்வி முன் நெளிந்தார்.
“உன்னத்தான்யா…”
“அய்யா... குடும்பத்தோடு அது வெளியூர் போயிடிச்சு போலங்க. வீடு பூட்டிக்கிடக்கு… போன் பண்ணிக் கேட்கலாம்னா ஸ்விட்ச் ஆஃப்னே வருது!”
“டவுட்டா இருக்கு பாண்டி… அவ ஸ்விட்ச் ஆஃப் பண்றவளே கிடையாதே?”
“அதாங்க எனக்கும் புதிரா இருக்குது” – கணேச பாண்டி அந்தப் பதிலோடு, அங்கே மருதமுத்துவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான்.
மருதமுத்துவின் கன்னம் கழுத்தில் எல்லாம் கீறல்கள், தழும்புகள்!
“அய்யா... இவன் என்னய்யா பண்ணான்?”
“அதை அவன்கிட்டயே கேள்.”
“என்னடா பண்ணே?”
“ஒண்ணும் பண்ணலண்ணே… பாரதிம்மா போன் பண்ணி வீட்ல நடக்கிறதை அப்படியே ஸ்கைப்புல காட்டச் சொன்னாங்க… அதான்!”
“அவங்க இப்போ எங்கே?”
“திருச்சி பக்கத்துல இருக்கிறதா சொன்னாங்க.”
“திருச்சி பக்கத்துலயா…?”
“இவன் சொல்றத வெச்சுப் பார்த்தா, அவங்களும் இப்போ குற்றாலத்துல இல்லன்னு தெரியவருது. திருச்சிகிட்ட அவங்களுக்கு என்ன வேலை? கணேசபாண்டி, பாரதிக்கு போன் போடு… பக்குவமாப் பேசி கூட யாரெல்லாம் இருக்காங்க, அங்கே என்ன பண்றாங்கன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லு”
– ராஜா மகேந்தர் தூண்டவும், கணேசபாண்டியனும் அரை மனதாக பாரதிக்கு போன் செய்யலானார். ஜோதிடர் நந்தா முகம் சூம்பிய நிலையில் நடப்பதை எல்லாம் பார்த்தபடி இருந்தது.
மாந்தோப்பில் மாமரத்தடியில் திவ்யப்ரகாஷ்ஜி அமர்ந்து தியானிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அதைப் பார்த்தபடி இருந்த பாரதியின் கைப்பேசி அவளை பேசச் செய்தது. விலகி வந்து பேசினாள்.
“என்னண்ணே… நாங்க எங்கே இருக்கோம் என்ன பண்றோம்னு உங்களை விட்டு தெரிஞ்சுக்க பார்க்கிறாரா என் அருமை டாடி…”
- பாரதியின் ஆரம்பமே கணேசபாண்டியனை நெளிய வைத்துவிட்டது.
“பாப்பா… அவர்தான் கேட்கணுமா? நான் உங்க மேல இருக்கற அக்கறையில கேட்கக் கூடாதா பாப்பா…” என்றார் கணேசபாண்டி.
“அது போகட்டும்… மருதமுத்துவை டார்ச்சர் பண்ணாங்களா?”
“அதெல்லாம் இல்ல பாப்பா. என் எதிர்லதான் இருக்கான்.”
“அவன் பாவம்ணே… அவன் மேல கைய வைக்கறது என் மேல கைய வைக்கற மாதிரி…”
“தெரியும் பாப்பா… இப்போ நீங்க எங்கே இருக்கீங்க? அப்பா வீட்டுக்கு வந்துட்டாரு. நீங்க வந்தா அந்த குமாரசாமியோட நிலச் சிக்கலுக்கு ஒரு தீர்வு கண்டுடலாம் பாப்பா.”
“அதை யார் விட்டா…? ஆமா, திருடித் தூக்கிட்டு வந்த பெட்டிகூட ஏமாத்திடிச்சாட்டம் இருக்கே?”
“ஆமா பாப்பா… இங்கே உங்க மேலதான் எல்லாருக்கும் சந்தேகம்.”
“அதையெல்லாம்தான் நான் காதால கேட்டேனே… என்னை ஒரு திருடின்னு என் பரம எதிரியாலகூட சொல்ல முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாதாண்ணே…?”
- பாரதியின் ஆணித்தரமான கேள்வி, கணேசபாண்டியனைத் திக்குமுக்காட வைத்த அதே நொடிகளில், மாமரத்தடியில் திவ்யப்ரகாஷ்ஜியின் தியானத்திலும் ஓர் அசைவு!
அவர் மனக்கண்களில் நீலகண்ட தீட்சிதர் வயிற்றின்மேல் அந்தக் காவல் நாகம் படம் விரித்தபடி இருக்க, தீட்சிதர் உடல் நீலம் பாரித்திருந்தது!
- தொடரும்