
கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
அங்கீகரிக்கப்பட்ட வழிப்பறி
இல்லாத காலத்தில்
பாட்டி காய்கறி மூட்டையைச் சுமந்து
சென்னைக்கு வருவாங்க
வயல் வரப்பு இல்லாத நகரத்திலும்
கிராமத்தைப் போலவே
மண்பானையில் பொங்கல் வைப்பா அம்மா
வாழையிலையில் படையல் உண்போம்
காணும் பொங்கலுக்குக் கறிச்சோறு சாப்பிட்டு
கடற்கரைக்குக் கூட்டிப் போவேன் பாட்டியை
அம்மன் திருவிழாப்போல
அம்புட்டுக் கூட்டமுன்னு சொல்வாங்க
அன்னைக்கு இரவு
பிராந்தியும் சுருட்டும்
வாங்கிக்கொடுப்பேன்

இப்பவும் வந்தாங்க பாட்டி
காலையில கறுப்புக்காப்பிய குடிச்சிட்டு
வெத்தல பாக்கு இடிச்சவாறு
நாளைக்கு ஊருக்குப் போறேன்னு சொல்ல
மகிழுந்தில் பாண்டிச்சேரிக்குக் கூட்டிச் சென்றேன்
சுங்கச்சாவடியில் நின்று நின்று சென்றதைக் கண்டு
திட்டிக்கொண்டே வந்தாங்க பாட்டி
‘குறுக்கால கட்டையப் போட்டுக் கொள்ளையடிக்குறானுக கட்டையில போறவனுக
நாளைக்கு
ஆடு மாடு ரோட்டைக் கடப்பதற்கும்
அஞ்சு பத்துன்னு
ஆட்டைய போடுவானுக!’