
கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
நீல-வெள்ளைச் சீருடையில்
`நீராடும் கடலுடுத்த' பாடியபின்
அவரவர் வகுப்பிற்குச் செல்வார்கள்
தாமதமாக வந்தவரை
புத்தகப்பையைத்
தலையில் சுமந்தவாறு
பள்ளியின் கதவுக்கு வெளியே
முட்டிபோடச் சொல்வர்
``சிகரெட் வாங்கியா’’
``எதிர் வீட்டுக்குப்போயி
சில்வர் சொம்புல தண்ணி மொண்டுவா!’’
``நாளைக்கு ஸ்கூல் வரும்போது முருங்கைக்கீரை ஒடச்சுட்டு வா!’’
``கமலா டீச்சர் டிபன்பாக்ஸைக் கழுவி வையி’’
படிப்பின் ஊடே வாத்தியார் வேலையிடுவார்
மதிய உணவுக்கு மூத்திரச்சந்து வரிசையில் நின்று
வாத்தியாரின் பிரம்படியில் கால் வலிக்க
வலது கையில் அலுமினியத் தட்டு
இடது கையில் பட்டன் அறுந்த டவுசரைப்
பிடித்தவாறு
நத்தையாய் ஊர்ந்து செல்லும் வரிசை
அச்சடித்த சோற்றில் சாம்பார்
ஊற்றுவார் வேலாயுதம்

பள்ளிக்கு வெளியே யாரோ ஒருவர்
வீட்டுத்திண்ணையில்
கத்திரிக்காய்க்குழம்பில் மிதக்கும் செத்துப்போன
புழுவை அள்ளிப் போட்டுவிட்டு தின்று முடிப்பேன்
பின்னொரு நாளில் நடுப்பகலில்
மதிய சாப்பாட்டுக்கு
மணியடித்த பின்னும்
நீதிக்கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பார்
எலிசபெத் டீச்சர்
மதிய உணவுக்காகவே
பள்ளிக்கூடம் வருபவனை
பட்டினி போடுவது
எந்த ஊர் நீதி..?