
News
கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
அரசுப்பள்ளிக்குப் போகும்
மாணவனாய்
புத்தகக்காட்சிக்குள் நடக்கையில்
ஜோல்னாப்பையோடு
‘‘வாங்க தோழர்’’ என்றார் ஒருவர்
கல்லூரி நண்பன்
தேநீருக்கு அழைத்தான்
புத்தகத்தைக் கொடுத்து
புகைப்படம் எடுத்துக்கொண்டான்
ஒருவன்
கடை வாசலில்
திடீர் வெளியீட்டு நிகழ்வில்
இடம் பெற்றேன்
பதின்வயதில்
என்னை மறுதலித்தவர்
``விற்பனை உரிமையாவது
கொடு’’ என்றார்

என் படைப்பு
எதுவெனக் கேட்ட
முகமறியா வாசகர்
பத்து விழுக்காடு பூக்களில்
பட்டாம்பூச்சியாய் மொய்க்கும்
படிப்பாளிகள்
எதிர்க்கட்சி ஆளும்கட்சி
ஒரே மேடையில் இருப்பதுபோல்
குழு இலக்கியர்கள்
சேர்ந்திருந்தனர்
மனம் ஒன்றுசேராது
ஒலிபெருக்கியில்
காணாமல்போனவர் அறிவிப்பு
மக்கள் கூட்டத்தில் தொலைந்துபோனேன்.