
News
கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
ஒரு பல்லவிக்குள்
இரண்டு சரணமாய்
இசைந்துகொண்டிருக்கிறது
ரெட்டைப்புல்லாங்குழல்
சலவைக்கல்லில் செதுக்கிய
வெள்ளை ஓவியங்களாய்
புராதனப் புதையல்
நதியில் நீந்தும்
நிழல் மீன்கள்
புறாக்களே
மௌனமாகச் சிறகடியுங்கள்
தூங்குவது
உலகத்தையே காதலிக்கவைத்த
நான்கு கண்கள்
வெள்ளிக்குவளையில்
நிரம்பிவழியும்
ஒட்டகப்பால்
காதல்மாலை அணிந்துகொண்ட
கடவுளின் தோள்கள்
பிரபஞ்சமே மணக்கும்
சந்தனக்கிண்ணம்

தன் காதல் அழுக்கை
சலவைக்கல்லில் சலவைசெய்த
பணக்காரத் தொழிலாளி
புதைந்தபிறகு மீதம்கிடைப்பது
எலும்புக்கூடுகள்
இங்கே இதயங்கள்
போங்கடா
நீங்களும்
உங்க காதல் கவிதையும்
நாடே சுடுகாடாய் இருப்பதால்
உலக அதிசயமாய்
ஒரு கல்லறை!