
இருட்டுக்கு நடுவே எரியும் விளக்குச் சுடர்போல், அவள் மட்டும் அந்த வகுப்பில் தனியாகத் தெரிந்தாள்.
எங்கள் வீட்டுக் கொல்லைப்பக்கமிருந்த காவிரி ஆற்றுப் படித்துறையில் இருந்தோம். என் அம்மா, “எங்கதான் போய் இவ்ளோ அழுக்க சேத்துட்டு வர்றியோ?” என்று என்னிடம் கூறியபடி என் சட்டையை ‘தொப்… தொப்…’ என்று படிக்கட்டில் அடித்துக்கொண்டிருந்தாள். காவிரி நீர், படிகளில் செல்லமாக மோதி, `க்ளக்… க்ளக்’ என்று சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. எதிர்க்கரையில் தென்னைமரங்களின் சலசலப்பு. யாரோ எங்கோ வீசி எறிந்த மலர் மாலைகளும், வேட்டியும் சேலையும் மெதுவாக ஆற்று நீரில் நகர்ந்துகொண்டிருந்தன.
நான் பட்டன் இல்லாத டவுசரை இறுகக் கட்டிக்கொண்டு சறுக்குமரத்தில் ஏறி, ஆற்று நீரில் குதிக்கத் தயாரானபோது அம்மா, “டேய்… பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிடுச்சுடா… குளிச்சது போதும்… அப்பா பாத்தா சத்தம் போடுவாரு” என்றாள்.
“ஒரே ஒரு டைவ்….” என்ற நான், அப்பா எங்கிருக்கிறார் என்று பார்த்தேன். மாநில அரசு ஊழியரான என் அப்பா, வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடி, வேலியருகில் நின்றுகொண்டு பக்கத்து வீட்டு சுந்தரம் வாத்தியாரிடம் பேசிக்கொண்டிருந்தார். வாத்தியார் வீட்டு ரேடியோவிலிருந்து, “இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், தமிழ்ச்சேவை இரண்டு… வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் குழுமியிருக்கும் பல லட்சக்கணக்கான அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது வணக்கம்” என்று கே.எஸ்.ராஜாவின் குரல் கேட்டது.
தொடர்ந்து, ‘டிங்… டிங்…’ சத்தத்திற்குப் பிறகு கே.எஸ்.ராஜாவின் குரலிலேயே, “கார்த்திக், ராதா ஆகியோரின் நடிப்பில், பாரதிராஜாவின் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில், அலைகள் ஓய்வதில்லை…” என்ற விளம்பரத்தைக் கேட்டவுடன் சட்டென்று நினைவுக்கு வந்து நான் அம்மாவிடம், “அம்மா… `அலைகள் ஓய்வதில்லை’ படம் பாக்கணும்னு சொல்லியிருந்தன்ல, அப்பாகிட்ட கேட்டியா?” என்றேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்புதான், ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் ரிலீஸாகி, தஞ்சாவூர் ஞானம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் ஊரில் இரண்டு தியேட்டர் இருந்தாலும், புதுப்படம் ரிலீஸ் செய்யமாட்டார்கள். புதுப்படம் பார்க்கவேண்டுமென்றால், 20 கிலோமீட்டர் பஸ்ஸில் சென்று தஞ்சாவூரில்தான் பார்க்க வேண்டும். எங்கள் வீட்டில் சினிமா பார்க்க வேண்டுமென்றால், என் அப்பாவின் முன் அனுமதி பெறவேண்டும்.
அம்மா, “டேய்… மெதுவா பேசுடா… ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்னு சொன்னாலே உங்கப்பா கத்துறாரு. அந்தப் படம்லாம் நீ பாக்கக்கூடாதாம்.”
“ஏன்ம்மா?”
“அந்தப் படத்துல ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்க லவ் பண்ணி ஊர விட்டு ஓடுற மாதிரி வருதாம்… அதனால பத்தாவது படிக்கிற பையன அனுப்ப மாட்டாராம்…”
“அவரு அப்படித்தான் சொல்வாரு. நீ மறுபடியும் கேளு…” என்று கூறிவிட்டு சறுக்கு மரச்சரிவில் கிடுகிடுவென்று ஓடி ஜம்ப் செய்து, அந்தரத்தில் ஐந்து விநாடிகள் மிதந்துவிட்டு, தொப்பென்று ஆற்று நீரில் குதித்தேன். நான் குதித்த வேகத்தில் தண்ணீர் சிதறி அம்மாவின் மேல் விழ, ‘‘நாசமாப் போற நாயி… எப்படிக் குதிக்குது பாரு…” என்று அம்மா திட்டியதைக் கேட்டுச் சிரித்தேன்.
நான் நீரில் நீந்தியபடியே சுந்தரம் வாத்தியார் வீட்டுப் பக்கம் சென்றேன். அப்போது ரேடியோவிலிருந்து, ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே…’ பாடலுக்கு முன்பு வரும் கைத்தட்டல் ஓசையைக் கேட்டவுடனேயே எனக்குள் என்னவோ செய்தது. தொடர்ந்து மிருதங்கம் ஒலித்தபோது, சினிமாக்களில் வருவதுபோல் என் மனதில் மாலதி மின்னி மின்னி மறைந்தாள்.
மாலதி… இந்த வருடம்தான் எங்கள் பள்ளியில், எனது வகுப்பில் பத்தாவது சேர்ந்திருக்கிறாள். எங்கள் ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் போஸ்ட் மாஸ்டர் மகள். முதல் நாள் எங்கள் வகுப்பில் நுழைந்த மாலதியைப் பார்த்தவுடனேயே மொத்த வகுப்பும் அமைதியானது. வகுப்பிற்குள் சட்டென்று ஒரு வானவில் உதித்ததுபோல் இருந்தது.
இருட்டுக்கு நடுவே எரியும் விளக்குச் சுடர்போல், அவள் மட்டும் அந்த வகுப்பில் தனியாகத் தெரிந்தாள். நீல நிற தாவணியில் அவள் அழகைப் பார்த்து அசந்தபோது என் மனதில், ‘நீல நிலா’ என்ற வார்த்தைகள் ஓடியது. அப்போதுதான் முகம் கழுவிவிட்டு வந்தது போல் பளிச்சென்ற முகம். அப்போதுதான் பிறந்தது போல் பரிசுத்தமான, நீண்ட புருவமுடைய அகன்ற கண்கள். சிவந்த செழுமையான கன்னத்தில் சிறு சிறு பருக்கள். தலையில் மல்லிகைப்பூ. அவள் சிரித்தபோது அந்த இடம் இன்னும் கொஞ்சம் வெளிச்சமானதுபோல் இருந்தது.
வகுப்பில் அது வரையிலும் கதாநாயகிகளாக இருந்த பெண்கள் எல்லாம், இனிமேல் புதுக் கதாநாயகியின் தோழி வேடம் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லாத வேதனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். நான் தொண்டை உலர அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். மனத்திற்குள் இது நாள் வரையிலும் இல்லாத ஒரு புது உணர்வு.
பார்த்த விநாடியே அவள் அழகில் மயங்கிவிட்டாலும், அருகில் நெருங்கிப் பேச முயலவில்லை. ஏனெனில் அப்போதெல்லாம் பெண்களிடம் அவ்வளவு எளிதில் சகஜமாகப் பேசிவிடமுடியாது. பெண்களிடம் சும்மா ஸ்கேல் கேட்பதற்குள்ளேயே நாக்கு உலர்ந்து, நெஞ்சம் படபடத்து, இதயம் வெளியே வந்த நாள்கள் அவை.
ஆனால் மாலதி தைரியசாலி. மறுநாளே என்னிடம் வந்து, “பிரபு… நீதான் இங்க ஃபர்ஸ்ட் ரேங்க் எடுப்பியா?” என்றாள்.
“ஆமாம். இந்த ஸ்கூல்ல ஒண்ணாங்கிளாஸிலிருந்து நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்” என்றேன் பெருமையாக.
“கும்பகோணம் ஸ்கூல்ல நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க். ஆனா இப்ப… இந்த க்ளாஸ்ல… ரெண்டு ஃபர்ஸ்ட் ரேங்க்ல ஒரு ஃபர்ஸ்ட் ரேங்க்தான் இருக்க முடியும்ல்ல?” என்று அவள் சின்னச் சிரிப்புடன் கேட்ட அழகிற்கு நான் உடனடியாக எனது ஃபர்ஸ்ட் ரேங்க்கை இழக்கத் தயாராக இருந்தேன்.
அதன் பிறகு இந்த இரண்டு மாத காலத்தில், மாலதியிடம் சில முறைதான் பேசியிருக்கிறேன். இத்தனைக்கும் மாலதி என்னை அவ்வப்போது வகுப்பில் ரகசியமாகப் பார்ப்பதாக மணி சொன்னான். இருப்பினும் எங்கள் சிற்றூர்ச் சூழலில், யாராவது ஏதாவது சொல்வார்கள் என்று அவளிடம் நெருங்கிப் பழகாமல் இருந்தேன். ஆனால் தினந்தோறும் அவளை மௌனமாக ரசித்தேன்.
கழுத்துச் செயினை இழுத்து நுனிநாக்கில் விட்டுக்கொள்ளும் மாலதி… கழுத்தில் தண்ணீர் வழிய அண்ணாந்து நீர் அருந்தும் மாலதி… ஒற்றைக் கண்ணைச் சுருக்கிக்கொண்டு மாமரத்தில் கல் எறியும் மாலதி… எக்கி எக்கி மருதாணி இலைகளைப் பறிக்கும் மாலதி… நாவல் பழம் தின்றுவிட்டு, “கலராயிடுச்சா?” என்று வயலட் நாக்கை நீட்டிக் காண்பித்த மாலதி… காதோர முடியை ஒதுக்கியபடி, ‘நினைவோ ஒரு பறவை…’ பாடிய மாலதி… எத்தனை எத்தனை மாலதிகள்?
இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பா ‘அலைகள் ஓய்வதில்லை’ கேஸட் வாங்கிக்கொண்டு வரும் வரையிலும், வெறுமனே அவளை ரசித்துக்கொண்டுதான் இருந்தேன். வீட்டில் யாருமற்ற ஒரு சனிக்கிழமை மாலையில், `ஆயிரம் தாமரை மொட்டுக்களே…’ பாடலைக் கேட்டேன். முதன் முதலாகக் கேட்டபோதே அந்தப் பாடலின் முன்னிசை அற்புதமாக இருந்தது. முன்னிசை முடிந்து,
ஆயிரம் தாமரை மொட்டுக்களே…
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே…
என்ற வரிகளைக் கேட்டவுடனேயே தன்னிச்சையாக மாலதி எனக்குள் தோன்றிச் சிரித்தாள்.
பால்யகாலத்தின் மகத்தான சுவாரஸ்யங்களுள் ஒன்று… பகல் கனவு. அது வரையிலும் இந்தியப் பிரதமராவது… அமெரிக்க ஜனாதிபதியாவது… இங்கிலாந்து ராஜாவாவது என்பது போன்ற சாதாரணமான(?) பகல் கனவுகளைத்தான் கண்டிருக்கிறேன். `ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலைக் கேட்டபோதுதான் முதன் முதலாக பகல் கனவின் காதல் சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்தேன். அப்பாடலைக் கேட்டபடி, நானும் மாலதியும் காதலிப்பது போன்ற பகல் கனவில் ஆழ்ந்தேன். பாடல் வளர வளர… மாலதியுடன் காதல் பேச்சு… வெட்கம்… சிரிப்பு… தவிப்பு… சிணுங்கல்… ஊடல் என்று மனத்திற்குள் மாலதியுடன் ஒரு தனி வாழ்க்கையை வாழ்ந்தேன். அன்று முதல் தினந்தோறும் அந்தப் பாடலை டேப்ரிக்கார்டரில் போட்டுவிட்டு, மாலதியைப் பற்றிய பகல் கனவுகளில் ஆழ்ந்துவிடுவேன்.

இப்போது வாத்தியார் வீட்டு ரேடியோவிலிருந்து அந்தப் பாடலைக் கேட்டவுடன், காவிரி நீரில் மிதந்தபடி மீண்டும் பகல்கனவு.
மாலதி படித்துறையின் கடைசிப் படிக்கட்டில் அமர்ந்துகொண்டு நீரில் தனது கொலுசணிந்த கால்களை நீட்டியிருந்தாள். நீருக்குள் மாலதியின் கால் மருதாணிச் சிவப்பு இன்னும் பளிச்சென்று தெரிய… மாலதி என்னிடம், “இது வரைக்கும் நீ பாத்ததுலயே ரொம்ப அழகான பொண்ணு யாரு?” என்றாள்.
“நீதான்…” என்றேன்.
“நீ வாழ்க்கைல மறக்கவே கூடாதுன்னு நினைக்கிற பொண்ணு?”
“நீதான்…”
“இந்த உலகத்துல நீ ரொம்பவும் காதலிக்கிற பொண்ணு?”
“நீதான்…”
“இந்த உலகத்துல உனக்கு ரொம்பப் பிடிக்காத பொண்ணு?”
ஒரு ஃப்ளோவில் சட்டென்று நான், “நீதான்” என்று சொல்லிவிட்டு, “சை…” என்று நாக்கைக் கடித்துக்கொண்டேன். சத்தமாகச் சிரித்த மாலதி, “நான்தான் உனக்குப் பிடிக்காத பொண்ணா? போ…. இனிமே என்கிட்ட பேசாத…” என்று அழகாகச் சிணுங்கினாள்.
“ஏய்… எல்லாக் கேள்விக்கும் நீதான்னு சொல்லிட்டிருந்தன்ல? அதனால வந்துடுச்சு…”
“அதெல்லாம் கிடையாது. சொன்னா சொன்னதுதான்…” என்று தனது அழகிய உதடுகளை அழகாகச் சுழித்துக் கொண்டவளிடம், “ஸாரி… ஸாரி…” என்றேன்.
பாடலின் இரண்டாவது சரணம் வர… எனது பகல்கனவு மேலும் விரிந்தது.
படித்துறையில் மாலதி மஞ்சளைத் தேய்த்தபடி, “காதலிச்சா கவிதை வருமாமே... உனக்குக் கவிதை வருதா?”
“வரலையே…”
“கவிதை இல்லாம என்னடா காதல்?” என்றாள் மாலதி, படியிலிருந்த ஈரமஞ்சளை எடுத்து முகத்தில் தேய்த்தபடி. பின்னர் ஆற்றுநீரில் மாலதி முகத்தைக் கழுவ… அவள் கன்னத்திலிருந்து வழிந்த மஞ்சள் நீரை என் கையில் பிடித்தபடி நான், “இந்தத் தண்ணிய பேனாவுல ஊத்தி எழுதினா தானா கவிதை வரும்….” என்றேன். “சீ…” என்று சிணுங்கிய மாலதியின் முகத்தில் மஞ்சளுடன் வெட்கச்சிவப்பு கலந்து, உலகில் ஒரு புதிய நிறத்தை உருவாக்கியது.
பாடல் முடிந்த பிறகுதான் சுய நினைவுக்கு வந்து படித்துறையைப் பார்த்தேன். அப்பா, அம்மாவிடம் பேசியபடி வாய் கொப்பளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு வேகமாக நீந்திக் கரையேறினேன். படிக்கட்டில் நின்றுகொண்டு துண்டால் தலையைத் துவட்டியபடி அம்மாவிடம், “கேட்டுட்டியா?” என்றேன் கிசுகிசுப்பாக.
“அங்க என்னடா அம்மாகாரிகிட்ட ரகசியம்?” என்றார் அப்பா.
ஒரு முடிவோடு நான், “அப்பா… நான் தஞ்சாவூருக்குப் போகணும்” என்றேன்.
“எதுக்கு?”
“அது…” என்று சில விநாடிகள் தயங்கி, “அலைகள் ஓய்வதில்லை படம் பாக்க…” என்றவுடன் நிமிர்ந்து என்னை முறைத்த அப்பா, “அதான் போக்கூடாதுன்னு உங்கம்மாட்ட சொல்லிட்டேனே…”
“ஏன் போக்கூடாது?”
“ஓ… காரணம் கேக்குற அளவுக்குப் பெரிய ஆளாய்ட்டீங்களா? காரணம்லாம் சொல்லமுடியாது.”
“விகடன்ல அம்பது மார்க் போட்டிருக்காங்க…” என்றேன்.
“அதுக்கு?”
“நீங்கதானே, விகடன்ல நாப்பது மார்க்குக்கு மேல வாங்குற எல்லாப் படத்துக்கும் அனுப்புவீங்க…” என்றவுடன் சில விநாடிகள் விழித்த அப்பா, “எதுத்து எதுத்துப் பேசுற… நாயே… போக்கூடாதுன்னா போக்கூடாதுதான்” என்றார்.
உடனே நான் ஆவேசத்துடன், “அதெல்லாம் முடியாது. நான் போவேன்…” என்று சொன்னவுடன் அப்பா கோபத்துடன் தன் வாயில் கொப்பளித்துக்கொண்டிருந்த காவிரி நீரை அப்படியே என்மீது உமிழ… நான் அதிர்ந்தேன்.
“கம்னாட்டி நாயே… என் பேச்சை மீறி, போவன்னு சொல்ற அளவுக்கு வந்துடுச்சா?” என்றவர் வேகமாகப் படியேறி வந்தார். வேப்பமரத்திலிருந்து ஒரு வேப்பங்குச்சியை உடைத்து, “பத்தாவது படிக்கிறதுக்குள்ள ‘ஓடுகாலி’ படம் பாக்கணுமா உனக்கு?” என்று என்னைச் சராமாரியாக அடித்தார். ஈர உடம்பில் வேப்பங்குச்சி சுள் சுள்ளென்று பட… வலியில் உயிர் போனது. அம்மா, “விடுங்க அவன…” என்று அப்பாவைத் தடுத்தார்.
“அலைகள் ஓய்வதில்லை படம் பாக்குற வயசப் பாரு…”
“இந்த வயசுல ‘அலைகள் ஓய்வதில்லை’ பாக்காம, கிழவனான பிறகா பாப்பாங்க?” என்ற அம்மாவுக்கும் அடி விழுந்தது. பின்னர் தொடர்ந்து எனக்கு அடி விழ… அம்மா, “அடிக்க அடிக்க ஏன்டா இங்கயே நிக்கிற? போய் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்புடா…” என்று என்னை வீட்டிற்குள் இழுத்து வந்தாள்.
வேப்பங்குச்சி அடி இன்னும் வலிக்க… நான் அழுதபடி பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தேன்.
அப்போது பின்னாலிருந்து, “பிரபு… ஏன் அழற?” என்று குரல் கேட்க… திரும்பிப் பார்த்தேன். மாலதி. மாலதியைப் பார்த்தவுடன் வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு, “அழலையே…” என்றேன்.
“தூரத்துலேருந்து நான் பாத்தேன். நானும் அழுதுக்கிட்டுதான் வந்தேன்” என்ற மாலதியை ஆச்சர்யத்துடன் பார்த்தபடி, “நீ ஏன் அழுத?” என்றேன்.
“எங்கப்பாகிட்ட ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் பாக்கணும்னு கேட்டேன். போக்கூடாதுன்னாரு. நான் அடம்பிடிச்சேன். அடிச்சிட்டாரு…” என்றவுடன் மாலதியை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னைப் போல் ஒரு பெண்.
“உங்கப்பா ஏன் பாக்கக்கூடாதுன்னாரு?” என்றேன்.
“அந்தப் படம் பாத்தா நான் கெட்டுப்போயிடுவேனாம்…” என்றாள்.
“எங்கப்பாவும் அதேதான் சொன்னாரு. உனக்கு ஏன் அந்தப் படத்தப் பாக்கணும்?”
“அலைகள் ஓய்வதில்லை படத்துல எல்லாப் பாட்டும் ரொம்ப நல்லாருக்கும். அதுவும், ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே…’ பாட்ட நாள் புல்லா கேட்டுக்கிட்டேயிருக்கலாம்.”
“எனக்கும் அந்தப் பாட்டுன்னா உயிரு. அதனால ‘அலைகள் ஓய்வதில்லை’ பாக்கணும்னு ரெண்டு வாரமா கேட்டுகிட்டிருக்கேன். எங்கப்பா விட மாட்டேங்கிறாரு. இன்னைக்கி கேட்டப்ப வாய் கொப்புளிச்சிட்டிருந்த தண்ணிய என் மூஞ்சில துப்பிட்டாரு…”
“அய்யய்யே…” என்று மாலதி அழகாக முகத்தைச் சுழித்தாள்.
“எங்கப்பா என் மூஞ்சில துப்பினவுடனேயே முடிவு பண்ணிட்டேன்…”
“என்ன?”
“நாளைக்கி ஸ்கூல் கட் அடிச்சிட்டு, தஞ்சாவூருக்குப் போய் ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் பாக்கப்போறேன்…” என்ற நான் வேகமாகப் பள்ளியை நோக்கி ஓடினேன். அப்போது பின்னாலிருந்து, “பிரபு…” என்று மாலதியின் குரல் கேட்க… நின்றேன். அருகில் வந்த மாலதி, “பிரபு… நாளைக்கி நானும் உன்கூட வரட்டுமா?” என்று கேட்டவுடன் எனக்குக் கால்கள் வெடவெடவென்று நடுங்கியது.
“ஏய்… பொம்பளைப் பிள்ள… ஸ்கூல் கட் அடிச்சுட்டு சினிமா பாக்க வருவியா?”
“ஏன்… பொம்பளைப் பிள்ளைங்களும் மனுஷாளுதானே… அவங்களுக்கும் ஆசைல்லாம் இருக்காதா?” என்றாள். என் வாழ்க்கையின் முதல் தேவதை, என்னுடன் படம் பார்க்க வரலாமா என்று கேட்கிறது. இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா? எனவே அதிகம் யோசிக்காமல், “சரி…” என்றேன்.
மறுநாள் நாங்கள் ஸ்கூல் கட் அடித்துவிட்டுக் கிளம்பினோம். எங்கள் ஊரில் பஸ் ஏறினால் மாட்டிக்கொள்வோம். எனவே இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருந்த பக்கத்து ஊருக்குக் குறுக்கு வழியில் தனித்தனியாகவே நடந்து சென்று, அங்கு தஞ்சாவூருக்கு பஸ் ஏறினோம். தஞ்சை ஞானம் தியேட்டர் திரையில், `பாவலர் கிரியேஷன்ஸ் இளையராஜா வழங்கும் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை’ என்ற டைட்டிலைப் பார்த்தவுடனேயே எனக்கு உள்ளுக்குள் அலையடிக்க ஆரம்பித்தது.
என்னால் படத்தைப் பார்க்கவே முடியவில்லை. நான் தினந்தோறும் பகல் கனவு காணும் மாலதியுடன், `ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலைப் பார்க்கப்போகிறேன். ஓரக்கண்ணால் மாலதியையே பார்த்துக்கொண்டிருந்தேன். திரையில் மாறி மாறித் தெரிந்த வெளிச்சத்தில், மாலதியின் ஒரே முகம் வெவ்வேறு முகமாகக் காட்சியளித்தது. அத்தனை முகமும் அழகு.
படம் ஆரம்பித்து ஏறத்தாழ 40 நிமிடங்களுக்குப் பிறகு, `ஆயிரம் தாமரை மொட்டுக்களே…’ பாடலின் ஆரம்பத்தில் வரும் கைத்தட்டல் ஓசையைக் கேட்டவுடனேயே எனக்குச் சிலிர்த்தது. பிறகு மிருதங்கம் ஒலித்தபோது என் மனதிற்குள்ளும் அதிர்ந்தது. நான் திரும்பி மாலதியைப் பார்த்தேன். அவள் தனது மருதாணி விரலால் தனது இளஞ்சிவப்பு உதட்டைத் திருகியபடி திரையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். “தந்தனன… தந்தனனனன…’’ என்ற கோரஸுக்குப் பிறகு, “ஆயிரம் தாமரை மொட்டுக்களே…” என்று ஒலித்தபோது எனக்குள் ஏற்பட்ட உணர்விற்குப் பெயர் காதலாகத்தான் இருக்கவேண்டும். நான் மீண்டும் திரும்பி மாலதியைப் பார்த்தேன். இப்போது அவள் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் பார்ப்பதைப் பார்த்தவுடன் சட்டென்று திரும்பிக்கொண்டாள். அவளுடைய கைவிரல்கள் நாற்காலித் தடுப்பில் மெலிதாகத் தாளமிட்டுக்கொண்டிருந்தன.
அதற்கு மேல் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல், மனம் நடுங்க மாலதியின் கைவிரல்களைப் பிடித்தேன். சரேலென்று என்னை நிமிர்ந்து பார்த்த மாலதி உடனே கையைப் பின்னுக்கிழுத்துக்கொண்டாள். எனக்கு குப்பென்று வியர்த்தது. அவள் என்னை ஓங்கி அறைவாள் என்று எதிர்பார்த்துக் கண்களை மூடிக்கொண்டேன். ஆனால் எந்த எதிர்வினையும் இல்லை. நான் மெதுவாகத் திரும்பி மாலதியைப் பார்த்தேன். அவள் என்னவென்று சொல்லமுடியாத முகபாவத்துடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். திரையில் பாடலின் முதல் சரணம் ஓடிக்கொண்டிருந்தது.

``உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆடை குடிக்கும்’’
என்ற வரிகள் ஒலித்தபோது, மாலதி தனது பச்சை நிற தாவணி முனையைத் தனது கை விரலில் சுற்றிச் சுற்றி அவிழ்த்துக்கொண்டிருந்தாள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திரையைப் பார்த்தேன். அந்த நான்கு நிமிடப் பாடல், நான்கு யுகங்களாக ஓடிக்கொண்டிருப்பது போல் இருந்தது. பாடலின் இரண்டாவது சரணத்தின் முடிவில்,
``கள் வடியும் பூக்கள்
தங்கள் காம்பை மறக்கும்’’
என்ற வரிகள் ஒலித்தபோது, என் கையில் ஏதோ ஸ்பரிசத்தை உணர்ந்து குனிந்து பார்த்தேன். என் கையின் மீது மாலதி தனது கையை வைத்திருந்தாள். சந்தோஷத்தில் என் கை கால்கள் வெடவெடவென்று நடுங்கின. நான் பரவசத்துடன் மாலதியின் முகத்தைப் பார்க்க… அவள் வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள். திரையில் மீண்டும் பல்லவி ஒலித்தது.
``ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை…’’
என்று பாடல் முடிந்தபோது மாலதி புன்னகையுடன் என்மீது சாய… நான் அவள் தோளை அணைத்துக்கொண்டேன்.
இவையெல்லாம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது. ‘அலைகள் ஓய்வதில்லை’ படமும், ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே…’ பாடலும் இல்லையென்றால், மாலதியுடனான எனது காதல், கடைசி வரையிலும் வெறும் பகல் கனவாகவே இருந்திருக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் காதலித்த நாங்கள், வீட்டில் போராடி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். இப்போதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்காக இன்று வரையிலும் நானும் மாலதியும், இளையராஜாவிற்கும் பாரதிராஜாவிற்கும் மானசீகமாக நன்றிசொல்லிக்கொண்டேயிருக்கிறோம்.
- ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
(10.02.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)