தொடர்கள்
Published:Updated:

கல்மாலைப் பூக்கள் - சிறுகதை

கல்மாலைப் பூக்கள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
கல்மாலைப் பூக்கள் - சிறுகதை

- கு.இலக்கியன்

சித்திரையில் தொடங்கிய வெயில் வைகாசியிலும் குறைந்தபாடில்லை. நிலத்தில், நின்று நிதானித்துக் காயும் வெயிலுக்கு எத்தனை முறை தண்ணீர் குடித்தாலும் தாகம் கட்டுப்படுவதாக இல்லை செங்காயிக்கு. மேலும் கீழும் வெப்பம் தகிக்க, தொப்புளான் கிளறி அள்ளி வைக்கும் சிமென்ட் கலவையை செங்காயி, கோயிலின் கோபுர உச்சிக்குத் தூக்கிச் சுமக்க வேண்டும். செங்காயியின் ஒரே மகளான கொடிலாவும், பக்கத்து ஊர் பரிமளமும் சுதை வேலைக்கான மென்மணலைச் சலித்துக் கொண்டிருந்தார்கள். கோயில் கோபுரக் கட்டுவேலைக்குச் சித்தாளாக முன்னனுபவம் பெற்றிருந்தாள் செங்காயி. கொடிலாவும் பரிமளமும் இந்த வேலைக்கு இப்போதுதான் அறிமுகம்.

கோயில் கட்டு வேலையில் சித்தாளாக இருப்பது சவாலானது. வயிற்றுப் பிழைப்புக்குக் கயிற்றில் நடப்பதைப்போல, வாழ்வைக் கடத்த சார மரங்களில் நடக்கவேண்டும். கால் பிசகித் தடுமாறினால் கதை முடியும் வாழ்வுதான். செங்காயிக்குப் பத்து வருசத்துக்கு மேலாக அனுபவம் இருந்தது. சின்னச் சின்ன கல் மண்டபக் கோபுரங்கள் தொடங்கி, நூறடி உயர கோபுரங்கள், ராஜ கோபுரங்கள் என எத்தனையோ கோயில்களில் ஏறி இறங்கி வந்தவள் செங்காயி.

இப்போது இந்த வைகாசியில் தொடங்கப்பட்ட, மகா அக்னி காளி திருக்கோயில் கட்டும் கட்டு வேலைக்கு ஏழெட்டு ஸ்தபதிகளோடு புதுமலை கிராமத்தில் தாயும் மகளுமாக வந்து தங்கியிருக்கிறார்கள். முதல் முறையாக தன் மகள் கொடிலாவை, கட்டு வேலைக்கு இப்போதுதான் அழைத்து வந்திருக்கிறாள். கொடிலாவுக்கு வயது இருபதைத் தொட்டிருந்தது. சித்திரங்களில் வரைந்து சொல்லிவிட முடியாத வனப்போடும் வயசோடும் இருந்தாள் கொடிலா. அவள் கைக்குழந்தையாக இருக்கும்போது, பீடிக்குள் கஞ்சா சுருட்டிக் குடிச்சே செத்துப்போன தன் புருஷனுக்குப் பின், கொடிலாவைத் தனியொருவளாக அவள் நகக்கண்ணில்கூட அழுக்கடையாமல் வளர்த்தவள் செங்காயி. பருவமடைந்தபின் பாதியிலே நிறுத்தப்பட்ட கொடிலாவின் பள்ளிப் படிப்பு, செங்காயியின் வேலை அலுப்புக்கு ஒத்தாசையாகி, வீட்டு வேலையில் முற்றிலும் கரைந்தது. புடைத்தும் புடைக்காததுமாக உமியோடும் தவிட்டோடும் சமைக்கத் தொடங்கிய கொடிலா, இப்போதெல்லாம் ரசிக்க ரசிக்க, ருசிக்க ருசிக்கச் சமைக்கிறாள்.

வசிக்கும் ஊர் அருகில் வேலையென்றால், பொழுதுக்குள் வீடு வந்துவிடும் செங்காயிக்கு கொடிலா பற்றிய கவலை பாதிதான். அசலூரில் என்றால் தங்கித்தான் பார்க்க வேண்டும். வயசு வந்த மகளைத் தன்னந்தனியே விட்டு வர முடியாததாலே, முற்றா மாங்கொழுந்தெனத் தழைத்த தன் மகளையும் கூடவே அழைத்து வர வேண்டியதாயிற்று செங்காயிக்கு.

முன் பின் பழக்கமில்லாத புழங்கு வெளியில், அறிமுகமில்லாத மனிதர்களோடு தங்கி வேலை செய்வதும் நாளைக் கழிப்பதும் செங்காயிக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதான். கொடிலாவுக்கு இவையெல்லாம் புதிது. கொஞ்ச நேர வெயிலுக்கே, கொடியிலிருந்து கிள்ளிய வெற்றிலைபோல் வதங்கிவிடுகிற கொடிலாவை, கட்டுவேலைக்குக் கூட்டி வந்த செங்காயிக்கு, ஈக்கள் மொய்க்கும் புண்போல வலித்துக் கொண்டே இருந்தது. அவளுக்கு வேறு வழியும் இல்லை. பருந்திடம் போராடுகிற கோழிக்குத்தான் தெரியும் குஞ்சுகளின் மீதான தாய்மையின் பெருவலி. அந்த வலியோடுதான் ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டிருந்தாள் அவள்.

நாள்தோறும் கோயிலின் புறவடிவம் புதிய அழகோடும் அமைப்போடும் முழுமை பெறத் தொடங்கி, கோபுர வேலை மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. கருவறையின் முன்மண்டப உருவ வேலைப்பாடுகளில் நுணுக்கமான பணியில் இருந்தான் மணிக்குட்டி. அவனின் வேலைப்பாடுகளில் கல் மாலையில் பூக்கள் மலர்ந்தும் மணந்தும் இருப்பதுபோல் உருப்பெற்றுக்கொண்டிருந்தன. கொடுங்கை வளைவுகளின் மேல் வளைந்த வடிவ பீடங்களில் அன்னப்பறவைகள் அழகு மிளிர உருப்பெற்றன. அதனருகில் ஆண் மயில்கள் தோகை விரித்தபடி தோரணவாயிலை அலங்கரித்து இருந்தன. எல்லா சுதை வேலைக்காரர்களின் மத்தியில் இளையவனாக இருந்த மணிக்குட்டி திறமையான வேலைக்காரனாகவும் இருந்தான்.

கல்மாலைப் பூக்கள் - சிறுகதை

கோயில் வேலை தடைபடக்கூடாதென்று ஊர் முக்கியஸ்தர்களும் கணக்கப்பிள்ளையும் வேலை நடைபெறும் இடத்திற்கு அடிக்கடி வந்து பார்வையிட்டுக்கொண்டே இருந்தனர். வேலையாட்களுக்குத் தேவையானதை உடனடியாகக் கிடைக்கும்படியும், சம்பளத்தை மீதமின்றிக் கொடுக்கவும் கணக்கப்பிள்ளையிடம் சொல்லிவிட்டார்கள். அதுபோலவே, கோயில் வேலைகள் குறையில்லாமலும் தடைபடாமலும் எழும்பிக்கொண்டிருந்தன.

ஒரு சார ஆட்கள் அர்த்த மண்டப வேளையில் ஈடுபட்டிருந்தனர். மற்றொரு குழு உபபீடம் கட்டும் பணிக்குப் பணிக்கப்பட்டிருந்தனர். இன்னொரு குழு, பொம்மை வேலைப்பாடுகளில் மும்முரமாக இருக்க, மணிக்குட்டி கருவறையினுள் பண்டியல் அலங்காரத்தில் இருந்தான். கோபுர வேலையாட்களுக்குக் கையாளாக செங்காயி அமர்த்தப்பட்டாள். சார மரங்களில் ஏறி இறங்கிப் பழகாத பரிமளமும் கொடிலாவும், கீழ் வேலைகளுக்கு அமர்த்தப்பட்டனர். பரிமளம் மணல் அள்ளிக் கொட்டத் தொடங்கினாள். கொடிலா, கருவறை வேலைக்குக் கையாளாக வேலை தொடங்கி நேரம் உச்சிப்பொழுதிருக்கும். கருவறை பீடம் அமைக்கப்பட்டிருந்ததில், கொடிவரி வேலைப்பாடு முடித்து, பட்டியல் வரி, சிங்க வரி என்று அடுத்தடுத்த துல்லிய வேலைப்பாடுகளில் கரைந்திருந்தான் மணிக்குட்டி.

கோயிலின் கருவறை, கொடிலாவுக்குப் பழக்கமில்லாத ஒன்று. அவளுக்கு அந்த இருட்டை சமாளிப்பது சிரமமாக இருந்தது. அதோடு, கருவறைக்குள் காற்றுப் புழக்கமில்லாமல் எழும் ஒருவித நெடியை இயல்பாக சுவாசிக்க முடியாமல் தவித்தாள். இவற்றை வெளிக்காட்டாமல் சிறு அச்சத்தோடு திணறியவளிடம் மணிக்குட்டிதான் கேட்டான்.

‘‘கொடி... உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?’’

இந்தக் கேள்வியை எதிர்பார்த்திராத கொடிலா, ‘‘என் மேலுக்கு ஒண்ணுமில்ல, நல்லாருக்கேன்’’ என்று தயங்கியபடியே சொன்னாள்.

‘‘இதுக்குள்ள வந்து போறது கஷ்டமா இருக்கா கொடி?’’ - சட்டெனக் கேட்டான் மணிக்குட்டி.

‘‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல’’ என்று சொன்னவள், முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்தபடி கலவைச் சட்டியை எடுத்துக்கொண்டு வெளிவந்தாள். அதற்குப்பின் மணிக்குட்டி அவளிடம் எதுவும் பேசவில்லை.

சிங்க வரி வேலையை முடித்துவிட்டு தங்குமிடத்திற்கு வந்துவிட்ட அன்றைய இரவில், கொடிலாவின் மனத்திற்குள் மணிக்குட்டியின் கேள்விகள் எதிரொலித்துக்கொண்டே இருந்தன. வழக்கமாக செங்காயிக்கு முன்பே உறங்கி விடுகிறவள், இன்று கண்கள் மட்டும் விழித்திருக்க படுக்கையில் அசைவற்றுக் கிடந்தாள். வேலைக் களைப்பில் செங்காயி படுத்ததும் உறங்கி விட்டாலும், கொடிலாவின் நினைப்போடும் கவலையோடும்தான் இருப்பாள். ஒரு தாயின் வாழ்நாள் கவலையாக, கடமையாக அவர்களின் அடி மனசில் கிடப்பது, பெண் பிள்ளைகளை அப்பழுக்கில்லாமல் கரை சேர்ப்பதுதான். செங்காயியின் மனசுக்குள்ளும் துளிர்த்த அந்தத் தீ, நாளுக்கு நாள் சுடர்ந்து வளரத் தொடங்கியிருந்தது.

கட்டு வேலை தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வேலைகள் தீவிரமாகிக் கொண்டு வந்ததே தவிர தடைபடவில்லை. சொந்த ஊருக்குப் போய் வருவோர், நல்லது அல்லதுக்குக் கலந்துகொள்பவர்கள் மட்டும் மேஸ்திரியிடம் சொல்லிவிட்டு, கணக்கப் பிள்ளையிடம் பணம் வாங்கிக்கொண்டு போய்த் திரும்பினர். மற்றவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடிப்பதில் விறு விறுப்பாக இருந்தார்கள். கோபுர உச்சியில் விமானம் அலங்கார வேலைக்குக் கலவை சுமந்த செங்காயி, கால் தடுமாறியதில் தவறி சார மரத்தில் விழுந்துவிட்டாள். இதில், தலையில் மரம் குத்தியதில் ரத்தம் கசிய, மயங்கிய நிலையில் இருந்தவளை மெல்ல இறக்கி, மருத்துவமனைக்கு அழைத்துப்போக தகவல் சொன்னார் மேஸ்திரி. அந்த நேரத்தில் கணக்கப்பிள்ளை ஊரில் இல்லாததால், அவர் மகன் பரமன்தான் அம்பாசிடரில் டவுனுக்கு அழைத்துக்கொண்டு போய், தலையில் இரண்டு தையலிட்டு, மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து, அவர்கள் தங்கியிருந்த பொதுக் கூடத்தில் இறக்கிவிட்டுப் போனான். கொடிலாவை அவள் பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்வதற்காக வேலைக்கு வரவேண்டாமென்று சொல்லியனுப்பியிருந்தார் மேஸ்திரி.

மறுநாள் காலை செங்காயிக்கு எழுந்திருக்க முடியவில்லை. தலைவலி உயிரை வாங்கியது. அடிபட்டு தையலிட்ட இடத்தில் வீக்கம் கண்டு விண்ணு விண்ணென்று வலித்தது. விடிந்தும் படுக்கையிலே கிடந்தாள் செங்காயி. அவளுக்குக் காலை உணவு கொடுத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து, வலியிலிருந்து கொஞ்சம் மீண்ட சூழலில் வேலைக்குத் தயாரானாள் கொடிலா. மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. ‘வேலையாட்களோடு இந்நேரம் பரிமளமும் வந்திருப்பாள்’ என்று கொடிலா மனத்தில் எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில், ‘‘நானும் படுத்து, நீயும் வேலைக்குப் போகலன்னா, மேஸ்திரி கடிஞ்சி பேசுவாக; கோபுர மேல் வேலைக்குப் போய் நிக்க வேண்டாம். கீழயே பாக்குறேன்னு நின்னுக்கோ’’ என்று கொடிலாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் செங்காயி. சரியென்று தலையாட்டியபடி, ‘‘இந்நேரம் பரிமளம் அக்கா வேலைக்கு வந்திருக்கும்’’ என்று சொல்லிக்கொண்டே வேலைக்கான மேல் உடுப்பை எடுத்துக்கொண்டு புறப்பட்டவள், ‘‘நீ எதையாச்சும் நெனைக்காம படுத்துத் தூங்கு’’ என்று சொல்லிவிட்டு வேலைத்தளத்திற்கு வந்து சேர்ந்தாள் கொடிலா.

கோயில் கருவறையினுள் சிங்க வரி வேலைப்பாடுகளை முடிக்கச் சொல்லி மணிக்குட்டியைத் துரிதப்படுத்தினார் மேஸ்திரி. கொடிலாதான் கையாள். தண்ணீர், கலவை, சிமென்ட், வேலைக்கான உபகரணங்கள் என அத்தனையும் தயார்நிலையில் வைத்திருந்தாள் கொடிலா. வேலை மெல்ல மெல்ல கொடிலாவுக்குப் பழகிவிட்டது. கூடவே, மணிக்குட்டியின் நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகளும் பிடித்துப்போனது. சிமென்ட் பூச்சில் அவன் வடிக்கிற பூக்களைச் சூடிக்கொள்ள முடியாதா என ஏங்கித் தவித்தாள். கல் மாலையைத் தான் சூடிக்கொண்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தாள். மெல்ல அழுத்தித் தேய்த்தால்கூட அறுத்துவிடும் அளவிற்குக் கூர்முனையை வடித்து வைக்கும் மணிக்குட்டியின் சிற்பங்களில் கலந்து கரையத் தொடங்கினாள் கொடிலா. மணிக்குட்டி வடித்த சதுக்க பூதங்களைக்கூட பேரழகி சுரசுந்தரியின் சிற்பங்களாகக் கண்டாள் கொடிலா.

ஒருமுறை, உண்மையிலேயே கிளியுடன் உரையாடுவது போன்ற ஒரு சுரசுந்தரியை வடிக்கத் தொடங்கினான் மணிக்குட்டி. ‘எவ்வளவு நுணுக்கமான பெண்களின் தரிசனம் இருந்திருந்தால், இவ்வளவு வாளிப்பான சிற்பத்தைப் படைக்க முடியும்’ என்று வியந்து வியந்து கரைந்த கொடிலா, ஒரு நாள் மணிக்குட்டியின் நிஜச் சிற்பமாகிப்போனாள். கல்லிலும் கலவையிலும் கலை எழுதத் தெரிந்த மணிக்குட்டி, உயிர்ச் சிற்பத்தில் காதல் எழுதினான். கொடிலாவின் காதல் மணம் பரிமளத்தின் நாசிகளில் மணந்தது. கண்டித்தாள். கண்டிப்புகளைக் கவனத்தில் கொண்ட காதல்தான் ஏது? பரிமளத்தின் வார்த்தைகள் உவர் மணலாய் உதிர்ந்தன.

கல்மாலைப் பூக்கள் - சிறுகதை

செங்காயியின் தலைக்காயம் முற்றிலும் குணமாகவில்லைதான். எத்தனை நாள் வேலைத்தளத்தில் வெறுமனே படுத்துக்கிடப்பது? மூன்றாம் நாள் வேலைக்கு வந்துவிட்டாள். கொடிலாவுக்கு, தன் தாயை நினைத்து பயமும், மணிக்குட்டியின் மீதான பாசமும் பின்னிக்கொண்ட பின்னலென நிலைகொள்ளாது தவித்தாள். பரிமளத்தின் மீதும் பயம்கொண்டே இருந்தாள். காலத்தைக் கடத்தாமல் வேலை விறுவிறுப்புடன் நடந்து நாள்கள் உருண்டோடின. அஸ்திவாரம் தொடர்ந்து, உயர்ந்த கோபுரம் வரை சில வேலையாட்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும், செங்காயி, கொடிலா, தொப்புளான், மணிக்குட்டி, பரிமளம் என்று ஒரு நிலையான வேலையாட்கள் குழு தங்கி வேலை பார்த்ததில் தடைபடாமல் எழுந்து நின்றது மகா அக்னி காளி திருக்கோயில் பணி. புதுமலை கிராமவாசிகள், எழில் கூடி உயர்ந்து நின்ற கோபுரத்தை வியந்து நின்று பார்த்தார்கள். மேஸ்திரிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் பெருமையாய் இருந்தது. எப்படியும், இன்னும் ஓரிரு மாதங்களில் கோயில் நிறைவுப் பணிக்கு வந்துவிடுமென்று பேசிக்கொண்டனர்.

அர்த்த மண்டபம், உப பீடங்கள், பலிபீட வேலைப்பாடுகளும் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில், தூண்களுக்கான அலங்கார வேலைப்பாடுகளில் அவசரம் காட்டினார்கள். வேலையாட்கள் சிலர் தொப்புளானோடு சேர்ந்து, அன்றைய வேலைக்கான சிமென்ட் கலவையைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். கணக்கப்பிள்ளையும் மேஸ்திரியும் கொடுத்து வாங்கிய பண விவரங்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தனர். செங்காயி சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக்கொண்டு, குடமெடுத்துத் தண்ணீர் நிரப்பத் தயாரானாள். பரிமளம் வேலைத் தளத்தைக் கூட்டிப் பெருக்க, கொடிலா, ஆணின் முழுக்கைச் சட்டையை அணிந்துகொண்டு, சும்மாடைக் கட்டிக்கொண்டிருந்தாள்.

ஒரே வேலைத்தளம்தான் என்றாலும், மணிக்குட்டியும் கொடிலாவும் பார்த்துக் கொள்வதற்குப் பரிதவித்தார்கள். உயிரின் மூச்சுக் காத்து உள்ளே போவதும் வெளியே வருவதும் காண முடியாததைப் போல கவலை கொண்டான் மணிக்குட்டி. காதலின் நினைவுகளோடே கலை வடிக்கும் மணிக்குட்டியின் புடைப்புச் சிற்பங்கள் மேலும் அழகோடு உருப்பெற்றன. சற்றுப் பின் திருப்பியவனின் கண்களில், சிமென்ட் பூச்சில் நடந்து நடந்து கால் கட்டை விரல் செதில் செதிலாக வெடிக்க, அதனைச் சுற்றித் துணியால் கட்டிக்கொண்டிருந்தாள் கொடிலா.

காதலின் ரகசியம் காற்றில் அல்லாடும் தீபம் போல, எப்போதும் பாதுகாத்துக்கொண்டிருக்க முடியாது. கொடிலா மணிக்குட்டியின் ரகசியத் தடங்கள் செங்காயியின் ஈரக்குலைக்குள் அதிர்ந்தன. கொடிலா நினைத்ததுபோலவே பரிமளம் பற்ற வைத்துவிட்டாள். இல்லையென்றாலும் செங்காயிக்குத் தெரிந்துவிடும். பிள்ளைகளின் நினைவின் தடங்களை அறிந்திருப்பவள்தானே அன்னை!

வேலைத்தளத்தில், அன்றைய நாள் முழுவதும் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. வேலை முடிகிற சமயத்தில், கணக்கப்பிள்ளையிடம் மேஸ்திரி அன்றைய வாரத்திற்கான கூலி விவரத்தை எழுதி ஒப்படைத்துக் கொண்டிருந்தார். வேலை களைந்து பொருள்களை வைப்பதற்காக மண்டபத்திற்குள் போன கொடிலாவை வழிமறித்தான் மணிக்குட்டி. அச்சத்தில் திடுக்கிட்ட கொடிலா, சூழலையறிந்து எதுவும் பேசாமல் வெளிவர முயன்றாள். அந்தக் கணத்தில் சட்டென்று அவளின் கையைப் பிடித்துவிட்டான் மணிக்குட்டி. செய்வதறியாது தவித்தவள் உதறிவிடவும், வேலைப்பாடுகளைப் பார்வையிட கணக்கப்பிள்ளையும் மேஸ்திரியும் மண்டபத்திற்குள் நுழையவும் சரியாக இருந்தது. கோபம் கொண்ட மேஸ்திரி சப்பென்று மணிக்குட்டியின் கன்னத்தில் அறைந்தார். எதுவும் பேசாமல் கணக்கப்பிள்ளை மௌனித்து நின்றார். தலை கவிழ்ந்திருந்த மணிக்குட்டியின் கண்களிலிருந்து நீர் பிசுபிசுத்தது.

அன்றைய இரவு வேலையாட்கள் தங்கியிருந்த பொதுக் கூடத்திற்குப் போகவில்லை மணிக்குட்டி. தொப்புளானிடம் மேஸ்திரி கேட்டார், ‘‘எங்க போனான் அந்த மணிக்குட்டி பய?’’

‘‘இன்னும் இங்கே வரலய்யா" என்று சொல்லிவிட்டு இரவுக்கான சமையலுக்கு உதவப் போய்விட்டான் தொப்புளான். சரி, தாமதமாக வருவான் என்று நினைத்துக் கடந்துவிட்டார் மேஸ்திரி. இரவு முழுக்க அவன் வரவில்லை. மறுநாள் காலை வேலைக்குப் போகும்போது கோவில் மண்டபத்தில் படுத்துக்கிடந்தான் மணிக்குட்டி. அவனைக் கண்டதும் மேஸ்திரிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவசரப்பட்டு விட்டோமோ என்ற நினைப்பை மறைத்துக்கொண்டு, ‘‘ஏன் கூடத்துக்கு வராம இங்கன படுத்துக் கிடக்கிறவன்? உடம்புக்கு ஏதும் சரியில்லையா?’’ என்று கேட்டார். எதுவும் பேசாமல் நின்றிருந்தவனின் தோளில் கைவைத்து ‘‘வேலைத்தளம். ஊர் கோயில். ஊர்க்காரங்களுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்? நல்ல வேலைக்காரன் நீ, இப்படிப் பண்ணலாமா?’’ என்று சொன்னதும் விம்மி அழத் தொடங்கியவனை அணைத்துக் கொண்டு போய், கூடத்தில் குளித்து சாப்பிட்டு வரச் சொன்னார் மேஸ்திரி.

கோயில் அழகு ததும்ப அத்தனை வேலைப்பாடுகளோடும் அண்ணாந்து பார்க்கும்படி எழுந்து நிற்கிறது. பிரகாரங்கள் கண்களை வசீகரித்தன. இன்னும் சில நாள்களில், முழுவதும் நிறைவுபெற்றுவிடும். ஊர்க்காரர்கள் கோயிலின் அடுத்த பணியான வண்ணப்பூச்சுக்கு ஆள் அழைத்துவரப் பேசிக்கொண்டிருந்தார்கள். கூடவே குடமுழுக்குக்கான நாள் குறிப்பது, பணம் புரட்டுவது என மும்முரமாக இருந்தார்கள்.

கல்மாலைப் பூக்கள் - சிறுகதை

துரிதமாக வேலை நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில், வானில் திரண்ட மேகம் அடித்துப்பெய்யத் தொடங்கியது. எல்லோரும் நனைந்தும் நனையாததுமாக தங்கும் கூடத்திற்கு ஓடினார்கள். மின்சாரம் நின்றுவிட்டது. மழையிருட்டில் மனிதப் புழக்கம் குறைந்து ஊரை அடக்கிக் கொட்டிக் கொண்டிருந்தது மழை. வழக்கம்போலவே தனித்த மறைப்பு அறையில் கொடிலாவோடு அசதியில் படுத்த செங்காயி, மழையின் இதத்தில் ஆழ்ந்து உறங்கிப் போனாள். மாலையிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த மழை நள்ளிரவைக் கடந்தும் பெய்துகொண்டிருக்க, எப்போது ஓய்ந்ததென்று தெரியவில்லை.

விடிந்து எழுந்த காலை பளிச்சென்று வெளுத்திருந்ததை அறிந்த செங்காயி, பதறியபடி எழுந்து மேஸ்திரி அறைக்கு ஓடினாள். எல்லோருக்கும் முன்பாக எழுந்துவிடுகிறவர் அன்று அப்போதுதான் விழித்திருந்தார். அவரிடம், ‘‘கொடிலாவக் காணலங்கையா’’ என்று அடித்தொண்டையிலிருந்து விசும்பி அழுதாள். வேலையாட்கள் எல்லோரும் விழித்துவிட, கூடிவிட்டது பொதுக்கூடம்.

‘‘எங்கடா அந்த மணிக்குட்டி பய? இருக்கானா பாருங்க’’ என்று ஆவேசமாகக் கத்தினார் மேஸ்திரி. அவனைக் காணவில்லை என்ற பதிலே வந்தது. கணக்கப்பிள்ளையைக் கூட்டிவரச் சொல்லி தொப்புளானிடம் சொல்லியனுப்பினார் மேஸ்திரி. சேதி கேட்ட கணக்கப்பிள்ளை பொதுக்கூடத்திற்கு வந்துசேர்ந்தார். அவரிடம் கொடிலாவைக் காணவில்லையென்று சொன்னதும், அவரின் காலடியில் விழுந்து தலைவிரிக்கோலமாய் மார்பில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினாள் செங்காயி. எல்லோரும் அவளை சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்கள். கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்களை அதட்டினார் மேஸ்திரி. ஊர்ப் பொதுக்கூடம் ஓலம் கண்டு கிடக்க, வேலையாட்களுக்கு அன்றைய விடியல், வலியோடும் கண்ணீரோடும் புலர்ந்தது.

அன்று கோயில் வேலை நடக்கவில்லை. நண்பகல் வரை படுத்துக்கிடந்த செங்காயி, தன் துணிகளோடு கிடந்த கொடிலாவின் மாற்றுத் துணிகளை வாரி அணைத்துக்கொண்டு அழத்தொடங்கினாள். அருகிலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். திடீரென்று செங்காயி எழுந்து ஊருக்குப் புறப்பட்டாள். வேலையாட்களில் சிலர், ‘‘அங்க போயி தனியாத்தானே இருக்கணும்’’ என்று மறுப்பு சொன்னார்கள். செங்காயி எதுவும் பேசாமல் புறப்பட்டுவிட்டாள். மேஸ்திரி, அவள் கையில் ஒரு தொகையைக் கொடுத்தார். அதில் கொடிலாவின் கூலிப்பணமும் உள்ளது என்று அப்போது அவர் சொல்லவில்லை.

சில வருடங்கள் உருண்டோடின. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு எந்தக் கட்டு வேலைக்கும் செங்காயி போகவில்லை. ஊரில் விவசாய வேலையும் வாழ்க்கையும் என்று ஒதுங்கிவிட்டவளைத் தேடி ஒருநாள் மேஸ்திரி வந்தார். ‘‘இங்க பாரு செங்காயி, நீ இப்படி இருக்குறதால நடந்த எதுவும் மாறப்போறதில்ல. இத கடந்து வா செங்காயி. எங்காவது கண்காணா எடத்துல அவ நல்லாதான் இருப்பா’’ என்று சொல்லிவிட்டு, ‘‘புது காண்ட்ராக்ட். ராஜகோபுர வேலை. ஒரு வருசம் நடக்கும். நீ இல்லேன்னா சிரமமா இருக்கும் செங்காயி. உனக்கும் அது மாறுதலா இருக்கும். தட்டாம வா’’ என்று ஒரு நூறு ரூபா கட்டை எடுத்து செங்காயி கையில திணித்துவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த ஓரிரு நாட்களில் செங்காயியோடு வேலைக்கான ஆட்களையும் திரட்டிக்கொண்டு வந்த வண்டி, ராஜகோபுர வேலைத்தளத்தில் வந்து நின்றது. அங்கு ஏற்கெனவே இவர்கள் வந்ததைப்போல இரண்டு மூன்று வண்டிகள் நின்றன. வேறு வேறு மேஸ்திரிகள் வேலைக்கான ஆட்களைத் தனித்தனியே திரட்டி வந்திருந்தார்கள். எல்லோருக்கும் தங்குமிடமும் வேலைகளும் ஒதுக்கி விட்டுக்கொண்டிருந்தார்கள்.

தங்களை அழைத்து வந்த மேஸ்திரிக்காக அங்கே குவிக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் காத்திருந்த வேலையாட்களோடு உட்கார்ந்திருந்தாள் செங்காயி. அப்போது, அவள் தோள் பட்டையில் யாரோ கை வைப்பது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தாள். தத்தித் தத்தி நடக்கும் ஒரு பெண் குழந்தை, அவள் தோளைப் பிடித்துக்கொண்டு நின்றது. நிமிர்ந்து பார்த்தாள். எண்ணெய்ப் பிசுக்கற்று, செம்பட்டைத் தலையுடன், குழிந்த கண்களோடு நின்றாள் கொடிலா. மகளைக் கண்ட செங்காயி, குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு கண்ணீர் கொட்ட, பெரும் விசும்பலோடு விம்மினாள். `அசலூரில், கோபுர வேலையின்போது தவறி விழுந்த மணிக்குட்டி கால் முறிந்து நிரந்தர ஊனமாகிவிட்டான்' என்று சொல்லியழுதாள் கொடிலா.

அந்தக் கணத்தில் என்ன நடக்கிறது என்று அறியாக் குழந்தையும் சேர்ந்து அழ, மழையென வடிந்த கண்ணீரைத் தன் சேலைத் தலைப்பில் துடைத்துக்கொண்டு அழுகையை நிறுத்திவிட்ட செங்காயி, குழந்தையின் கண்களைத் துடைத்தபடி ‘‘உம் பேரு என்ன தாயி?'' என்று கேட்டாள். அழுதபடியே அந்தக் குழந்தை மாறாத தன் மழலைக் குரலில் ‘‘செங்க... மலர்’’ என்று சொல்ல, கட்டு வேலைக்கு வந்தவர்கள் எல்லோரும் கூடிநின்று பார்க்கும்படி மீண்டும் செங்காயி வெடித்து அழத்தொடங்கினாள்.