சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தி.ஜா என்னும் தீராத எழுத்து அருவி!

தி.ஜானகிராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
தி.ஜானகிராமன்

தமிழில் முன்னுதாரணமில்லாத எழுத்து என்று மௌனியைச் சொல்கிறார்கள். ‘சிறுகதையின் திருமூலர்’ என்று மௌனியைப் புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருக்கிறார்

அழகியலின் உச்சம் தொட்ட தமிழ் எழுத்தாளர் தி.ஜானகிராமன். இசையும் காவிரியும் பொங்கிப் பெருகும் எழுத்துப் பிரவாகம் அவருடையது. தி.ஜா-வின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் விதமாக கல்யாணராமன், ‘ஜானகிராமம்’ என்ற பெருந்தொகுதியைக் கொண்டுவந்திருக்கிறார். இந்த முயற்சி குறித்து அவரிடம் பேசினேன்.

``இந்நூலை உருவாக்குமளவிற்குத் தி.ஜா-வுக்கும் உங்களுக்கும் அப்படியென்ன ஆத்மார்த்தமான உறவு?’’

“இளம்வயதில் நான் வாசித்த நாவல் ‘மரப்பசு.’ அதில் வரும் மூடத்தனங்களுக்கு எதிரான அம்மணியின் சிரிப்பு எனக்குப் பிடித்திருந்தது. இருபது வயதிற்குள் ஜானகிராமனின் நாவல்களை முடித்துவிட்டேன். ‘அம்மா வந்தாளி’ல் வரும் ‘அந்தராத்மாவுக்கு விரோதமாக ஒரு காரியம் செய்யறதும், பேசறதும்தானே பாவம்’ என்ற வரியை இன்றுவரை ஆயிரம் முறையாவது மனசில் அசைபோட்டிருப்பேன். பலராலும் இன்னும் சரியாகக் கண்டு கொள்ளப்படாத ‘மலர் மஞ்சம்’ படித்தபோது, அது என் அந்தரங்க உலகத்திற்குள் அத்துமீறி ஜானகிராமன் பிரவேசித்துவிட்ட அதிர்ச்சியைத் தந்தது. என் தீரா வியப்பின் உயிர்த் திளைப்புதான் தி.ஜானகிராமன்.”

கல்யாணராமன்
கல்யாணராமன்

``தி.ஜா-வோட நதிமூலம் என்ன?’’

“தமிழில் முன்னுதாரணமில்லாத எழுத்து என்று மௌனியைச் சொல்கிறார்கள். ‘சிறுகதையின் திருமூலர்’ என்று மௌனியைப் புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருக்கிறார். இது பற்றிப் பல வாதப் பிரதிவாதங்கள் தமிழில் நிகழ்ந்திருக்கின்றன. திருமூலரை மௌனிக்கு முன்னோடியாகக் கண்டுதான் புதுமைப்பித்தன் இப்படிக் கூறியிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே, மௌனிக்கு முன்னுதாரணம் உண்டு என்றாகிறது. ஆனால், உண்மையில் முன்னுதாரணமற்றவர்கள் என்றால், தி.ஜானகிராமனையும் அவரின் ஆசானான கு.ப.ரா-வையும்தான் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு பேரும் தமிழில் புதிதாக ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார்கள். ‘பெருமையும் வலிமையும் பெண்களுக்குரியவை’ என்கிறார்கள். ஆணாதிக்கம் நிலவும் தமிழ்ச்சூழலில், இந்த வகையில்தான் இருவரும் முன்னுதாரணமற்றவர்கள் ஆகிறார்கள். இவர்கள் மேற்கொண்டது ஒரு தனிநெடும்பயணம். காலங்காலமாக வேரூன்றி நிலைத்து நிற்கும் குடும்பம் என்னும் இறுகிய நிறுவன அமைப்பைக் கொஞ்சமேனும் அசைத்துப் பார்த்து, பெண்களுக்கான வெளியைக் கண்டடைந்தவர்கள் என்று இவர்களைத்தான் சொல்ல முடியும். ஓர் எளிய புரிதலுக்காகச் சொல்கிறேன். ‘இது என் இஷ்டம்’ என்ற ஒரு சாதாரண வார்த்தையைச் சொல்லக்கூடக் கு.ப.ரா-வின் பெண்களுக்கும் தி.ஜா-வின் பெண்களுக்கும்தான் தைரியம் இருந்தது.”

தி.ஜா என்னும் தீராத எழுத்து அருவி!

``தி.ஜா-வை வாசிப்பது எவ்வளவு தூரம் முக்கியமானது?’’

“இந்த மண்ணின் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தும் உருத்திரண்டிருக்கும் அதேவேளையில், காலத்தைத் தாண்டிய மதிப்புமிக்க அபூர்வமான எழுத்தாளர் அவர். அவரே சொல்லியிருப்பதுபோல், tradition என்கிற மரபைப் பேணிக்கொண்டு, conventions என்கிற கட்டுப்பாடுகளைப் புறந்தள்ளி முன்னகரும் ஆழ்மன வெடிப்புகள் அவர் எழுத்துகள். சாஸ்திரிய இசையிலும் நடனத்திலும் ஊர்க் கூத்துகளிலும் கோயில் கலைகளிலும் தேர்ந்த ரசனையுள்ளவர். பிற கலைகளுடன் படைப்பிலக்கியத்தைத் திறமையாக இணைத்தவர். தஞ்சைப் பின்னணியைக் காவிரியோடு நுணுக்கமாகப் பிணைத்து அதன் நெளிவுசுளிவுகளை உயர்ந்த இசையின் ஆழ்ந்த அமைதியோடு கலந்து செய்த ஆத்மார்த்தமே அவர் எழுத்து. நம்பகத்தன்மையே, அவர் படைப்புகளின் ஆகப்பெரும் கலையம்சம். தி.ஜா-வை நாம் வாசிக்காவிட்டால், இழப்பதற்கு அவருக்கு ஒன்றுமில்லை. நமக்கோ பெறுவதற்கு ஒரு புத்தம் புதிய புனைவுலகம் இல்லாதுபோய்விடும்.”

``இந்தப் புத்தகம் உருவான விதம் பற்றிச் சொல்லுங்க...’’

“முதலில் தி.ஜா-வின் நூற்றாண்டுக்காகத் தனிநூல் எழுதும் திட்டத்தில் இருந்தேன். என் மீது நம்பிக்கையுள்ள தி.ஜானகிராமனின் மகள் உமா சங்கரி, ‘எப்போது நீங்கள் அப்பாவைப் பற்றி எழுதுவீர்கள்?’ எனத் தூண்டிக் கொண்டேயிருந்தார். ஒரு நூறு பக்கம் எழுதிவிட்டேன். பின் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு கருத்தரங்குகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டேன். கொரோனா வந்ததால், அதற்கு வழியின்றிப் போய்விட்டது. அத்தருணத்தில் என் மனதில் உதித்த புதிய திட்டமே இந்நூல். 56 ஆண்களும் 37 பெண்களும் எழுதியிருக்கிறார்கள். தி.ஜா-வின் இதுவரை வெளிவந்த அனைத்துப் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளும் இதில் உள்ளன.”

``தி.ஜா-வின் பாத்திரப் படைப்புகள் குறித்த உங்கள் கருத்துகள்?’’

“எந்த இடத்துக்குப் போனாலும் கால் தரிக்காது மனசுக்குள்ளே ஒரு நச்சரிப்பு தகித்துக்கொண்டிருக்கும் மனிதர்களைப் பாத்திரங்களாக தி.ஜா புனைந்தார். ஒருவரையொருவர் பார்த்தபடி அவரவர் சோகத்தில் மூழ்கியிருக்கும் இரண்டு பெண்களைப் பற்றி எழுதுகிறபோது, ‘சாத்துக்குடியையும் கமலாப்பழத்தையும் எதிரெதிரே வைத்தாற்போல் இருவரும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்’ என்றெழுத ஜானகிராமனால் மட்டும்தான் முடியும். ஒரு காய்கறியைப் பற்றி எழுதினால்கூடக் ‘காம்பு ஒடிக்காத வெங்காயம்’ என்று அதை அப்படியே கண்முன் கொண்டுவந்துவிடும் எழுத்து. கடவுளைத் தவிர்த்து மனிதனை வழிபட்டவர் ஜானகிராமன்! வாய்ப்பாட்டுக்குப் பாபு, கோபாலி, சிற்பத்திற்கு ஆமருவி, ஓவியத்திற்கு நாலாவது சார், பேரழகுக்கு யமுனா, நடனத்திற்குப் பாலி, அம்மணி, தீத்தொழில் நீங்கும் துணிச்சலுக்கு அமிர்தம், சோகத்திற்குச் செல்லம், தவிப்புக்குக் குஞ்சம்மா, இந்து, சுதந்திரத்திற்கு அனுசூயா, பதிவிரதமைக்கு ருக்மிணி, படிதாண்டலுக்குத் தங்கம்மாள், அலங்காரம், வழுக்கிவிழுதலுக்கு டொக்கி, விழுந்தாலும் எழுந்து நிற்பதற்குப் பட்டு, நட்புக்கு ராஜம், கடமைக்குச் சட்டநாதன், தத்துவத்திற்குத் தண்டபாணி, சத்தியத்திற்கு ராமையா, கயமைக்கு வையன்னா, பொதுத்தொண்டுக்குப் பூவராகன், ஆண்மைக்குப் பட்டாபி, சந்நியாசத்திற்கு அனந்தசாமி, பிரம்மச்சரியத்துக்குக் காமேச்வரன் என்று விதவிதமான பாத்திரங்களைப் படைத்தார்.”

தி.ஜா என்னும் தீராத எழுத்து அருவி!

``தி.ஜா பற்றிய உங்கள் வியப்பைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?’’

“கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, அது வேகமாக ரசம் அழிந்து, வெறும் கண்ணாடிபோல் மாறினால் எப்படியிருக்கும் என்று ஓரிடத்தில் கேட்கிறார். உண்மையை ஒப்புக்கொள்வோம். இப்படித்தானே நம்மில் பலரும் இருந்துவருகிறோம்? இலையைச் சருகாகக் காயவைத்தால்தான் தீப்பிடிக்கும் என்கிறான் பாபு. ‘சபரி ராமனை வரவேற்றதுபோல் உன்னை வரவேற்றேன்’ என்கிறாள் யமுனா. இந்தப் பாபுக்களும் யமுனாக்களும்தான் ஆணும் பெண்ணுமாய்க் கிடந்து இங்கே மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறார்கள்; விஷ அறையில் கொண்டுபோய்த் தம்மைத் தாமே இந்த மனிதர்கள் அடைத்துக் கொண்டுவிட்டார்களே எனக் கலங்கி தி.ஜா கதறுகிறார். ‘என் எழுத்து யாருக்கும் அஞ்சாது, எப்போதும் உண்மையே பேசும்’ என்று நெஞ்சு நிமிர்த்தி நின்றவர் அவர். இப்போதெல்லாம் ஜானகிராமனின் எழுத்தை வெறும் கதைகளாகக் கருதி நான் படிப்பதில்லை; நிஜ வாழ்வின் கிடைத்தற்கரிய அரிய கணங்களாகவே செரித்துக்கொண்டிருக்கிறேன். ஃப்ராய்டைவிடப் பெரிய உளவியல் சிந்தனையாளர் எனக்குத் தி.ஜா-தான். ‘ஒவ்வொரு மனுஷனும் உசிரோட இருக்கிறதே பெரிய சாதனைதான்’ என்றவர் அவர். இன்னும் நான் உசிரோடு இருப்பதற்கு அவரைப் படித்ததுதான் காரணம் (என் மனைவிக்கு நான் பைத்தியம் என்று தெரியும்!). இலையும் பச்சையுமாய் இன்னும் நெடுங்காலம் வாழ்வார் தி.ஜானகிராமன்!”