
கண்டராதித்தன்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
காலத்தால் கைவிடப்பட்ட சிறுநகரத்தின் நாற்சந்தியில்
நண்பகலுக்குச் சற்று முன்னதான பொழுதில்
ஒரு மந்தமான வெயிலில் காத்திருக்கின்றன
நான்கு பிடாக பூதங்கள்
குளிர்ந்தும் குழைந்தும் வனைந்த களிமண்ணே
யுகயுகங்களாக மரத்துப்போன அதன் தோலாகும்
இன்று மழையினால் ஈரமாயிருக்கிறது
மேலும் பாசியடர்ந்தும் கருமை பூத்தும்
முகப்பொலிவு கொண்டுமிருக்கிறது
சிறுநகருக்கு இயற்கை தரும் ஒளியே போதுமென
சின்னஞ்சிறுபகலைப் பாதுகாக்கும் பெண்
மெல்லத் தன் உடலை மூடியிருந்த துணியால்
நகரின்மீது போர்த்துகிறாள்
இப்போது அச்சிறுநகர் மேலும் குளிர்ந்து
பனிமூடியதுபோல் வாளாவிருக்கிறது
சதுக்கத் தோட்டத்து பூதங்கள்
பன்னெடுங்காலம் துக்கத்தாலும்
நிராகரிப்பாலும் பாதிக்கப்பட்ட
பெண்ணின் குரலுக்கு இப்போது செவிமடுத்தன.

என் கணவன் ஒரு அரைப்பைத்தியம்
அவன் கற்பாறைகளற்ற
தூரதேசத்தில் உள்ள
மலைப்பிரதேசங்களில்
மழைக்காடுகளில்
சக ஆண்களின் சுகதுக்கங்களில்
கலந்துகொள்ளும்போதெல்லாம்
நல்ல போதையிலிருப்பான்
இதுகுறித்து குழந்தைகளிடம்
எந்தப் பிராதும் வைக்க முடியாது
ஏனெனில் அம்மையே எங்கள் தந்தை
எப்போது வீடுதிரும்புவார் என்பதே
அவர்களது பிரதான கோரிக்கை
இறைச்சித்துண்டங்கள் உண்டு பழக்கமில்லாத அவனோ
நன்கு வெந்த இறைச்சிக்கும் சோற்றுக்கும்
நீண்டபயணத்தைத் தொடங்குமளவிற்கு
மனதைப் பறிகொடுத்திருந்தான்
பிறகு பிசிறில்லாத உரையாடலை
திரும்பச் செலுத்தக்கூடிய வாக்குகளை
நன்றிமிகும் கடன்களை
சிலபல
நல்லொழுக்கங்களைக் கைவிட்டான்
கூடுதலாக எப்போதும் வாய்துர்நாற்றமும் வாய்த்தது
ஒழுங்கின்மையே தெய்வம் என்ற குழுவிற்கு அணுக்கமானான்
வாழ்வின் துயரம் மேலும் கூடியது
பெண்ணைப் பிடாகத்தில் எங்கள் வீடு
பூத வடிவு
அன்னவரே என் கணவர்.