சினிமா
தொடர்கள்
Published:Updated:

கரகம் - சிறுகதை

கரகம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
கரகம் - சிறுகதை

- எம்.எம்.தீன்

செட்டுக்காரன் காலை நாலு மணிக்கே வந்து கதவைத் தட்டுவான் என்று சரோஜா எதிர்பார்க்கவில்லை. இன்னும் டீக்கடையில் பாட்டுகூட போடவில்லை. அவள் முந்தா நாள் விடிய விடிய ஆடிவிட்டு நேற்றுப் பகலிலும் ஆடிவிட்டு வந்த அசதிகூட இன்னும் தீரவில்லை. மெதுவாக பாயைச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். கண்தெரியாத அம்மா கட்டிலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

கண்ணைக் கசக்கிக்கொண்டே கதவைத் திறந்தாள். யாரும் நிற்பது போல தெரியவில்லை. அந்த அதிகாலையில் வீட்டின் முன் நின்ற பன்னீர்மரம் எப்போதும் போலில்லாமல் அதிக பூக்களை உதிர்த்துக் காரநெடியோடு மணத்தது. நாசியைத் தேய்த்துக்கொண்டே மீண்டும் பார்த்தாள்.

மரத்தின் நிழலுக்குள் இனோவா கார் நின்றுகொண்டிருந்தது. மேளக்காரர் மணிகண்டனும் பபூன் ராஜாமணியும் காருக்குள் இருப்பது தெரிந்தது.

வாணி மூன்றாவது அழைப்பில் எடுத்து, ``ம்ம்’’ என்று சொல்லிக்கொண்டே அசதி முறித்தாள்.

``செட்டுண்ணே, வாணி எந்திரிச்சிட்டா, முதல்ல அவள கூட்டிட்டு வாங்க. போற வழில டீ குடிச்சிக்கிடலாம்னு சொல்லிக் கூட்டிட்டு வாங்க’’ விரட்டினாள்.

வாணி சின்னப் பொண்ணு, மூக்கும் முழியுமாக இருப்பவள். வேலைக்குப் போகாத குடிகாரக் கணவனை நம்பிக் குடும்பம் நடத்த முடியாமல் ஆட வந்தவள். தலையில் கும்பத்தைத் தூக்கி வைத்துவிட்டால், அரைமணி நேரம் என்ன, ஒருமணி நேரமானாலும் சளைக்காமல் சுழலுவாள். தலையில் இருந்த கரகம் இடது தோளில் இறங்கி முதுகு வழியாக வலது தோளுக்கு வந்து தலையேறும். ஊரே வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும்.

இப்போதெல்லாம் வாணியைத்தான் தனக்கான துணைக்கும்பமாக அழைத்துப் போகிறாள். அழகுக்கு அழகு ஆட்டதுக்கு ஆட்டம் என்று இருக்கிற வாணியை ஆட்டத்துக்குக் கூட்டிப் போவதைவிட, பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்கிற கவலைதான் சரோஜாவுக்குப் பெரிதாக இருக்கும். வாலிபப்பையன்களைவிட பெருசுகளின் தீக்கண்கள் கொடுமையானவை.

கரகம் - சிறுகதை

திருமதி.செல்லி என்ற பெரிய நாச்சியார் நேற்று இரவு இறந்துபோனதையும் நாளைக்கு மாலை அடக்கம் என்பதையும் பெரிய பேனர்கள் சொல்லின. அம்மாவின் பலதரப்பட்ட புகைப்படங்கள் பெரிதாக அச்சிடப்பட்டு இருந்தன. வழியெங்கும் பெரிய கட்அவுட்கள் ஊரையே மறைத்தபடி நிறுத்தப்பட்டிருந்தன.

அந்த பங்களா வீட்டின் முன்முகப்பு அறையில் செல்லி என்ற பெரிய நாச்சியார் சடலம் மயில் டாலர் வைத்த நாலு வடச்சங்கிலி, அட்டியல் பதக்கம், ஆலிலைத்தோடு கம்மல்கள், ஏழுகல் பேசரி மூக்குத்திகளோடு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. மேலெழும்பிய வயிற்றை புதுக் காஞ்சிபுரப் பட்டின் மூலம் மறைக்க முந்தியைச் சீராக மடித்துப் போட்டிருந்தார்கள்.

காரை விட்டு இறங்கியவுடன் கொடுத்த தேநீரைக் குடித்ததும், இழவு வீட்டுக்காரர் ஓடிவந்து பின்புறமிருக்கும் வீட்டைக் காட்டி, ‘‘இதில் உடை மாற்றிக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

பொதுவாக சாவு வீட்டுக்குப் போனால் சொந்த பந்தங்கள் வரும்வரை பந்தலில் நின்று ஆடிவிட்டு, சாவுச்சீர் வரும்போது ஊர் எல்லையில் நின்று அழைத்து வந்துவிட்டு, பின்பு பிணம் தூக்கிப் போகிறபோது ஒரு குறிப்பிட்ட முக்கு வரை ஆடிச் சென்றுவிட்டு முடித்துக் கொள்வார்கள். இது வசதியான மூத்த அம்மாவின் கல்யாணச் சாவு என்பதால் கூட கொஞ்சநேரம் ஆகும் என்று எண்ணிக்கொண்டாள்.

மேக்கப் போடுவதற்காக பழைய ஓட்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். இறந்த செல்லி அம்மாள் பிறந்த வீடு என்றார்கள். வீட்டில் யாரும் இருப்பதற்கான எந்த அடையாளமும் தென்படவில்லை. கொஞ்சம் மகிழ்ச்சியுடன் மேக்கப் சாமான்களை எடுத்துப் பரத்தினார்கள். சரோஜா, பவுடர்ப்பூவை எடுத்து முகம், கழுத்து, கழுத்தின் பின்புறம், மார்பின் மேல் பகுதி எல்லாவற்றையும் துடைத்துவிட்டு துடைத்த பூவைப் பார்த்தாள். எந்த அழுக்கும் இல்லை. சரோஜாவுக்குப் பின்னால் பாவாடையும் சட்டையுமாக சிறுமி ஒருத்தி ஒளிந்து நின்று மேக்கப் சாமான்களையும் மேக்கப் போடுவதையும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ‘‘எங்கூட்டுலே ஆட்டக்காரங்க இருக்காங்க’’ என்று சொல்லிக்கொண்டே ஓடிப் போனாள்.

வாணியும் முகம் துடைத்துவிட்டு மேக்கப் சாமான்களை எடுத்து வைத்தாள். சரோஜா அப்படியே முத்துமஞ்சளை எடுத்து பானோடு சேர்த்துக் கலந்து தடவினாள். கொஞ்ச நேரம் காயட்டும் என்று இருந்தாள். சரோஜாவுக்கு மேக்கப் போட ஆரம்பித்தவுடன் அம்மா ஞாபகம் வந்துவிடும். ‘நாம் அழகுதான் என்ற எண்ணத்தோடு ஒப்பனையை ஆரம்பித்தால் ஒப்பனைக்குத் தக்க முகம் மலர்ந்துவிடும்’ என்று அவள் அம்மா கலைமாமணி பொன்னம்மா சொல்வாள். அது உண்மைதான் என்பதை மேக்கப் போடும்போது சரோஜா எப்போதும் உணர்வாள். தானும் அழகுதான் என்று மனம் துளிர்க்க ஆம்பித்துவிடும்.

வாணியும் நல்ல நிறம். களையான முகம்.பெரும்பசி அவள் வீட்டில் பேய் போல ஆடிக் கொண்டிருந்தது. மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு அல்லாடிய அவள், தன் கணவன் குடித்துக் குடித்து உடல் இற்றுப்போன நிலையில் வயிற்றுப் பசி தீர்க்க ஆடவந்தாள்.

சரோஜா போட்ட பான் கலவை சந்தனநிறத்தில் மஞ்சள் முகமூடி போட்டது போல இருந்தது. ரோஸ் பவுடர் போடக் கையில் எடுத்தாள். வாணியும் கொஞ்சம் பானை எடுத்துத் தேய்த்தபடி இருந்தாள்.

யாரோ ஓடிவருவது போல இருந்தது. மெதுவாகக் கண்ணைத் திறந்து யார் என்று பார்த்தாள். ஒரு பெண் ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த மகளுடன் உள்ளே வந்து கோபமான முகத்துடன் பேச ஆரம்பித்தாள்.

``யாரு நீங்க, ஆட்டக்காரிகதானே... உங்கள யாரு இந்த வீட்டுக்கு வரச் சொன்னது. ஊருக்கு எளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டிங்கிற கதையால்ல இருக்கு. இந்தா பாருங்க, நாங்க என்ன சாதி என்ன சனம்னு பார்க்கதில்லே. ஆனா ஊர்க்காரங்க ஒண்ணிலாட்ட ஒண்ணு சொல்வாங்க, நீங்க வேற எடத்துக்குப் போங்க’’ என்றவள், வாய்க்குள் இழவு வீட்டுக்காரன் பணப்பெருமையைக் கேவலமாகத் திட்டினாள்.

சரோஜா என்னவென்று அறியாமல் ஏறிட்டுப் பார்த்தாள். அவ்வளவுதான், அந்தப் பெண்ணுக்குக் கோபம் பொத்துக்கொண்டது. ``என்னடி ஏறிட்டுப் பாக்க. போன்னா போக வேண்டியதுதானே. ஆட்டக்காரிக வீட்டுக்கு வந்தா வீடு உருப்பட்ட மாரிதான். போங்கடி வெளியே.’’ சரோஜாவும் வாணியும் விக்கித்துப் போய் மேக்கப் சாமான்களை எடுத்துப் பெட்டியில் போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள். செட்டுக்காரனைப் பார்த்து சரோஜா கோபத்துடன் கத்தினாள்.

``செட்டுக்காரரே, கொஞ்சமாவது அறிவிருக்காயா உமக்கு. எங்க போனாலும் இதுதானே கதையா இருக்கு. எப்பவும் நாம வாற ஆம்னி வேன்ல வந்தா, அதுக்குள்ளேயே இருந்து மேக்கப் போட்டிருப்போம்ல. ஆட்டக்காரின்னா என்னமோ கீழ்த்தரமானவ, கேவலமானவன்னு நெனப்பு இருக்கு. சும்மா பெரிய கார்ல ஏறிட்டு நீரு ஜம்முனு வர்றதுக்கு நாங்க கேவலப்படணுமாக்கும்’’ என்று திட்டினாள்.

பாதி கேட்டும் கேட்காமலும் ஓடிப்போன செட்டுக்காரன் முத்து எங்கேயோ கேட்க, அங்குமிங்குமாய் ஓடி ஒதுக்குப்புறமான மாடு கட்டும் எருத்துப்பிறையைக் கைகாட்டினார்கள். எந்த மறைப்பும் இல்லாத இடம். வேறு வழியின்றி மேக்கப் போட்டுவிட்டு, கொண்டு வந்த சேலையை மறைப்பாகக் கட்டி உடை மாற்றிவிட்டு மார்பு மறைவுத்துணியைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள்.

அடுத்த எருத்துப்பிறையில் சாராயத்தைக் கேனில் வைத்து போகிற வருகிற எல்லோருக்கும் ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ஜிகினாவும் தங்கநிற லேசுகளும் வைத்துத் தைக்கப்பட்ட மயில்கழுத்து நிறத்தில் உடையை உடுத்தியிருந்தார்கள். குட்டையான அந்தச் சின்னப்பாவாடை அவர்களின் முழுத் தொடைகளையும் காட்டியது. வெளியூர் கரகசெட்டுகள் குட்டைப் பாவாடையைக் குறைத்துக் குறைத்து தொடை தெரியும் அளவிற்கு ஏற்றிவிட்டார்கள்.

முருகம்மாள் இறந்துபோன பெண்ணின் குடும்பப் பெருமைகளைப் பாடிக்கொண்டு இருந்தாள்.

சாவு வீட்டில் கரகம் வைத்துக்கொண்டு ஆடுபவளைச் சுற்ற விடுவார்கள். சுற்றிலும் நின்று கொண்டு ‘சுத்து... சுத்து...’ என்று கத்தலும் விசிலும் கேட்டுக்கொண்டே இருக்கும். கொஞ்சம் சடைவோடு நின்றாலும் விடமாட்டார்கள். கிறுகிறுவென்று தலைசுற்ற ஆரம்பித்த பின்னும் விட மாட்டார்கள். அப்படியே தலை, கால், கையெல்லாம் விறுவிறுவென்று பத்து நிமிஷத்துக்கு உலகமே இருண்டுபோகும். வெட்டப்போகிற கிடாயைப் போல ஆகிவிடும். அந்த நேரத்தில் இழவு வீட்டுச் சோகம், அழுகை காணாமல் போய்விடும்.

மார்பு மறைப்புத் துணியை எப்போது எடுத்து ஆட ஆரம்பிப்பார்கள் என்று இளவட்டங்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தன. இன்னும் கொட்டுக்காரர்கள் ரெடியாகவில்லை.

தவிலையும் உருமியையும் தட்டிப் பார்க்க ஆரம்பித்த பின்னே, நாதஸ்வரக்காரர் சீவளிக்குள் தந்தக்குச்சியைத் திணித்து ஊதிப் பார்த்தார். எல்லாம் ரெடியானவுடன். மார்பு மறைப்புத் துணியை நீக்கிவிட்டு ஆடத் தயாரானார்கள். மார்பைத் தூக்கிக் காட்டும் விதத்தில் சுருள்சுருளாக கற்கள் வைத்தும் அதைச் சுற்றிலும் பட்டையாக லேஸ் வைத்தும் தைத்திருந்தது மார்புகளை எடுப்பாகக் காட்டியது. சரோஜாவின் இறுகிய ஜாக்கெட்டுக்குக் கீழே லேசான தொப்பையில் நிலா போல தொப்புள் தெரிந்தது. வாணியின் சிறுவயிற்றில் கரும்பொட்டு போல தெரிந்தது. எல்லோரின் கண்களும் அவர்கள் மார்புகள், தொப்புள்கள் மீது படர ஆரம்பித்தன.

கரகாட்டம் ஆரம்பிக்கும்போது ஆட்டக்காரிகள் அங்குமிங்குமாய் கால் மாற்றி வைத்து ஓடியாடுவதற்குக் காரணம், பார்வையாளர்கள் கண்கள் அந்த இரண்டிலும் நிலைக்குத்தி நிற்கக் கூடாது என்பதற்காகத்தான் என்று அம்மா சொல்லியது சரிதான். எல்லாக் கண்களும் அப்படி ஒரே நேரத்தில் மொய்த்துப் பார்க்கும்போது உடலெங்கும் பல புழுக்கள் ஊர்வதுபோல இருக்கும். கொஞ்சம் கண்ணை மூடிக்கொள்ளலாமா என்று தோன்றும். சரோஜா அந்தச் சில நிமிடங்களைத் தாண்டிய பின்தான் நிம்மதியாக ஆடத் தொடங்குவாள். அதுவரை அவள் கைகூப்பி மார்புகளை மறைத்துக் கொள்வாள்.

கரகம் - சிறுகதை

கோமாளி துள்ளல் போட்டு கரகாட்டக்காரிகள் இருவரையும் நோக்கி, கையை நீட்டி ஆட வருமாறும், இடுப்பில் வந்து அமரும்படியும் பாவனை செய்தபடி துள்ளல் ஆட்டத்தைத் தொடக்கினான்.

தாராளமாய் சாராயம் எல்லோருக்கும் ஊற்றிக் கொடுக்கப்பட்டது. கூட்டம் சேரச்சேர கும்மாளமும் கூடிக்கொண்டே போனது. மேளக்காரர்களுக்கும் காபியைக் கொடுப்பது போல போதையைப் புகட்டி விட்டார்கள். சுழல் ஆட்டமும் துள்ளல் ஆட்டமும் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தது.

அரசியல் தலைவர் யாரோ வர இருக்கிறார்களாம். செண்டை மேளம் இரண்டு செட்டு வந்து இறங்கியது. சுடுகாட்டுக்கு வருகிறவர்களுக்கு நெய் மைசூர்பா மற்றும் மிக்சர், வாழைப்பழம் எல்லாம் குட்டி யானை வேனில் தயாராக இருந்தது.

சம்பந்தக்காரர்கள் தங்களது சீர்களைக் காட்ட கொட்டு முழக்கத்தோடு ஊரைச் சுற்றிவரத் தயாரானார்கள். சம்பந்தக்காரக் குடும்பத்துப் பெண்கள் வரிசையாகத் தூக்கிக்கொண்டு வர, முன்னால் அவளும் வாணியும் ஆடிக்கொண்டு போக, அவர்களுக்குப் பின்னால் ஒட்டியபடி போதையோடு சிலர் கத்திக்கொண்டே வந்தார்கள்.

வேண்டுமென்றே நெருக்கி அடித்துக்கொண்டு வந்தவர்களில் ஒருவன் வாணியின் முதுகில் கிள்ளினான். வாணி பின்னால் திரும்பி முறைத்துப் பார்க்க, அதில் ஒருவன், ``பார்ரா, முறைச்சிப் பாக்குறத, ரோஷம் உள்ள புள்ளதாண்டா’’ என்றான். அவள் கொஞ்சம் முன்னால் நகர்ந்து நின்று ஆடினாள்.

சிறிது நேரத்தில் இன்னும் கூட்டம் சேர்ந்தது. ஒருவன், ``டேய், பிகர் சூப்பரா இருக்காடா’’ என்று சத்தம் போட, ஒருவன் விசில் அடித்தான். ``நல்ல பிள்ளைகள்டா, கலாய்க்காதீங்க’’ என்று உள்குத்தாக கேலி செய்தான்.

``டேய், அந்தப் பிள்ளைக்கு நூறு ரூபாய் நோட்டை அதுல குத்துடா’’ என்றான். ``எதுல குத்தச் சொன்னே’’ என்று இன்னொருவன் கேலி செய்தான். சரோஜாவுக்குக் கோபம் கோபமாய் வந்தது. செட்டுக்காரன் எங்காவது நிற்கிறானா என்று பார்த்தாள். அவன் எங்கேயும் தென்படவில்லை. அவன் எப்போதும் அப்படித்தான். ‘ஆட்டக்காரங்களுக்கு வந்த தலைவிதிக்கு நானென்ன செய்வேன்’ என்று எங்காவது ஓடி ஒளிந்துகொள்வான்.

சில்லறைகளின் சில்மிஷம் நிற்கவே இல்லை. சரோஜா வாணி கையைப் பிடித்து முன்னால் விட்டுக்கொண்டு ஆட்டத்தைத் தொடர்ந்தாள். கோடை வெயிலால் முகத்தில் போட்ட மேக்கப் `சுள்' என்று அரித்தது. வியர்வைக் கோடுகள் முதுகிலும் மார்புக் கீற்றுக்குள்ளும் தாரையாய் இறங்கியது. கொஞ்சம் எரிச்சலோடு நடந்தபடி ஆடிக்கொண்டு போனார்கள். ரெண்டு தெருக்கள் முழுவதுமாகச் சுற்றித் திரும்ப வேண்டியிருந்தது.

சம்பந்தக்காரர்களின் சாவுச் சீரை ஊருக்குக் காட்டிவிட்டுத் திரும்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

சரோஜாவிற்கு வெயிலின் கொடுமையைவிட இழவு வீட்டின் குடும்பத்தார் போதை வெறியோடு பார்க்கும் பார்வையும், கரகாட்டக்காரிகள் எதற்கும் தயாராய் இருப்பவர்கள் போல பாவிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘மேலை ரோஜா கரகாட்டக்குழு’ என்றால் சுற்று வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும். அவள் புகைப்படம் வாங்கி அச்சிட்டு போஸ்டர் ஒட்டி, கோயில் கொடைவிழா மற்றும் திருவிழாக்களில் ஆடியது போக இப்போது செத்த வீட்டுக்கு ஆடவேண்டிய சூழல் வந்துவிட்டது. கொரோனா காலத்தில் வேலை எதுவுமின்றிப் போக, சாவு வீடுகளுக்கும் போய் வாழ்க்கையை ஓட்ட வேண்டியதாகிவிட்டது. கோயில் கொடை, திருவிழா செட்டுக்காரன் என்று பெயர் எடுத்திருந்த முத்து, இழவு வீட்டு செட்டுக்காரன் ஆகிப்போனான்.

இதற்கு முன்பு, வயதான கும்பங்கள்தான் சாவு வீட்டுக்குப் போகும். சின்னக் கும்பங்கள் சாவு வீட்டுக்குப் போவது என்பது கேவலமானது. ‘அந்த செட்டு ஒன்றுக்கும் ஆகாதது எனக் கழித்துவிடுவார்கள்’ என்று அஞ்சுவார்கள். சரோஜா என்ன புழுங்கினாலும் வேறு வழி ஒன்றுமில்லை. வயிறு கடிக்கும் போது வாழ்க்கை எல்லோரையும் தெருவில் வீசிவிடுகிறது.

கலைமாமணி பட்டம் வாங்கிய அம்மாவும் கைக்கும் வாய்க்குமாக வாழ்ந்து தீர்த்ததைத் தவிர எதுவும் சேர்க்கவில்லை. கலைஞர்களுக்குக் கொடுக்கும் ஓய்வூதியம்கூட கிடைக்கவில்லை.

கலைமாமணி பொன்னம்மா என்றால் அப்படி ஒரு பெயர் உண்டு. சைக்கிளை ஓட்டிக்கொண்டே அதிலிருந்து சரிந்து கண்ணிமையால் ஊசியை எடுப்பது, ரூபாய் நோட்டை எடுப்பது, இருகைகளாலும் தீப்பந்தம் சுழற்றுவது, தாம்பாளத்தில் நின்றுகொண்டு கரகம் ஆடுவது, கோலம் போடுவது என அத்தனையிலும் சரோஜாவின் அம்மாதான் நம்பர் ஒன். அப்படியான கலைமாமணி பொன்னன்மாவின் மகள் சரோஜா சாவு வீட்டில் ஆடுகிறாள் என்பதைக் கேள்விப்பட்டால் அங்கேயே மண்டையைப் போட்டுவிடும். அம்மாவுக்குத் தெரியாமல் சரோஜா ஏதோ கிடைக்கிறது என்பதற்காக தன்னை இப்படி இறக்கிக்கொண்டது அவளுக்கே கேவலமாகத்தான் இருக்கிறது.

கருங்குளத்தில் சாவு வீட்டுக்கு ஆடப் போய்க்கொண்டிருந்த போது, எதிராக வந்த பபூன் தாசன், ``என்ன சரோஜா, சாவு வீட்டுக்கா ஆடப்போறே? என்னையும் வந்து கூப்பிட்டாங்க. நான் வரமாட்டேன். சொத்தை வித்து சாப்பிட்டாலும் சரி. சாவு வீட்டு ஆட்டத்துக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டேன். போகக்கூடாது சரோ. ஏன்னா அது விருத்தி இல்லாமே போயிரும்’’ என்று சொல்லிவிட்டு அவளைப் பரிதாபமாகப் பார்த்தபடி போனான். தாசனுக்கு பதில் சொல்ல அவளிடம் என்ன இருக்கிறது. கைக்குட்டையை எடுத்துக் கண்ணைத் துடைத்துக்கொண்டு நடக்கையில் சாவு வீட்டுக்காரன் வந்து, ``நீங்க சாவு ஊட்டு கரகசெட்டுதானே’’ என்றபோது மீண்டும் ஒரு முறை உயிர் போனது போல இருந்தது. மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியவளை, மரத்தில் சேர்த்துக் கட்டி வைத்ததைப் போல இருந்தது.

தென்னை ஓலையைக் கீற்றுகளாகப் பிரித்து நார்க்கட்டில் போல பாடையைப் பின்னியிருந்தார்கள். பூந்தேரின் வாசனை தெருவெங்கும் பரவியிருந்தது.

தெருவெங்கும் மனிதர்களின் தலைகள் குவிய ஆரம்பித்தன. மூன்று மகன்களும் அவர்கள் பிள்ளைகளும் நீர்மாலை எடுத்துக் கிளம்பத் தயாராக இருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் சுடுகாட்டை நோக்கி சாவு ஊர்வலம் கிளம்பிவிடும். சரோஜாவும் வாணியும் கொஞ்ச நேரம் அமைதியாக வீட்டுப் படியில் அமர்ந்திருந்தார்கள். செண்டை மேளத்தை ஓங்கியடிக்க ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் சேர்ந்து பிரேதத்தைத் தூக்கி வேனில் வைத்தார்கள். மீண்டும் இருவரும் ஆட்டத்திற்குத் தயாராகி கூட்டத்திற்கு முன்னால் போனார்கள். உடலை வேனில் ஏற்றியதும் கூட்டம் திமிறிக்கொண்டு நகரத் துடித்தது. போகிற வழியில் மீண்டும் போதை ஏற்றிக் கொண்டவர்கள் துள்ளாட்டம் போட ஆரம்பித்தார்கள்.

சரோஜாவும் வாணியும் ஆட ஆரம்பித்ததும் அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் நெரித்துக்கொண்டு நின்றது. அதில் ஒன்றிரண்டு பேர் சரோஜா, வாணியருகில் நின்று ஆடவும் நெருக்கவும் ஆரம்பித்தார்கள். பாடை வேன் நகர்ந்து போகப் போக அவர்களது தொந்தரவு அதிகமாகியது.

திடீரென எல்லாரும் சேர்ந்துகொண்டு சரோஜாவையும் வாணியையும் நெருக்க ஆரம்பித்தார்கள். யாரும் எதிர்பாராதபோது ஒருவன் வாணியின் மார்பினைப் பிடித்துத் திருகினான். இன்னொருவன் அவளது தோளில் உதட்டை வைத்தான். சரோஜா கோபத்தோடு திரும்பி, அவளை ஆட வேண்டாம் என்று சொல்லி தன்னோடு அணைத்துக்கொண்டாள். அவள் அணைத்துக்கொண்டதைப் பார்த்த குடிகாரர்கள் சரோஜாவின் மேல் விழுந்து இறுக்க ஆரம்பித்தார்கள். இருவரும் ஆடாமல் கூட்டத்தை விட்டு வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அதற்குள் சரோஜாவின் உடலையும் பதம்பார்த்து விட்டார்கள்.

வாகனம் போய்ச் சேர மாலை 4 மணி ஆகிவிட்டது. அவர்கள் ஒரு நாளும் இப்படிக் கசங்கியது இல்லை. ஓசிப் போதையில் நல்ல பிள்ளைகள்கூட ஆடாத ஆட்டம் ஆடித் தீர்த்தார்கள். மேளக்காரர்களையும் புண்ணாக்கி விட்டார்கள். இனி அவர்களால் மூன்று நாளைக்கு எழுந்திருக்க முடியாது. சரோஜாவும் வாணியும் ஒரு வழி ஆகி, வீட்டிற்குத் திரும்பி மேக்கப்பைக் கலைக்க இடம் தேடி, ஒரு வீட்டுக்கு ஒதுக்குப்புறத்தில் கலைத்து உடை மாற்றிக் கொண்டார்கள். எங்கோ ஒளிந்துகொண்டிருந்த செட்டுக்காரன் அப்போதுதான் கண்ணில் பட்டான்.

நேரம் ஏறிக்கொண்டிருந்தது. இன்னும் சுடுகாட்டில் இருந்து வீட்டுக்காரர்கள் வந்த பாடில்லை. தீமூட்டிவிட்டு சுடுகாட்டை விட்டு, மாலை 6 மணி ஆகியும் ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை.

மயானத்திலிருந்து வந்த ஒன்றிரண்டு ஊர்க்காரர்கள், ‘அண்ணன் தம்பிகளுக்குள்ள சொத்து பிரிக்கணும்னு சொல்லி பேச்சு வார்த்தை நடந்து சண்டையாகிப்போச்சாம்’ என்றார்கள். ஒரு வழியாக இரவு 8 மணி அளவில் டார்ச் வெளிச்சத்தில் வீட்டுக்கு வந்தார்கள். ‘இன்னும் மேளம், கரகம், செண்டை, வானவேட்டு ஆட்களுக்குக் கணக்கு முடிக்கணும்’ என்ற போது, ‘தாய்மாமாக்கள் சுருணை வைத்த பின்னேதான் எழவுக்கணக்கு முடித்துப் பணம் கொடுப்பது வழக்கம்’ என்று ரெண்டு தாய்மாமன் பிள்ளைகளைக் காட்டி ‘இருக்கும் தம்பிகள், பாகத்துக்கு உறுதி சொல்லிவிட்டு கணக்கு முடிங்க’ என்றபோது எதுவும் முடிவுக்கு வர முடியவில்லை.

செட்டுக்காரன் எங்கெங்கோ ஓடிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. எந்தப் பணமும் கை வந்து சேரவும் இல்லை. சரோஜாவுக்கு ஒரு வழியும் தெரிந்தபாடில்லை. இன்னும் நேரமானால் ஊருக்குப் போக பஸ் கிடையாது. போகும்போது கார் கொடுப்பார்களா என்று சொல்ல முடியாது. சண்டை எப்போது தீர்ந்து எப்போது சம்பளம் வாங்கி வீட்டுக்குப் போக என்றாகிவிட்டது. சரோஜா பணம் கேட்கச் செட்டுக்காரனை அழைத்துக் கொண்டு போனபோது, சாவு வீட்டுக்காரர்கள் அசிங்கமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

``இந்தா பாருங்க. நாங்களே சங்கடத்துல கிடக்கோம். ஆட்டக்காரங்க பெருசா ஊருக்குப் போவணும்னு துடிக்கிறீங்க. கூப்பிட்டா வந்து படுக்கிற மூதிகளுக்கு இப்ப என்ன அவசரம் வாழுதாம்’’ என்றார்கள்.

சரோஜா, ``வீட்டுல அம்மா சாப்பிடாம இருக்கும். ராத்திரி போயி சாப்பாடு செஞ்சி கொடுக்கணும்’’ என்று சொன்ன போது பெரியவர் சிரித்தார்.

``இந்தா பாருங்க. அம்மா செத்த ஊடுன்னு பாக்கேன். இல்லாட்டி நடக்குறதே வேற. ராத்திரி இங்கே படுத்து எந்திரிச்சி பணம் வாங்கிக்கிட்டுப் போங்க. இப்போம் என்ன கொள்ளையா கொண்டு போகப் போவுது’’ என்றார்கள். இனிமேலும் அங்கு நிற்க ஒன்றுமில்லை. செட்டுக்காரனிடம், ``நீ பணம் வாங்கிட்டு வந்து சேர்’’ என்று சொல்லிவிட்டு பையைத் தூக்கிக்கொண்டு வாணியோடு கிளம்பினாள்.

ஊர்க்காரர்களிடம் சொல்லி ஆட்டோ பிடித்து வல்லநாடு முக்கு வரை வந்து, அங்கிருந்து பேருந்து ஏறி வீட்டுக்கு நடந்து வரும்போது வாணி மெதுவாகச் சொன்னாள்.

``அக்கா, இந்தச் செட்டுக்காரன் சொல்றான்னு சாவு ஊட்டுக்கு ஆடப்போனது போதும்க்கா. இனிமே போவ வேணாம்கா’’ என்றாள். சரோஜா வாணியைப் பார்த்து இயலாமையான சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.

``ஏட்டி, உனக்கு அவனுவ அமுக்குனதுல உடம்பு ஏதும் வலிக்காடி’’ என்றாள் சரோஜா.

``அதெலாம் ஒண்ணுமில்ல அக்கா. இதுக்கு மேலே எம்புட்டையோ பாத்துட்டோம். நீங்க வீட்டுக்குள்ள போங்க. நா வீட்டுக்குப் போய் சாப்பாடு செஞ்சி எடுத்துட்டு வாரேன்க்கா’’ என்று சொல்லிவிட்டு அவள் வீட்டை நோக்கிப் போனாள். சரோஜாவுக்கு உடல் கனத்து ஏதோ செய்வது போல இருந்தது.

``ஏண்டி, கோயில் கொடை அதுக்குள்ளயா முடிஞ்சிது?’’ என்று கேட்டாள் அம்மா.

``ஆமா, எல்லா எழவும் முடிஞ்சு போச்சி’’ என்றாள் சரோஜா கோபமாக. அதற்கு மேல் பேச விரும்பாமல் படுக்கையில் சரிந்தாள்.

எவனோ அடிவயிற்றில் விரல்களால் அழுத்தித் திருகிக் கிள்ளியது கடுமையாக வலிக்க ஆரம்பித்தது.