தல்வார் டவரின் தரை தளத்தில் ஆரஞ்ச் டிவியின் சிறிய ஸ்டுடியோ ஒன்று இருந்தது. சேனலின் பெரிய நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு ஏவிஎம், பிரசாத், ஈவிபி என பெரிய ஸ்டுடியோக்களில் உள்ள அரங்கங்களில்தான் நடக்கும். சின்ன சின்ன பட்ஜெட் ஷோக்கள், நேர்காணல்கள் ஆரஞ்சு டிவியில் இருக்கும் சின்ன ஸ்டுடியோவில் நடப்பதுண்டு. அதுத்தவிர பணியாளர்களின் கூட்டங்கள் பெரும்பாலும் அங்குதான் நடக்கும். அதிகாரிகளின் மீட்டிங் கான்ஃபிரன்ஸ் அறையில் என்றால் ஊழியர்களின் கூட்டங்கள் பெரும்பாலும் அந்த ஸ்டுடியோவில்தான் நடக்கும்.
அலுவலகத்தில் இருக்கும் ஆட்கள் மொத்தமும் அந்த ஸ்டுடியோவில் கூடியிருந்தார்கள். நகைச்சுவை கலாட்டா என்று காமெடி நடிகர்களின் புகைப்படங்களால் நிரம்பி இருக்கும் செட் ஒன்று ஸ்டுடியோவில் இருந்தது. மேடையில் தாட்சா அமர்ந்திருக்க, மார்க்ஸ் அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தான். எதிரில் இறுகிப்போன முகத்துடன் அனைவரும் நின்றிருந்தார்கள். அந்த இடம் முழுவதும் கவலை கலந்த அமைதியில் இருந்தது. அதற்கு சற்றும் பொருந்தாமல் செட்டில் வடிவேலுவின் புகைப்படம் அவர்களை பார்த்து சிரித்தபடி இருந்தது.
அந்த இடத்தில் கவிழ்ந்திருந்த கனத்த மெளனத்தை லைட்மேன் ராஜேந்திரன் முதலில் உடைத்தார்.
“எனக்கு ஓகேதான் மார்க்ஸ். நான் கிளம்பறேன்…”
“அண்ணே நீங்கதான்னே இந்த ஆபிஸ்லயே சீனியர்” என மார்க்ஸ் ஆதங்கமாகச் சொன்னான்.
“ஆமாப்பா... அதனாலதான் நான் கிளம்பறேன்னு சொல்றேன். இன்னும் எனக்கு சர்வீஸ் ஒரு வருஷம்தான். அதான் ஒரு வருஷ சம்பளத்தை முன்னாடியே தர்ரேன்றானுங்களே... எனக்கு லாபம்தான். சம்பளமும் கிடைக்குது ஒரு வருஷம் லீவும் கிடைக்குது.”
அனைவருக்கும் அது நியாயமாகப்பட்டது.
“அப்ப நானும் கிளம்புறேன்…” கேமராமேன் ராஜன் கைகளைத் தூக்கினான்.
“இல்லப்பா... இப்பலாம் கேமராவை நேரா வெச்சாலே இவரு அந்த காலத்து ஆளுன்றானுங்க... கேமராவ தோள்ல தூக்கி வச்சுகிட்டு சர்ரு புர்ருன்னு ஆட்டுனா தான் ஸ்டைலுன்னு ஆயிடுச்சு... நமக்கு இந்த கேமரால கிரைண்டர் ஓட்டுறது எல்லாம் செட்டாவாது... இந்த ஒரு வருஷ சம்பளம் கிடைச்சா ஊர்ல இருக்கிற பழைய வீட்ட திருத்திட்டு அங்கயே போயி செட்டிலாயிரலாம்னு பாக்குறேன்...”
“அப்ப வேலைன்னே!” என்றான் மார்க்ஸ்.
“பொண்டாட்டி டீச்சரா இருக்கு... அந்த சம்பளம் தாரளமாப் போதும். அதை பிக்கப் டிராப் பண்ணிகிட்டு டிரைவரா வாழ்ந்திர வேண்டியதுதான்.”
எதையுமே கிண்டலாகச் சொல்லிதான் ராஜனுக்குப் பழக்கம். அந்த வருத்தமான சூழ்நிலையிலும் அவரது பேச்சு பலருக்குப் புன்னகையை வரவழைத்தது.
மார்க்ஸ் கையில் இருக்கும் பேப்பரில் அவரது பெயரைக் குறித்துக் கொண்டான்.
“மார்க்ஸ்… எனக்கும் ஓகேதான்…” என்றாள் கலை.
“இல்ல மார்க்ஸ்... இந்த பணம் இருந்தா வீட்டுக்காரரை சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டுருவேன். அப்புறம் ஏரியாவிலேயே ஆறாயிரம், ஏழாயிரத்துக்கு ஒரு வேலையை பார்த்துகிட்டா அலைச்சல் மிச்சம். புள்ளையும் பார்த்துக்கலாம். மீஞ்சூர்ல இருந்து எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடிச்சு சென்ட்ரல் வந்து அங்க இருந்து ஷேர் ஆட்டோ எடுத்து இங்க வந்து… வொர்த்தில்ல மார்க்ஸ்...”
மார்க்ஸ் அதை ஆமோதிப்பது போல தலையாட்டினான்.

“என்னையும் சேர்த்துக்கோ” என்றாள் ஆனந்தி.
“நல்லா யோசிச்சுகுங்க ஆனந்தி…”
“இல்லப்பா வீட்டுக்காரர் ரொம்ப நாளா வேலைக்குப் போக வேண்டாம்னுதான் சொல்லிட்டு இருக்கார். நான்தான் பழகின இடம் விட முடியலயேன்னு வந்துட்டு இருந்தேன். என் டிப்பார்ட்மென்ட்ல தனியா வேலை செய்றது எனக்கும் கடியாதான் இருக்கு… நானும் கிளம்பறேன். சந்தோஷமாத்தான் சொல்றேன்.”
“வேற ஏதாவது பிளான் இருக்கா” என அக்கறையாக மார்க்ஸ் கேட்க, “ஃபேமிலி பிளான்தான். பிள்ளையைப் பார்த்துக்க ஆள் இல்லாமதான் நாலு வருஷமா தள்ளி போட்டுகிட்டு இருக்கோம். இந்த வருஷம் ஆரஞ்சு டிவி புண்ணியத்துல ஒண்ணு ரிலீஸ் பண்ணிடவேண்டியது தான்”.
அனைவரும் சிரித்தனர். ஆனந்தி எப்போதும் இப்படித்தான். ஒளித்து மறைத்து எதையும் பேசமாட்டாள். அவர்கள் பணிநீக்கத்தை முடிவாகப் பார்க்காமல் வேறு ஒரு விஷயத்துக்கான தொடக்கமாகப் பார்க்கத் துவங்கியிருந்தார்கள் என்பது மார்க்ஸுக்குப் புரிந்தது.
வேலை போயிடுச்சு என வேதனையாக சொன்னவர்கள், 'சோனாமுத்தா உனக்கும் போச்சா' என வேடிக்கையாக பேசும் அளவுக்கு தங்களை அவர்கள் தயார்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.
“மார்க்ஸ் இந்தப் பணம் வந்தா பொண்டாட்டி கையில குடுத்து வீட்டைப் பார்த்துக்க சொல்லிட்டு ஒரு வருஷம் சினிமாவுக்கு ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்” என்றான் ரத்னம்.
“மார்க்ஸ் உனக்கு தான் MDTV-யில ஆள் இருக்கே... என்ன அங்க கோத்து விடுறியா? எனக்கு நியூஸ்ல வேலை செய்யணும்னு ஆசைப்பா” என்றார் கேமராமேன் முருகன்.
“உங்களை எல்லாம் தங்கமா எடுத்துப்பாங்க… இப்பவே பேசுறேன்!” எனத் தனது செல்போனை எடுத்து டயல் செய்தான்.
தாட்சா சின்ன வருத்தத்துடன் அமைதியாக அமர்ந்தபடி அங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வரிசையாக முத்து, மணி, சாய் என அனைவரும் தாங்களும் கிளம்புவதாகச் சொன்னார்கள். மாத வருமானத்தில் வரவும் செலவும் சரியாக இருக்கிற வாழ்க்கையில் ஒரு வருட சம்பள முன்பணம் என்பது பலருக்கு நம்பிக்கையைத் தருவதாக இருந்தது. நம்மால் தவிர்க்க முடியாத விஷயங்கள் நடக்கும்போது அதை கண்ணீரோடு எதிர்கொள்வதை விட புன்னகையுடன் எதிர்கொள்ளலாம் என்கிற மனநிலை நிறைய பேருக்கு வந்திருந்தது.
“ராஜி, நீங்க ஷெட்யூலிங் டிபார்ட்மென்ட்டுக்கு வந்துடுங்க. லட்சுமி நீங்க புரோகிராமிங்” என்றான் மார்க்ஸ்.
“எனக்கு என்னப்பா தெரியும் புரோகிராமிங்ல…” என்றாள் லட்சுமி.
“எல்லோரும் என்ன டிவிக்கு படிச்சிட்டா புரோகிராமிங்ல இருக்காங்க. முக்கால்வாசி பேரு இன்ஜினீயரிங் முடிச்சவங்கதான். செளந்தர் எம்எஸ்சி கெமிஸ்ட்ரி... என்ன பண்றாரு? டான்ஸ் ஷோல கெமிஸ்ட்ரி பத்தலைன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு...”
ஆனந்தி வாய்விட்டு சிரித்தாள்.
“ஏகப்பட்ட பாம்பேகாரனுங்க வந்திருக்கானுங்க. உங்க இந்திய வச்சி அந்த சேட்டுங்களை சமாளிக்கலாம்” என்றான் மார்க்ஸ்.
“நீ சொன்னா சரி மார்க்ஸ். இப்போதைக்கு வேலை முக்கியம் அவ்வளவுதான்…” என பெருமூச்சுவிட்டாள் லட்சுமி.
“பார்த்துக்கலாம் விடுங்க…” என்றவன் பேப்பரை தாட்சாவிடம் நீட்டினான்.
“தாட்சா அவங்க கேட்ட 60 பேர் லிஸ்ட் ரெடி. ஒரு சின்ன விஷயம் செட்டில்மென்ட் செக்கை மட்டும் இன்னைக்கே கையோட கொடுக்க சொல்லுங்களேன்!”
தாட்சா யோசித்தவள், “முயற்சி பண்ணி பார்ப்போம்” என போனை எடுத்தாள்.
“பிரசாத் அவங்க கேட்ட 60 பேர் லிஸ்ட் ரெடி. ஒரு சின்ன விஷயம்... அவங்களோட செட்டில்மென்ட் செக்கை மட்டும் இன்னைக்கே கொடுத்திட சொல்றீங்களா?''
அமைதியாகக் கேட்ட தாட்சாவின் முகம் ஏமாற்றமாக மாறுவதை பார்த்த மார்க்ஸ், “தாட்சா ஒரு நிமிஷம் போனைக் குடுங்க…” என வாங்கியவன், “பிரசாத் சார்... செக் இன்னைக்கே வேணுன்னு சொல்லுங்க!” என்றான்.
"...................................''
“டெர்மினேஷன் லெட்டர் மட்டும் இன்னைக்கே குடுக்க தெரிஞ்சுது இல்லை அப்புறம் என்ன? அக்கவுன்ட்ஸ் டிப்பார்மென்ட்ல கண்டிஷனா சொல்லுங்க சார். எவ்வளவு லேட்டானாலும் நம்ம ஆளுங்க இருந்து வாங்கிட்டு போவாங்க!”
தாட்சா அவன் பேசுவதை பார்த்தபடியே இருந்தாள்.
“அப்படி ரெண்டு நாள் ஆகும்னா இன்னொரு 15 நாள் சம்பளம் சேர்த்து கொடுக்க சொல்லுங்க… அது ஓகேவா?”
மறுமுனையில் பிரசாத் என்ன பேசினான் என்பதை தாட்சாவால் யூகிக்க முடியவில்லை.
“சரி சரி… லிஸ்ட் ரெடி… மேடம் கொண்டு வந்து தருவாங்க…” என போனை கட் பண்ணியவன் தாட்சாவிடம் போனைக் கொடுத்தான்.
“என்ன சொல்றான் பிரசாத்?”
“இன்னொரு 15 நாள் சம்பளம்னு சொன்னதும் செக்கை உடனே ரெடி பண்றேன்னு சொல்றேன். அவன் என்னைக்கு நமக்கு நல்லது யோசிச்சு இருக்கான்!” எனச் சொல்ல அனைவரும் சிரித்தனர்.
மார்க்ஸ் அனைவரையும் பார்த்து, “இங்க பாருங்க… இப்படி ஒரு விஷயம் நடக்கும்ன்னு யாரும் எதிர்பார்க்கல. நடந்திருச்சு. அதுக்காக கண்ண கசக்கிக்கிட்டு போகணும்னு அவசியம் இல்ல. தைரியமா சந்தோஷமா போகலாம். சேனல்கள் கொட்டி கிடக்குது. வித்தைக்காரனுங்களுக்கு எங்க போனாலும் மரியாதை. வெளிய போனதும் நம்ம உறவு முறிஞ்சிடுச்சுன்னு எல்லாம் யாரும் நினைக்காதிங்க. எப்ப வேணா எனக்கு போன் பண்ணலாம்... என்ன பிரச்னைன்னாலும் நாங்கதான் முதல் ஆளா வந்து நிப்போம்.”
கூட்டத்தில் யாரோ கை தட்டினார்கள்.

“இன்னைக்கு ராத்திரி மொட்டைமாடில ஒரு ஃபேர்வல் பார்ட்டி டின்னரோட...” என்றான் மார்க்ஸ்.
சரக்கு… என யாரோ கேட்க, “கொடுத்திட்டா போச்சு… மேடம் அதுக்கும் ஒரு பெர்மிஷன் மட்டும் வாங்கிடுங்க” என்றான் மார்க்ஸ்.
“சாயங்காலம் 6 மணி... மொட்டை மாடி... ஆடுறோம், பாடுறோம், கொண்டாடுறோம்.. யாரும் கிளம்பிடாதிங்க… மாமா லேட்டாகுன்னு இப்பவே அத்தைக்கு போன் பண்ணி சொல்லிரு!” கணேசன் மாமா உற்சாகமாக தலையாட்டினார். 12 மாத சம்பளத்தைவிட தண்ணி பார்ட்டிதான் இந்த பேக்கேஜில் அவருக்குச் சிறப்பான அம்சமாகத் தெரிந்தது.
அனைவரும் துக்கத்தை ஒரு கணம் மறந்து `ஓ' என கூச்சலிட கூட்டம் கலையத்தொடங்கியது.
“பாண்டியன்...” என மார்க்ஸ் கூப்பிட, பாண்டியன் ஓடி வந்தான்.
“60 பேரோட பேரு போட்டு ஒரு மொமன்ட்டோ ரெடி பண்ணு. நம்ம சேனல் லோகோ எல்லாம் போட்டிருக்கணும். பார்ட்டிக்கு முன்னாடி வேணும். நமக்கு ஷீல்ட் பண்ற சகாயத்துகிட்ட பேசு. பள்ளிக்கூட புள்ளைங்களுக்கு கொடுக்குற மாதிரி கப்பை வாங்கிட்டு வந்தேன்னா கொன்னுடுவேன். பார்க்க டீசன்ட்டா இருக்கிற மாதிரி பண்ண சொல்லு!”
“நான் பார்த்துக்கிறேன் சீஃப்…” என பாண்டியன் நகர்ந்தான்.
“வினோ… நம்ம சசி கிட்ட கேமரா இருக்குல்ல…”
“ஆமா சீஃப்”
“போட்டோ அவன்தான் எடுக்கணும்னு சொல்லு. குடிச்சிட்டு மட்டையாயிரக்கூடாது. பார்த்துக்கோ...”
“டன்” என வினோ ஓடினான்.
கலை, தாட்சா அருகில் வந்தாள்.
“மேடம் மூணு மாச சம்பளத்தோட முடிச்சுவிட்டிருப்பாங்க… 12 மாசம் செட்டில்மென்ட் வாங்கி கொடுத்துட்டீங்க… இப்பதான் எனக்கு தைரியம் வந்த மாதிரி இருக்கு…” என கண்கலங்கினாள்.
தாட்சா திரும்பி மார்க்ஸைப் பார்த்தாள்.
“உனக்கு கஷ்டமா இல்லையாடா மார்க்ஸ்…”
“கம்பெனிக்கு எதிரா கேஸ் எல்லாம் போட்டு பார்க்குறதுன்னா போட்டு பார்த்திரலாம். ஆனா, 60 குடும்பத்தைப் பணயமா வெச்சிக்கிட்டு அதைப் பண்ணக்கூடாதுன்னுதான் விட்டுட்டேன்.”
தலையை மெல்லமாக ஆட்டிய தாட்சா, ஏதோ நினைவுக்கு வந்தவளாக,
“டேய் இன்னைக்கு டின்னர் செலவு என்னோடது…”
“சரக்கு செலவு என்னோடது….”
“டேய்.... உன்னோட ஒரு மாச சம்பளம் போகும்…”
“என்ன அனுப்புறப்ப 12 மாச சம்பளம் குடுப்பாங்கல்ல... அதை 11 மாசம்னு நினைச்சுக்கிறேன்” என மார்க்ஸ் சிரித்தான்.
தாட்சாவும் அவன் தோளை தட்டி சிரித்தாள்.
ஆட்கள் ஸ்டுடியோவில் இருந்து கலைந்து கொண்டிருக்க ஸ்டுடியோவின் சற்று வெளிச்சம் குறைவான பகுதியில் நின்று கொண்டிருந்த ஏஞ்சல் அவள் அருகே நின்று கொண்டிருந்தவர்களிடம் சொன்னாள்...
“வாங்க போலாம்...”
“எங்க?” என ஒருவன் கேட்க...
“தலையோட கதை முடிஞ்சுது... புது தலைவியைப் பார்க்கப் போலாம்!”
- Stay Tuned...