Published:Updated:

யூனியன் லீடரா... லீடரா... மார்க்ஸ் யார்?! - இடியட் பாக்ஸ் - 6

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

யூனியன் லீடரா... லீடரா... மார்க்ஸ் யார்?! - இடியட் பாக்ஸ் - 6

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

திவ்யா கான்ஃபரன்ஸ் அறையில் லேப்டாப்பில் மூழ்கியபடி இருக்க... எதிரில் பிரசாத் படபடப்பை மறைத்தபடி யாருடைய வருகைக்காகவோ காத்திருந்தான். கான்ஃபரன்ஸ் அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

திவ்யா தலை நிமிர்ந்து பார்த்தாள். பிரசாத் பரபரப்பானான்.

ஏஞ்சல் முன்னால் வர அவளுக்குப் பின்னால் ஆண்களும் பெண்களுமாக ஒரு இளம் கூட்டம் உள்ளே நுழைந்தது.

எல்லோருமே மிக நேர்த்தியாக உடை அணிந்திருந்தார்கள்.

ஏஞ்சல் கையில் இருந்த பூங்கொத்தை திவ்யாவிடம் நீட்டினாள்.

“வெல்கம் திவ்யா!”

“தேங்க்யூ” என திவ்யா புன்னகையுடன் பூங்கொத்தை வாங்கிக்கொண்டபடி அவர்களைப் பார்த்து ஸ்நேகமாகப் புன்னகைத்தாள்.

“நான் ஏஞ்சல். எக்ஸிகிக்யூட்டிவ் புரொடியூசர்” என்று சொன்னவளுக்கு வயது 25 அல்லது 26 இருக்கும். மாநிறம்... நல்ல உயரம்.

பார்த்தவர்களை ஒரு கணம் கட்டிப்போடுகிற அழகு அவளுடையது. பளிச்சென அவள் சிரித்தபோது திவ்யாவுக்கு அவளை எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது.

“நீங்க ஆன் ஸ்கிரீன்ல வந்திருக்கீங்களா? உங்க முகம் ரொம்ப பழகுன முகமா இருக்கு” என சந்தேகமாக திவ்யா கேட்க ஏஞ்சல் ஆச்சர்யமாகச் சிரித்தாள்.

“நான் பேஸிக்கலி ஒரு மாடல்... நம்ம சேனல்ல ஆங்கரிங் எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். நிறைய விளம்பர படங்கள் நடிச்சிருக்கேன். இரண்டு படங்கள் கூட நடிச்சிருக்கேன். இப்ப எதுவும் இல்ல... இங்க ஃபுல் டைம் எம்ப்ளாயியா இருக்கேன்!”

“பிளீஸ் உட்காருங்க” என்றாள் திவ்யா.

“இது மனோன்மணி, ஸ்கிரிப்ட் ரைட்டர். இது தனபால், சீனியர் புரொடியூசர், இது குரு, புரொடியூசர், இது ரஞ்சித், அசிஸ்டென்ட் புரொடியூசர்... இவங்க எல்லாம் என்னோட டீம்.”

சினிமாவில் புரொடியூசர் என்றால் பணம் போடுபவர். ஆனால் டிவி சேனல்களைப் பொறுத்தவரை புரொடியூசர் என்றால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் என்று அர்த்தம்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“சொல்லுங்க...” என்றாள் திவ்யா.

“மார்க்ஸ் எங்க சார்பா உங்கக்கிட்ட ஏதாவது பேசினா அதை நீங்க எங்களோட கருத்தா எடுத்துக்க வேணாம். நாங்க தனி டீம்... எங்களுக்காக முடிவு எடுக்கிற அதிகாரம் மார்க்ஸுக்கு கிடையாது...” என்று படபடத்தாள் ஏஞ்சல்.

பிரசாத் அவள் பேசப்பேச அதை எல்லாம் ஆமோதிப்பது போல தலையாட்டியபடியே இருந்தான்.

“நீங்க எல்லாருமே மார்க்ஸுக்குத்தான ரிப்போர்ட்டிங்..?” என திவ்யா யோசனையாகக் கேட்க...

“டெக்னிக்கலா அப்படித்தான்... ஆனா எங்களுக்கு மார்க்ஸைப் பிடிக்காது. அதை உங்கக்கிட்ட சொல்லிட்டு போகலாம்னுதான் வந்தோம். அவனைப் பத்தி எங்களுக்கு நல்லா தெரியும். அவன் ஏதாவது குழப்பம் பண்ணா நீங்க மொத்தமா எங்க எல்லாரையும் தப்பா எடுத்துக்க கூடாதில்ல, அதுக்குத்தான் சொல்ல வந்தோம். நாங்க எல்லாருமே புது மேனேஜ்மென்ட்டுக்கு கீழே வேலை செய்ய முழுமனசோட தயாரா இருக்கோம்” என்றாள் ஏஞ்சல்.

அவளை ஆழமாகப் பார்த்த திவ்யா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

“நான் யாரு, என்னனுகூட உங்களுக்குத் தெரியாது. ஆனா மார்க்ஸ் உங்க டீமோட ஹெட். என்கிட்ட மார்க்ஸை விட்டுக்கொடுத்து பேசுறது தப்புன்னு உங்களுக்கு தோணலயா?” என திவ்யா கேட்க, சின்ன புன்னகையுடன், உறுதியான குரலில் ஏஞ்சல் பேச ஆரம்பித்தாள்.

“உங்களை எனக்கு இப்பதான் தெரியும். ஆனா மார்க்ஸை எனக்கு பல வருஷமாத் தெரியும். அவன் ஈகோதான் அவனுக்கு முக்கியம். அவனை எல்லாம் மாத்தவே முடியாது. அதனாலதான் நாங்க தனியா உங்களைப் பார்க்க வந்தோம்.”

திவ்யாவின் முகம் ஏஞ்சலின் பதிலில் திருப்தியடையவில்லை என்பதைக் காட்டியது. சட்டென உள்ளே புகுந்த பிரசாத்...

"இல்ல திவ்யா... இதை ஏன் இவங்க இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்றாங்கன்னா, மார்க்ஸோட இன் அண்ட் அவுட் இவங்களுக்கு மட்டும்தான் தெரியும்... ஏன்னா They Were in a Relationship.''

பிரசாத் பட்டென அப்படி போட்டு உடைப்பான் என்பதை ஏஞ்சல் எதிர்பார்க்கவேயில்லை.

ஒரு கணம் தடுமாறிய திவ்யா “புரியல" எனப் புருவங்களை உயர்த்த, வேறு வழியில்லாமல் தன்னை சமாளித்துக் கொண்டபடி ஏஞ்சல் இப்போது மெல்லிய குரலில் பேசத்தொடங்கினாள்.

“நானும் மார்க்ஸூம் ரெண்டு வருஷம் காதலிச்சோம். இப்ப எங்களுக்கு பிரேக்அப் ஆயிடுச்சு. நாங்க நல்ல டேர்ம்ஸ்ல இல்ல. அதனாலதான் என்னோட தரப்பை நானே உங்ககிட்ட சொல்லறதுக்காக வந்தேன்” என ஏஞ்சல் சொல்ல, 'என்னடா இது புதுக்கதை' என்பதுபோல ஏஞ்சலைப் பார்த்தாள் திவ்யா.

******************************************

சித்தார்த்மேனன், சூஸன், பிரசாத், மனீஷ் அனைவரும் சித்தார்த்மேனனுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவரது முகத்திலும் ஒரு கடுமையான நாளை எதிர்கொண்ட அலுப்பு தெரிந்தது. அந்த அறை சேனலின் முன்னாள் உரிமையாளர் மகாதேவன் உபயோகப்படுத்திய அறை. நிறுவனம் கை மாறியப்பிறகு அந்த அறை சித்தார்த் மேனனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த அறையின் ஒருபுறம் முழுக்க கண்ணாடி சுவர் இருந்தது. அதன் வெளியே இரவு நேர சென்னை, மின் விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த சேனலின் மிகப்பெரிய அறை அதுதான். நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒருவரது அறையின் நீள அகலங்களை வைத்தே அவரது அதிகாரம் என்ன என்பதை எளிதாகச் சொல்லிவிட முடியும். மேனனுக்கு அடுத்தபடியாய் அந்த சேனலின் பெரிய அறை தாட்சாவினுடையது. அதே தளத்தில் புரோகிராமிங் ஹெட் மார்க்ஸ். HR ஹெட் பிரசாத், சேல்ஸ் ஹெட் அஹமது என இதர துறையின் தலைவர்களுக்காக ஒரே அளவிலான பத்து அறைகள் ஒதுங்கப்பட்டிருந்தன.

சித்தார்த் மேனன் அறையில் அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க... மொட்டை மாடியில் இருந்து பாட்டு சத்தமும் ஏதோ அறிவிப்புகளும் சிரிப்பு சத்தமும் தொடர்ந்து கேட்டபடி இருந்தது.

“என்ன சத்தம் அது?” என்றாள் சூஸன்.

“ஃபேர்வெல்ன்ற பேர்ல கூத்தடிப்பானுங்க மேடம்” என எரிச்சலாக சொன்னான் பிரசாத்.

“நாம மேல போலாமா?” என சித்தார்த்மேனன் கேட்க...

“வேணாம் சார்... எல்லாரும் கடுப்புல இருக்கானுங்க… போதையில யார் எப்படி நடந்துப்பாங்கன்னு சொல்ல முடியாது” என்றான் பிரசாத்.

“அங்க போக வேணாம்.... ஸ்மோக்கிங் ஏரியாவுக்கு போலாம்ல!” என மேனன் கேட்டார்.

“யெஸ் சார்” என பிரசாத் அரைகுறையாகத் தலையாட்டினான். தல்வார் டவர்ஸின் மொட்டை மாடி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஏறக்குறைய முக்கால்வாசி பகுதி ஒரு புறமும், மீதி இடம் மறு புறமும் இருக்கிற மாதிரி ஒரு சின்ன தடுப்பு சுவர் அந்த மொட்டை மாடியை இரண்டாகப் பிரித்திருக்கும். ஏதேனும் விழாக்கள் என்றால் மொட்டைமாடியின் பெரிய பகுதியில் நடக்கும்.

சின்ன பகுதியை நிறுவனங்களின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் புகைபிடிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்வதுண்டு. பில்டிங்கின் வெளியே இருக்கும் டீக்கடைகளில் புகைப்பிடிப்பதை கெளரவ குறைச்சலாக நினைக்கும் அவர்கள் மொட்டைமாடியின் அந்தப் பகுதியை தங்களுக்கான ஸ்மோக்கிங் ஏரியாவாக வைத்திருந்தார்கள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

மொட்டைமாடிக்குச் செல்ல இரண்டு படிக்கட்டுகள் அந்த பில்டிங்கின் இருபுறமும் இருந்தன. ஒருபுறம் சென்றால் விழா நடக்கும் இடம் வரும். மறுபுறம் சென்றால் புகைபிடிக்கும் இடம். இடையில் இருக்கும் சுவர் எவரும் கடக்க முடியாத சீன பெருஞ்சுவர் எல்லாம் இல்லை. எவரும் எளிதாகத்தாண்டி செல்கிற மாதிரியான இரண்டரை அடி சுவர்தான். இரண்டு புறமும் இருந்து மறுபக்கத்தை முழுமையாகப் பார்க்க முடியும். அந்தப் பிரிவினையை யார் எதற்காக செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அந்த சுவர் வெகுநாட்களாகவே இருந்தது.

பிரசாத் மொட்டை மாடிக்கு வரத் தயங்கியதற்குக் காரணம் இருந்தது. பெரும்பாலும் பார்ட்டிகளை அதுவும் குறிப்பாக தண்ணி பார்ட்டிகளை சாதாரண ஊழியர்கள் தங்கள் மனதில் இருப்பவைகளை தங்களுக்கு மேலே இருக்கும் மேனேஜர்களிடம் கொட்டித் தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

“டேய் என் அனுபவம் உன் வயசுடா... MBA படிச்சா உனக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு!”

“ஏண்டா அந்த ஜால்ராவுக்கு ப்ரமோஷன் கொடுத்துட்டு... சின்சியரா வேலை செய்யுற எனக்கு நீ விபூதி அடிக்கிற இல்ல... எனக்கு ஒரு டைம் வரும் அப்ப இருக்கு உனக்கு.''

“நீ வெறும் ஃபைனான்ஸ் மேனேஜர்தான். என்னவோ ஃபைனான்ஸ் மினிஸ்டர் மாதிரி சீன் போடுற... 500 ரூபா கால் டாக்ஸி பில்லுக்காக 5 மாசம் அலையணுமா நான்!” என மேலதிகாரிகளை வறுத்து எடுத்துவிட்டு மறுநாள் காலையில்,

“சாரி சார் நேத்து கொஞ்சம் ஓவராயிடுச்சு... என்னென்னமோ பேசிட்டேன்” என மன்னிப்பும் கேட்டு தப்பி விடுவார்கள். சிலர் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல நடந்து கொள்வார்கள். சிலர், "அப்படியா நான் பேசுனேன்'' என ஆச்சர்யப்பட்டுக் கொள்வார்கள்.

ஆனால், அனைவர் முகத்திலும் பல நாளாக சொல்ல நினைத்ததை சொல்லிவிட்ட திருப்தி தெரியும். முதுகெலும்பை நிமிரச் செய்யும் மருந்தாக ஆல்ஹால் வேலை செய்யும் அதிசயத்தை இதுபோன்ற பார்ட்டிகளில் பார்க்க முடியும்.

அதை விழுங்கவும் முடியாமல் வெளியே சொல்லவும் முடியாமல் மனதுக்குள் பொருமியபடி கடந்து போவதைத்தவிர மேனேஜர்களுக்கு வேறு வழி இருக்காது.

சாதாரண நாட்களிலேயே நிலைமை இப்படி என்றால் 60 பேரை வேலையை விட்டு அனுப்பிய நாள் இன்று. சிக்கினால் சிதைத்து விடுவார்கள் என்பது பிரசாத்துக்கு தெரியும். ஆனாலும் மற்றவர்கள் இருக்கிற தைரியத்தில் அவன் தலையாட்டினான். மும்பைக்காரர்கள் அவனை சொம்பை என நினைத்துவிடக் கூடாதல்லவா? அதனால் போலி தைரியத்தை வர வழைத்து கொண்டு, "போலாம் சார்'' என்றான்.

சித்தார்த் மேனன் மணீஷிடம் “திவ்யாவையும் வரச் சொல்லு!” என்றார்.

******************

அவர்கள் அனைவரும் மொட்டை மாடிக்கு வர… மறுபக்க மொட்டை மாடியில் ஒரே கூச்சலும் பாடலுமாக இருந்தன.

ஒவ்வொரு பேராக உச்சரித்து மேடைக்கு அழைத்து செக்கையும் அவர்கள் பெயர் பொறித்த நினைவு சின்னத்தையும் தாட்சாவும் மார்க்ஸும் கொடுத்தனர். ஒவ்வொருவரும் மார்க்ஸை ஆரத்தழுவுவதும், தாட்சாவுக்கு நன்றி சொல்லி மேடையை விட்டு இறங்குவதுமாக இருந்தனர். ஒவ்வொரு பெயர் உச்சரிக்கும்போதும் பலத்த கைதட்டலும் விசிலுமாக அந்த இடமே கொண்டாட்டமாக இருந்தது.

சித்தார்த்மேனனும் மற்றவர்களும் அதை பார்த்தபடி இருந்தார்கள். "சூஸன், இந்த கம்பெனி உங்களோட எத்தனையாவது டேக் ஓவர்'' எனக் கேட்டார் சித்தார்த் மேனன்.

“அஞ்சாவது...”

“எல்லா இடத்துலயும் ஆளுங்களை அனுப்புறப்ப ரொம்ப சிரமமா இருந்திருக்கும்ல...”

“கண்டிப்பா… ரொம்ப வருஷம் வேலை செஞ்சவங்களை அனுப்புறப்ப கண்ணீரும் கோபமுமாத்தான் இருக்கும்” என மணீஷ் சொல்ல…

“கேரளா டேக் ஓவர்ல ஒருத்தரெல்லாம் கிளாஸை எடுத்து என் தலையில அடிச்சிட்டாரு…” என்றாள் சூஸன்.

சித்தார்த் மேனன் சிரித்தபடி, “நியாயமான கோபம்தானே...”

“யெஸ்... யெஸ்... அடிவாங்குனது நானாச்சே” என சூஸன் சிரிக்க…

“இங்க அப்படி எதுவுமே இல்லை… வெளியே போறவங்க நம்பிக்கையோட சந்தோஷமா வெளியே போறாங்க…” என்றார் சித்தார்த்.

“ஆமா சித்தார்த்... உண்மையை சொல்லணும்னா இதுதான் கில்ட்டி இல்லாத டேக் ஓவர்…” என்றாள் சூஸன்.

“அதுக்கு காரணம் அந்த மார்க்ஸ்தான்னு நினைக்கிறேன்” என்றான் மணீஷ்.

“சார், அவன் ஒரு யூனியன் லீடர் சார்...” என்றான் பிரசாத்.

“இல்ல பிரசாத் அவன் யூனியன் லீடர் இல்ல… அவன் லீடர்….” என மேனன் சொல்ல பிரசாத் முகம் மாறியது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“சார் ஐ திங்க் யூ லைக் ஹிம்” என திவ்யா சொல்ல...

“நோ.. நோ… ஐ லவ் ஹிம்...” எனச் சொல்லி சத்தமாகச் சிரித்தார் சித்தார்த் மேனன்.

“பிரசாத் இந்த பார்ட்டிக்கான செலவை எல்லாம் கம்பெனியே எடுத்துக்க சொல்லுங்க…” என்றார் மேனன்.

“இல்ல சார்... அதை அவங்களே பார்த்துப்பாங்க…”

சித்தார்த் மேனன் திரும்பி பிரசாத்தை பார்க்க, அவரது முகத்தை பார்த்த பிரசாத் சட்டென “யெஸ் சார்…” என்றான்.

“போலாம் சித்தார்த்” என மணீஷ் அழைக்க, நகரப் போன சூஸனின் கையைப் பிடித்து நிறுத்தினாள் திவ்யா.

“இப்படி ஒரு யூனியன் லீடரையெல்லாம் என்னோட டீம்ல வெச்சிக்கிட்டு நான் நினைச்ச மாதிரி சேஞ்சஸ்லாம் என்னால பண்ண முடியாது'' என்றாள் திவ்யா.

“அவன் இந்த கம்பெனியில இருக்க மாட்டான்... போதுமா?” என்றாள் சூஸன்.

“மேனன் சார்தான் என்னோட காட் ஃபாதர். இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்குறேன்னா அது அவராலதான். என்னால அவரை எதிர்த்து எல்லாம் பேச முடியாது…”

“இந்த மார்க்ஸ் மேட்டரை நான் பார்த்துக்குறேன் விடு. அதே 12 மாச செட்டில்மென்ட் வாங்கிட்டு அவன் கிளம்பிருவான் போதுமா!”

திவ்யா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.

பார்ட்டியிலிருந்து சற்று விலகி வந்து மார்க்ஸ் சிகிரெட்டை பற்ற வைக்க, சுவருக்கு மறுபுறம் இருக்கும் சூஸனும் திவ்யாவும் அவன் கண்ணில் பட்டார்கள்.

மார்க்ஸ் கையை உயர்த்தி காட்ட, சூஸனும் உற்சாகமாகக் கையை உயர்த்தினாள். மார்க்ஸ் ஸ்டைலாக வாயில் சிகரெட்டை வைத்தபடி திவ்யாவை பார்த்து புன்னகைத்தான்.

சூஸனின் செல்போன் ஒளிர்ந்தது.

“சூஸன்... அந்த மார்க்ஸ் நம்ம சேனலுக்கு ரொம்ப முக்கியம். என்ன பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது. அவன் வேலையை விட்டு போக கூடாது. திவ்யா - மார்க்ஸ்... பேலன்ஸ்டான காம்போ. ரெண்டு பேரையும் கன்வின்ஸ் பண்ணி ஒண்ணா வேலை செய்யவைக்க வேண்டியது உன் பொறுப்பு!” - போனை கட் செய்தார் மேனன். சூஸனுக்கு லேசாக தலைவலிப்பது போல் இருந்தது.

- Stay Tuned...