மார்க்ஸின் கேள்வியில் இருந்த உண்மைக்கு பதில் சொல்ல முடியாமல் கான்ஃபிரன்ஸ் ரூமில் இருந்த அனைவரும் மெளனமாக இருந்தனர். லேசாகத் தொண்டையை செருமிய சித்தார்த் மேனன், நடுவிரலால் மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி சன்னமான குரலில் பேசத்தொடங்கினார்.
“மார்க்ஸ் அவசரப்பட்டு எமோஷனலா முடிவெடுக்காதீங்க!”
“அதுதான் சார் நானும் உங்ககிட்ட சொல்றேன்…”
சித்தார்த்மேனன் மார்க்ஸைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தார்.
சித்தார்த் மேனனுக்கு வயது நாற்பதுகளின் இறுதியில் இருக்கும். ICE நெட்வொர்க்கின் முக்கியமான மனிதர்களில் அவரும் ஒருவர். எளிமையான அரைக்கை சட்டையும் ஜீன்ஸும் அணிந்திருந்தார். விலை மலிவான சாதாரண போன் ஒன்றை வைத்திருந்தார். காலில் லெதர் செருப்பு. எளிமையான மனிதர் அவர் என்பது அவரது தோற்றத்தில் தெரிந்தது. எதையும் சாதிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் அது குறித்து அலட்டிக்கொள்ளாமல் மிகவும் எளிமையாக, தோற்றத்தில் அமைதியாக இருப்பதுதான் கெத்தின் உச்சகட்டம் என்பது மார்க்ஸின் அபிப்ராயம். மார்க்ஸ் சற்று அமைதியான ஆனால் உறுதியான குரலில் பேச ஆரம்பித்தான்.
“ஒரு கம்பெனியை டேக் ஓவர் பண்றீங்க. யார் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னு கூட தெரியாம, வந்ததும் வராததுமா ஒரு 100 பேரை வேலையை விட்டுத் தூக்குனா என்ன சார் அர்த்தம்?”
“நீங்க உங்களைப் பத்தி மட்டும் பேசுங்க'' என பிரசாத் குறுக்கிட்டான்.
“என்னப் பண்றது... நீங்கதான் பேசணும்... பேசல... அதான் நான் பேசுறேன்!”
“இங்கப் பாருங்க மார்க்ஸ்... ஒரு மாசமா யார் என்னப் பண்றாங்கன்னு எல்லா கிரவுண்ட் வொர்க்கும் பண்ணித் தெளிவா தெரிஞ்சிக்கிட்டுதான் இந்த முடிவை எடுத்திருக்கோம். எல்லோரையும் கிளம்ப சொல்லலையே... 300 பேர் வேலை செய்ற கம்பெனியில 100 பேரைத்தானே அனுப்புறோம். ஒவ்வொருத்தரோட திறமை உழைப்பு எல்லாம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு தான் இந்த முடிவை எடுத்திருக்கோம்!''- மும்பையில் இருந்து வந்திருக்கும் ஹெச்.ஆர் ஹெட் சூசன் முகம் சிவக்க படபடவென ஆங்கிலத்தில் பொறிந்து தள்ளினாள்.
“இல்ல நீங்க அப்படி முடிவு பண்ணல!''
“அது எப்படி நீங்க சொல்ல முடியும்?''
“திறமையைப் பார்த்துத்தான் ஒருத்தரை வேலையை விட்டு தூக்குறீங்கன்னா, நாலு டிரைவரை வேலையை விட்டு தூக்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே… எப்படியும் கம்பெனிக்கு டிரைவர்ஸ் வேணும். இப்ப இருக்கிறவங்களைத் தூக்கிட்டு புதுசா நாலு பேரை சென்னையில் இருந்தே வேலைக்கு எடுக்கிறதால் நீங்க என்ன சாதிக்க போறீங்க?”
சூசன், பிரசாத்தைக் கடுகடுவெனப் பார்த்தாள்.
பிரசாத் மாட்டிக் கொண்ட பாவனையில் அப்படியே ஏதோ சொல்லவந்து தடுமாறினான்.
பிரசாத் கொடுத்த லிஸ்ட்டை சூசன் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறாள் என்பது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. தனது முடிவை விட்டுக்கொடுக்க மனமில்லாமலும், எதிர்த்து பேசும் மார்க்ஸின் மேல் உள்ள எரிச்சலிலும் சூசன், “இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க மார்க்ஸ்…” என்றாள்.
“நான் ராஜினாமா பண்றேன்னு சொல்றேன்…. அவ்வளவுதான்!”
“மார்க்ஸ் உட்காருங்க…” என்றார் சித்தார்த் மேனன். ''இல்ல சார்... நான்...'' என மார்க்ஸ் ஏதோ சொல்ல வர “ப்ளீஸ்” என அவர் புன்னகைத்தார். அந்தப் புன்னகையை மறுக்க முடியாமல் அமைதியாக அமர்ந்த மார்க்ஸ், திரும்பி தாட்சாவைப் பார்த்தான்.
“கொஞ்சம் கூட பயமே இல்லடா உனக்கு...” என்றாள் தாட்சா.
“வேலை கொடுங்கன்னு கேட்குறதுக்குத்தான் தாட்சா பயம் வேணும்... வேலையை விட்டுப் போறேன்னு சொல்றதுக்கு என்ன பயம்!”
தாட்சா முறைக்க, மார்க்ஸ் புன்னகைத்தான்.
எதிரில் இருந்த திவ்யா லேப்டாப்பை பார்ப்பது போல் நடித்தபடி, ஓரக் கண்ணால் மார்க்ஸைப் பார்த்தபடியே இருந்தாள்.
மேனன் குனிந்து சூசன் காதில் மெல்லிய குரலில் ஏதோ சொன்னார். சூசன் கோபமாக ஏதோ சொல்ல வர அவளை சமாதனப்படுத்தும் விதமாக மேனன் ஏதோ சொல்ல, அவள் அரைமனதுடன் தலையை ஆட்டியவள், தாட்சா பக்கம் திரும்பினாள்.
“தாட்சா, மார்க்ஸுக்குப் புரியல... உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். நம்ம கம்பெனில ஹெட் கவுன்ட் ரொம்ப முக்கியம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல நாம ஆட்களை வெச்சிருக்க முடியாது. இப்போதைக்கு இன்னோரு 40 பேரை நம்ம டீம்ல சேர்த்துக்கலாம். ஆனா, அதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது. இந்த 40 பேருக்குக்கூட சித்தார்த், மேல ஸ்பெஷல் அப்ரூவல் வாங்கணும். இருக்குற ஆளுங்களை வேற வேற டிப்பார்ட்மென்ட்டுக்கு மாத்தி போட முடியுமான்னு பாருங்க. வெளிய போற 60 பேர் யாருன்னு நீங்களே முடிவு பண்ணுங்க. அப்புறமா நாம பேசலாம்'' என்றாள் சூசன்.
“ஓகே மேடம்” என பிரசாத் முந்திக்கொண்டுவர,
“இல்ல பிரசாத்... அதை அவங்களே பார்க்கட்டும். உங்களுக்கு வேற நிறைய வேலை இருக்கு” என்றார் சித்தார்த்மேனன்.
“இல்ல சார் நான் ஏன் சொல்றேன்னா...” என்று ஏமாற்றத்தை மறைத்தபடி பிரசாத் ஏதோ சொல்ல வர,
“விடுங்க பிரசாத்... அவங்க ஒரு பிளானோட வரட்டும். அப்புறமா நாம முடிவு பண்ணலாம்” எனப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் சூசன்.
“யெஸ் மேடம்” என பிரசாத் தலையாட்ட, “எல்லோருக்கும் எவ்வளவு காம்பன்சேஷன் சொல்லியிருக்கீங்க...'' மார்க்ஸ் கேட்க, திவ்யா எரிச்சலானது அவள் முகத்தில் தெரிந்தது. மேனன் முகத்தில் மீண்டும் புன்னகை.
“மூணு மாச சம்பளம் மேடம்... அப்புறம் அவங்களுக்கு பி.எஃப், கிராஜுவிட்டி எல்லாம் வரும்” என்றான் பிரசாத்.
“அது அவங்களோட பணம். அவங்க கேட்குறது வேலையைவிட்டு அனுப்புறவங்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு தருவீங்கன்னு கேட்குறாங்க...” பிரசாத் கோபமாக ஏதோ சொல்ல வர சூசன் குறுக்கிட்டாள்.
“மூணு வருஷத்துக்கு மேல இருக்குறவங்க வெளியப் போறதா இருந்தா அவங்களுக்கு 12 மாச சம்பளம் காம்பன்சேஷனா குடுங்க. மத்தவங்களுக்கு 6 மாசம் சம்பளம் குடுங்க...'' என்றாள் சூசன்.
“மேடம்” சில பேர் சேர்ந்து மூணு மாசம்தான் ஆகுது என பிரசாத் ஆரம்பிக்க... “எல்லோருக்கும்தான்” என்றாள் சூசன் தீர்க்கமாக.
“மார்க்ஸ், முதல்ல இதை நீங்க ஸார்ட் அவுட் பண்ணுங்க... அப்புறமா உங்க விஷயத்தைப் பத்தி நாம பேசலாம்” என சித்தார்த் மேனன் புன்னகைத்தார்.

“தேங்க்ஸ் சார்…'' என எழுந்த மார்க்ஸ், திவ்யாவைப் பார்த்து புன்னகைத்தபடியே நகர்ந்தான். தாட்சாவும் அவன் பின்னாலேயே நடந்தாள்.
அவர்கள் இருவரும் அறையை விட்டு நகரும் வரை காத்திருந்த திவ்யா கோபத்தை மறைத்தபடி “மேனன் சார்…” என்றாள்.
“யெஸ் திவ்யா…”
“இந்த மார்க்ஸ் இங்க இருக்கிற வரைக்கும் இந்த சேனல்ல எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாதுன்னு எனக்குத் தோணுது...”
“அப்ப அவனை அனுப்பிடலாம். அதான் அவனே போறேன்னுதான சொல்றான்!'' என்றார் சித்தார்த் மேனன். அவர் குரலில் இருந்த கிண்டல் திவ்யாவுக்குப் புரிந்தது.
“மேனன் சார்…” என அவள் ஏதோ சொல்ல வர சிரித்தார் சித்தார்த் மேனன். திவ்யா மெல்லிய புன்னகையும், உரிமையுமாக மேனனைப் பார்த்தாள்.
“எனக்குத் தெரியும் சார்... உங்களுக்கு அவனைப் பிடிச்சிருக்கு!”
''சே... சே... அப்படியெல்லாம் ஒன்ணும் இல்ல!''
“எனக்குத் தெரியும் சார்... வெளியதான் நீங்க கார்ப்பரேட்... உள்ளுக்குள்ள காம்ரேட்!”
“இது கம்ப்ளெயின்ட்டா, இல்ல காம்ப்ளிமென்ட்டா?” என திவ்யாவின் வார்த்தைகளை ரசித்து சிரித்தபடி சித்தார்த் மேனன் கேட்க, “மார்க்ஸ்னு அவன் பேரை சொன்னதுமே நீங்க அவன் மேல லவ்வாயிட்டீங்க... அப்புறமா அவன் வேலை செய்யறவங்களுக்காகப் பேச பேச நீங்க அப்படியே உருகிட்டீங்க...”
“இல்லம்மா இல்லம்மா... நான் எப்பவுமே பர்சனலையும், அஃபீஷியலையும் குழப்பிக்க மாட்டேன். கம்பெனிக்கு எது சரியோ அதை மட்டும்தான் நான் பண்ணுவேன். நீ கவலைப்படாதே திவ்யா” எனச் சொல்லிவிட்டு எழுந்தவர், “ஒரு ஸ்மோக் பண்ணிட்டு வந்துடறேன் சூசன்” என்றார்.
“நானும் வர்றேன்... 5 நிமிஷத்துல அந்த மார்க்ஸ் என்ன உண்டு இல்லைன்னு பண்ணிட்டுப் போயிட்டான்!” என எழுந்தாள் சூசன்.
திவ்யா எரிச்சலாகி, வழக்கம்போல லேப்டாப்பை பார்க்க ஆரம்பித்தாள். “திவ்யா...” என மெதுவான குரலில் மிகப் பணிவாக அழைத்தான் பிரசாத்.
“இந்த மார்க்ஸ் எப்பவுமே இப்படித்தான்... நாம ரைட்டுன்னா தப்புன்னு சொல்லுவான்... நாம தப்புன்னா ரைட்டுன்னு சொல்லுவான். எங்கேயோ போயிருக்க வேண்டிய சேனல் இவனாலதான் இன்னும் இங்கயே நிக்குது.”
பிரசாத்தின் வார்த்தைகளில் மண்டிக்கிடக்கும் வெறுப்பு திவ்யாவுக்குப் புரிந்தது.
“புரோகிராமிங் டீம்ல இருந்து நாலஞ்சு பேர் உங்களைப் பார்க்கணுன்னு சொன்னாங்க...”
“என்னையா... எதுக்கு?”
“புது புரோகிராமிங் ஹெட்டை அவங்க பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க... அது தப்பில்லையே!”
“நான் இன்னும் பொறுப்பு எடுத்துக்கலையே!”
“அஃபிஷியலா இல்ல... ஃப்ரண்ட்லியா அவங்க உங்களுக்கு ஒரு ஹாய் சொல்லணும்னு நினைக்கிறாங்க!”
கொஞ்சம் யோசித்தவள், “ஓகே... பார்க்கலாம்” என்றாள்.
தன் அறையில், அமைதியாக அமர்ந்திருந்த மார்க்ஸிடம், “டேய்... கலக்கிட்டடா!” என்றாள் தாட்சா.
“நான் என்ன பண்ணேன்?!”
“இவ்வளவு அடக்கம் எல்லாம் தேவையில்ல... 40 பேர் வேலையை காப்பாத்தி இருக்க... வெளியே போறவங்களுக்கு ஒரு வருஷ சம்பளம் வாங்கி கொடுத்திருக்க.. இதையெல்லாம் நான் பண்ணியிருக்கணும்... எனக்குத் தோணாம போச்சு பாரு!"
வருத்தமாகச் சொன்னாள் தாட்சா. “என்ன தாட்சா இதுக்கு போயி ஃபீல் பண்ணிக்கிட்டு... நீங்க இல்லன்னா ஆரஞ்ச் டிவியே இல்லை” என்றான் மார்க்ஸ்.
“அதெல்லாம் இருக்கட்டும். அந்த திவ்யாவைப் பார்த்ததும் சார் கொஞ்சம் ஜெர்க்கான மாதிரி இருந்துச்சே... என்ன கணக்கு?”
“அப்படியா என்ன..?” மார்க்ஸ் மெலிதான வெட்கத்துடன் சிரித்தான்.
“என்ன வெட்கமா.. இதெல்லாம் உனக்கு செட்டே ஆகல ராஜா!''
“இல்ல தாட்சா அந்தப் பொண்ணு ஒரு மாதிரி அழகுதான் இல்ல... பயங்கரமான கண்ணு... என்ன ஸ்டைலு... பாம்பேகாரனுங்களுக்கே உள்ள அந்த திமிரு... சான்ஸே இல்லை!''
“அது பாம்பே பொண்ணு இல்ல ராசா... பாலக்காட்டு பொண்ணு!”
''அட நம்மாளு!''
“என்னடா நம்மாளு... பேசும்போதெல்லாம் தமிழ் தமிழ்ன்றது... சைட் அடிக்கிறதுக்கு மட்டும் கேரள பொண்ணா?”

“பாரதியாரே என்ன சொல்லியிருக்காரு... மொழின்னா தமிழ்... பொண்ணுன்னா சேர நாடு தான்...”
“அப்ப அந்த பொண்ணுகிட்ட வேலை செய்யுறது...” என கிண்டலாக தாட்சா கேட்க...
“ஆ... அது எப்படி? காதல் வேற... கடமை வேற! அது வேற டிப்பார்ட்மென்ட். இது வேற டிப்பார்மென்ட்” என சிரித்தான் மார்க்ஸ்.
“பார்ப்போம்” என்று சொன்னவள் சின்ன பெருமூச்சுடன், ''நம்ம ஆளுங்களைப் பார்த்து இந்த ஆஃபரைப் பத்தி பேசணும் ” என்றாள்.
“ஆமா தாட்சா... எல்லோரையும் ஸ்டுடியோவில அசெம்பிள் ஆகச் சொல்றேன்... பேசிடலாம். நீங்க ஒரு அரைமணி நேரம் கழிச்சு ஸ்டுடியோவுக்கு வாங்க... கரெக்டா இருக்கும்!” என்றான் மார்க்ஸ்.
சட்டென சத்தமாக 'மார்க்ஸ்' என அழைத்தவள், “நான் வேலையை ரிசைன் பண்றேன் மார்க்ஸ்” என்றாள்.
“நானும்தான்... ரெண்டு பேரும் ஒண்ணா வேலையைத் தேடலாம். விடுங்க... பாகுபலியே அரண்மனையை விட்டுப்போகும் போது படைத்தலைவன் ஃபாலோ பண்ண வேண்டியதுதானே!” எனச் சிரித்தான் மார்க்ஸ்.
அவன் நம்பிக்கையும், புன்னகையும் தாட்சாவையும் தொற்றிக் கொள்ள அவளும் புன்னகைத்தாள்!
- Stay Tuned