
- பாலைவன லாந்தர்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
அன்று வியாழன் நினைவிருக்கிறதா இராவுணவில்
மேசையின் மீதிருந்த மாமிசமும் ரொட்டியும் இறுதி உணவென
அவர் அறியாதிருந்தாரென அவர்கள் அறிந்திருந்தனர்
அது அவர்களின் அறியாமை
நீ அந்தக் குடுவையாக இருந்தாய்
மட்கிய சிவப்பு மதுவை உனக்குள் ஊற்றியிருந்தார்கள்
தேவனின் கையால் நீ சரிக்கப்பட்டாய்
தேவனுடைய இதழில் வடிந்த மதுத் துளிகள்
காய்ந்துபோக மறுக்கின்றன
அவை ஒரு பெண்ணின் மச்சங்களாகப் பிறப்பது விதி
கூதிர் காலம் தொடங்கப்போகிறது
தேன்கூட்டைத் தின்னும் பனிக்கரடியின்
உடல் முழுக்க தேனீக்கள் அடைந்துகொள்கின்றன
அவை
மூன்றாம் சாமத்தில் மின்மினிப்பூச்சிகளாகப் பறக்கும்போது
கரடிகள் கூடுகின்றன
மலை ஒளிர்ந்து அழைக்கிறது

வா என
கொண்டாட்டங்களுக்கென நம் இசை இசைக்கிறது
தோலும் எலும்பும் இசைக்கருவி
தட்டித் தட்டி ஆடு
கொண்டாட்டத்திற்கென அவன் அவளை அழைக்கிறான்
பாலைவனத்திலிருந்து எழுந்து வருகிறவள்
கூதிர் காலத்தை அடையும் முன்னமே
உடல் மணலாக உதிர்ந்துபோகிறாள்
பாவம்
கொண்டாட்டத்திற்கென அவன் மது தயாரிக்கிறான்
அவளது கால்களால் மிதிக்கப்பட்ட திராட்சைகளுடன்
கால்களையும் சேர்த்துப் புதைக்கிறான்
பிறை போன்ற மச்சமுள்ள வலது கால்
நட்சத்திர மச்சமுடைய இடது கால்
எண்ணி எண்ணி
நூற்றாண்டுகளுக்குப் பின்
நீ அதைத் தோண்டியெடுத்துக்
கொண்டாடு