Published:Updated:

பறவைக்கார வீடும் பற்றிய நெருப்பும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 32

BedTimeStories
News
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு கிராமத்துல பறவைக்கார வீடு ஒண்ணு இருந்துச்சு. அந்த வீட்ல பறவைகள் கூடு கட்டுவதற்காக நிறைய பொந்துகள் வச்சு கட்டியிருந்ததால அந்த வீட்ல பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. பொதுவா, மனுஷங்க வாழற வீட்டுக்குள்ள சிட்டுக்குருவிகள் மட்டும்தானே கூடு கட்டும். ஆனா, இந்த வீட்ல சிட்டுக்குருவி, கிளி, மைனா, காக்கான்னு பல பறவைகள் கூடுகட்டி வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. காலபோக்குல கிராமத்துவாசிங்க எல்லாரும் அந்த வீட்டை `பறவைக்கார வீடு'ன்னு அழைக்க ஆரம்பிச்சாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அந்த வீட்ல அனு அப்படின்னு ஒரு குட்டிப் பொண்ணு ஒருத்தி இருந்தா. அவளுக்கு பறவைகள்னா ரொம்ப உயிர். பறவைகள் வீட்டுக்குள்ள இருக்கிற நேரத்துல மின்விசிறியைப் போடவே மாட்டா. அதுல மாட்டி பறவைகளுக்கு அடிபட்டுடுமோன்னு பயப்படுவா. பெரிய பறவைகள் இரை தேடி கூட்டை விட்டு வெளியே போறப்போ கூட்டுல இருக்கிற முட்டைகளைப் பத்திரமா பார்த்துப்பா. ஏதாவது, ஒரு பறவை தெரியாம தன் கூட்ல இருக்குற முட்டையை கீழே தள்ளிட்டா, அதை எடுத்து மறுபடியும் கூட்டிலேயே வைப்பா. ஆனா, வீட்டுக்குள்ள கூடுகட்டியிருக்குற பறவைகளுக்கு எக்காரணம் கொண்டும் இரை மட்டும் போடவே மாட்டா. ஏன்னா மனுஷங்க பறவைகளுக்கு இரை போட்டு பழக்கிட்டா, அதுக்கப்புறம் பறவைகள் வெளியே பறந்து போய் தங்களுக்கான இரையைத் தேடாமலே போயிடலாமோன்னு பயந்துட்டுதான் அனு அப்படி நடந்துக்கிட்டா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனா, அம்மா பறவைகள் முட்டைகள் மேல உட்கார்ந்து அடை காத்துகிட்டு இருக்குறப்போ மட்டும் அதுங்களுக்கு தானியம் வைப்பா. இதனால அனுவை அவ வீட்ல குடியிருக்கிற எல்லா பறவைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். அதனால, அந்தப் பறவைகள் தங்களுக்குக் கிடைக்கிற பழங்களையும் கொட்டைகளையும் எடுத்துட்டு வந்து அனுவுக்கு கொடுக்குங்க. அனு சில நேரம் அந்தப் பழங்களையும் கொட்டைகளையும் சாப்பிடுவா. பல நேரம் அதை அந்தப் பறவைகளோட கூட்டிலேயே வச்சுடுவா. இப்படியே காலம் போய்க்கிட்டு இருந்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒருநாள் அனுவுக்கு ஒரு தம்பி பாப்பா பிறந்தான். அவன் ரொம்ப குட்டிக் குழந்தைங்கிறதால பறவைகளைப் பார்த்து பயப்பட ஆரம்பிச்சுட்டான். அதனால அனுவோட அப்பாவும் அம்மாவும் தங்களோட வீட்ல குடியிருக்கிற பறவைகளை எல்லாம் வெளியே அனுப்பிடலாமான்னு டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. இதைக் கேட்ட அனுவுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. எப்படியாவது பறவைகளை வீட்டைவிட்டு அனுப்பாம இருக்கணும்னு அனு கடவுள்கிட்ட வேண்ட ஆரம்பிச்சா. அனுவோட வேண்டுதலை பறவைகளின் தேவதை கேட்டுடுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த தேவதை அனுவோட ஆசையை நிறைவேற்றணும்னு முடிவும் பண்ணிடுச்சு. அதுக்காக அது ஒரு பிளான் பண்ணுச்சு. தன்னோட தோழியான மரங்களின் தேவதைகிட்ட போயி, `நீ எனக்காக ஓர் உதவி பண்ணணும். பறவைக்கார வீட்டு மேல உன்னோட கிளைகளால உரசி உரசி அந்த வீட்ல லேசா நெருப்புப் பிடிக்க வைக்கணும். மத்ததை நான் பார்த்துக்கிறேன்' அப்படின்னு சொல்லுச்சு. மரங்களின் தேவதையும் அதுக்கு சரின்னு தலையாட்டுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

பறவைகளின் தேவதை, அன்னிக்கு ராத்திரி எல்லா பறவைகளும் தூங்கிட்டிருக்கிறப்போ அதுங்களோட கனவுல போய், `நாளைக்கு இந்த வீட்ல நெருப்புப் பிடிக்கப் போகுது. நீங்க எல்லாரும் சேர்ந்து அந்த நெருப்பை அணைக்கணும்'னு சொல்லுச்சு. மறுநாள் பொழுது விடிஞ்சதும் எல்லா பறவைகளும் தங்களுக்கு வந்த கனவைப்பத்தி பேசிச்சுங்க. பேச்சோட முடிவுல இன்னிக்கி நாம யாரும் வெளியே இரை தேடப் போகக்கூடாது. நாமளும் நம்ம குஞ்சுகளும் இன்னிக்குப் பட்டினியா இருந்தாலும் பரவாயில்ல'ன்னு முடிவு பண்ணுச்சுங்க.

நல்ல வெயில் நேரம் வந்ததும், ஏற்கெனவே பேசி வைச்சபடி, பறவைகளின் தேவதை மரங்களின் தேவதையிடம், `பறவைக்கார வீட்டு மேல உரசு'ன்னு சொல்லுச்சு. உடனே மரங்களின் தேவதையும் பறவைக்கார வீட்டு மேல உரசுச்சு. உடனே பறவைக்கார வீட்ல நெருப்பு பிடிக்க ஆரம்பிச்சது. அந்த நேரம் பார்த்து அனுவோட அப்பாவும் அம்மாவும் பக்கத்துல இருக்கிற கடைக்குப் போயிருந்தாங்க. அனுவும் அவ தம்பியும் நல்லா தூங்கிட்டு இருந்தாங்க. நெருப்பு மெள்ள மெள்ள பரவ ஆரம்பிச்சது. அந்த அனலை உணர்ந்ததும் கூட்டுக்குள்ள இருந்த பறவைகள் எல்லாம் வேகமா வெளிய வந்துச்சுங்க. ஆளுக்கு ஒரு பக்கெட்டை எடுத்துட்டு வீட்டுக்கு பின்னாடி இருக்கிற கிணத்தடிக்கு பறந்துபோய், தண்ணி எடுத்துட்டு வந்து வீட்டு மேல ஊத்த ஆரம்பிச்சுதுங்க. ஆனா, நெருப்பு அணையவே இல்ல. பறவைகள் சோர்ந்து போகாம மறுபடியும் மறுபடியும் கிணத்துல இருந்து தண்ணி கொண்டு வந்து நெருப்புல ஊத்துச்சுங்க. நெருப்போட அனல் தாங்க முடியாம சில பறவைகளோட சிறகுகளின் நுனி கருகிப் போச்சு. அப்படியும் பறவைகள் விடாம தண்ணி கொண்டுவந்து வீட்டு மேல ஊத்துச்சுங்க. இது எதுவும் தெரியாம அனுவும் அவளோட தம்பியும் வீட்டுக்குள்ளே தூங்கிட்டு இருந்தாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

இந்த நேரத்துல `பறவைக்கார வீடு பத்தி எரியுது'ன்னு ஊருக்குள்ளே தகவல் வேகமா பரவிடுச்சு. கடைக்குப் போயிருந்த அனுவோட அம்மாவும் அப்பாவும் தங்களோட வீட்டுக்கு ஓடி வந்தாங்க. வந்தவங்க கண்ணுல எரிஞ்சுக்கிட்டிருக்கிற அவங்களோட வீடும் அதை அணைக்க போராடுற பறவைகளும் பட்டுச்சு. அந்த நிமிஷமே அவங்க ரெண்டு பேரும், `இனிமே நம்ம வீட்ல இருக்கிற பறவைகளை வெளியே அனுப்பக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணாங்க. இப்படி அவங்க மனசுல நினைச்சவுடனே, பறவைகளின் தேவதை பறவைக்கார வீட்டு மேல `ப்பூ'ன்னு ஊதுச்சு. அடுத்த நொடியே நெருப்பு அணைஞ்சுபோச்சு. அணைஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா, வீட்டோட ஒரு ஜன்னல்கூட கருகிப் போகாம அப்படியே இருந்துச்சாம்.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.