Election bannerElection banner
Published:Updated:

யானைக்கு மருந்து கொடுத்த வண்ணத்துப்பூச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 29

Butterfly
Butterfly ( Image by Larisa Koshkina from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஓர் அடர்ந்த காட்டுல வயசான ஒற்றை யானை ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. ஒற்றை யானைகள் ரொம்ப கோவமா இருக்கும்கிறதால, மற்ற விலங்குகள் அதுங்க பக்கத்துல போகவே பயப்படுங்க. ஒருநாள் அந்த ஒற்றை யானை நடந்து நடந்து சோர்ந்து போனதால ஓர் இடத்துல அப்படியே படுத்திடுச்சு. ஒருநாள் ரெண்டு நாள் இல்ல, ஒரு வாரம் ஒரே இடத்துலேயே படுத்துக் கிடந்துச்சு அந்த யானை.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
இட்லியா, ஜங்க் ஃபுட்டா... ஜெயிக்கப் போவது யாரு? - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 28

ஒரு நாள் காட்டுக்குள்ள பயங்கரமா மழை பெய்ஞ்சது. மத்த விலங்குகள் மரத்தடிகள்ல ஒதுங்கி நின்னுக்கிச்சுங்க. ஆனா, இந்த ஒற்றை யானையால அப்படிச் செய்ய முடியலை. காத்து, மழையில அப்படியே படுத்துக் கிடந்துச்சு. அதனால அதுக்கு குளிர்க்காய்ச்சல் வந்துடுச்சு. ரெண்டு நாள்ல மழை நின்னுடுச்சு. ஆனா, ஒற்றை யானைக்குக் காய்ச்சல் விடலை. கண்கள்ல கண்ணீர் வழிய பசியோட படுத்துக் கிடந்துச்சு.

மழை நின்னுட்டதால சின்னச் சின்ன பூச்சிகள்ல இருந்து பெரிய விலங்குகள் வரைக்கும் இரை தேட வெளியே வர ஆரம்பிச்சுதுங்க. அதுல பிங்க் கலர் வண்ணத்துப்பூச்சியும் ஒண்ணு. அழகழகான பூக்கள்ல இருந்து தேனைக் குடிச்சிட்டிருந்த அதோட கண்கள்ல காய்ச்சலோட படுத்துக்கிடக்கிற ஒற்றை யானை பட்டுச்சு. மொதல்ல யானையைப் பார்த்து பயந்துச்சு வண்ணத்துப்பூச்சி. அப்புறம் தைரியத்தை வரவழைச்சிட்டு யானைகிட்ட போச்சு. அது காய்ச்சல்ல நடுங்கிட்டிருக்கிறதைப் பார்த்த வண்ணத்துப்பூச்சி, மெதுவா அதைத் தொட்டுப் பார்த்துச்சு. உடம்பு கொதிச்சுட்டிருந்துச்சு. பல நாள்கள் சாப்பிடாததால யானையோட வயிறு ஒட்டிப் போய்க் கிடந்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

யானையோட சூழ்நிலையைப் புரிஞ்சுகிட்ட வண்ணத்துப்பூச்சி குரங்குகள் கிட்டபோய் `குரங்கு அண்ணன்களே ஓர் ஒற்றை யானை பசியோடவும் காய்ச்சலோடவும் படுத்துக்கிடக்கு. நீங்க கொஞ்சம் பழங்கள் பறிச்சுத் தர முடியுமா'ன்னு கேட்டுச்சு. `சரி'ன்னு சொன்ன குரங்குகள் நிறைய வாழைப்பழங்கள் இருக்கிற ஒரு குலையைப் பறிச்சி வண்ணத்துப்பூச்சிகிட்ட கொடுத்துச்சுங்க. அந்தப் பழங்களைத் தன்னுடைய மெல்லிய கால்களால தூக்க முடியாம தூக்கிட்டு வந்து யானையோட பக்கத்துல வெச்சுது வண்ணத்துப்பூச்சி. உடம்பு சரியில்லாத யானையால பழங்களைச் சாப்பிட முடியல.

என்ன பண்றதுன்னு கொஞ்ச நேரம் யோசிச்ச வண்ணத்துப்பூச்சிக்கு டக்குனு ஓர் ஐடியா தோணுச்சு. உடனே அந்தக் காட்டுல இருக்கிற வயசான கரடியைப் போய்ப் பார்த்துச்சு. `கரடி தாத்தா அங்க ஒரு யானைக்குக் காய்ச்சல்ல உடம்பு கொதிக்குது. பாவம் அதால பழங்கள்கூட சாப்பிட முடியல. உங்களால அதுக்கு மருந்து தர முடியுமா'ன்னு கேட்டுச்சு. அந்த வயதான கரடி பிங்க் கலர் வண்ணத்துப்பூச்சியை அழைச்சிக்கிட்டு காட்ல இருக்கிற ஓர் உயரமான மலை மேல போச்சு. அங்க இருந்த பல மூலிகைச் செடிகள்ல காய்ச்சலுக்கான மூலிகைச் செடியைக் கண்டுபிடிச்சு, அதைப் பறிச்சு வண்ணத்துப்பூச்சிகிட்ட கொடுத்துச்சு. அந்த மூலிகைச் செடியை கொண்டுபோய் யானைக்குக் கொடுத்துச்சு வண்ணத்துப்பூச்சி. மருந்து ரொம்ப கசப்பா இருந்ததால யானையால அதைச் சாப்பிட மாட்டேன்னு தலையைத் திருப்பிக்கிச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம அக்கம் பக்கம் பார்த்துச்சு வண்ணத்துப்பூச்சி. அப்போ அந்தப் பக்கமா புலி ஒண்ணு வந்துக்கிட்டு இருந்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
ரோஜாவுக்கும் மல்லிக்கும் நடந்த சண்டை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 27

உடனே வண்ணத்துப்பூச்சி, `புலியம்மா, இந்த யானைக்கு உடம்பு சரியில்ல. மருந்தும் சாப்பிட மாட்டேங்குது. நீங்க கொஞ்சம் இத பயங்காட்டி மருந்தைச் சாப்பிட வைக்கிறீங்களா'ன்னு கேட்டுச்சு. சரின்னு தலையாட்டுன புலி, படுத்துக்கிடந்த யானைகிட்ட வந்து `உர்'னு உறுமிச்சு. யானை பயந்துபோய் `ஆ'ன்னு வாயைத் திறக்க, வண்ணத்துப்பூச்சி டபக்குனு மூலிகைச் செடியை அது வாய்க்குள்ள போட்டு வாழைப்பழத்தைத் திணிச்சிடுச்சு. மருந்து சாப்பிட்ட கொஞ்ச நேரத்துல யானை மெதுவா கண்ணைத் திறந்துச்சு. தன் பக்கத்துல இருக்கிற வாழைப்பழங்களையும் சாப்பிட ஆரம்பிச்சது.

வண்ணத்துப்பூச்சி ஒற்றை யானைகிட்ட `யானை ஐயா உங்களுக்குக் காய்ச்சல் சரியாகிட்டாலும் இன்னும் குளிர் இருக்கு. அதனால, கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோங்க'ன்னு சொல்லுச்சு. யானையும் சரின்னு தலையாட்டுச்சு. ஆனா, குளிர்ல அதோட உடம்பு லேசா நடுங்கிட்டே இருந்துச்சு. யானையோட நடுக்கத்தைப் பார்த்த பிங்க் கலர் வண்ணத்துப்பூச்சி வேகமா பறந்து மயில்கள்கிட்ட போச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

`மயிலக்காங்களே, அங்க ஒரு யானை குளிர்ல நடுங்கிட்டு இருக்கு. நீங்க எல்லாம் அங்க வந்து உங்களோட தோகையால யானையைப் போர்த்த முடியுமா'ன்னு கேட்டுச்சு. மயில்களும் அதுக்கு சம்மதம் சொல்லி வண்ணத்துப்பூச்சி கூடவே வந்துச்சுங்க. சொன்ன மாதிரியே யானையைத் தங்களோட இறகுகளால போர்த்த, யானைக்கு மெல்ல மெல்ல குளிர் குறைய ஆரம்பிச்சது. மெதுவா எழுந்து நின்ற யானை தன் உயிரைக் காப்பாத்தின எல்லா விலங்குகளுக்கும், குறிப்பா தனக்காக மற்ற விலங்குகள்கிட்ட உதவிகேட்ட வண்ணத்துப்பூச்சிக்கும் நன்றி சொல்லிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பிச்சது.

- நாளை சந்திக்கலாம்.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு