Published:Updated:

வாக்கிங் போன குண்டு கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 31

Forest
Forest ( Image by Bingo Naranjo from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு மலை உச்சியில குண்டு கழுகு ஒண்ணு வாழ்ந்து வந்துச்சு. எப்போ பார்த்தாலும் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குறதுதான் அதோட வேலையே. தனக்கான இரையை ரொம்ப தூரம் போய் தேடறதுக்குக்கூட அது சோம்பல்படும்னா பார்த்துக்கோங்க. அதனால, தான் வாழுற மலையில மேய்ஞ்சுக்கிட்டிருக்கிற பிராணிகள்லேயே ஒண்ணை லபக்குனு பிடிச்சு சாப்பிட்டுட்டு, சாப்பிட்ட வாயோட ஈரம் காயுறதுக்கு முன்னாடியே தன்னோட பொந்துக்குள்ள போய் குறட்டை விட ஆரம்பிச்சிடும். இப்படியே சாப்பிட்டு தூங்கி சாப்பிட்டு தூங்கி வாழ்ந்ததால நாளுக்கு நாள் குண்டாகிட்டே போச்சு கழுகு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒரு கட்டத்துல தன்னோட உடம்பைத் தூக்கிட்டு பறக்க முடியாத அளவுக்கு கழுகு குண்டாயிடுச்சு. என்ன செஞ்சு தன்னோட உடம்பைக் குறைக்கிறதுன்னு தெரியாம கவலையோட இருந்த அதுக்கு, அதோட ஃபிரெண்ட் கழுகுங்க டயட் இருக்கச் சொல்லி ஐடியா கொடுத்துச்சுங்க. குண்டு கழுகும் `டயட் இருக்கலாம்'னு முடிவு பண்ணிடுச்சு. ஆனா அதுக்கு என்ன டயட் இருக்கிறது, எப்படி இருக்கிறதுன்னு தெரியல.

அதனால ஒரு போன் கடைக்குப் போயி, கடைக்காரருக்குத் தெரியாம ஒரு ஸ்மார்ட்போனை தூக்கிட்டு வந்துடுச்சு. அதுல எப்படி டயட் இருக்கலாம்னு தேடிப் பார்த்த கழுகு, மொதல்ல அதுக்குப் பிடிச்ச மாதிரியே நிறைய நான்வெஜ் சாப்பிடுற டயட்டை தேர்ந்தெடுத்துச்சு. ஆனா, இந்த முறையும் வழக்கம்போல வயிறு முட்ட சாப்பிட்டுட்டு தூங்கினதால, உடம்பு இன்னும் வெயிட் போட்டுச்சே தவிர, அரை கிலோகூட குறையலை. `ச்சே... இந்த டயட் தப்பு' அப்படின்னு தனக்குத்தானே சொல்லிக்கிட்ட கழுகு அடுத்த டயட்டை கூகுளில் தேட ஆரம்பிச்சது. இந்த முறை காய்கறிகள் மட்டும் சாப்பிடற டயட்டை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிது கழுகு.

ஒருவேளை காய்கறிகளை ஆசை ஆசையா சாப்பிட்ட கழுகு, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு `வெறும் காய்கறிகள் சாப்பிடுறது போரடிக்குது. கொஞ்சம் முட்டைகள் மட்டும் சேர்த்துக்கலாம்'னு யோசிச்சிது. உடனே பக்கத்துல இருந்த மத்தப் பறவைகளோட பொந்துல இருந்த முட்டைகள் எல்லாத்தையும் தூக்கிட்டு வந்து குடிச்சிடுச்சு. எக்கச்சக்க முட்டைகளை உடைச்சு குடிச்சதால, கழுகோட வயிறு ஃபுல்லாயிருச்சு. `இதுக்கு மேல காய்கறிகள் சாப்பிட வயித்துல இடமில்ல. நாளைக்கு சாப்பிட்டுக்கலாம்'னு முடிவு பண்ணிக்கிச்சு. மறுநாள் அந்தக் காய்கறிகளெல்லாம் வாடி வதங்கிப் போய் கிடந்துச்சு. அதைப் பார்த்த கழுகு, `இன்னிக்கும் நோ காய்கறிகள். ஒன்லி முட்டை'னு தீர்மானம் பண்ணிக்கிச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அடுத்த நாள், `ஒரு சேன்ஜ்க்கு பழங்கள் மட்டும் சாப்பிட்டு டயட் இருக்கலாம்'னு முடிவு செஞ்சு, ஒரு பழத்தோட்டத்துக்குப் போச்சு. கடைக்காரருக்குத் தெரியாம செல்போனை எடுத்துட்டு வந்த மாதிரியே, தோட்டக்காரருக்குத் தெரியாம நிறைய பழங்களைப் பறிச்சு ஒரு கூடையில போட்டு வாயில கவ்விட்டு தோட்டத்தை விட்டு வெளியே வந்துச்சு. கழுகு தோட்டத்தைவிட்டு வெளியே வர்றதுக்கும் தோட்டக்காரர் கழுகைப் பார்க்கிறதுக்கும் சரியா இருந்துச்சு. அவ்வளவுதான், தோட்டக்காரர் கையில இருந்த உண்டிகோலால கழுகை மேல டொப்பு டொப்புன்னு கல்லை விட்டெறிஞ்சார். நிறைய கல்லடி வாங்கின கழுகு, வாய்ல வெச்சிருந்த பழங்கள்ல பாதியை கீழ போட்டுட்டு மீதியை மட்டும் தூக்கிட்டு வேகமா பறந்து தன்னோட பொந்துக்கு வந்துடுச்சு.

பொந்துக்கு வந்த கழுகு, `அடடா, நிறைய பழங்கள் கொண்டு வந்திருந்தா பழ டயட் இருந்திருக்கலாம். கொஞ்சம்தானே கொண்டு வந்திருக்கோம். அதனால, நிறைய சர்க்கரைப் போட்டு பழங்களை ஃபிரெஷ் ஜூஸாக்கி குடிச்சிடலாம்'னு முடிவெடுத்துச்சு. ஒரு பெரிய குடுவை நிறைய ஜூஸ், கூடவே நிறைய முட்டைகள், அப்புறம் நான்வெஜ்னு எல்லாத்தையும் ஒரு கட்டுக் கட்டிட்டு, கால்களை ஆட்டிட்டே படுத்துட்டு இருந்துச்சு கழுகு. அந்த நேரம் பார்த்து கழுகோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் வந்துச்சுங்க. `நண்பா, நீ டயட் இருந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கே. அதனால, உனக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து பர்கர் வாங்கிட்டு வந்திருக்கோம். நல்லா சாப்பிடு'ன்னு சொல்லுச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

கழுகு எப்படி டயட் இருந்துச்சுன்னு நமக்குதானே தெரியும். இதுதெரியாத அந்த அப்பாவி நண்பர்கள், ஒரு பை நிறைய பர்கர்களைக் கொடுத்துட்டு தங்களோட பொந்துகளுக்குப் போயிடுச்சுங்க. சோம்பேறிக் கழுகுக்கு தன்னோட பொந்தைத் தேடி உணவு வந்ததும் ரொம்ப கொண்டாட்டமாயிடுச்சு. `டயட்டாவது, மண்ணாவது, ஹா ஹா ஹா...'ன்னு சிரிச்சுக்கிட்டு தினமொரு பர்கர் சாப்பிட ஆரம்பிச்சது. பர்கர் எல்லாம் தீர்ந்துபோன அன்னிக்கு, கழுகால பொந்தை விட்டு வெளியே வரவே முடியல. `குய்யோ முய்யோ'ன்னு கத்த ஆரம்பிச்ச கழுகோட சத்தத்தைக் கேட்டு, மத்த கழுகுகள் எல்லாம் ஓடி வந்துச்சுங்க. பொந்துக்கு வெளியே தலையும், பொந்துக்கு உள்ளே உடம்பும் மாட்டிக்கிட்டு அழுதுட்டு இருந்துச்சு கழுகு. எல்லா கழுகும் சேர்ந்து குண்டு கழுகோட தலையைப் பிடிச்சு தரதரன்னு வெளியே இழுக்க, ஒரு பக்க றெக்கை பிய்ந்துபோக, நொந்து போய் பொந்தைவிட்டு வெளியே வந்துச்சு குண்டு கழுகு. அதோட நிலைமையைப் பார்த்த நண்பர்கள், `நீ இனிமே வாக்கிங் போய்தான் உன் உடம்பைக் குறைக்கணும்னு சொன்ன கையோட அந்த மலை மேல ஒரு பெரிய எட்டையும் வரைஞ்சு வைச்சிதுங்க. தன்னோட சோம்பேறித்தனத்தை நொந்துக்கிட்டு வாக்கிங் போக ஆரம்பிச்சது அந்தக் கழுகு.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு