Election bannerElection banner
Published:Updated:

கோழிக்குஞ்சின் அச்சம் போக்கிய ஆலம்பழம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories

ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்
ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? தினந்தோறும் விகடன்.காமில் வெளியாகின்றன குழந்தைகளுக்கான #BedTimeStories.

ஒரு ஊர்ல ஒரு அம்மா கோழியும் அதோட கோழிக்குஞ்சும் வாழ்ந்துட்டு வந்துச்சாம். அந்தக் கோழிக்குஞ்சு ரொம்ப பயந்தாங்கொள்ளி. மழை வந்தா `ஐயோ நாம மழையில கரைஞ்சிடுவோமோ'ன்னு பயப்படும். காலையில வானத்துல சூரியன் உதிச்சா, `ஐயோ சூரியன் நம்மளை கருக வெச்சிடுமோ'ன்னு பயப்படும். இந்த மாதிரி பயம் வர்றப்போ எல்லாம் தன்னோட அம்மாகிட்ட ஓடி வந்துடும் அந்த கோழிக்குஞ்சு. அம்மா கோழிக்கும் `ஓகே நம்ம குழந்தைக்கு ஏதோ பயம் வந்துடுச்சு போலருக்கு’ன்னு அதைச் சமாதானப்படுத்த ரெடியாகிடும். இது டெய்லி நடக்கிற சம்பவம்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒரு நாள் கோழிக்குஞ்சு வழக்கம்போல மண்ணைக் கிளறி தனக்கான பூச்சி, புழு சாப்பாட்டைத் தேடிக்கிட்டு இருந்துச்சாம். சாப்பாடு தேடுற ஆர்வத்துல தன்னோட கூண்டு இருக்கிற இடத்தைவிட்டு ரொம்ப தூரம் நகர்ந்து போயிடுச்சாம். அந்த இடத்துல ஓர் ஆலமரம் இருந்துச்சாம். அதுக்கடியில விழுந்து கிடந்த இலைகளுக்கு நடுவுல எக்கச்சக்க பூச்சியும் புழுவும் கிடைக்க, வயிறு முட்ட சாப்பிட்ட கோழிக்குஞ்சு, அப்படியே கொஞ்ச நேரம் தூங்கிடுச்சாம்.

அந்த நேரம் பார்த்து கோழிக்குஞ்சு தலை மேல டொம்னு ஆலம்பழம் ஒண்ணு விழ, கோழிக்குஞ்சு திடுக்குன்னு முழிச்சுக்கிச்சு. தன் தலை மேல என்ன விழுந்ததுன்னு தெரிஞ்சுக்க சுத்தி முத்திப் பார்த்துச்சாம் கோழிக்குஞ்சு. அது தலை மேல டொம்னு விழுந்ததுக்கு அடையாளமா அங்க எதுவுமே இல்லையாம். `ஐயோ நம்ம தலை மேல யாரோ கல்லெடுத்து வீசியிருக்காங்க’ன்னு பயந்துபோன கோழிக்குஞ்சு எடுத்துச்சாம் ஓர் ஓட்டம். அதோட ரெண்டு குட்டிக்கால்களும் அதோட குட்டி வால்மேல படுற அளவுக்கு படுவேகமான ஓட்டம். ஓடிப்போய் அவங்க அம்மாகிட்ட மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்னுச்சாம்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

`என்னாச்சு செல்லம். இப்படி ஓடி வர்றே’ன்னு பதற்றமா கேட்டுச்சு அம்மாக்கோழி. `அம்மா அம்மா... அந்தப் பெரிய மரத்துக்குக் கீழே நான் சாப்பிட்டுத் தூங்கிட்டு இருந்தேனா... அப்போ என் மேல யாரோ கல்லெடுத்து வீசினாங்க. அது என் தலை மேல டொம்னு விழுந்துச்சு’ன்னு கோழிக்குஞ்சு நடந்ததைச் சொல்லிச்சு. பெரிய மரம்னு கோழிக்குஞ்சு சொன்னவுடனே அம்மா கோழிக்கு என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சிடுச்சு. ஆனா, யாரோ தன் மேல கல்லை வீசிட்டாங்கன்னு நினைச்சு பயத்துல இருக்கிற கோழிக்குஞ்சுகிட்ட அதைச் சொன்னா நம்பாது. அதுக்கு பதிலா, என்ன நடந்திருக்கும்னு குஞ்சுக்கே புரிய வைக்கணும். அப்போதான் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கோழிக்குஞ்சு பயப்படாம இருக்கும்னு என அம்மா கோழி முடிவெடுத்துச்சாம்.

சம்பவம் நடந்த ஆலமரத்துக்கே கோழிக்குஞ்சை கூட்டிட்டுப் போச்சாம் அம்மா கோழி. `வா ரெண்டு பேரும் சேர்ந்து இரை தேடலாம்னு சொல்லிட்டு மண்ணைக் கிளற ஆரம்பிச்சுதாம். கோழிக்குஞ்சு பயத்துல மரத்தடிக்கு வரவே இல்லை. என்ன பண்றதுன்னு யோசிச்ச அம்மா கோழி ஓர் ஐடியா பண்ணுச்சாம். ஆலமரத்துக்குக் கீழே ஓர் இடத்தை சுத்தமாக்கிட்டு, அந்த இடத்துல கோழிக்குஞ்சை வந்து நிக்கச் சொல்லிச்சாம். பயந்துகிட்டே வந்து நின்னுச்சாம் குஞ்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

கொஞ்ச நேரத்துல சிலுசிலுன்னு காத்தடிக்க, ஆலமரத்தோட இலைகள் அத்தனையும் ஆடுச்சாம். சொகமான காத்து மேல பட்டதும் அப்படியே மரத்தை நிமிர்ந்துப் பார்த்துச்சாம் கோழிக்குஞ்சு. கரெக்டா அந்த நேரம் பார்த்து, ஓர் ஆலம்பழம் டொம்னு கோழிக்குஞ்சு தலை மேல வந்து விழ, பயந்துபோன கோழிக்குஞ்சு சுத்தும் முத்தும் பார்த்துச்சாம். அப்போதான் அது பக்கத்துல இருந்த குட்டி ஆலம் பழத்தைப் பார்த்துச்சு. போன முறை தன் மேல விழுந்தது ஆலம் பழம்தான்னு கோழிக்குஞ்சுக்கு புரிஞ்சுபோச்சு. உடனே அம்மா கோழிகிட்ட ஓடிப்போயி, `ம்மா... என் மேல யாரும் கல்லைப் போடல. காத்துல ஆலம் பழம்தான் விழுந்திருக்கு. நான்தான் தேவையில்லாம பயந்துட்டேன்'னு ஹேப்பியா சொல்லிச்சு. அன்னியில இருந்து கோழிக்குஞ்சு எதுக்கும் பயப்படலையாம். அம்மா கோழியும் நிம்மதியா இருந்துச்சாம்.

- நாளை சந்திக்கலாம்!
சோம்பேறி குரங்கும், `நண்பேண்டா' ஆமையும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு