இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...
ஓர் அழகான காடு. காடெல்லாம் கலர் கலரா பூக்கள். பூக்கள் அதிகமா இருக்கிறதால அந்தக் காட்ல நிறைய தேனடைகள் இருந்துச்சு. அந்தத் தேனடைகளைச் சாப்பிட்டு, அந்தக் காட்ல இருந்த கரடிகள் எல்லாம் நல்ல ஹெல்தியா, எனர்ஜியா இருந்துச்சுங்களாம். அதுல அழகான பிரவுன் கலர்ல ஒரு கரடி இருந்துச்சாம். அதுக்கு மியூசிக்னா ரொம்ப பிடிக்கும். எங்க குயிலோட கூ கூ சத்தம் கேட்டாலும் அங்க போய் நின்னுக்கிட்டு ரசிச்சு கேட்க ஆரம்பிச்சிடும் கரடி. சில நேரம் வயிறு நிறைய தேனைக் குடிச்சிட்டு ஏதாவது மரத்தடியில போய் படுத்துக்கிட்டு, மரத்து மேல குயில்கள் இருக்கான்னு தேட ஆரம்பிச்சிடும். ஏதாவது குயில் கண்ல பட்டுச்சுன்னா, உடனே அதுகிட்ட `குயிலே குயிலே எனக்கான ஒரு பாட்டுப் பாடேன்’னு கெஞ்ச ஆரம்பிச்சிடும் கரடி. இப்படித்தான் ஒருநாள் ஒரு குயில்கிட்ட பாட்டுப்பாடச் சொல்லி கெஞ்சுச்சு கரடி. அந்தக் குயில் அன்னிக்கு ரொம்ப மோசமான மூட்ல இருந்ததால `போங்க கரடியண்ணா. என்னால இன்னிக்கு பாட்டெல்லாம் பாட முடியாது’ன்னு சொல்லிடுச்சு. இதைக் கேட்ட நம்ம மியூசிக் லவ்வர் கரடியாருக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சு.

அன்னிக்கு நைட்டு கரடியாருக்கு தூக்கமே வரலை. தினமும் மியூசிக் கேக்கிறதுக்கு என்ன வழின்னு யோசிச்சிட்டே படுத்திட்டிருந்துச்சு. கரடியோட நிலைமையை வேடிக்கை பார்த்துட்டிருந்த தேனீ ஒண்ணு `நீங்க தினமும் மியூசிக் கேட்கணும்னா நீங்களே ஒரு குயிலை வளர்த்தாதான் உண்டு’ அப்படின்னு வேடிக்கையா சொல்லுச்சு. இதைக் கேட்ட கரடி, `அட இது நல்ல ஐடியாவே இருக்கே’ அப்படின்னு யோசிச்சது. மறுநாள் காலையில் எழுந்தவுடனே கரடி ஒவ்வொரு மரமா அண்ணாந்து பார்த்து குயில்களைத் தேட ஆரம்பிச்சது. ஏதாவது, குயில் குஞ்சைத் தூக்கிட்டுவந்து வளர்க்கலாம்கிறதுதான் கரடியோட பிளான்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஆனா, நாள் முழுக்கத் தேடியும் கரடிக்கு ஒரு குயில் குஞ்சும் கிடைக்கலை. கரடி சோர்ந்துபோய் தன்னோட குகைக்குத் திரும்பி வந்துக்கிட்டு இருந்துச்சு. அப்போ அது கால்ல ஒரு முட்டை தட்டுப்பட்டுச்சு. கரடி அந்த முட்டையைக் கையில எடுத்துப் பார்த்துச்சு. அதுவொரு குயில் முட்டை. கரடி செம ஹேப்பியாகிடுச்சு. இந்த முட்டையில இருந்து வர்ற குயில் குஞ்சை நானே வளர்ப்பேன். அந்தக் குயிலை தினமும் பாடச் சொல்லிக் கேட்பேன்னு சந்தோஷமா சொல்லுச்சு.

ஒருநாள் முட்டையில இருந்து குயில் குஞ்சு வெளியே வந்துச்சு. அந்தக் குட்டிக்குயிலை ரொம்ப அன்பா வளர்த்துச்சு கரடி. கரடிகிட்ட வளர்ந்ததால குயிலுக்குப் பறக்கவும் தெரியலை, பாடவும் தெரியலை. இது தெரிஞ்சதும் கரடி அடைஞ்ச துன்பத்துக்கு அளவே இல்ல. சரி, நாமளே குயிலுக்குப் பறக்க சொல்லித் தரலாம்னு கரடி நினைச்சிது. மலைக்கு மேல குயில் குஞ்சைக் கூட்டிக்கிட்டுப் போச்சு கரடி. தன்னோட முன்னாங்கால்கள்ல ரெண்டு தென்னை ஓலையைக் கட்டிக்கிட்டு மலை மேல இருந்து பறக்க முயற்சி செஞ்சுச்சு. ஓ மை காட்... கரடி டமால்னு கீழே விழுந்திடுச்சு. கரடியோட கால்ல ஒண்ணு உடைஞ்சு போனதுதான் மிச்சம். இருந்தாலும் கரடி மனசு தளரலை. உடைஞ்ச கால் சரியாகுற வரைக்கும் குயில் குஞ்சுக்கு பாடச் சொல்லித் தரலாம்னு முடிவு பண்ணுச்சு. அன்னியில இருந்து தன்னோட கர கர குரலால குயில் குஞ்சுக்கு பாட்டு சொல்லித்தர ஆரம்பிச்சது. கரடியோட குரலைக் கேட்ட குயில் குஞ்சும் தேனீக்களும் தரையில உருண்டு புரண்டு ஹா ஹா ஹான்னு சிரிக்க ஆரம்பிச்சிதுங்க. கரடிக்கு பப்பி ஷேமாயிடுச்சு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நடந்த சம்பவங்கள்ல இருந்து கரடிக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா புரிஞ்சுபோச்சு. ஒரு குயிலுக்கு இன்னொரு குயிலாலதான் பறக்கவும் பாடவும் கத்துத்தர முடியும். அதனால, தான் வளர்க்கிற குயில் குஞ்சை அதோட குயில் கூட்டத்துக்கிட்டேயே ஒப்படைக்கிறதுக்கு கரடி முடிவு பண்ணுச்சு. முடிவு பண்ண மாதிரியே மறுநாள் குயில் குஞ்சை அதோட கூட்டத்துக்கிட்ட கொண்டு போய் ஒப்படைச்சிது கரடி.

கொஞ்ச நாள் கழிச்சு, தன்னோட குகையில தூங்கிட்டிருந்த கரடி ஓர் இனிமையான இசையைக் கேட்டு கண்ணு முழிச்சது. அங்கே கரடி வளர்த்த குயில் குஞ்சு நின்னுக்கிட்டு இருந்துச்சு. `நீயா பாடினே மை டியர்’னு ஆச்சர்யமா கேட்டுச்சு கரடி. ஆமாம்னு சந்தோஷமா சொல்லுச்சு குயில் குஞ்சு. அன்னியில இருந்து கரடியோட குகைக்கு தினமும் வந்து பாட்டு பாடுச்சாம் குயில் குஞ்சு. கரடி இப்போல்லாம் மியூசிக் கேட்கிறதுக்காக மத்த குயில்களைக் கெஞ்சுறதே இல்லையாம்.
- நாளை சந்திப்போம்
தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.