Published:Updated:

சென்னைப் புத்தகக் காட்சி... சிறுவர் புத்தகங்களின் வரவேற்பும் சிறப்பும் என்ன?

புத்தகக் காட்சி
புத்தகக் காட்சி ( pixabay )

நிறைய குழந்தைகள் ஆவலுடன் புத்தகங்களைத் தேடியெடுத்தை இந்த ஆண்டுப் புத்தகக் காட்சியின் ஒவ்வொரு நாளும் காணமுடிந்தது.

நுண்திரை நுகர்வுகள் நாளுக்கு நாள் தன் நேரத்தைக் கூட்டிக்கொண்டே செல்லும் இன்றைய காலகட்டத்தில், புத்தகங்களின் வாசனையை நம் நாசிக்கு ஞாபகப்படுத்தும் அறிவுத் திருவிழாவாக ஒவ்வோர் ஆண்டும் சென்னைப் புத்தகக் காட்சி இருக்கும். இதோ இந்த ஆண்டும் அந்தத் திருவிழா முடிந்துள்ளது. இதில், இந்த ஆண்டு குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது?

``கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகமாகவே விற்பனையாகி இருக்கின்றன. வழக்கத்தைவிட அதிக அளவில் குழந்தைகள் வந்திருந்தார்கள். இந்த ஆண்டு குழந்தைகளுக்கான 10,000 தனி நூலகங்கள் என்ற திட்டத்துடன் எங்கள் செயல்பாட்டை ஆரம்பித்தோம். அதற்கு இந்தப் புத்தகக் காட்சியில் ஆரம்பம் முதலே சிறப்பான வரவேற்பு கிடைத்தது'' என்கிறார், `பாரதி புத்தகாலயம்' (புக்ஸ் ஃபார் சில்ட்ரன்ஸ்) நாகராஜன்.

புத்தகக் காட்சி
புத்தகக் காட்சி
pixabay

``இந்தத் திட்டத்தின்படி 2,500 ரூபாய் பணம் செலுத்துபவர்களுக்கு ஸ்டாலிலேயே 1,000 ரூபாய்க்கான புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. இனி, வெளியாகும் சிறார் புத்தகங்கள் தொடர்ந்து அவர்களுக்கு அனுப்பப்படும். இதன்மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தை நூலகம் அமைய வேண்டும் என விரும்புகிறோம். இந்தப் புத்தகக் காட்சியையொட்டி சிறார்களுக்காக சுமார் 50 புத்தகங்களை வெளியிட்டோம். ஆயிஷா நடராசனின் `உலகை மாற்றிய விஞ்ஞானிகள்' என்ற தொடர் வரிசைப் புத்தகங்கள், ரா.கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில், சோவியத் நாட்டுக் கதைகள் (நவரத்தின மாலை), பாவண்ணனின் சிறுவர் பாடல்கள் என ஒவ்வொன்றுக்கும் பெற்றோர்களிடமும் குழந்தைகளிடமும் நல்ல வரவேற்பு இருந்தது. நவீன குழந்தை இலக்கிய புத்தகங்களுடன் ஈஷாப் கதைகள் போன்றவையும் அதிக வரவேற்பைப் பெற்றது'' என்றார்.

`வானம் பதிப்பகம்' மணிகண்டன், ``இந்த ஆண்டு எங்கள் பதிப்பகம் மூலம் குழந்தைகளையே எழுத்தாளர்களாக்கி வெளியிட்ட குழந்தைகள் புத்தகங்களைச் சிறப்பாகச் சொல்லலாம். எஸ்.அபிநயா எழுதிய `குரங்கும் கரடிகளும்', ரமணி எழுதிய `யாருக்குத் தைக்கத் தெரியும்?' ஆகியவையே அந்தச் சுட்டி எழுத்தாளர்களின் புத்தகங்கள். இந்த ஆண்டு இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். பல குழந்தைகள் புத்தகங்களை எடுத்துப் பார்த்து, அதுகுறித்து விசாரித்து விவாதித்துத் தானாகத் தேர்ந்தெடுத்தார்கள். இதை அழகான முன்னேற்றமாகப் பார்க்கிறேன்'' என்றார் மகிழ்ச்சியுடன்.

book
book
pixabay

இவர்கள் சொல்வதுபோல நிறைய குழந்தைகள் ஆவலுடன் புத்தகங்களைத் தேடியெடுத்தை இந்த ஆண்டுப் புத்தகக் காட்சியின் ஒவ்வொரு நாளும் காணமுடிந்தது. `இயல்வாகை' போன்ற அரங்கங்களில் சிறார்களுக்கான புத்தகங்கள் அதிகமாக இருந்ததுடன், அவர்களுக்கு எட்டும் வகையில் அமைத்திருந்தார்கள்.

சரி, புத்தகங்களை வாங்கினால் மட்டும் போதுமா? பெரியவர்களே பல வருடப் புத்தகங்களைத் தொடாமல் பத்திரமாக வைத்திருப்பது தெரிந்த கதை. வீட்டுக்கு வந்ததும் பாடப்புத்தகம், விளையாட்டு எனக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் விஷயங்கள் பல. இவற்றுக்கு நடுவில் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் நமக்கான டாஸ்க். அதற்குச் சில சுவாரஸ்யமான வழிகளைப் பின்பற்றலாம்.

* பக்கங்கள் குறைவான புத்தகமாக இருந்தால் அதை விரித்து, தினசரி காலண்டர் போல சுவரில் வைத்து நான்கு முனைகளிலும் டேப் ஒட்டிவிடுங்கள். தினமும் காலையிலோ, மாலையிலோ காபி குடித்தவாறோ, நொறுக்குத் தீனி சாப்பிட்டபடியே, குறைந்தது இரண்டு பக்கங்கள் படிக்கும் டாஸ்க் வையுங்கள். புத்தகத்துக்குப் பக்கத்திலேயே கட்டங்கள் போட்ட பேப்பரை ஒட்டிவைத்தால், அன்றைய தினம் படித்த பக்கங்களை அதில் எழுதலாம். சுவரும் அழகான அலங்காரமாக இருக்கும். படிக்கவும் ஆர்வமாக இருக்கும்.

* இரண்டு புத்தகங்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு ஒரு புத்தகத்திலிருந்து சில பக்கங்களைப் படித்து இன்னொருவருக்குச் சொல்ல வேண்டும். அடுத்த நாள் அதே புத்தகத்தை மாற்றிக்கொண்டு, விட்ட இடத்திலிருந்து என்ன நடந்தது என்பதை அடுத்தவர் சொல்ல வேண்டும் என சஸ்பென்ஸ் விளையாட்டாக மாற்றுங்கள்.

books
books
pixabay

* படிக்கும் புத்தகம் தொடர்பாகப் போட்டி வைக்கலாம். `இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகளை, வசனங்களைத் தனியாக எழுதிக் கொடுப்பேன். அல்லது வெவ்வேறு பக்கத்திலிருந்து வரிகளை மாற்றி எழுதுவேன். (அல்லது சொல்வேன்). எது யார் சொன்னது? எதற்கு அடுத்து எது வந்திருக்க வேண்டும் எனச் சரியாகச் சொன்னால் பரிசு'' என்று சொல்லுங்கள். ஆர்வமாகப் படிப்பார்கள்.

வாசிக்கப்படாமல் இருக்கும் புத்தகம் கூட்டிலேயே இருக்கும் குஞ்சுகளைப் போலத்தான். உங்கள் குழந்தைகளை வாசிப்பு வானத்தில் சிறகடிக்க வையுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு