Election bannerElection banner
Published:Updated:

இது தேவதைகளுக்காக மாணவர்கள் எடுத்த உறுதிமொழி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 42

BedTimeStories
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையைக் குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒர் ஊர்ல ஒரு ஸ்கூல் இருந்துச்சு. அந்த ஸ்கூல்ல படிப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்களோ அதே அளவுக்கு சுற்றுப்புறம் பத்தின விழிப்புணர்வும் சொல்லிக் கொடுப்பாங்க. அதுக்காக, தெருக்களை எப்படி சுத்தமா வெச்சிக்கிறது, மக்குற குப்பை, மக்காத குப்பையை எப்படிப் பிரிச்சு அப்புறப் படுத்துறதுங்கிற மாதிரி நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுப்பாங்க. ஒரு தடவை, அந்த ஊர்ல இருக்கிற ஆறு, குளம், ஏரி, கடல் இப்படி எல்லா நீர் நிலைகளையும் சுத்திக்காட்டுறதுக் காக ஸ்டூடன்ட்ஸை சுற்றுலா கூட்டிட்டுப் போயிருந்தாங்க டீச்சர்ஸ். ஸ்கூல் பஸ்ல ஒரே பாட்டு, டான்ஸ்னு கும்மாளமா கிளம்பினாங்க எல்லாரும்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அவங்க மொதல்ல பார்த்த இடம் ஒரு குளம். குளத்துக்குள்ள காலே வைக்க முடியாதபடிக்கு குப்பையா இருந்துச்சு. கெட்ட ஸ்மெல் வேற. மூக்கைப் பொத்திக்கிட்டே குளத்தை வேடிக்கை பார்த்தாங்க ஸ்டூடன்ட்ஸ் எல்லாரும். அப்போ குளக்கரை ஓரமா ஓர் அழுக்கான குட்டிப்பொண்ணு உட்கார்ந்துட்டு இருக்கிறது அவங்க கண்ல பட்டுச்சு. உடனே எல்லாரும் அந்தக் குட்டிப்பொண்ணுக்கிட்ட போனாங்க. அந்தக் குட்டிப் பொண்ணு கையில அழுக்கான ஒரு தாமரைப்பூ இருந்துச்சு. `நீங்க யாரு, இந்தக் குளத்துக்கிட்ட நீங்க ஏன் தனியா உட்கார்ந்துட்டு இருக்கீங்க, நீங்க ஏன் இவ்ளோ அழுக்காக இருக்கீங்க'ன்னு வரிசையா கேள்வி கேட்டாங்க சுற்றுலா வந்திருந்த ஸ்டூடன்ட்ஸ்.

அவங்களை நிமிர்ந்துபார்த்த அந்தக் குட்டிப் பொண்ணு, `நாந்தான் குளங்களோட தேவதை. என் மேல குப்பையைக் கொட்டிக்கொட்டி என்னையும் என்கிட்ட வளர்ந்த பூக்களையும் மனுஷங்க இப்படி அழுக்காக்கிட்டாங்க'ன்னு சொல்லிட்டு அழ ஆரம்பிச்சுது. குளங்களின் தேவதையோட நிலைமையைப் பார்த்த ஸ்டூடன்ட்ஸுக்கு ரொம்ப வருத்தமா போச்சு. அடுத்ததா, அவங்க ஊர்ல இருக்கிற ஆற்றைப் பார்க்கிறதுக்கு போனாங்க. ஆறு தண்ணியே இல்லாம வறண்டு போயிருந்துச்சு. ஆற்றுத்தண்ணீர்ல குதிச்சு விளையாடணும்னு ஆசைப்பட்ட ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் ரொம்ப அப்செட் ஆயிட்டாங்க. அப்போ அவங்க கண்ல, தூரத்துல ஒரு குட்டிப் பொண்ணு உட்கார்ந்திருந்தது தென்பட்டுச்சு. ஒருவேளை இது ஆறுகளோட தேவதையா இருக்குமோன்னு சந்தேகப்பட்ட ஸ்டூடன்ட்ஸ் உடனே அந்தக் குட்டிப் பொண்ணுகிட்ட போனாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
சைலன்ட் சாமந்திப்பூவும் வம்புக்கார கள்ளிச்செடியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories

அவங்க நினைச்ச மாதிரியே அந்தக் குட்டிப் பொண்ணு ஆறுகளோட தேவதைதான். இந்தத் தேவதையோட உடம்பெல்லாம் குழி குழியா இருந்துச்சு. அந்தக் குழிகள்ல இருந்து தண்ணீர் கசிஞ்சுட்டு பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு. `நீங்க ஏன் இப்படியிருக்கிறீங்க'ன்னு அக்கறையா விசாரிச்சாங்க ஸ்டூடன்ட்ஸ். அதுக்கு அந்தத் தேவதை என்ன சொல்லுச்சு தெரியுமா? என்கிட்ட இருக்கிற மணலையெல்லாம் மனுஷங்க அளவுக்கு மீறி அள்றதால, என் உடம்பெல்லாம் இப்படிக் குழி குழியா ஆயிடுச்சு. அதுல இருந்து என்னோட கண்ணீர்தான் தண்ணீரா கசிஞ்சு வருது'ன்னு சோகமா சொல்லுச்சு ஆறுகளோட தேவதை.

குளங்களோட தேவதையையும் ஆறுகளோட தேவதையையும் பார்த்த ஸ்டூடன்ட்ஸுக்கு மனசு ரொம்ப வருத்தமாயிடுச்சு. கொண்டு வந்திருந்த ஸ்நாக்ஸை சாப்பிடுறதுக்குக்கூட அவங்களுக்கு மனசு வரலை. அடுத்ததா, அவங்க ஊர்ல இருக்கிற ஏரியைப் பார்க்கிறதுக்காக பஸ்ல ஏறி கிளம்பினாங்க. கொஞ்ச தூரம் போனவுடனே, ஒரு குட்டிப் பொண்ணு அவங்களோட பஸ்ஸை வழிமறிச்சது. யாரிந்த குட்டிப்பொண்ணு, ஒருவேளை ஏரிகளோட தேவதையா இருக்குமோ, இருக்க முடியாதே... மத்த தேவதைகள் மாதிரி ஏரிகளோட தேவதையும் அவங்களோட இடத்துலதானே இருப்பாங்க' இப்படியெல்லாம் யோசிச்சுக்கிட்டே ஸ்டூடன்ட்ஸெல்லாம் பஸ்ஸை விட்டுக் கீழ இறங்கினாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
நாய்களுக்கு பனை மரம் தந்த பரிசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 40

ஸ்கூல் பஸ்ஸை வழிமறிச்ச குட்டிப்பொண்ணு, ஸ்டூடன்ட்ஸ் கேள்வி கேட்கிறதுக்கு முன்னாடியே பேச ஆரம்பிச்சுது. `நாந்தான் ஏரிகளோட தேவதை. நீங்க என்னைப் பார்க்க வர்றதா குளங்களோட தேவதையும் ஆறுகளோட தேவதையும் என்கிட்ட சொன்னாங்க. நான் இருந்த இடத்துல இப்போ மனுஷங்கதான் வீடு கட்டி வாழ்ந்துட்டு இருக்காங்க. அதனால, வாழறதுக்கு இடமில்லாம நான் இப்போ தெருவோரத்துலதான் தங்கிட்டிருக்கேன். நீங்க எல்லாம் நான் இருந்த இடத்துக்குப் போனீங்கன்னா என்னைப் பார்க்க முடியாம ஏமாந்திடுவீங்கன்னுதான் நானே உங்களைத் தேடி வந்தேன்'னு சொல்லிட்டு ஏரிகளோட தேவதை போயே போயிடுச்சு.

ஸ்டூடன்ட்ஸெல்லாம் கண்ணீரோட கடலைப் பார்க்கிறதுக்கு கிளம்பினாங்க. கடற்கரைக்குப் போனவுடனே யாராவது குட்டிப்பொண்ணு கண்ணுல தென்படுறாங்களான்னு தேட ஆரம்பிச்சாங்க ஸ்டூடன்டஸ். ஆனா, அப்படி யாருமே தென்படலை. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணிப் பார்த்துட்டு வருத்தத்தோட பஸ்ல ஏற வந்தாங்க ஸ்டூடன்ட்ஸ். கரெக்டா அந்த நேரத்துல, பஸ்ஸுக்குள்ள இருந்து `காப்பாத்துங்க ப்ளீஸ்... காப்பாத்துங்க ப்ளீஸ்'னு பலவீனமா ஒரு குரல் கேட்டுச்சு. எல்லாரும் திபுதிபுன்னு பஸ்ஸுக்குள்ள ஏற, அங்க ஒரு குட்டிப்பொண்ணு படுத்துக்கிடந்தா. அவளோட வாய் நிறைய பிளாஸ்டிக் கவர்கள் இருந்துச்சு. ரெண்டு கால்களையும், ரெண்டு கைகளையும் நிறைய நைலான் வலைகள் இறுக்கிட்டிருந்துச்சு. 'நீங்க யாரு' னு ஸ்டூடன்ட்ஸ் பயந்துட்டே கேட்க, `நாந்தான் நீங்க பார்க்க வந்த கடல் தேவதை. என்னை எப்படியாவது இந்த பிளாஸ்டிக் கவர்கள்கிட்ட இருந்தும், வலைகள்கிட்ட இருந்தும் காப்பாத்துங்க'ன்னு கெஞ்சுச்சு கடல் தேவதை. அது கேட்டுக்கிட்டபடியே கடல் தேவதையை சுத்தம் செஞ்சு மறுபடியும் கடலுக்கு அனுப்பி வெச்சாங்க ஸ்டூடன்ட்ஸ்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

டூர் முடிஞ்சு ஸ்கூலுக்கு வந்தவுடனே எல்லா ஸ்டூடன்ட்ஸும் `இன்னியில ஏரி, குளம், ஆறு, கடல்னு எல்லா நீர்நிலைகளையும் அழுக்கு பண்ண மாட்டோம். அப்படி பண்றவங்களையும் தடுப்போம்'னு உறுதி எடுத்துக்கிட்டாங்க. நீங்களும் உறுதி எடுத்துக்கிறீங்களா குட்டீஸ்?

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு