Published:Updated:

பாட்டு கத்துக்கிட்ட கொக்கு... என்னாச்சு? - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 47

BedTimeStories
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையைக் குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஓர் ஊர்ல குளம் ஒண்ணு இருந்துச்சு. அந்தக் குளத்துல நிறைய தவளைகளும் மீன்களும் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுங்களை சாப்பிடுறதுக்காக அந்தக் குளத்துக்கு நிறைய கொக்குகளும் வரும். அதுல ஒரு கொக்குக்கு பாட்டுப் பாடறதுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதனால அது தனியா இருக்கிற நேரத்துல ஏதாவது ஒரு பாட்டை ஹம் பண்ணிட்டே இருக்கும். ஒரு மழைக் காலத்தப்போ, அந்தக் குளத்துல இருக்கிற தவளைகள் எல்லாம் க்ராக் க்ராக்னு கத்திட்டே இருந்துச்சுங்க. இதைக் கேட்டுட்டு இருந்த நம்ம பாட்டுப் பிரியை கொக்குக்கு பயங்கர கோபம் வந்திடுச்சு. `என்ன இந்தத் தவளைங்க இவ்ளோ கேவலமா பாடுதுங்க. இதுங்களோட பாட்டைக் கேட்டா எனக்கு பாட்டு பாடுறதுக்கே பிடிக்காம போயிடும் போல'ன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

தாங்கள் கத்துறதைப் பாடுறதுன்னு நினைச்சுக்கிட்டு கொக்கு கோபமா இருக்கிறது தெரியாம தவளைங்க நைட்டெல்லாம் கத்திக்கிட்டே இருந்துச்சுங்க. கொக்கு அதைத் தாங்க முடியாம காதைப் பொத்திக்கிட்டு படுத்துத் தூங்கிடுச்சு. இப்படி ஒருநாள் ரெண்டு நாள் இல்ல, பல நாள்கள் நடந்துச்சு. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கியெழுந்த கொக்கு ஒருநாள், கத்திக்கிட்டிருக்க தவளைங்ககிட்ட போய், ``மொதல்ல உங்க பாட்டை நிறுத்துங்க. என் காது வலிக்குது"ன்னு திட்ட ஆரம்பிச்சது. கொக்கோட கோவத்தைப் பார்த்த தவளைங்க, ``கொக்கு அண்ணா, நாங்க பாடலை. மழைக்காலத்துல நாங்க இப்படிக் கத்துறது வழக்கம்தான். நீங்க இந்தக் குளத்துக்கு புதுசா வந்திருக்கீங்க. அதனாலதான், நாங்க கத்துறதைப் பாடுறதுன்னு நினைச்சுக்கிட்டீங்க"ன்னு மரியாதையா சொல்லுச்சுங்க.

ஆனா, கொக்குக்கு இது புரியவே இல்ல. ``தயவுசெஞ்சு இனிமே நீங்க பாடாதீங்க"ன்னு சொன்னதையே திருப்பிச் சொல்லுச்சு. இப்போ தவளைங்களுக்கு கோபம் வந்துடுச்சு. ``எங்க பாட்டு நல்லாயில்லன்னா நீங்க பாடுங்க. நாங்க கேட்கிறோம்"னு சொல்லுச்சுங்க. அவ்ளோதான், கொக்குக்கு ரோஷம் வந்திடுச்சு. பாட்டு பாடலாம்னு வாயைத் திறந்த கொக்கு, ``இல்லயில்ல... யார்கிட்டேயாவது நல்லா பாட்டு கத்துக்கிட்டு வந்து பாடினாதான் இந்தத் தவளைங்களை நம்மளால அசத்த முடியும்"னு நினைச்சுக்கிட்டு, ``இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கெல்லாம் நான் பாட்டுப் பாடிக் காட்டுறேன் பாருங்க"ன்னு சவால் விட்டுட்டு விருட்டுன்னு திரும்பிப் போயிடுச்சு கொக்கு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

இப்படி தவளைங்ககிட்ட சவால்விட்ட நாள்ல இருந்து யார்கிட்ட பாட்டு கத்துக்கலாம்னு தேட ஆரம்பிச்சுது கொக்கு. மொதல்ல பக்கத்து வயல்ல மேய்ஞ்சுட்டிருந்த மயில்கிட்ட போய் ``எனக்குப் பாட்டுக் கத்துத் தர்றியா மயிலே"ன்னு கேட்டுச்சு கொக்கு. ``ஓ... சொல்லித் தர்றேனே"ன்னு சொல்லிட்டு மயில் தன்னோட அலகைத் திறந்து அகவ ஆரம்பிச்சது. கொக்கு மிரண்டு போய் அங்கிருந்து ஓடியே போச்சு. அடுத்ததா பக்கத்து மரத்துல இருந்த காக்கா கிட்ட போய் ``எனக்குப் பாட்டுக் கத்துத் தர்றியா காக்கா"ன்னு கேட்டுச்சு. அதுக்கு காக்கா, ``எனக்கு கா கான்னு கத்துறதைத் தவிர பாட்டு பாடத் தெரியாது'ன்னு ஹானஸ்ட்டா சொல்லிடுச்சு.

அடுத்து யார்கிட்டே பாட்டு கத்துத் தரச் சொல்லிக் கேட்கலாம்னு யோசிச்சுட்டே வானத்துல பறந்துட்டு இருந்துச்சு கொக்கு. அப்போ அதோட பக்கத்துல கிளி ஒண்ணு கீ கீன்னு கத்திட்டுப் பறந்துபோச்சு. அது பின்னாடியே பறந்துபோன கொக்கு, ``கிளி நீ எனக்கு பாட்டுப் பாட கத்துத் தர்றியா"ன்னு கேட்டுச்சு. ``ஓ கத்துத் தர்றேனே"ன்னு சொன்ன கிளி, ஒருநாள் முழுக்க கொக்குக்கு கீ கீன்னு கத்த மட்டுமே சொல்லிக் கொடுத்துச்சு. நொந்து போன கொக்கு, அங்க இருந்து றெக்கை போன போக்குல பறக்க ஆரம்பிச்சது.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
சின்சான் பொம்மை கொடுத்த சூப்பர் அட்வைஸ்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedtimeStories - 44

அப்போ, அதோட கண்ணுல குயில் தென்பட்டுச்சு. `ஆஹா... நான் பாட்டு கத்துக்க குயில்தான் கரெக்ட்டான பாட்டு டீச்சர்' அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்ட கொக்கு, குயில்கிட்ட போய் தன்னோட பாட்டு கத்துக்கிற விருப்பத்தைச் சொல்லுச்சு. கொக்குக்கு பாட்டு கத்துக்க ஆசை வந்த கதையை அது வாயாலேயே கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட குயில், கொக்குக்கு பாட்டு சொல்லித்தர சம்மதிச்சது.

குயில் பாட ஆரம்பிக்க, அதைக் கேட்டு கொக்கு பாட ஆரம்பிச்சது. ஆனா, பல நாள் பிராக்டிஸ் செஞ்சும் கொக்கால குயில் மாதிரி பாடவே முடியல. அதோட குரல்ல மட்டும்தான் பாட முடிஞ்சது. இப்போ கொக்குக்கு தன்னோட தப்பு புரிஞ்சு போச்சு. குயிலுக்கு நன்றி சொல்லிட்டு, பழையபடி தன்னோட குளக்கரைக்கே வந்துச்சு. கொக்கைப் பார்த்த தவளைங்க ``பாட்டு கத்துக்கிட்டீங்களா?" அப்படின்னு ஆசையா வந்து கேட்டுச்சுங்க. அதுக்கு கொக்கு என்ன சொல்லுச்சு தெரியுமா?

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
மரங்கள் இப்ப ஹேப்பி அண்ணாச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 45

``தவளைகளால தவளை குரல்லதான் சத்தம் எழுப்ப முடியும். என்னால என் குரல்லதான் சத்தம் எழுப்ப முடியும். இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சத்தத்தை இயற்கை கொடுத்திருக்கு. நாந்தான் அது புரியாம உங்க குரலை கேலி பண்ணிட்டேன். மன்னிச்சிடுங்க" அப்படின்னு சொல்லுச்சு. இந்தச் சம்பவத்துக்கு அப்புறம் தவளைகளும் அந்தக் கொக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் கோபப்படாம ஒற்றுமையா வாழ்ந்துட்டு வந்துச்சுங்க.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு