இந்தக் கதையைக் குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...
ஓர் ஊர்ல பெரிய ஆலமரம் ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. அதுல இருக்கிற பழங்களுக்காக அந்த ஆல மரத்துல நிறைய பறவைகள் கூடு கட்டி சந்தோஷமா வாழ்ந்து வந்துச்சுங்க. ஒருநாள் சாயங்கால வேளையிலே ஒரு காக்கையோட கூட்டுல இருந்து பயங்கரமா ஒரு சத்தம் கேட்டுச்சு. அப்போதான் எல்லா பறவைகளும் இரை தேடிட்டு கூடு அடைகிற நேரம்கிறதால என்னவோ ஏதோன்னு எல்லா பறவைகளும் காக்கையோட கூடு வாசல்ல போய் நின்னுச்சுங்க. அங்க, அந்தக் கூட்டோட சொந்தக்கார காக்கா, குயில் ஒண்ணை தன்னோட அலகால கொத்திக் கொத்தி விரட்டி விட்டுட்டு இருந்துச்சு. இதைப் பார்த்த மைனா ஒண்ணு, `ஏன் காக்கா குயிலை கொத்துறே'ன்னு கேட்டுச்சு.

அதுக்கு காக்கா, `இந்தக் குயிலுக்கு தனக்காக கூடு கட்டிக்கத் தெரியாது. எப்போ பாரு என் கூட்டுல வந்து முட்டையிட்டுட்டுப் போயிடுது. இன்னிக்கு முட்டையிடுறப்போ நாம் பார்த்துட்டேன். அதான், கோவத்துல கொத்தி விட்டுட்டேன்'னு ஆவேசமா சொல்லுச்சு. காக்கா பேசினதைக் கேட்ட மைனா, காக்கா செஞ்சதுதான் சரிங்கிற மாதிரி தலையாட்டிட்டு தன்னோட கூட்டுக்குப் போயிடுச்சு. தவிர, குயிலுக்காக மத்த பறவைகளும் சப்போர்ட் பண்ணிப் பேசவே இல்ல. இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த அந்த ஆலமரத்துக்கு ரொம்ப வருத்தமா போச்சு. ஆலமரத்தைப் பொறுத்தவரைக்கும் காக்காவோட கோபம் நியாயமானது. ஆனா, அதுக்காக குயிலைத் தண்டிக்கிறதை அதால ஏத்துக்க முடியலை. ஏன்னா, ஒரு தப்புக்குத் தண்டனை தர்றதைவிட, அது மறுபடியும் நடக்காம இருக்கிறதுக்கான வழியைத்தான் தேடணும்கிறது ஆலமரத்தோட பாலிசி.
அதனால, ஆலமரம் உடனே தன்னோட கிளைகள்ல கூடுகட்டி வாழ்ந்துக்கிட்டிருந்த அத்தனை பறவைகளையும் தன்னோட பெரிய கிளை ஒண்ணுல வந்து உட்காரச் சொல்லுச்சு. ஆலமரத்து மேல எல்லா பறவைகளுக்கும் ரொம்ப மரியாதை இருந்ததால, அது கூப்பிட்ட உடனே எல்லாம் பறந்து வந்து அந்தப் பெரிய கிளை மேல உட்கார்ந்துச்சுங்க. எல்லா பறவைகளும் ஆலமரம் எதுக்காக நம்மையெல்லாம் ஆலமரம் கூப்பிட்டிருக்கும்னு டிஸ்கஸ் பண்ணிட்டிருக்க குயில் மட்டும் தனியா சோர்வா உட்கார்ந்துட்டிருச்சு.

நான் கூப்பிட்டதை மதிச்சு எல்லாரும் வந்ததுக்கு ரொம்ப நன்றின்னு சொல்லிட்டு ஆலமரம் பேச ஆரம்பிச்சுது. `இங்க எல்லாருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். காக்கான்னா ஒற்றுமை, கிளின்னா பேசும், மயில்னா அழகு, தூக்கணாங்குருவின்னா சூப்பரா கூடு கட்டும், அதுமாதிரி குயில்னா...' இப்படி சொல்லிட்டு ஆலமரம் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியா இருந்துச்சு.
காக்கா உள்பட எல்லா பறவைகளும் ஒரே குரல்ல `அழகா பாடும்'னு சொல்லுச்சுங்க. உடனே ஆலமரம், `ஆமா, குயில்னா அழகா பாடும். குயிலோட குரலைக் கேட்டு நாமெல்லாம் எவ்வளவு ரசிச்சிருக்கோம். அதோட பிளஸ்ஸை ரசிக்கத் தெரிஞ்ச நமக்கு மைனஸையும் நேசிக்கத் தெரிய வேணாமா'ன்னு கேட்டுச்சு.

மத்த பறவைகளுக்கு, குறிப்பா காக்காவுக்கு தான் செஞ்சது எவ்ளோ பெரிய தப்புன்னு புரிஞ்சுது. உடனே எழுந்திருச்சு நின்னு, `ஸாரி ஆலமரம், நான் இன்னிக்கு நடந்துக்கிட்ட மாதிரி இனி என்னிக்குமே நடத்துக்க மாட்டேன். நான் செஞ்ச தப்புக்குத் தண்டனையா நானே இந்த மரத்துல இருக்கிற குயில்களுக்கு கூடு கட்டிக் கொடுக்கிறேன்'ன்னு சொல்லுச்சு. காக்கா இப்படி சொன்னவுடனே மத்த பறவைகளும் `நாங்களும் குயில்களுக்குக் கூடு கட்ட ஹெல்ப் பண்றோம்'னு சொல்லுச்சுங்க. அன்னியில இருந்து அந்த ஆலமரத்துல சண்டை சத்தமே கேட்கலையாம்.
- நாளை சந்திக்கலாம்.
தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.