Published:Updated:

விவசாயம் செய்த நாய்களும் கோழிகளும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 24

BedTimeStories
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு கிராமத்துல விவசாயி ஒருவர் வாழ்ந்துட்டு வந்தார். அவரு தினமும், காலையில் வானத்துல சூரியன் வர்றதுக்கு முன்னாடியே தன்னோட உழவு மாடுகள் ரெண்டையும் கூட்டிக்கிட்டு வயலுக்குப் போயிடுவாரு. அவர் ரெண்டு நாய்க்குட்டிகளையும் நாலஞ்சு கோழிக்குஞ்சுகளையும் தன்னோட பிள்ளைங்க மாதிரி வளர்த்துட்டு வந்தார். அதுங்களும் அவர் மேல ரொம்ப அன்பா இருந்துச்சுங்க. அதனால, காலையில அவர் வயலுக்குக் கிளம்புறப்போ கோழிக்குஞ்சுகளும் நாய்க்குட்டிகளும் அவர் கூடவே கிளம்பி வயலுக்குப் போயிடும். அவர் வேலை பார்த்து களைச்சுப்போனா நாய்க்குட்டிங்க தண்ணி கொண்டு போய் கொடுக்குங்க. வெயில் அதிகமா இருந்தா ஏர் கலப்பை மேல ஏறி நின்னு விவசாயிக்குக் குடை பிடிக்கும்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

கோழிக்குஞ்சுகளோ வயல்வெளியில வேலை பார்த்துட்டு இருக்கிறப்போ, வயல்வெளிக்குப் பக்கத்துல இருக்கிற மண்ணைக் கிளறி கிளறி அங்க இருக்கிற புழு, பூச்சிகளைச் சாப்பிட்டுட்டு இருக்குங்க. விவசாயி வெயில் நேரத்துல கொஞ்ச நேரம் படுத்துக்கிட்டா, உடனே ஓடி வந்து தங்களோட குட்டி றெக்கைகளால வீசி விட ஆரம்பிக்குங்க. அந்தக் கிராமத்துல இருக்கிற எல்லாரும் இந்த நாய்க்குட்டிகளோட அன்பையும் கோழிக்குஞ்சுகளோட அன்பையும் ஆச்சர்யமா பார்ப்பாங்க. ஒரு சிலர் `இந்த நாய்க்குட்டிகளையும் கோழிக்குஞ்சுகளையும் எங்களுக்குக் கொடுத்திடுறீங்களா. நாங்க வளர்த்துக்கிறோம்'னு விவசாயிகிட்ட கேட்பாங்க. அதுக்கு விவசாயி, `அதுங்கயெல்லாம் என்னோட குழந்தைங்க. நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்'னு தீர்மானமா சொல்லிடுவாரு. அந்த மாதிரி நேரத்துல நாய்க்குட்டிகளும் கோழிக்குஞ்சுகளும் விவசாயி மேல விழுந்து புரண்டு அவரைக் கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்சும்.

இப்படியே சில வருஷங்கள் போச்சு. நாய்க்குட்டிகள் ரெண்டும் இப்போ நல்லா உயரமா வளர்ந்துடுச்சுங்க. கோழிக்குஞ்சுகள் நல்ல பலமான சேவல்களாகவும் கோழிகளாகவும் வளர்ந்திடுச்சுங்க. விவசாயி வேலை செய்றதைப் பார்த்துப் பார்த்து இப்போ அதுங்களுக்கும் ஓரளவுக்கு விவசாயம் எப்படிச் செய்யுறதுன்னு தெரிய ஆரம்பிச்சிடுச்சு. ஒருநாள், நெல் பயிரெல்லாம் நல்லா வளர்ந்து அறுவடைக்கு ரெடியா இருந்துச்சு. நெல் பயிரை யாரும் திருடிட்டுப் போயிடக் கூடாதுன்னு நைட்டு முழுக்க வயலிலேயே இருக்க ஆரம்பிச்சாரு விவசாயி. அவருக்குத் துணையா நாய்களும் கோழிகளும் கூடவே போயிருந்துச்சுங்க. அப்படியொரு நாள், வயலுக்கு காவலுக்குப் போன விவசாயி டயர்டாகி கொஞ்ச நேரம் தூங்கிட்டாரு. அந்த நேரம் பார்த்து சில திருடர்கள் வயல்ல இறங்கி நெல் பயிரையெல்லாம் அரிவாளால அறுக்க ஆரம்பிச்சாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
நிலாவுல வடை சுடுற பாட்டியும் குரங்குக் குட்டிகளும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories

அவங்க தலைமேல பிளாக் கலர் பெட்ஷீட் போட்டிருந்ததால நாய்களுக்கு மொதல்ல சரியா தெரியலை. ஆனா, அவங்க அசையுறதை வெச்சுக் கண்டுப்பிடிச்சுட்டு லொள் லொள்ளுன்னு குரைக்க ஆரம்பிச்சிதுங்க. நாய்களோட சத்தத்தைக் கேட்டு விவசாயி கண்ணு முழிச்சிட்டார். உடனே `ஏய் ஏய்'னு கத்திக்கிட்டு வயலுக்குள்ள அவர் இறங்க, திருடனுங்க நெல்லையெல்லாம் போட்டுட்டு அவரை ஓங்கி அடிச்சிட்டு ஓடிட்டாங்க. விவசாயி அப்படியே கீழே விழுந்துட்டாரு. அதனால, அவருக்கு பலமா அடிப்பட்டுடுச்சு. அவரை செக் பண்ண டாக்டர்ஸ் `கொஞ்ச நாள் அவரு எந்த வேலையும் செய்யாம இருக்கணும்'னு சொல்லிட்டாரு. இதைக் கேட்டு நாய்களும் கோழிகளும் `ஓ'ன்னு அழ ஆரம்பிச்சிதுங்க.

நான் வேலை செய்யாம இருந்தா என் குடும்பத்தையும் என் குழந்தைகள் மாதிரி இருக்கிற நாய்களையும் கோழிகளையும் யாரு காப்பாத்துவான்னு யோசிச்ச விவசாயி, டாக்டர் சொன்னதைக் கேட்காம மறுநாளே வயலுக்கு வேலைபார்க்கப் போயிட்டாரு. ஆனா, அவருக்கு உடம்பு சரியில்லாததால மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. விவசாயியோட நிலைமையைப் பார்த்த ரெண்டு நாய்களும் அவரைத் தூக்கி ஒரு மரத்தடியில படுக்க வெச்சுதுங்க. கோழிகள் ரெண்டும் அவர் முகத்துல தண்ணி தெளிச்சு, தங்களோட றெக்கைகளால விசிறி விட்டு மயக்கத்தைப் போக்குச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
குட்மார்னிங் கேட்ட அப்பாவி சிங்கம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 23

இந்தச் சம்பவத்துக்கு அப்புறம், விவசாயியை ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு, நாய்களும் கோழிகளும் விவசாயம் செய்ய ஆரம்பிச்சிதுங்க. ரெண்டு நாய்களும் ஏர் மாடுகளைக் கட்டி உழுதா, கோழிகள் மண்ணுல நெல்லை விதைக்கும். அப்புறம் களைகளும் எடுக்குங்க. கோழிங்க களை எடுக்கிறப்போ அதுங்களோட கண்கள்ல தட்டுப்படுற சில மண்புழுக்கள், `கோழியக்கா நாங்களும் உங்க விவசாயியோட ஃபிரெண்ட்தான். இனிமே நீங்க எங்களைச் சாப்பிடக் கூடாது'ன்னு சொல்லிட்டு கெக்கபிக்கேன்னு சிரிச்சதுங்க. அதுங்களோட சேர்ந்து நாய்களும் கோழிகளும் ஹாஹ்ஹான்னு சிரிச்சதுங்க. இப்போல்லாம் அந்த வயல்வெளியில சிரிப்பு சத்தம் மட்டும்தான் கேட்குது.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு