இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...
பச்சைப்பசேல்னு ஓர் அழகான புல்வெளி. அதுக்கு நடுவுல வாசனையான ஒரு மல்லிகைப்பூ செடியும் ஒரு மஞ்சள் நிற ரோஜாச் செடியும் ஜாலியா பூத்துக் குலுங்கிட்டு இருந்துச்சுங்க. ஒரு மழை காலத்துல வெள்ளத்துல அடிச்சிட்டு வந்த மல்லிச்செடியையும் ரோஜா செடியையும், புற்களெல்லாம் ஒண்ணு சேர்ந்து காப்பாத்தி தங்களுக்கு நடுவுல நட்டு வெச்சுக்கிச்சுங்க. அந்தப் புல்வெளியை யாரு கிராஸ் பண்ணிப் போனாலும் 'ஆஹா, மல்லிப்பூ வாசனை வருதே'ன்னு சுத்து முத்தும் தேடிப் பார்ப்பாங்க. உடனே புல்வெளி மொத்தமும் ஒண்ணு சேர்ந்து மல்லிகைச் செடியை மறைச்சிக்குங்க. மல்லிப்பூ வாசனையை ஸ்மெல் பண்ணவங்க செடியைக் காணாம ஏமாந்துப் போயிடுவாங்க. இதே மாதிரி மஞ்ச ரோஜா செடி தன்னோட கிளையில அழகான ஒரு ரோஜா பூவைப் பூத்துச்சுன்னா, அதைச் சுத்தியிருக்கிற புற்கள் உடனே யார் கண்ணுக்கும் தெரியாத மாதிரி அந்தப் பூவை மறைச்சுக்குங்க. தங்களுக்கு நடுவுல இருக்கிற அழகான ரெண்டு செடியை யாரும் பறிச்சிட்டுப் போயிடக்கூடாதுன்னுதான் புற்கள் இப்படி நடந்துக்கிச்சுங்க.

ஒருதடவை மல்லிகைச் செடியில கொத்துக்கொத்தாக எக்கச்சக்க பூக்கள் பூத்துச்சு. அதே நேரத்துல ரோஜா செடியிலேயும் நிறைய மொட்டுவிட்டு செடி நிறைய ரோஜாக்கள் பூத்திருந்துச்சு. இந்த நேரத்துல, மல்லிச்செடிக்கும் ரோஜா செடிக்கும் 'தாங்கள்தான் பெஸ்ட்' அப்படிங்கிற எண்ணம் வர ஆரம்பிச்சது. மல்லிச்செடி, ரோஜா செடியைப் பார்த்து 'என்னாலதான் இந்தப் புல்வெளியே வாசனையா இருக்குது'ன்னு பெருமையா சொல்லுச்சு.
அதுக்கு ரோஜா செடி, 'வாசனை மட்டும் இருந்து என்ன யூஸ். நான் பாரு எவ்ளோ அழகா இருக்கேன்'னு கர்வமா பதிலடி கொடுத்துச்சு. மல்லிச்செடிக்கு வந்துச்சே கோவம். 'உடம்பு பூரா முள்ளு வெச்சுக்கிட்டு என்னையா கிண்டல் பண்றே நீ' அப்படின்னு சண்டை போட ஆரம்பிச்சது. ரோஜா செடி மட்டும் சும்மா இருக்குமா... 'நான் பாரு மஞ்ச நிறத்துல பூ பூத்து எவ்ளோ அழகா இருக்கேன். உன் பூவும்தான் இருக்கே நிறமே இல்லாம வெள்ள வெளேர்னு' அப்படின்னு பதிலுக்கு மல்லிச்செடியைக் கிண்டல் பண்ணுச்சு. இப்படியே ரெண்டும் மாத்தி மாத்திப் பேச சண்டை பெருசாயிடுச்சு.

இந்தச் சண்டையை எல்லாம் வேடிக்கை பார்த்துட்டிருந்த புற்கள், 'தயவுசெஞ்சு ரெண்டு பேரும் சண்டையை நிறுத்துங்க. நீங்க ரெண்டுமே அழகான பூக்கள்தான், வாசனையான பூக்கள்தான். அதனாலதான், நீங்க ரெண்டு பேரும் மழைத்தண்ணியில அடிச்சிட்டு வந்தப்போ உங்களைக் காப்பாத்தி எங்களுக்கு நடுவுல பத்திரமா வளர்த்துட்டு வந்தோம். இது தெரியாம இப்படிச் சண்டை போடுறீங்களே'ன்னு வருத்தப்பட்டுச்சுங்க. ஆனா, இதையெல்லாம் கண்டுக்கிற மனநிலைமையில மல்லிச்செடியும் இல்ல, ரோஜா செடியும் இல்ல. நீ பெஸ்ட்டா, நான் பெஸ்ட்டான்னு தங்களோட சண்டையைத் தொடர்ந்துக்கிட்டே இருந்துச்சுங்க.
இந்த சண்டையைப் பார்த்த புற்களுக்கு அழுகையே வந்துடுச்சு. அன்னிக்கு ராத்திரி மல்லிச்செடியும் ரோஜா செடியும் தூங்கின பிறகு, எல்லா புற்களும் ஒண்ணு சேர்ந்து பேச ஆரம்பிச்சிதுங்க. 'மல்லிச்செடி, ரோஜா செடி ரெண்டுமே அழகுங்கிறதாலதான் நாம அதுங்களை மத்தவங்க கண்ணுக்குத் தெரியாம நமக்கு நடுவுல மறைச்சு மறைச்சு வளர்த்தோம். அதனாலதான், அதுங்களோட அழகையும் வாசனையையும் யாரும் இதுவரைக்கும் பாராட்டலை. அதோட விளைவுதான் இப்போ ரெண்டு செடியும் யார் பெஸ்ட்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்குதுங்க. இதுக்கெல்லாம் காரணம் நாமதான். நாளைக்கே நாமெல்லாரும் மல்லிச்செடியையும் ரோஜா செடியையும் மறைக்காம ஒதுங்கி நின்னுக்கலாம். மனுஷங்க யாராவது அதுங்களைக் கொண்டு போய் அவங்க வீட்ல வளர்க்கட்டும்'னு முடிவு பண்ணுச்சுங்க.

மறுநாள் காலையில, மல்லிச்செடியும் ரோஜா செடியும் கண் விழிக்கிறப்போ புற்களெல்லாம் அதுங்களை விட்டு தள்ளி இருந்துச்சுங்க. கொஞ்ச நேரத்துல அந்தப் பக்கமா வந்த ரெண்டு பேர் ஆளுக்கொரு செடியா எடுத்துட்டு போய் அவங்க வீட்ல வளர்க்க ஆரம்பிச்சாங்க. அந்த ரெண்டு பேருமே பக்கத்து பக்கத்து வீட்டுக்காரங்க அப்படிங்கிறதால, மல்லிச்செடியை வளர்க்கிறவங்க அதைப் பாராட்டறதை ரோஜா செடி பார்த்துச்சு. அதே மாதிரி ரோஜா செடியை வளர்க்கிறவங்க அதைப் பாராட்டறதை மல்லிச்செடி பார்த்துச்சு. இப்போ அதுங்க ரெண்டுத்துக்குமே நாம ரெண்டு பேருமே பெஸ்ட்தாங்கிற உண்மை தெரிஞ்சுபோச்சு. இப்போ ரெண்டு செடியும் ரொம்ப நல்ல ஃபிரெண்ட்ஸாகிடுச்சுங்க.
- நாளை சந்திக்கலாம்.
தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.