அலாரம் குயிலும் `ஆங்ரி பேர்டு' ஆந்தையும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 6

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் விகடன்.காமில் இரவு 7 மணிக்கு வெளியாகின்றன #BedTimeStories.
ஒரு காட்டுல பெரிய அத்தி மரம் ஒண்ணு இருந்துச்சு. அதுல கிளி, மைனா, தூக்கணாங்குருவி, மரங்கொத்தி, ஆந்தை, குயில், மயில்னு நிறைய பறவைகள் வாழ்ந்துட்டு வந்துச்சு. அந்த மரத்துல இருக்கிற அத்தனை பறவைகளுக்கும் குயில்தான் அலாரம். அதிகாலையில குயில் எழுந்திருச்சு கூ கூன்னு குரல் எழுப்பினதும் மரத்துல இருக்கிற மத்த பறவைகள் எல்லாம் தூக்கம் கலைஞ்சு றெக்கையை பட படன்னு அடிச்சு சோம்பல் முறிக்குங்க. இப்படி எல்லா பறவைகளும் காலையில சீக்கிரமே எழுந்திருக்கிறதாலே டயத்துக்கு இரை தேடி கிளம்பிடுங்க. காலையில நேரத்துக்கு எழுந்திரிச்சு வேலைகளை ஆரம்பிக்கிறதால அந்த அத்தி மரத்துல இருக்கிற பறவைகள் அவங்கவங்க வேலைகள்ல பெஸ்ட்டா இருந்ததோட, இருட்டறதுக்கு முன்னாடியே தங்களோட கூடுகளுக்கு பத்திரமா வந்து சேர்ந்துடுங்க.

இப்படி எல்லா பறவைகளும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்த காலத்துல ஆந்தை மூலமா ஒரு பிரச்னை வந்துச்சு. ஆந்தை இரவு நேரத்துலதான் இரை தேடும்னு உங்க எல்லாருக்கும் தெரியும்தானே. தினமும் நைட்ல இரை தேடிட்டு வர்றதால, ஆந்தை பொழுது விடிஞ்சப்புறமும் தூங்கிட்டே இருக்கும். குயில் கூவி எல்லா பறவைகளையும் எழுப்புறப்போ ஆந்தைக்கும் தூக்கம் கலைஞ்சிடும். இதன் காரணமா குயில் மேல எப்பவும் கோவமாவே இருக்கும் ஆந்தை.
ஒருநாள் நைட்டு பூரா அலைஞ்சு திரிஞ்சும் வயிறு நிறைய சாப்பாடு கிடைக்காத வருத்தத்தோட தூங்கிட்டு இருந்துச்சு ஆந்தை. வழக்கம்போல குயில் கூ கூன்னு குரலெழுப்பி எல்லா பறவைகளையும் எழுப்பிவிட, ஆந்தைக்கு வந்துச்சே கோவம்.

விறுவிறுன்னு குயில் நின்னுக்கிட்ட இருந்த கிளைகிட்ட வந்துச்சு. `இப்படிக் கத்திக் கத்தி தினமும் என் தூக்கத்தைக் கெடுக்கிறியே'ன்னு ஆந்தை திட்ட, குயிலுக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சு. நம்ம நண்பர்களுக்கு உதவி செய்யத்தானே கூவினோம். இந்த ஆந்தை எல்லார் முன்னாடியும் இப்படி திட்டுதேன்னு கண்கலங்கிட்டே மரத்தைவிட்டுப் பறந்துபோயிடுச்சு. இதைப் பார்த்த ஆந்தைக்கு `அடடா இப்படி குயிலை அவமானப்படுத்திட்டோமே'ன்னு குற்றவுணர்வு வந்துடுச்சு.
என்ன செய்யுறதுன்னு தெரியாம மத்த பறவைகள் எல்லாம் மலைச்சு நின்னுக்கிட்டிருக்க, தூக்கணாங்குருவி முன்னாடி வந்து பேச ஆரம்பிச்சது. பறவை நண்பர்களே, குயில் நமக்காகத்தான் கூவுச்சு. ஆந்தையோ இரவெல்லாம் உழைச்சுட்டு வந்து சரியா தூங்க முடியாததாலதான் குயில் மேல கோவப்பட்டுச்சு. அதனால, நாம இவங்க ரெண்டு பேரையுமே விட்டுக் கொடுக்க முடியாது. அதனால, கிளியாரே நீங்க போய் குயிலை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வாங்க. ஆந்தையாருக்கு நாமெல்லாரும் சேர்ந்து சத்தம் கேட்காதபடிக்கு ஒரு கூடு கட்டித்தருவோம்னு சொல்லுச்சு. இந்த ஐடியாவுக்கு அத்தி மரத்துல இருந்த அத்தனை பறவைகளும் சந்தோஷமா யெஸ் சொல்ல, கிளி குயிலைத் தேடிப் பறக்க ஆரம்பிச்சது.

ஆந்தைக்குக் கூடு கட்டறதுக்காக எல்லா பறவைகளும் தங்களோட ஒரு இறகை பிச்சுக் கொடுத்திச்சிங்களாம். கிளியோட அத்தி மரத்துக்குத் திரும்பி வந்த குயிலும் தன் பங்குக்கு ஒரு இறகைக் கொடுக்க, ஆந்தை பறந்து வந்து குயிலை கட்டிப்பிடிச்சிக்கிட்டு `என்னை மன்னிச்சிடு ஃபிரெண்ட்'னு சொல்லி அழுதுச்சு. அப்புறம் தூக்கணாங்குருவியும் தையல் சிட்டும் சேர்ந்து பறவை இறகுகளால சத்தமே கேட்காத ஒரு கூட்டைக் கட்ட, அப்பாடான்னு அதுக்குள்ள போய் தூங்க ஆரம்பிச்சுதாம் ஆந்தை. அதுக்கப்புறம் அந்த அத்தி மரத்துல வாழ்ந்த பறவைகளுக்கு மத்தியில சண்டையே வரலையாம்.
- நாளை சந்திக்கலாம்!
தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் விகடன்.காமில் இரவு 7 மணிக்கு வெளியாகின்றன #BedTimeStories.