Published:Updated:

அழுமூஞ்சி கம்பளிப்பூச்சி; சிரிக்க வெச்ச சித்தெறும்பு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? - 15

BedTimeStories
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

ஒரு ஊர்ல வாழைத்தோப்பு ஒண்ணு இருந்துச்சாம். அந்தத் தோப்புக்குள்ள நிறைய பூச்சிகள் சந்தோஷமா வாழ்ந்துட்டு வந்துச்சாம். அதுல ஒரு வெட்டுக்கிளி, ஒரு தும்பி, ஒரு கம்பளிப்பூச்சி, ஒரு வண்ணத்துப்பூச்சி, ஒரு சித்தெறும்பு ஆகிய அஞ்சும் ரொம்ப ரொம்ப குளோஸ் ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்களாம். அஞ்சும் வாழையிலைகள்ல சறுக்கு மரம் விளையாடுமாம். வாழை மரங்களோட உச்சியில நின்னுகிட்டு அங்கே இருந்து தலைகீழா டைவ் அடிக்குமாம். சில நேரம் அஞ்சும் வானத்துல `சர் சர்'னு வேகமா பறந்து என்ஜாய் செய்யுமாம். கம்பளிப்பூச்சியும் சித்தெறும்பும் எப்படிப் பறக்கும்னுதானே யோசிக்கிறீங்க? வெட்டுக்கிளி மேல கம்பளிப்பூச்சி ஏறிக்கும். வண்ணத்துப்பூச்சி மேல சித்தெறும்பு ஏறிக்கும். இப்படி நாள் முழுக்க அஞ்சும் விதவிதமா விளையாடும். டயர்டாகிட்டா வாழைப்பூவுல இருக்கிற தேனைக் குடிச்சிட்டு ஜம்முனு தூங்க ஆரம்பிச்சிடுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒருநாள் வழக்கம்போல அஞ்சும் விளையாடி விளையாடி களைச்சுப்போய், ஒரே வாழையிலையில படுத்துகிட்டு குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருந்துச்சுங்க. அப்போ யாரோ மெதுவா அழற சத்தம் கேட்டு வெட்டுக்கிளி முழிச்சுக்கிச்சு. சுத்தும் முத்தும் தலையைத் திருப்பி யாரு அழுறாங்கன்னு தேடுச்சு. அது கண்ணுக்கு யாருமே தெரியல. மறுபடியும் அது படுத்துத் தூங்க ஆரம்பிச்சிடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் யாரோ அழுற சத்தம் கேட்க, இந்த முறை தும்பியும் வண்ணத்துப்பூச்சியும் முழிச்சிக்கிச்சுங்க. அழுகை சத்தம் ரொம்ப பக்கத்துல கேட்குது. ஆனா, யார் அழுறான்னு தெரியலையேன்னு ரெண்டும் தேடிப் பார்த்துச்சுங்க. ஆனா, அதுங்க கண்களுக்கும் யாரும் தென்படலை. அதுங்களும் அமைதியா படுத்துத் தூங்கிடுச்சிங்க.

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் அழுற சத்தம். இந்த முறை சித்தெறும்பு முழிச்சுக்கிச்சு. உடம்பை நெளிச்சு சோம்பல் முறிச்சுக்கிட்ட சித்தெறும்பு, அழுகை சத்தம் எந்தப் பக்கத்துல இருந்து வருதுன்னு தேடுச்சாம். அதோட கண்ணுக்கும் யாரும் தட்டுப்படல. சரி, பக்கத்துல படுத்துக்கிட்டிருந்த கம்பளிப்பூச்சியை எழுப்பலாம்னு சித்தெறும்பு தேட, அங்க கம்பளிப்பூச்சியைக் காணோம். `அச்சச்சோ, வாழையில இருந்து வழுக்கி விழுந்துடுச்சுபோல'ன்னு பயந்த சித்தெறும்பு, பக்கத்துல தூங்கிட்டிருந்த தன்னோட நண்பர்களை எந்திரிங்க எந்திரிங்கன்னு உலுக்கி எழுப்பிடுச்சு. சித்தெறும்பு உலுக்குன வேகத்துல வெட்டுக்கிளியும் வண்ணத்துப்பூச்சியும் பதறிப்போய் எழுந்து உட்கார்ந்ததுங்க. தும்பி மட்டும் அப்பவும் கொர் கொர்னு குறட்டைவிட, அதோட வால் மேல சப்புனு ஒரு அடி வெச்சுது சித்தெறும்பு. அவ்வளவுதான், தும்பியும் தூக்கம் கலைஞ்சு எழுந்துக்கிச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
பொய் சொன்ன கிளிக்குஞ்சு; காப்பாற்றிய பருந்து... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories -12

உடனே சித்தெறும்பு, `நம்மளோட கம்பளிப்பூச்சி நண்பனைக் காணோம். இலையில இருந்து வழுக்கி விழுந்திட்டானான்னு தெரியல. வாங்க எல்லாரும் கீழ போயி தேடிப் பார்ப்போம்னு சொல்லுச்சு. உடனே நாலும் வாழையிலையை விட்டுக் கீழ இறங்கி கம்பளிப்பூச்சியைத் தேட ஆரம்பிச்சதுங்க. அப்போ ஒரு குட்டி வாழை மரத்து மேல படுத்துக்கிட்டு அழுதுக்கிட்டிருந்த கம்பளிப்பூச்சியை நாலு நண்பர்களும் பார்த்துச்சிங்க. `அச்சோ நண்பா, உனக்கு என்னாச்சுன்னு வெட்டுக்கிளி ஓடிப்போய் கம்பளிப்பூச்சியைத் தூக்கி தன்னோட மடியில படுக்க வெச்சுக்கிச்சு. வண்ணத்துப்பூச்சி தன்னோட சிறகால கம்பளிப்பூச்சியோட கண்ணீரைத் துடைச்சு விட்டுச்சு. தன்னோட இறக்கைகளால விசிறி விட்டுச்சு தும்பி. கம்பளிப்பூச்சியோட எல்லா கால்களையும் பிடிச்சி விட்டுச்சு சித்தெறும்பு. நண்பர்களோட அன்பால கொஞ்சம் ரிலாக்ஸான கம்பளிப்பூச்சி எழுந்து உட்கார்ந்துச்சு.

வெட்டுக்கிளி, வண்ணத்துப்பூச்சி, தும்பி, சித்தெறும்பு நாலும் ஒரே குரல்ல `ஏன் நண்பா அழுதுகிட்டு இருந்தே'ன்னு கேட்டுச்சுங்க. அதுக்கு கம்பளிப்பூச்சி என்ன பதில் சொல்லுச்சு தெரியுமா? `ஃபிரெண்ட்ஸ், என் உடம்பு மேல இருக்கிற இந்த முள்ளுங்களை எனக்குப் பிடிக்கவே இல்ல. என்னைத் தூக்கிட்டு பறக்கிறப்போ எல்லாம் வெட்டுக்கிளியோட முதுகுல என் உடம்புல இருக்கிற முள்ளுங்க குத்தி காயமாக்கிடுது. என் உடம்புல இருக்கிற முள்ளுங்களை எப்படி எடுக்கிறது ஃபிரெண்ட்ஸ்' அப்படின்னு கேட்டுட்டு மறுபடியும் அழ ஆரம்பிச்சது கம்பளிப்பூச்சி.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
அன்பான மான்களும் அம்மா சிங்கமும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 14

`உன்னோட முள்ளுங்க என்னைக் குத்தவே இல்ல' நண்பான்னு சமாளிச்சது வெட்டுக்கிளி. வண்ணத்துப்பூச்சியோ, `கம்பளி பெட்ஷீட் மாதிரி உன்னோட உடம்பு எவ்வளவு அழகானது தெரியுமா நண்பா' அப்படின்னு கம்பளிப்பூச்சியை சமாதானப்படுத்துச்சு. `உன் உடம்புல இருக்கிற முள்ளுதான் நண்பா இலைகளை டைட்டா பிடிச்சிக்கிது. அதனாலதான், நீ மரத்துல மேல இருந்து கீழ விழாம இருக்க'ன்னு புத்திசாலித்தனமா பேசுச்சு தும்பி. ம்ஹூம்... எதுக்குமே சமாதானமாகல கம்பளிப்பூச்சி. நடக்கிறது எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருந்த சித்தெறும்பு, `மை டியர் கம்பளிப்பூச்சி நீ இப்ப சிரிப்பியா, மாட்டியா'ன்னு கேட்டுச்சு. மாட்டேன்னு தலையை வேகமா ஆட்டி மறுத்துச்சு கம்பளிப்பூச்சி. உடனே கம்பளிப்பூச்சி மேல ஏறி கிச்சு கிச்சு மூட்ட ஆரம்பிச்சது சித்தெறும்பு. அவ்வளவுதான், கலகலன்னு சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு. கம்பளிப்பூச்சி சிரிக்க ஆரம்பிச்சதும் நண்பர்கள் அஞ்சு பேரும் மறுபடியும் ஊரைச் சுத்த கிளம்பினாங்க. வழக்கம்போல வெட்டுக்கிளி மேல சவாரி செஞ்சுச்சாம் கம்பளிப்பூச்சி.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு