Published:Updated:

பயந்தாங்கொள்ளி புலிக்குட்டி, `படிப்ஸ்' நரிக்குட்டி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories

BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

பயந்தாங்கொள்ளி புலிக்குட்டி, `படிப்ஸ்' நரிக்குட்டி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Published:Updated:
BedTimeStories ( Photo: Pixabay )

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு காட்டுல புலிக்குடும்பம் ஒண்ணும் நரிக்குடும்பம் ஒண்ணும் நல்ல ஃபேமிலி ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்க. புலிக்குடும்பம் வாழுற குகைக்கு நரிக்குடும்பம் டின்னருக்கு போறதும், வீக் எண்டுல ரெண்டு குடும்பங்களும் சேர்ந்து ஆத்தோரத்துல ஒண்ணா சாப்பிடுறதும், புலிக்குட்டிகளும் நரிக்குட்டிகளும் சாயங்கால நேரத்துல ஒண்ணு சேர்ந்து விளையாடுறதும் பார்க்கிறதுக்கு அவ்ளோ இனிமையா இருக்கும். நரிக்கு புத்தக வாசிப்புல ஆர்வம் அதிகம். புலிக்கோ புத்தக வாசிப்புல கொஞ்சம்கூட ஈடுபாடு கிடையாது. `புலி நண்பா, நீ புத்தகம் வாசிச்சாதான் உன்னோட குழந்தைகளும் புத்தகம் வாசிப்பாங்க. வாசிப்பு பழக்கம் இருக்கிற குழந்தைகள், பின்னாள்ல பெரிய அறிவாளிகளா வளருவாங்க'ன்னு சொல்லும் நரி.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அதுக்கு புலி, `நான் வீரன் நண்பா. என்னோட உறுமல் சத்தம் கேட்டா இந்தக் காடே பயப்படுது. இவ்வளவு ஏன் என்னோட குட்டிகளைப் பார்த்துகூட மத்த விலங்குகள் பயப்படுது. இதெல்லாம் புத்தகம் படிச்சா கிடைச்சது. உன்னோட அறிவைவிட என்னோட வீரம்தான் சிறந்தது'ன்னு கூலா சொல்லிட்டுப் போயிடும். நரிக்கு இதைக் கேட்கிறப்போ ரொம்ப வருத்தமா இருந்தாலும், ஏதாவது ஒரு சூழ்நிலையில அவனே வாசிப்பு பழக்கம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சிப்பான்னு விட்டுடும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புலி தைரியசாலிதான். ஆனா, அதுக்கும் ஒரு பயம் இருந்துச்சு. யானையைப் பார்த்தா அது ரொம்ப பயப்படும். புலி தன்னை பெரிய வீரன்னு காட்டுல பில்டப் கொடுத்து வெச்சிருந்த தாலேயும், அதை மத்த விலங்குகள் நம்புறதாலேயும், இந்த ரகசியத்தைத் தன்னோட நெருக்கமான நண்பன் நரிக்குக்கூட தெரியாத மாதிரி பார்த்துக்கிச்சு புலி. ஆனா, புலியோட இந்த வீக்னஸை தெரிஞ்ச யானை ஒண்ணு காட்டுக்குள்ள இருந்துச்சு. அது ரொம்ப கெட்ட யானை. தானுண்டு, தன் வேலையுண்டுன்னு இருக்கிற சின்ன விலங்குகளைக்கூட தும்பிக்கையால அடிச்சு தொல்லை கொடுக்கும். அதனால, அதைப் பார்த்தாலே மத்த விலங்குகள் பத்தடி தள்ளிப் போயிடுங்க. அந்த யானையோட கண்ணுல நம்ம நரி இதுவரைக்கும் படாததால, அதோட கெட்ட குணம் பத்தியோ, அதைப் பார்த்து தன்னோட நண்பன் புலி பயப்படுறது பத்தியோ அதுக்கு எதுவுமே தெரியாது.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒருநாள் சாயங்காலம் தன்னை மீட் பண்றதா சொல்லியிருந்த புலிக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்துச்சு நரி. ரொம்ப நேரம் கழிச்சு மூச்சுவாங்க அந்த இடத்துக்கு வந்துச்சு புலி. `என்னாச்சு நண்பா. ஏன் இப்படி ஓடி வர்றே. உன் கண்கள்ல ஒரு பயம் தெரியுதே... உன்னை மாதிரி தைரியசாலிக்குக்கூட பயம் வருமா'ன்னு பதற்றமா கேட்டுச்சு நரி. அதுக்கு புலி, `பயமா, எனக்கா? நீ நிறைய படிச்சுப் படிச்சு தேவையில்லாம யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன். வேகமா நடந்தா வெயிட் குறையுமேன்னு கொஞ்ச தூரம் ஓடி வந்தேன். நீ நினைக்கிற மாதிரில்லாம் பயமெல்லாம் ஒண்ணுமில்ல'ன்னு மழுப்பிடுச்சு. ஆனா, மனசுக்குள்ள `நரி என்னோட நல்ல நண்பன் இல்லையா. அதான் நான் சொல்லாமலே என்னோட பயத்தைக் கண்டுபிடிச்சிட்டான். எனக்குக் கிடைச்ச மாதிரி இந்தக் காட்டுல யாருக்கும் நண்பன் கிடைச்சிருக்க மாட்டான்'னு பெருமையா புலி நினைச்சுக்கிச்சு.

இதே நேரம், நரி என்ன பண்ணுச்சு தெரியுமா? ஒண்ணும் நடக்கலைன்னு சொன்னாலும் என் நண்பன் புலியோட கண்ணுல பயம் தெரிஞ்சது உண்மை. அதனால, நாளைக்கு என்னோட எல்லா வேலைகளையும் ஒத்தி வெச்சுட்டு, புலியை ஃபாலோ பண்ணணும்னு தீர்மானம் பண்ணிக்கிச்சு. மறுநாள் புலிக்குத் தெரியாம அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சது நரி. புலி நடந்து போய்கிட்டே இருக்க, நைசா வந்த யானை அதுக்குத் தெரியாம தும்பிக்கையால புலியை `டப்பு'ன்னு ஓர் அடி வெச்சது. உடனே புலி பயந்துபோய் ஓட ஆரம்பிச்சது. நடந்ததையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த நரி, யானைகிட்ட போய் `என் நண்பன் உன்னை எதுவும் தொல்லை பண்ணாதப்போ அவனை எதுக்கு நீ அடிச்சே'ன்னு கோபமா கேட்டுச்சு. யானை அதுக்கு `நான் விளையாட்டுக்குத்தான் அடிச்சேன். உன் நண்பன் பயந்தாங்கொள்ளியா இருக்கான்'னு சொல்லிட்டு அங்கிருந்து போயிடுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

இதுக்கொரு முடிவு கட்டணும்னு தீர்மானம் செஞ்சுக்கிட்டு நரி அதோட வளைக்குப் போயிடுச்சு. புலிக்கோ, எத்தனை நாளைக்கு இந்த யானைக்கு பயப்பட்டுட்டே இருக்கிறது. இன்னிக்கு நம்ம நண்பன் நரிக்கிட்ட நடந்ததையெல்லாம் சொல்லி, ஏதாவது தீர்வு கேக்கணும். என் நண்பன்கிட்ட எனக்கு எதுக்கு வெட்கம்'னு முடிவு பண்ணிக்கிட்டு நரியோட வளைக்குப் போச்சு. அங்க வழக்கம்போல புத்தகம் படிச்சிக்கிட்டிருந்த நரி, புலியைப் பார்த்ததும் வளையை விட்டு வெளியே வந்துச்சு.

உடனே புலி, `என்னை மன்னிச்சிடு நண்பா. எத்தனையோ முறை என்னை பெரிய வீரன்னு உன்கிட்ட பெருமை பேசியிருக்கேன். இந்தக் காட்டுல இருக்கிற ஒரு வம்பு பிடிச்ச யானையைப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அதுகிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு எனக்கு ஏதாவது ஐடியா சொல்லேன்'னு கேட்டுச்சு. அதுக்கு நரி, உன் பின்னாடியே வந்து நானும் அந்த யானையைப் பார்த்தேன் நண்பா. அதுதொடர்பாதான் ஏதாவது தகவல் கிடைக்குமான்னு புத்தகங்கள்ல தேடிக்கிட்டிருந்தேன். நீயும் வந்துட்டே. கொஞ்ச நேரம் உட்காரு'ன்னு சொல்லிட்டு, மறுபடியும் படிக்க ஆரம்பிச்சது. புலி, தன்னோட நண்பனை ஆர்வமா பார்த்துட்டே இருந்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

நரி விடிய விடிய நிறைய புத்தகங்களைப் படிச்சிட்டே இருந்துச்சு. புலி தன்னையும் அறியாம தூங்கிடுச்சு. பொழுது விடிஞ்சதும் `நண்பா புலி, திருக்குறள்ங்கிற புத்தகத்துல `யானை பெரிய உருவமா இருந்தாலும், கூர்மையான தந்தங்கள் வெச்சிருந்தாலும் தைரியமான புலியைப் பார்த்தா பயப்படும்'னு எழுதியிருக்கு. நாளைக்கு அந்த யானை உன்கிட்ட வர்றப்போ தைரியமா உறுமு' அப்படின்னுச்சு. நரி சொன்ன மாதிரியே மறுநாள் நடந்துக்கிச்சு புலி. யானை 'அச்சோ இந்தப் புலி என்னைப் பார்த்து ஓடாம தைரியமா உறுமுதே'ன்னு பயந்துட்டு அங்கிருந்து ஓடியே போச்சு.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.