Published:Updated:

கடவுளும் குட்டிப் பாப்பாவும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 50

Moon
Moon ( Image by Syaibatul Hamdi from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையைக் குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

முன்னொரு காலத்துல வானம், பூமி, சூரியன், நிலா இப்படி எதுவுமே இல்ல. கடவுள் மட்டுமே தனியா உட்கார்ந்திட்டிருந்தாராம். தனிமையில இருக்கிறது கடவுளுக்கு போரடிச்சுப் போச்சு. என்ன பண்றதுன்னு யோசிச்சவர் தன்கூட விளையாடுறதுக்காக ஒரு குட்டிப் பாப்பாவை உருவாக்கினார். குட்டிப் பாப்பா பால் குடிக்கிறதுக்காக ஆடு, மாடு ரெண்டையும் உருவாக்கினார். பால் குடிச்சு குடிச்சு போரடிச்சு போன பாப்பா `எனக்கு தினமும் சாப்பிட புதுப்புது சாப்பாடு வேணும்'னு கேட்டா. கடவுள் உடனே அரிசி, பருப்பு, காய்கறிச் செடிகள்னு படைச்சார். இதையெல்லாம் மொதல்ல ஆசை ஆசையா சாப்பிட்ட குட்டிப் பாப்பா கொஞ்ச நாள் கழிச்சு 'எனக்கு இனிப்பா சாப்பிட வேண்டும்'னு கேட்டா. கடவுள் உடனே பழ மரங்களை நட்டு வளர்க்க ஆரம்பிச்சார். அந்த மரங்கள்ல தானே ஏறி பழங்களைப் பறிச்சு சாப்பிட ஆரம்பிச்சா அந்தக் குட்டிப் பாப்பா.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

குட்டிப் பாப்பா கேட்டதையெல்லாம் கடவுள் கொடுத்துட்டதால, பாப்பா எந்நேரமும் சாப்பிடுறது, விளையாடுறதுன்னு சந்தோஷமா இருந்தா. ஒருநாள், `என்னைச் சுத்தி ஒரே இருட்டா இருக்கு. என்னால பார்க்க முடியுதுன்னாலும் இந்த இருட்டு எனக்குப் பிடிக்கலை'ன்னு சொன்னா குட்டிப் பாப்பா. கடவுள் ரெண்டு கல்லை பாப்பாகிட்ட கொடுத்துட்டு `இனி உனக்குத் தேவையானதை நீயே உருவாக்கிக்கோ'ன்னு சொன்னார். பாப்பா அந்த ரெண்டு கல்லையும் உரசினா. அதுல இருந்து வந்த பெரிய நெருப்புப் பொறியை தன்னோட தலைக்கு மேல தூக்கிப் போட்டா. அந்த நெருப்பு மேலே மேலே ரொம்ப மேலே போச்சு. அது ரொம்ப தூரம் போனதும் `அங்கேயே நில்லு'ன்னு பாப்பா சொன்னதும், அது அங்கேயே நின்னுடுச்சு. அது மேல நின்னதும் பாப்பாவை சுத்தி நல்ல வெளிச்சம் வந்துடுச்சு.

வெளிச்சம் வந்ததும் பாப்பாவுக்கு ரொம்ப குஷியாகிடுச்சு. இன்னும் ஜாலியா விளையாட ஆரம்பிச்சா. ரொம்ப நேரம் வானத்துலேயே நின்னுக்கிட்டிருந்த அந்தப் பெரிய நெருப்பு `பாப்பா பாப்பா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. எனக்குக் கொஞ்சம் ஓய்வுக் கொடேன்'னு கேட்டுச்சு. `தர மாட்டேன் போ'ன்னு சொல்லிட்டு பாப்பா ஓட, ஒரு கல்லுத் தடுக்கி கீழ விழுந்துட்டா. வலி தாங்க முடியாம பாப்பா அழ ஆரம்பிக்க, அவளோட கண்ணீர் தரையில கொட்டி ஓட ஆரம்பிச்சிது. மேல இருந்த பெரிய நெருப்பு இதைப் பார்த்துட்டு பதறிப்போய் கீழ வந்துச்சாம். வந்த வேகத்துல தவறிப்போய் பாப்பாவோட கண்ணீர்ல விழுந்ததும் அதுக்கு ஜில்லுன்னு இருந்துச்சாம். `பாப்பா பாப்பா நான் கொஞ்ச நேரம் இதுலேயே ரெஸ்ட் எடுத்துக்கட்டுமா'ன்னு பெரிய நெருப்புக் கேட்க, பாப்பாவும் ஓகே சொன்னாளாம்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
குயில்களுக்கு கூடு கட்டிக்கொடுத்த காக்கைகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 48

இப்போ மறுபடியும் அவளைச் சுத்தி இருட்டாயிடுச்சு. பாப்பா மறுபடியும் கடவுள் கொடுத்த அந்த ரெண்டு கல்லை எடுத்து மெதுவா உரச இன்னொரு சின்ன தீப்பொறி உருவாச்சு. அந்தத் தீப்பொறியை `மேல போ'ன்னு பாப்பா சொல்ல, அதுவும் சொல்பேச்சுக் கேட்டு மேல போய் நின்னுக்கிச்சு. அந்தச் சின்ன தீப்பொறியை வேடிக்கைப் பார்த்துட்டே, தன்னோட கண்ணீர்ல காலை விட்டு ஆட்டிக்கிட்டே உட்கார்ந்துட்டு இருந்தா குட்டிப் பாப்பா. அப்போ அவளையறியாம அவளோட விரல் நகங்களையெல்லாம் கடிச்சுத் துப்ப ஆரம்பிச்சா. அந்தக் குட்டிக் குட்டி நகங்கள் எல்லாம் ஒவ்வொரு பூவா மாறி செடி, கொடி, மரங்கள்ல ஏறி நின்னுக்கிச்சாம்.

ரொம்ப நேரம் கழிச்சு பாப்பாவோட கண்ணீர்ல ஓய்வெடுத்துக்கிட்டிருந்த பெரிய நெருப்பு `நான் மறுபடியும் மேல போறேன். அந்தச் சின்ன நெருப்பை ரெஸ்ட் எடுத்துக்க சொல்லலாமா'ன்னு பாப்பாகிட்ட கேட்டுச்சு. பாப்பாவும் சரின்னு சொல்ல, ரெண்டு நெருப்பும் இடம் மாறிக்கிச்சுங்களாம். பாப்பா ஆசைப்பட்ட மாதிரியே எந்நேரமும் வெளிச்சம், அவளுக்குப் பிடிச்ச பழங்கள்னு சந்தோஷமா வாழ்ந்துட்டு வந்த அவளுக்கு ஒருநாள் கொட்டாவி கொட்டாவியா வந்துச்சாம். அது அவளுக்கு வித்தியாசமா இருந்ததால, கடவுள்கிட்ட `என் வாய்ல இருந்து ஏன் இந்த சத்தம் வருது'ன்னு கேட்டா.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
ஒட்டகத்திற்கே பயம் காட்டிய கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 49

அதுக்கு கடவுள், `உனக்கு இப்போ தூக்கம் வருது. அதனாலதான் நீ கொட்டாவி விடுறே'ன்னு சொன்னார். பாப்பா அதுக்கு, `நான் தூங்கணும். எப்படித் தூங்குறது'ன்னு கேட்டா. உடனே கடவுள் `நீ உன் கையால ஓர் ஒவியத்தை வரை'ன்னு சொன்னார். பாப்பா தன்னோட கண்ணீர்ல தன் உருவத்தைப் பார்த்து ஒரு மரத்து மேல ஓவியத்தை வரைய ஆரம்பிச்சா. அந்த ஓவியம் அப்படியே பெருசாகி அவ முன்னாடி வந்து நின்னுச்சு. பிறகு பாப்பாவை தன்னோட மடியில படுக்க வெச்சு நிறைய கதைகள் சொல்ல ஆரம்பிச்சிது. `அந்த ஓவியத்தை அம்மான்னு கூப்பிடணும்'னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சுட்டார். அன்னிக்கு இருந்துதான் அம்மாக்கள் கதை சொல்லி பாப்பாக்களை தூங்க வெக்க ஆரம்பிச்சாங்களாம்.

அடுத்த கட்டுரைக்கு