Published:Updated:

ஏமாற்றிய காய்கறிகள்... காப்பாற்றிய வேப்பமரம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 46

Bed Time Stories
Bed Time Stories ( Image by Clker-Free-Vector-Images from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையைக் குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஓர் ஊர்ல காய்கறிப்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. இந்தக் கிராமத்துல பெரிய காய்கறித் தோட்டம் ஒண்ணு இருந்துச்சு. அதனாலதான் அந்த ஊருக்கு காய்கறிப்பட்டின்னு பெயர் வந்துச்சு. தோட்டத்துல விளைஞ்ச காய்கறிகளை மாடுகள் மேய்ஞ்சுடக் கூடாதுன்னு தோட்டத்துக்கு வேலியா நிறைய பழ மரங்களை நட்டு வெச்சிருந்தாங்க அந்தக் கிராமத்துக்காரங்க. இந்தத் தோட்டத்துல விளைஞ்ச காய்கறிகளை, காய்கறிப் பட்டியில வாழ்ந்த மக்கள் சாப்பிட்டதுபோக மிச்சத்தை அக்கம் பக்கம் இருக்கிற கிராமங்களுக்கும் விலைக்கு அனுப்பி வெச்சிடுவாங்க. அதனால, காய்கறிப்பட்டியிலேயும் அதைச் சுத்தியிருக்கிற கிராமங்கள்ல இருக்கிற குழந்தைகளும் நல்லா ஹெல்தியா இருந்தாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

இப்படியே சில வருஷங்கள் போச்சு. காய்கறிப்பட்டியில இருக்கிற மக்கள், வழக்கம்போல தினமும் பளிச்சின்னு பொழுது விடியறதுக்கு முன்னாடியே காய்கறித் தோட்டத்துக்குப் போய், அங்க இருக்கிற காய்கறிகள், மரங்கள்ல இருக்கிற பழங்கள் எல்லாத்தையும் பறிச்சு வியாபாரத்துக்கு அனுப்பிட்டு இருந்தாங்க. ஒருநாள், கத்திரிக்காய் செடி ஒண்ணு, ``இந்த ஜனங்க தினமும், நாம விடியற்காலையில நல்லா தூங்கிட்டு இருக்கிறப்போ வெடுக் வெடுக்குன்னு நம்மகிட்ட இருக்கிற காய்கறிகளைப் பறிக்கிறாங்க. அதனால நம்ம தூக்கம் கெட்டுப்போகுது. இதைப்பத்தி யாராவது வருத்தப்பட்டிருக்கிறீங்களா நண்பர்களே"ன்னு மத்த செடிகளைப் பார்த்து கேட்டுச்சு. மத்த கத்திரிக்காய் செடிகளும் இதுக்கு ``ஆமா ஆமா"ன்னு பதில் சொல்லுச்சுங்க.

கத்திரிக்காய் செடிகள் பேசிட்டிருந்ததைக் கேட்ட அவரைக்காய் கொடி, ``கரெக்டா சொன்னே கத்திரி. இவங்க என்கிட்ட இருக்கிற அவரைக்காய்களை படக் படக்குன்னு பறிக்கிறப்போ எனக்கு ரொம்ப வலிக்கும். அந்த நேரத்துல எல்லாம் எனக்கு ரொம்ப கோபம் வரும். ஆனா, என்ன பண்றதுன்னு தெரியாம அப்படியே விட்டுடுவேன்"னு வருத்தமா சொல்லுச்சு. கத்திரிக்காயும் அவரைக்காயும் பேசிட்டிருந்ததைக் கேட்ட மத்த காய்கறிச் செடிகள் எல்லாம், வலிக்க வலிக்க நம்மகிட்ட இருந்து காய்கறிகளைப் பறிக்கிற இந்த மனுஷங்களுக்கு நல்ல பாடம் கத்துக் கொடுக்கணும்னு சொல்லுச்சுங்க. இதை எல்லா காய்கறிச் செடிகளும் ஒத்துக்கிச்சுங்க. என்ன பாடம் சொல்லிக் கொடுக்கலாம்கிறதை சம்பந்தப்பட்ட செடிகளே முடிவு பண்ணிக்கலாம்னு தீர்மானமும் போட்டுக்கிச்சுங்க காய்கறிச்செடிகள்.

BedTimeStories
BedTimeStories
Photo: freepik

மறுநாள், வழக்கம்போல விடியற்காலையில தோட்டக்காரங்க காய்கறி பறிக்கிறதுக்காக தோட்டத்துக்கு வந்தாங்க. இதுக்காகவே ரெடியா காத்துக்கிட்டிருந்த அவரைக்காய் கொடி, தன்னோட எல்லா கொடிகளையும் வேகமா ஆட்ட கொடியிலிருந்த அவரைக்காய்கள் எல்லாம் தரையில கொட்ட ஆரம்பிச்சிது. கொடியில அவரைக்காய்களைத் தேடின தோட்டக்காரங்க காயே இல்ல போயிருக்குன்னு நினைச்சிட்டு அடுத்த செடிகள்ல காய் பறிக்கப் போயிட்டாங்க.

கத்திரிக்காய் செடிகள் என்ன பண்ணுச்சு தெரியுமா? தோட்டக்காரங்க வர்ற நேரத்துல தன்னோட காய்களையெல்லாம் இலைகளுக்குப் பின்னாடி மறைச்சு வெச்சுக்கிச்சுங்க. ஸோ, தோட்டக்காரங்களால கத்திரிக்காய்களையும் பறிக்க முடியலை. சரி, கேரட்டையாவது தோண்டி எடுக்கலாம்னு போனாங்க. கேரட்டோ மண்ணுக்கு அடியில பெருசா பள்ளம் தோண்டி ஒளிஞ்சுக்கிச்சுங்க. நொந்துபோன தோட்டக்காரங்க மறைய முடியாம செடியில நின்னுக்கிட்டிருந்த வெண்டைக்காய்களைப் பறிச்சுட்டு போயிட்டாங்க. அப்படிப் பறிச்சுட்டு போறப்போ, `கத்திரிக்காய் செடி, அவரைக்காய் கொடி, கேரட் மூணுத்துலேயும் காய்களே இல்ல. வெண்டைக்காய் செடி மட்டும்தான் காய்க்குது. அதனால, கத்திரி, அவரை, கேரட் மூணுத்தையும் பிடுங்கிடலாம்'னு பேசிட்டே போனாங்க. இதை ஒரு கொய்யா மரம் கேட்டுடுச்சு. அதுக்கு தோட்டங்காரங்க பேசினது பக்குன்னு இருந்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: freepik
சின்சான் பொம்மை கொடுத்த சூப்பர் அட்வைஸ்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedtimeStories - 44

தோட்டங்காரங்க எல்லாம் காய்கறித் தோட்டத்தை விட்டுப் போனதுக்கு அப்புறம், கொய்யா மரம் கத்திரிச்செடி, அவரைக்கொடி, கேரட் மூணுத்தையும் தன்கிட்ட கூப்பிட்டுச்சு. அதுங்களும் ``என்ன கொய்யா அக்கா" அப்படின்னு கேட்டுச்சுங்க. உடனே கொய்யா மரம், ``உங்களை நோக்கி ஆபத்து வந்திட்டிருக்கு. உங்க மூணு பேருகிட்டேயும் காய்கள் இல்லாததால, உங்களையெல்லாம் பிடுங்கிப் போட்டுடலாம்னு தோட்டக்காரங்க பேசினாங்க''ன்னு சொல்லுச்சு. இதைக்கேட்ட மூணும் நடுங்கிட்டே `நாங்களே எங்களுக்கு கெடுதல் பண்ணிக்கிட்டோமே'ன்னு சொல்லிட்டு `ஓ'ன்னு அழ ஆரம்பிச்சிதுங்க. என்ன நடந்துச்சுன்னு விசாரிச்ச கொய்யா மரத்துகிட்ட, நடந்ததையெல்லாம் மூணும் சொல்லுச்சுங்க.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட கொய்யா மரம், ``தப்பு பண்ணிட்டீங்களே"ன்னு மூணுத்தையும் திட்டுச்சு. பிறகு, ``கவலைப்படாதீங்க. அந்தத் தோட்டக்காரங்களோட மனசை மாத்துறதுக்கு நான் ஓர் ஐடியா வெச்சிருக்கேன்"னு சொல்லிட்டு, அந்தக் காய்கறித் தோட்டத்துல இருந்த வயசான வேப்ப மரத்துக்கிட்ட போச்சு. ``வேப்பம்மா வேப்பம்மா, கத்திரி, அவரை, கேரட் மூணும் தோட்டக்காரங்க கண்ணுக்குத் தெரியாம தங்களை மறைச்சுக்கிட்டதால, அவங்ககிட்ட காய்கள் இல்லைன்னு அவங்களைப் பிடுங்கிப் போட நாளைக்கு ஆள்கள் வரப்போறாங்க. நீங்கதான் அவங்களை எப்படியாவது தடுத்து நிறுத்தணும்"னு கேட்டுக்கிச்சு. அதுக்கு வேப்ப மரமும் `சரி'ன்னு தலையாட்டுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
மரங்கள் இப்ப ஹேப்பி அண்ணாச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 45

மறுநாள் தோட்டக்காரங்க தோட்டத்துக்கு வந்தாங்க. அவங்களை வழிமறிச்ச வேப்ப மரம், கத்திரி, அவரை, கேரட் மூணு பேரும் செஞ்ச தப்பை சொல்லுச்சு. கூடவே, ``நீங்க அவங்களுக்கு வலிக்கிற மாதிரி பறிக்கிறதாலதான் அவங்க அப்படி நடந்துட்டிருக்காங்க. அதனால, நீங்க உங்க தப்பைத் திருத்திக்கோங்க. அவங்களும் இனிமே அப்படி நடந்துக்க மாட்டாங்க"ன்னு சொல்லுச்சு. அன்னியில இருந்து தோட்டக்காரங்க செடி, கொடிகள்கிட்ட இருந்து மென்மையா காய்கறிகளைப் பறிக்க ஆரம்பிச்சாங்க. செடி, கொடிகளும் தங்களோட காய்களை மறைக்காம நல்ல பிள்ளைகளா நடந்துக்க ஆரம்பிச்சிதுங்க.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு