சுட்டி பூனையும், அன்பான எருமையும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 9

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
ஒரு கிராமத்துல காய்கறி, பழம், மீன், கறின்னு எல்லா உணவுப் பொருள்களும் விக்கிற மார்க்கெட் ஒண்ணு இருந்துச்சு. வியாபாரம் செஞ்சது போக வீணாப்போகிற காய்கறிகளையும் பழங்களையும் வியாபாரிகள் அதுக்குன்னு இருக்கிற ஓர் இடத்துல கொட்டி வெச்சிருப்பாங்க. அந்த இடத்துக்குப் பக்கத்துல அப்புறப்படுத்துறதுக்கு வசதியா நான் வெஜ் கழிவுகளையும் கொட்டி வைப்பாங்க. காய்கறிகளைச் சாப்பிடுறதுக்கு நிறைய ஆடு, மாடுகளும் நான் வெஜ் கழிவுகளைச் சாப்பிடுறதுக்காக நிறைய நாய், பூனைகளும் அந்த இடத்துக்கு வரும். அதனால, அந்த இடமே சத்தமும் சண்டையுமா ஒரே களேபரமா இருக்கும்.

இந்தக் கூட்டத்துல பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பூனை ஒண்ணும் இருந்துச்சு. சில நாள்களுக்கு முன்னாடிதான் இந்த மார்க்கெட் பத்தி கேள்விப்பட்டு இந்தக் கிராமத்துக்கு வந்த பூனை அது. பசி காரணமா இன்னொரு கிராமத்துக்கு வந்துட்டாலும், இங்க இருக்கிற நாய்களைப் பார்க்கிறப்போ அந்தப் பூனைக்கு ரொம்ப பயமா இருக்கும். அதனால, எல்லாம் சாப்பிட்டதுபோக மிச்சம் மீதி ஏதாவது இருந்தா மட்டும்தான் அது சாப்பிடும். இப்படியே சில நாள்கள் போச்சு. பூனைக்கு பாதி வயிறுக்குத்தான் சாப்பாடு கிடைச்சது.
அதனால, ஒரு நாள் துணிஞ்சு நாய்க்கூட்டத்துக்குள்ள நுழைஞ்சு ஒரு பெரிய எலும்பைத் தூக்கிடுச்சு. இதைப் பார்த்த நாய்கள் குரைக்க ஆரம்பிக்க, பூனை ஓட்டமா ஓடி ஒரு கறுப்பு மரத்து மேல ஏறிக்கிச்சு. விரட்டிட்டு வந்த நாய்கள் அந்தக் கறுப்பு மரத்தை நோக்கி தூரத்துல இருந்தபடியே குரைச்சிட்டு போயிடுச்சுங்க. `அப்பாடா'ன்னு நிம்மதி பெருமூச்சுவிட்ட பூனை, அந்தக் கறுப்பு மரத்தைக் குனிஞ்சு பார்த்துச்சு. ஓ மை காட்... அது எருமை மாடு.

பூனைக்கு எருமை மாட்டு மேல தொடர்ந்து உட்கார்ந்திருக்கவும் பயம், கீழே இறங்கவும் பயம். எருமை மாடு தன்னைக் கீழே இறக்கிறதுக்கு ஏதாவது செய்யுதான்னு குனிஞ்சு பார்த்துச்சு பூனை. எருமை அதுபாட்டுக்கு வாழைத்தண்டை ருசிச்சு சாப்பிட்டுக்கிட்டிருக்க, பூனைக்கு பயம் தெளிஞ்சுபோச்சு. எருமை மாட்டு மேல உட்கார்ந்தபடியே தன்னோட உணவை சாப்பிட ஆரம்பிச்சது. சாப்பிட்டு முடிச்ச திருப்தியோட `எருமையாரே இன்னிக்குத்தான் நான் வயிறார சாப்பிட்டேன். இதே மாதிரி தினமும் உங்க மேல உட்கார்ந்து சாப்பிட எனக்கு பர்மிஷன் கொடுப்பீங்களா'ன்னு பவ்யமா கேட்டுச்சு பூனை. எருமையும் அதுக்கு சம்மதம் சொல்லுச்சு. தினமும் நான்வெஜ் துண்டை தூக்கிக்கிறது, ஓடி வர்றது, தனக்கு உதவி பண்ற எருமை மாடு மேல ஏறிக்கிறது, வயிறுபுடைக்க சாப்பிடுறதுன்னு சந்தோஷமா இருந்துச்சு பூனை.
ஆனா, எருமை மாடு மேல பூனை உட்கார்ந்துக்கிட்டு சாப்பிடறப்போ எல்லாம், பூனையோட கால் நகங்கள் எருமை மாட்டு மேல பட்டு, அதுக்கு திகுதிகுன்னு எரிய ஆரம்பிக்கும். சில நேரங்கள்ல தோலுரிஞ்சி லேசா ரத்தம்கூட கசிய ஆரம்பிக்கும். இதெல்லாம் பூனைக்குத் தெரியாது. ஒருநாள் வழக்கமான எருமை மாடு மார்க்கெட்டுக்கு வரல. பூனை வேறோர் எருமை மேல ஏறி உட்கார்ந்துக்கிட்டு சாப்பிட ஆரம்பிச்சது. பூனை தன் மேல ஏறி உட்கார்ற வரைக்கும் அமைதியா இருந்த அந்த எருமை, பூனையோட கால் நகங்கள் அதுமேல கீறின உடனே, `அம்மா'ன்னு அலறியபடி பூனையை தன்னோட வாலால் ஓங்கி ஓர் அடி வெச்சது. அவ்வளவுதான் பூனை வெலவெலத்துப் போய் கீழே இறங்கி ஓடியே போச்சு.

மறுநாள் பூனைகிட்ட நட்பா இருக்கிற எருமை மாடு மார்க்கெட்டுக்கு வந்துச்சு. அதைப் பார்த்தவுடனே பூனை அதுகிட்ட போய், `எருமையாரே இத்தனை நாளா நான் உங்களை காயப்படுத்திட்டு இருந்திருக்கேன்னு நேத்திக்குதான் புரிஞ்சுக்கிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க'ன்னு சொல்லிட்டு அழ ஆரம்பிச்சது. அதுக்கு எருமை `என் சின்ன நண்பா, சாப்பிடுற ஆவல்ல நீ தெரியாமத்தான் என்னைக் காயப்படுத்தினே. அதனாலதான் நான் உன்மேல கோபப்படல. நீ வழக்கம்போல என் மேல ஏறிச் சாப்பிட ஆரம்பி'ன்னு பெருந்தன்மையா சொல்லுச்சு. பூனை சந்தோஷத்துல எருமையோட பெரிய முகத்துல தன்னோட குட்டி முகத்தை வெச்சு உரசுச்சு.
- நாளை சந்திக்கலாம்
தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.