Published:Updated:

காட்டுக்குள்ள நடந்த சுதந்திர தினவிழா... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 38

Forest
Forest ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு நாட்ல செழிப்பான காடு ஒண்ணு இருந்துச்சு. ஒரு காலத்துல அந்தக் காட்டோட செழிப்பைப்பத்தி கேள்விப்பட்ட பக்கத்துக் காட்டைச் சேர்ந்த ஓநாய் கூட்டம் ஒண்ணு இந்தக் காட்டுக்குள்ள நுழைஞ்சு எல்லா மிருகங்களையும் தங்களுக்கு அடிமையாக்கி வெச்சுக்கிச்சுங்க. அதுங்களோட கொடுமை தாங்க முடியாம பல மிருகங்கள் காட்டை விட்டே ஓடிப் போயிடுச்சுங்க. எதிர்த்து நின்ன சில மிருகங்களை ஓநாய்கள் கூட்டமா சேர்ந்துகிட்டு கடிச்சு வெச்சுடுங்க. ஒரு நாள் காட்டுக்குள்ள தீப்பிடிச்சதால ஓநாய்க்கூட்டம் உயிர்பிழைச்சா போதும்னு தங்களோட காட்டுக்கே திரும்பிப் போயிடுச்சுங்க. மிச்சம் மீதி இருந்த ஓநாய்களை அதுங்களோட காட்டுக்கு விரட்டி விட்ருச்சுங்க இந்தக் காட்டோட விலங்குகள். அதுக்கப்புறம் எல்லா பெரிய மிருகங்களும் ஒண்ணு சேர்ந்து, நிறைய மரங்களை நட்டு மறுபடியும் தங்களோட காட்டை செழிப்பாக்குச்சுங்க. காடு செழிப்பானதுக்கு அப்புறமா பிறந்த குட்டி விலங்குகளுக்கு ஓநாய்கள் தங்களோட முன்னோர்களைக் கொடுமைப்படுத்தினது, காட்டுத்தீ பிடிச்சது, பெரிய விலங்குகள் எல்லாம் சேர்ந்து காட்டை மறுபடியும் செழிப்பாக்கினது எதுவுமே தெரியாது. அதனால, அதுங்க எல்லாம் சாப்பிடுறது, விளையாடுறது, மறுபடியும் சாப்பிடுறது, மறுபடியும் விளையாடுறதுன்னு வாழ்ந்துட்டு வந்துச்சுங்க.

Wolf
Wolf
Image by Hans Benn from Pixabay
சூப்பர் ஐடியா கொடுத்த குட்டித்தவளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 37

அதிலேயும் விளையாட்டுங்கிற பேர்ல மரங்களை வேரோட சாய்க்கிறது, பூக்களைப் பறிச்சு விட்டெறியறது, காட்டுக்குள்ள இருக்கிற ஆறோட தண்ணியை வேஸ்ட் பண்றதுன்னு ரொம்ப கெட்டப்பசங்களா குட்டி விலங்குகள் நடந்துக்கிச்சுங்க. மரங்கள் சாய்ஞ்சதால பறவைகள் கஷ்டப்பட்டுச்சுங்க. பூக்கள் வீணா போனதால தேனீக்கள் தேன் கிடைக்காம பசியில வாடுச்சுங்க. பெரிய விலங்குகளுக்கு குட்டி விலங்குகளை எப்படித் திருத்துறதுன்னே தெரியலை. அதுங்க எல்லாம் ரொம்ப கவலையா இருந்துச்சுங்க. காட்டோட அரசனா இருந்த காட்டெருமை ஒரு சிறுத்தையைக் கூப்பிட்டு, `இன்னிக்குள்ள காடு முழுக்க ஓடி குட்டி விலங்குகளைத் திருத்துறதுக்கு நல்ல ஐடியா யார்கிட்டயாவது இருக்கான்னு கேட்டுட்டு வா'ன்னு அனுப்பி வெச்சுது.

இந்தக் காட்டுல வயசான ஒட்டகச்சிவிங்கி ஒண்ணு இருந்துச்சு. அது, குட்டி விலங்குகளை எப்படியாவது திருத்திடணும்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்துச்சு. அதனால, காட்டெருமை அரசன் சொன்னபடி ஓடி வர்ற சிறுத்தைக்காகக் காத்துக்கிட்டு இருந்துச்சு. நல்ல வெயில் நேரத்துல ஒட்டகச்சிவிங்கிகள் வாழுற இடத்துக்கு வந்து சேர்ந்துச்சு சிறுத்தை. இதுக்காகவே காத்துக்கிட்டிருந்த வயசான ஒட்டகச்சிவிங்கி, சிறுத்தையைக் கூப்பிட்டு ஜூஸ் கொடுத்து தன் பக்கத்துல உட்கார வெச்சுட்டு, குட்டி விலங்குகளைத் திருத்துற தன்னோட பிளானை சொல்ல ஆரம்பிச்சது.

Deer
Deer
Image by aalmeidah from Pixabay

`ஓநாய்கள்கிட்ட நாம பட்ட கஷ்டங்களும், காட்டுத்தீயில அழிஞ்சுபோன காட்டை நாம எப்படிச் செழிப்பாக்கினோம் அப்படிங்கிறதும் நமக்குத்தான் தெரியும். ஏன்னா, அந்த டைம்ல நாமதான் இந்தக் காட்டுல இருந்தோம். குட்டி விலங்குகள் இல்ல. அதனாலதான் சுதந்திரத்தோட அருமையும் உழைப்போட அருமையும் நம்ம குழந்தைகளுக்குத் தெரியல. அதை நாம அதுங்களுக்கு தெரிய வைக்கணும். அதுக்கு அப்போ என்ன நடந்துச்சோ அதைக் குட்டி விலங்குகள் பார்க்கணும்'னு சொல்லுச்சு ஒட்டகச்சிவிங்கி.

`நீங்க சொல்றதெல்லாம் சரி. ஆனா, அப்போ நடந்ததை இப்போ எப்படி குட்டி விலங்குகளுக்குக் காட்டுறது'ன்னு கேட்டுச்சு சிறுத்தை. அதுக்கு ஒட்டகச்சிவிங்கி, `அப்போ நாம பட்ட கஷ்டங்களையெல்லாம் மயில் ஒண்ணு பெயின்டிங் பண்ணி வெச்சிருக்கு. காட்டுக்குள்ள சுதந்திர தின விழா ஒண்ணு நடத்துவோம். அதுல அந்த பெயின்டிங்ஸ் எல்லாத்தையும் பார்வைக்கு வைப்போம். அந்த விழாவுல குட்டி விலங்குகள் ஜாலியா கலந்துக்கணும்னா, அதுங்களுக்கு ஃபேன்ஸி டிரெஸ் காம்படிஷன் வைப்போம்'னு சொல்லுச்சு.

Peacock
Peacock
Image by OpenClipart-Vectors from Pixabay

ஒட்டகச்சிவிங்கி சொன்ன மாதிரியே, மயிலை சந்திச்சு அதுகிட்ட இருந்த பெயின்டிங்ஸையெல்லாம் வாங்கிட்டு காட்டெருமை அரசன்கிட்ட போச்சு சிறுத்தை. நடந்தது எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்ட காட்டெருமை காட்டுக்குள்ள சுதந்திர தினவிழா நடத்தலாம்னு முடிவெடுத்துச்சு. ஃபேன்ஸி டிரெஸ் காம்படிஷன் பத்தி தெரிஞ்சதும் குட்டி விலங்குகள் எல்லாம் செம ஹேப்பி. உடனே விதவிதமா டிரெஸ் வாங்க ஆரம்பிச்சதுங்க. சுதந்திர தினவிழாவுக்கு யாரை சீஃப் கெஸ்ட்டா கூப்பிடலாம்னு காட்டெருமை தன்னோட அமைச்சரான பெண் சிங்கத்துக்கிட்ட கேட்டுச்சு.

`காட்டோட சுதந்திர தினவிழாவுக்கு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த தலைவர்களைக் கூப்பிட்டா பொருத்தமா இருக்கும்'னு சொல்லுச்சு பெண் சிங்கம். காட்டெருமையும் இதுக்கு ஓகே சொல்லிடுச்சு. ஆனா, தலைவர்களை எப்படி இன்வைட் பண்றதுன்னு தெரியாம எல்லா விலங்குகளும் முழிச்சிக்கிட்டிருக்க, காட்டோட தேவதை உதவி செய்ய வந்துச்சு. `நீங்க பேசினதெல்லாம் கேட்டேன். உங்க விழாவுக்கு காந்திஜியையும் நேதாஜியையும் நான் கூட்டிட்டு வர்றேன்'னு சொல்லுச்சு.

Giraffe
Giraffe
Image by OpenClipart-Vectors from Pixabay

சுதந்திர தினவிழாவுக்கான நாளும் வந்துச்சு. குட்டி விலங்குகள் எல்லாம் அழகழகான டிரெஸ் போட்டுக்கிட்டு செம க்யூட்டா விழாவுக்கு வந்துச்சுங்க. காட்டோட தேவதை சொன்ன மாதிரியே காந்திஜியையும் நேதாஜியையும் விழாவுக்கு கூட்டிட்டு வந்திருந்துச்சு. ஏற்கெனவே திட்டமிட்டபடி மயில், தான் வரைஞ்ச ஓவியங்களையெல்லாம் வரிசையா வைச்சிருந்துச்சு. அந்தப் படங்கள்ல ஓநாய்கள் தங்களோட அம்மா, அப்பாவை கஷ்டப்படுத்துறதைப் பார்த்த குட்டி விலங்குகளுக்கு பயங்கர கோவம் வந்துச்சு. நெருப்புல அழிஞ்ச காட்டை மறுபடியும் செழிப்பாக்கின ஓவியங்களைப் பார்த்தது அதுங்களுக்கு கண்ணீர் வர ஆரம்பிச்சது. இதுவரைக்கும் தாங்கள் செஞ்சுட்டிருந்த தப்பெல்லாம் அதுங்களுக்குப் புரிய ஆரம்பிச்சது.

`இனிமே நாங்க யாரும் காட்டை அழிக்க மாட்டோம்'னு எல்லா குட்டி விலங்குகளும் ஓன்னு அழ ஆரம்பிச்சிதுங்க. குட்டி விலங்குகளை பெரிய விலங்குகள் சமாதானப்படுத்த, காந்திஜியும் நேதாஜியும் 'குழந்தைகளுக்கு நம்மளோட வரலாற்றை சொன்னாதான் அவங்க தான் பிறந்த இடத்தை நேசிப்பாங்க அப்படிங்கிறதுக்கு இந்தக் காடுதான் உதாரணம்'னு சொல்லிட்டு காட்டு தேவதையோட சேர்ந்து கிளம்பிட்டாங்க. குட்டி விலங்குகள் அதுக்கப்புறம் தங்களோட காட்டை ரொம்ப பத்திரமா பார்த்துக்கிச்சுங்க.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு