Published:Updated:

சூழ்ச்சி செய்த பெருச்சாளி... கலாய்த்த எலிகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 34

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஓர் ஊர்ல பாழடைஞ்ச பங்களா ஒண்ணு இருந்துச்சாம். அந்த பங்களாவுல நிறைய சுண்டெலிகள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்களாம். அந்த பங்களா ஊருக்கு ரொம்ப ஒதுக்குப்புறமா இருந்ததால, சுண்டெலிகள் எல்லாம் தனித்தனியா வலை தோண்டாம சுதந்திரமா நடமாடிட்டு இருந்துச்சுங்க. பகலெல்லாம் ஊருக்குள்ள கிடைக்கிற உணவுப் பொருள்களைத் தூக்கிட்டு வந்து பங்களாவுக்குள்ள வெச்சுக்குங்க. தப்பித்தவறி அந்தப் பக்கமா ஏதாவது பூனை வந்துட்டா, பத்து, இருபது எலிகள் ஒண்ணு மேல ஒண்ணு ஏறி நின்னு `பே'ன்னு கத்தும்க. பூனை `இது ஏதோ புது மிருகம் மாதிரி இருக்கே'ன்னு பயந்துட்டு ஓடிடும். வானத்துல பறந்து வந்து தங்களைப் பிடிக்கிற பறவைகள்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கும் இந்த சுண்டெலிகள் ஒரு வழி கண்டுபிடிச்சு வெச்சிருந்துங்க. அந்த பங்களாவுல கறுப்பு நிறத்துல ஒரு பெரிய கருங்கல்லு இருந்துச்சு. வானத்துல பறவைகள் பறக்கிறதை தரையில தெரியிற நிழல் மூலமா ஒரு எலி பார்த்துட்டாலும், அது கீச் கீச்'ன்னு கத்தி எல்லா சுண்டெலிகளையும் எச்சரிக்கை செஞ்சுடும். உடனே எல்லா எலிகளும் அந்தக் கருங்கல்லு நிழல்ல ஓடிப்போய் ஒளிஞ்சிக்குங்க. கருங்கல்லோட நிறமும் சுண்டெலிகளோட நிறமும் ஒண்ணா இருக்கிறதால, பறவைகளோட கண்ணுல சுண்டெலிகள் சிக்கவே சிக்காது. இப்படியே சுண்டெலிகள் வாழ்க்கை சந்தோஷமா பாதுகாப்பா போயிட்டு இருந்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
சர்க்கஸ் விலங்குகளுக்கு விடுதலை அளித்த கொசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 33

ஒரு நாள் பக்கத்து ஊர்ல இருந்து பெருச்சாளி ஒண்ணு வழிமாறி, சுண்டெலிகள் வாழுற ஊருக்குள்ள வந்துடுச்சு. ஊரும் புதுசு, ஒளிஞ்சுக்கிறதுக்கான இடமும் அதுக்கு தெரியாததால, ஊர்த் தெருக்கள்ல இங்கேயும் அங்கேயும் ஓடிட்டு இருந்துச்சு அந்த பெருச்சாளி. இவ்ளோ பெரிய எலியைப் பார்த்துட்டு பூனைகள் சும்மா இருக்குமா? `ஹை... இந்த எலி எவ்ளோ கொழுகொழுன்னு இருக்கு'ன்னு ஜொள்ளு விட்டுக்கிட்டு, அதை விரட்ட ஆரம்பிச்சிடுங்க. மிரண்டு போன பெருச்சாளி தலைதெறிக்க ஊருக்கு வெளியே ஓட ஆரம்பிச்சது. மேல வெயில், தரையெல்லாம் சூடு... பெருச்சாளியால ரொம்ப துரம் ஓட முடியலை. எங்கியாவது ஒளிஞ்சுக்கிறதுக்கு இடம் தென்படுதான்னு தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கிட்டே ஓடிக்கிட்டிருந்த பெருச்சாளியோட கண்ணுல, தூரத்துல சுண்டெலிகள் வசிக்கிற பாழடைஞ்ச பங்களா பட்டுச்சு. அங்க போயிட்டா எப்படியும், தப்பிச்சிடலாம்னு நம்பிக்கையா ஓடின பெருச்சாளி திடுக்னு ஒரு கல்லு தடுக்கி விழுந்திடுச்சு. அதை விரட்டிட்டு வந்த பூனைகளோ பக்கத்துல வந்திருச்சிங்க. பெருச்சாளி பயத்துல `ஓ'ன்னு அழ ஆரம்பிக்க, அதே நேரம் பெருச்சாளியை யாரோ பிடிச்சு இழுக்கிற மாதிரி இருந்துச்சு.

பெருச்சாளி இன்னும் பயந்துபோய், தன்னை இழுக்கிறது யாருன்னு பார்க்க குட்டிக்குட்டியா நிறைய சுண்டெலிகள் பெருச்சாளியோட கால்களைப் பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டு, அந்தப் பாழடைஞ்ச பங்களாவை நோக்கி ஓடிக்கிட்டு இருந்துச்சுங்க. பெருச்சாளி கொஞ்சம் பயம் தெளிஞ்சு `எலி நண்பர்களே, என் கால்களை விடுங்க. நானே ஓடி வர்றேன்'னு சொல்லுச்சு. சுண்டெலிகள் பெருச்சாளியின் கால்களைவிட எல்லாம் தப்பிச்சோம் பிழைச்சோம்னு பாழடைஞ்ச பங்களாவுக்குள்ள நுழைஞ்சுதுங்க. நுழைஞ்ச வேகத்துல நிறைய சுண்டெலிகள் ஒண்ணு மேல ஒண்ணு ஏறி நின்னுக்கிச்சுங்க. `என்னடா இது. எதுக்கு இந்த சுண்டெலிகள் ஒண்ணு மேல ஒண்ணு ஏறி நிக்கிதுங்க' என்று பெருச்சாளி யோசிச்சிட்டிருக்கும்போதே, அதை விரட்டிட்டு வந்த பூனைகள் பங்களாவுக்குள்ள நுழைஞ்சிடுச்சுங்க. இதுக்காகவே வெயிட் பண்ணிட்டிருந்த மாதிரி ஒண்ணு மேல ஒண்ணு நின்னுக்கிட்டிருந்த சுண்டெலிகள் `பே'ன்னு கத்த, வழக்கம்போல பூனைகள் பயந்துபோய் ஓடியே போச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
பறவைக்கார வீடும் பற்றிய நெருப்பும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 32

எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருந்த பெருச்சாளிக்கு ரொம்ப ஆச்சர்யமா ஆயிடுச்சு. `இந்த சுண்டெலிகள் ரொம்ப புத்திசாலியா இருக்குதுங்க. நாமளும் இதுங்களோட இங்கேயே இருந்துடலாமா'ன்னு யோசிச்சிது பெருச்சாளி. பெருச்சாளி இப்படி யோசிச்சுட்டிருக்கும்போதே வானத்துல ஒரு வல்லூறு வட்டமடிக்க ஆரம்பிச்சிது. இதைக் கவனிச்சிட்ட சுண்டெலி ஒண்ணு வழக்கம்போல `கீச் கீச்'ன்னு கத்தி மத்த சுண்டெலிகளை எச்சரிக்கை செய்ய, எல்லா சுண்டெலிகளும் கருங்கல்லு பாறையோட நிழல்ல போய் ஒளிஞ்சுக்கிச்சுங்க. `பே பே'ன்னு முழிச்சிக்கிட்டு நின்ன பெருச்சாளியை சில சுண்டெலிகள் தங்களோட தர தரன்னு இழுத்துட்டு போய் பாறையோட நிழல்ல ஒளிய வைச்சிதுங்க. வல்லூறு ஏமாந்து திரும்பிப் போயிடுச்சு. இந்த சுண்டெலிகளோட சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்பட்ட பெருச்சாளி இப்போ, இந்த பங்களாவுலதான் இனிமே இருக்கணும்'னு முடிவே எடுத்திடுச்சு. பெருச்சாளியோட திட்டம் எதுவும் தெரியாத அப்பாவி சுண்டெலிகள் அதுக்கு தங்கள்கிட்ட இருந்த சிறந்த உணவுகளையெல்லாம் பரிமாறுச்சுங்க. வயிறு புடைக்க திருப்தியா சாப்பிட்ட பெருச்சாளி மனசுக்குள்ள ஒரு திட்டத்தோட அங்கிருந்து கிளம்புச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுநாள், ஒரு வீட்டுக்குள்ள நுழைஞ்சு அந்த வீட்டுக் குழந்தையோட கலர் பாக்ஸை திருட்டிட்டு வந்துச்சு பெருச்சாளி. அதுல இருந்த பிங்க் கலரை தன் உடம்பு முழுக்க பூசிக்கிட்டு, சுண்டெலிகள் வசிக்கிற பாழடைஞ்ச அந்த பங்களாவுக்கு போச்சு. `இது என்ன புது மிருகமா இருக்கே'ன்னு பயந்த சுண்டெலிகள்கிட்ட, `நான்தான் எலிகளோட கடவுள். உங்களை சந்திக்கிறதுக்காக வந்திருக்கேன்'னு சொல்லுச்சு. பெருச்சாளியோட சூழ்ச்சி எதுவும் தெரியாத அப்பாவி சுண்டெலிகள் தாங்கள் சேகரிச்சு வைச்சிருந்த உணவுகளையெல்லாம் அதுக்கு கொடுத்துச்சுங்க. இப்படியே நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு இன்னும் கொழு கொழுன்னு வளர்ந்துச்சு பெருச்சாளி. ஒருநாள் ராத்திரி எல்லா எலிகளும் தூங்கிட்டிருக்கிறப்போ `சோ'ன்னு மழைப்பெய்ய ஆரம்பிச்சது. அசந்து தூங்கிட்டிருந்த பெருச்சாளி மழையில தொப்பலா நனைஞ்சிடுச்சு. அதுமேல இருந்த பிங்க கலர் பெயின்ட்டெல்லாம் கரைஞ்சிடுச்சு. இதை சுண்டெலிகள் எல்லாம் பார்த்திடுச்சுங்க. அதுங்களுக்கு பிங்க கலர் பெயின்ட் அடிச்சிட்டு வந்தது பெருச்சாளித்தான்னு புரிஞ்சுபோச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

உடனே தூங்கிட்டிருந்த பெருச்சாளியை பங்களாவை விட்டு தர தரன்னு வெளியே இழுத்துட்டுப் போய் போட்டுடுச்சுங்க. மறுநாள் கண்ணு முழிச்ச பெருச்சாளி, தன் மேல இருக்கிற கலரெல்லாம் கரைஞ்சு போயிடுச்சுங்கிறது தெரியாம மறுபடியும் அந்த பங்களாவுக்கு போச்சு. பெருச்சாளி பங்களாக்குள்ள நுழையறப்போ `மியாவ்'னு ஒரு குரல். திக்குனு ஆயிடுச்சு பெருச்சாளிக்கு. `அடடா, இந்த பங்களாக்குள்ளேயும் பூனை வந்துடுச்சுபோல. அப்படின்னா, அது எல்லா சுண்டெலிகளையும் சாப்பிட்டு முடிச்சிருக்கும். இப்போ நான் உள்ள போனா அது என்னையும் சாப்பிட்டுடும்'னு பயந்துட்டு தன்னோட பழைய ஊரை நோக்கி தலைதெறிக்க ஓட ஆரம்பிச்சது. மியாவ்னு குரல் கொடுத்தது யாருன்னு நினைக்கிறீங்க குட்டீஸ். சந்தேகமே இல்லாம அந்த புத்திசாலி சுண்டெலிகள்தான்.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு