Published:Updated:

இட்லியா, ஜங்க் ஃபுட்டா... ஜெயிக்கப் போவது யாரு? - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 28

BedTimeStories
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு நகரத்துல அன்பான அம்மா அப்பா இருந்தாங்க. அவங்களுக்கு ஜான், ஜனனின்னு ரெண்டு அழகான குழந்தைகள் இருந்தாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் ஜங்க் ஃபுட்னா ரொம்ப பிடிக்கும். அதனால, அவங்க அம்மாவையும் அப்பாவையும் எப்போ பார்த்தாலும் ஜங்க் ஃபுட்ஸ் வாங்கிட்டு வரச்சொல்லி அடம்பிடிப்பாங்க. ஒருநாள் வேலைக்குப் போயிருந்த அவங்க அம்மாகிட்ட `நைட் வீட்டுக்கு வர்றப்போ ஐஸ்கிரீம், கேக், பர்கர், பீட்சா எல்லாம் வாங்கிட்டு வாங்கன்னு ரெண்டு பேரும் அடம்பிடிக்க ஆரம்பிச்சாங்க. வேற வழியில்லாம அவங்க அம்மாவும் சில ஜங்க் ஃபுட்ஸை வாங்கிட்டு வந்தாங்க. ஆனா, அன்னிக்கு அவங்களுக்கு ஆபீஸ்ல திடீர்னு மீட்டிங் நடந்ததால வீட்டுக்கு வர லேட்டாயிடுச்சு. அதனால, ஜான், ஜனனியோட அப்பா அன்னிக்கு பஞ்சு மாதிரி இட்லியும் சுடச்சுட வெஜிடபிள் சாம்பாரும் சமைச்சுக் கொடுத்தாரு. ஜங்க் ஃபுட் சாப்பிடறதுக்காகக் காத்துக்கிட்டிருந்த ஜானும் ஜனனியும் அதைச் சாப்பிட மாட்டோம்னு அழுதுகிட்டே தூங்கிட்டாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
ரோஜாவுக்கும் மல்லிக்கும் நடந்த சண்டை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 27

லேட் நைட் வீட்டுக்கு வந்த அவங்கம்மா, தான் வாங்கிட்டு வந்த ஜங்க் ஃபுட்ஸை ஃபிரிட்ஜில் வெச்சுட்டாங்க. நடுராத்திரி ஆயிடுச்சு. சாப்பிடாம தூங்கிட்ட ஜானும் ஜனனியும் பசி தாங்க முடியாம முழிச்சுக்கிட்டாங்க. ஃபிரிட்ஜ்ல சாப்பிட ஏதாவது இருக்கான்னு பார்க்கிறதுக்காக ரெண்டு பேரும் கிச்சனுக்குள்ள போனாங்க. அப்போ ஃபிரிட்ஜ்க்குள்ள இருந்து `ஏய் வெளிய போ, நான் மாட்டேன் நீ வேணும்னா வெளியே போ'ன்னு யாரோ ரெண்டு பேர் சண்டை போடுற சத்தம் கேட்டுச்சு. ஜானும் ஜனனியும் என்ன நடந்திட்டிருக்குன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்துல, ஃபிரிட்ஜோட கதவு மேல தங்களோட காதை வெச்சு கேட்க ஆரம்பிச்சாங்க.

``ஏய் நீங்கள்லாம் ஜங்க் ஃபுட் தானே"

``ஆமா, அதுக்கென்ன?"

``எங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல உங்களுக்கென்ன வேலை?"

``உங்களை மாதிரியே எங்களையும் சாப்பிடத்தான் வெச்சிருக்காங்க."

``எங்களை சாப்பிட்டா ஜானும் ஜனனியும் ஸ்ட்ராங் ஆவாங்க. ஆனா, உங்களைச் சாப்பிட்டா வீக்காகிடுவாங்களே..."

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
ஒரு குளத்துல ரெண்டு மீன்; ரெண்டு குணம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 25

``ஸோ வாட். ஜானுக்கும் ஜனனிக்கும் எங்களைத்தானே பிடிச்சிருக்கு. அவங்கம்மாகிட்ட எங்களைத்தானே வாங்கிட்டு வரச்சொல்லி அடம்பிடிச்சாங்க. பாரு, அவங்கப்பா சமைச்ச உங்களை அவங்க தொட்டுக்கூட பார்க்கலை."

நடந்த சண்டையைக் கேட்டுக்கிட்டிருந்த ஜானுக்கும் ஜனனிக்கும் ஃபிரிட்ஜ்க்குள்ள இருக்கிற ஜங்க் ஃபுட்டும் ஹெல்தி ஃபுட்டும்தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்குதுங்க அப்படிங்கிறது தெரிஞ்சு போச்சு.

மெதுவா ஃபிரிட்ஜோட கதவைத் திறக்க அது மேல கையை வெச்சாங்க. மறுபடியும் உள்ள இருந்து சண்டை போடுற சத்தம் கேட்க ஆரம்பிச்சது. இந்த முறை சத்தம் ரொம்பப் பெருசா இருந்துச்சு.

``நாங்க ஜானையும் ஜனனியும் வீக்கான குழந்தைகளாக்காம இங்க இருந்து போக மாட்டோம்."

``நாங்க எல்லாம் இங்க இருக்கிற வரைக்கும் அவங்க ஆரோக்கியமான குழந்தைகளாத்தான் இருப்பாங்க."

``நீங்க இருப்பீங்க. ஆனா, அவங்க உங்களை சாப்பிட்டாதானே ஆரோக்கியமா இருப்பாங்க. நீங்க வேணா பாருங்க, நாளைக்கு காலையில ஜானும் ஜனனியும் எங்களைத்தான் சாப்பிடுவாங்க. உங்களையெல்லாம் நேத்து சமைச்சப் பொருள்னு குப்பைத்தொட்டியில தூக்கிப் போட்டுடுவாங்க. ஹா ஹா ஹா."

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஜங்க் ஃபுட்களின் கேலிச் சிரிப்பையும் தங்களை பலவீனமாக்கியே தீருவோம்கிற அதுங்களோட பேச்சையும் கேட்ட ஜானும் ஜனனியும் ஒரு முடிவோட ஃபிரிட்ஜை திறந்தாங்க. வேகமா முன்னாடி வந்து தங்களோட கலர்ஃபுல்லான முகத்தைக் காட்டுச்சுங்க ஜங்க் ஃபுட்ஸ். அவங்க அப்பா சமைச்ச இட்லியும் சாம்பாரும் ஃபிரிட்ஜ் குளிர் தாங்காம நடுங்கிட்டு இருந்துச்சுங்க. ஜானும் ஜனனியும் இட்லியையும் வெஜிடபிள் சாம்பாரையும் வெளியே எடுத்தாங்க. நடந்ததையெல்லாம் கவனிச்சிட்டிருந்த அவங்க அப்பாவும் அம்மாவும் இட்லியையும் சாம்பாரையும் சூடு செஞ்சு கொடுக்க, சந்தோஷமா சாப்பிட்டாங்க ஜானும் ஜனனியும். ஃபிரிட்ஜுக்குள்ள இருந்த ஜங்க் ஃபுட் அதோட பேருக்கு ஏத்த மாதிரியே குப்பைத்தொட்டிக்குள்ள போயிடுச்சு.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு