Published:Updated:

ஊரு கொச்சி, 3500 புத்தகம், 600 சதுரடி வீடு - இலவச நூலகம் நடத்தும் 12 வயதான யசோதா!

நூலகம்
நூலகம்

3500 புத்தகங்கள் 120 மெம்பர்ஷிப்கள், ஏழு மொழிகளில் புத்தகங்கள் கேரளா கொச்சியில் உள்ள தன் இல்லத்தில் இலவச நூலகத்தை ஆரம்பித்திருக்கிறார் 12 வயதான யசோதா.

``எண்ட அப்பா ஒரு ஆர்டிஸ்ட். வித்தியாசமான படங்கள் வரைந்து வீட்ல வெச்சு விற்பனை செய்வாங்க. சில நேரம் வெளியிடங்களுக்கு பெயின்டிங் வேலைக்கும் போவாங்க. வருஷத்தில் எல்லா நாளும் வேலை இருக்கும்னு சொல்ல முடியாது. அப்பாவுக்கு வேலை இல்லாத நாளில் என்னையும் என் தம்பியையும் எங்க ஏரியாவில் இருக்கும் நூலகத்துக்கு கூட்டிட்டு போயி புத்தகம் படிக்கச் சொல்லிக்கொடுப்பாங்க. அங்க நாங்க பணம் கட்டி மெம்பர்ஷிப் போட்டிருக்கோம். ஒரு நாள் லேட் ஆனா, ஃபைன் கட்ட வேண்டியது இருக்கும். முக்கியமான புத்தகம் எதாவது கேட்டா அந்தப் புத்தகத்தின் விலையை அட்வான்ஸாக கட்டிட்டு எடுத்துட்டுப் போகச் சொல்லுவாங்க. காசு இருக்குறவங்க அட்வான்ஸ் கட்டி எடுத்துட்டுப் போவாங்க, காசு இல்லாதவங்க என்ன பண்ண முடியும்.

தினமும் காலையில் 9 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை எங்களோட நூலகம் திறந்திருக்கும். இலவச நூலகம்னு சொன்னதும் நிறைய பேர் புத்தகங்கள் கொடுத்தும் உதவிட்டு இருக்காங்க
யசோதா

`முழுக்க முழுக்க இலவச நூலகம் எங்க இருக்குனு' அப்பாகிட்ட கேட்டேன். அப்படி எங்கையுமே இருக்காது. நூலகத்தில் இருக்கிற புத்தகங்களை பராமரிக்கத்தான் காசு வாங்குறாங்கனு அப்பா சொன்னாங்க. அப்போ நாம் இலவசமா நூலகம் ஆரம்பிக்கலாம், புத்தகங்களை நான் பராமரிக்கிறேனு அப்பாகிட்ட சொன்னேன். அப்பாவும் தம்பியும் சத்தம்போட்டு சிரிச்சு, இதெல்லாம் சாத்தியமே இல்லைனு சொல்லிட்டாங்க.

ஆனாலும் எனக்கு அந்த ஆசை விடல. எப்படியாவது ஒரு நூலகம் தொடங்கணும்னு கனவு இருந்துச்சு. ஒரு மாசம் கழிச்சு என்னோட பிறந்தநாள் வந்துச்சு. `என்ன கிப்ட் வேணும்'னு அப்பா கேட்க, `நூலகம் தொடங்கலாம்ப்பா'னு சொன்னேன். நிலையான வருமானம் இல்லாத நாம எப்படித் தொடங்குகிறது. அவ்வளவு புத்தகம் வாங்க பணத்துக்கு எங்க போகுறதும்மானு அப்பா கேட்டாங்க.

அதுக்கு அப்புறம்தான் ஃபேஸ்புக்ல பதிவு போட்டு புத்தகம் சேகரிக்கிற ஐடியா வந்துச்சு. என்னோட பதிவை பார்த்துட்டு நிறைய பேர் அவங்க வீட்டில் இருந்த பயன்படாத, படிச்சு முடிச்ச புத்தகங்களை எங்களுக்குக் கொடுக்கத் தயாராக இருந்தாங்க. கொரியர் மூலமாகவும் தெரிஞ்சவங்க மூலமாகவும் புத்தகங்கள் வீடு தேடி வர ஆரம்பிச்சுது.

புத்தகங்கள் வர வர அதைத் துறை வாரியாக பிரிச்சு தனித்தனியா வைக்கிற வேலையை எங்க அம்மா செஞ்சாங்க. தமிழ், மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு, இந்தி, ஸ்பானிஷ், ஆங்கிலம் என ஏழு மொழியில் புத்தகங்கள் கிடைச்சுது. முகநூலில் பதிவிட்ட ஒரே வாரத்தில் 1500 புத்தகங்கள் சேகரிக்க முடிஞ்சுது. கிழியும் நிலையில் இருந்த புத்தகங்கள்யெல்லாம் தனியாக எடுத்து, நானும் என் தம்பியும் பக்கங்களை ஒட்டி, அட்டைகள் வெச்சு வீட்டிலேயே பையிண்டிங் பண்ணினோம்.

ஊரு கொச்சி, 3500 புத்தகம், 600 சதுரடி வீடு - இலவச நூலகம் நடத்தும் 12 வயதான யசோதா!

புத்தகங்கள் கிடைச்சுருச்சு அதையெல்லாம் மக்களுக்குப் பயன்படும் வகையில் அடுக்கி வைக்க இடம் வேணும் இல்லையா... வாடகைக்கு இடம் எடுக்கலாம்னு அம்மா சொன்னாங்க. ஆனால், அப்பாவுக்கு போதுமான வருமானம் இல்லங்கிறதுனால, அப்பாவோட கேலரியை எனக்காக கொடுத்தாங்க. `என்னோட கனவுகளுக்கு உயிர் கொடுக்குற இடம் இந்த கேலரினு' அடிக்கடி சொல்ற அப்பாதான் அதை எனக்காக தாரை வார்த்தாங்க. அப்பா கிரேட்'' என அமைதியாகித் தொடர்கிறார் யசோதா.

``வீட்டில் இருந்த ரேக்குகளில் புத்தகங்களை அடுக்கி, தேவைப்படுபவர்களுக்குப் புத்தகங்கள் கொடுக்க ஆரம்பிச்சோம். ஒரு முறை புத்தகங்கள் எடுத்துட்டுப் போறவங்க 15 நாள் அந்தப் புத்தகத்தை வெச்சுக்கலாம். 15 நாள் கழிச்சு அவங்க அந்தப் புத்தகத்தைக் கொண்டு வரலைனா, நான் போன் மூலமா அவங்களுக்கு நினைவுபடுத்துவேன். நான் பள்ளிக்கூடம் போயிட்டா எங்க அம்மா நூலகத்தைப் பார்த்துப்பாங்க. ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு நம்பர் கொடுத்திருக்கேன். எந்த புத்தகத்தை யார் எடுத்துட்டு போறாங்கன்னு ஒரு  நோட்டு மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கேன்.

அதனால் புக் தொலைய வாய்ப்பே இல்ல. ஒரு முறை தவணையாக கொடுத்த புத்தகம், என்னோட நூலகத்துக்கு மறுமுறை வரும்போது சேதமாகியிருந்தா, அதைச் சரி செய்து பக்கங்களை ஒட்டிய பிறகுதான் ரேக்குகளில் அடுக்குவேன். ஒவ்வொரு புத்தகமும் இன்னொருத்தருடைய கனவுனு நான் நினைக்கிறேன். அதைச் சரியா பாதுகாக்கணும்ல. குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள் நிறைய இருப்பதால் தினமும் 150 குழந்தைகளாவது வந்துட்டு இருக்காங்க. இலவச மெம்பர்ஷிப்பும் கொடுத்துட்டு இருக்கேன். உடல் நிலை முடியாமல் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் இருக்கவங்களுக்கு நானே புத்தகங்களைக் கொண்டு போய் கொடுத்து வாங்கிட்டு வந்துட்டு இருக்கேன்.

கேரளா
கேரளா

தினமும் காலையில் 9 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை எங்களோட நூலகம் திறந்திருக்கும். இலவச நூலகம் ஐடியாவை சொன்னதும் நிறைய பேர் புத்தகங்கள் கொடுத்தும் உதவிட்டு இருக்காங்க. இப்போ என்னோட நூலகத்தில் 3500 புத்தகங்கள் இருக்கு. புத்தகத்தை அடுக்கி வைக்கும் ரேக்குகளும், டேபிள் சேர்களையும் ஒரு அங்கிள் வாங்கிக்கொடுத்தாங்க. இந்த இடத்துக்கான மின்சார செலவை அப்பா பார்த்துகிறாங்க.

நிறைய இடங்களில் இருந்து பாராட்டுகள் கிடைச்சுட்டு இருக்கு. உண்மையைச் சொல்லனும்னா பாராட்டைவிட என் நூலகத்துக்கு கூடுதலாய் கிடைக்கும் புத்தகங்கள்தான் எனக்குச் சந்தோஷத்தை கொடுக்கும். ஒவ்வொருத்தருடைய பாராட்டும் எனக்கு இன்னும் ஆர்வத்தை அதிகரிச்சுட்டே இருக்கு.

இன்னும் இன்னும் அதிகமான புத்தகங்களையும், அரிதான புத்தகங்களையும் சேகரிக்கணும்" என புன்கைக்கும் யசோதாவின் சிரிப்பில் ஆயிரம் கனவுகள் ஒளிர்விடுகிறது.

அடுத்த கட்டுரைக்கு