Election bannerElection banner
Published:Updated:

`முயல் ஆமை ரேஸ்... இந்த முறை என்னாச்சு தெரியுமா?' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories 17

Rabbit
Rabbit ( Image by OpenClipart-Vectors from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு காட்டுல ஒரு முயலும் ஆமையும் நல்ல நண்பர்களாக இருந்துச்சுங்களாம். காலையில எழுந்ததும் ஒண்ணா வாக்கிங் போறதுல இருந்து நைட்டு டின்னர் சாப்பிடறது வரைக்கும் இரண்டுமே ஒண்ணாதான் இருக்குங்க. வாக்கிங் போறப்போ முயல், ஆமைக்காக மெதுவா நடக்கும். ஆமையோ, தன் முயல் நண்பனுக்காக வேகமாக நடக்க முயற்சி செய்யும். இப்படி முயலும் ஆமையும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து தங்களோட நட்பை ரொம்ப ஸ்ட்ராங்கா வளர்த்துட்டு வந்துச்சுங்க. முயல், ஆமை நட்பைப் பார்த்து மத்த முயல்களும் ஆமைகளும் பொறாமைப்பட ஆரம்பிச்சதுங்க. பொறாமைக்கார முயல்கள் சிலது ஒண்ணு சேர்ந்துகிட்டு, `நாம எல்லாரும் பிளான் பண்ணி முயலுக்கும் ஆமைக்கும் ஏதாவது போட்டி வைக்கணும். அந்தப் போட்டியில முயல் ஜெயிச்சா ஆமைக்குக் கோபம் வந்துடும். ஆமை ஜெயிச்சா முயலுக்கு கோபம் வந்துடும். மனசுக்குள்ள கோபம் வந்துட்டா எவ்ளோ ஸ்ட்ராங்கான நட்பும் வீக்காகிடும்' அப்படின்னு திட்டம் போட்டுச்சுங்க. கூடவே, இந்தத் திட்டத்தை மறக்காம பொறாமைக்கார ஆமைகள்கிட்டேயும் சொல்லுச்சுங்க பொறாமைக்கார முயல்கள். இந்தத் திட்டத்துக்கு அந்த ஆமைகளும் ஓகே சொல்லுச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

மறுநாள், காலையில வாக்கிங் போறதுக்காக தூக்கம் கலைஞ்சு எழுந்து உட்கார்ந்துட்டு இருந்துச்சு ஆமை. முயல் கொஞ்சம் அசதியில இன்னும் தூங்கிட்டு இருந்துச்சு. அந்த நேரம் பார்த்து பொறாமைக்கார ஆமைகள், முயலுக்காகக் காத்திட்டிருந்த ஆமைகிட்ட பேச்சு கொடுக்க ஆரம்பிச்சிதுங்க. `நீங்க ரெண்டு பேரும் தினமும் வாக்கிங் போய் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கீங்க. ஆனா, உங்க ரெண்டு பேர்ல யார் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டாதானே இன்னொருத்தரும் அதே அளவுக்கு ஸ்ட்ராங்கா மாற முடியும். அதுக்காக ஒரு போட்டி வைக்கலாமா'னு ரொம்ப இனிமையான குரல்ல கேட்டுச்சுங்க. அதுக்கு ஆமை, `என்ன போட்டி வைக்கலாம்னு நீங்களே சொல்லிட்டா இன்னும் நல்லாருக்குமே'ன்னு சொல்லுச்சு. `எங்க பிளான்ல நல்லா மாட்டினியா'ன்னு மனசுக்குள்ள சந்தோஷப்பட்ட பொறாமைக்கார ஆமைகள் `ஓட்டப்பந்தயம் வைக்கலாம்'னு சொல்லுச்சுங்க. ஆமையும் அதுக்கு ஓகே சொல்லுச்சு.

`ஆமையை ஏமாத்தி போட்டிக்கு சம்மதிக்க வெச்சாச்சு. இனி முயலையும் ஏமாத்தணும். ஆனா, முயலும் ஆமையும் எப்பவும் ஒண்ணாதான் இருக்குங்க. என்ன பண்ணலாம்'னு பொறாமைக்கார முயல்கள் யோசிச்சிட்டு இருந்துச்சுங்க. அந்த நேரம் பார்த்து சுசு போறதுக்காக முயல் தனியா வந்துச்சு. இதுதான்டா நேரம்னு பொறாமைக்கார முயல்கள் எல்லாம் அதுகிட்ட போய் நின்னுச்சுங்க. `என்னாச்சு, ஏன் இப்படி எல்லாரும் ஓடி வர்றீங்க'ன்னு கேட்டுச்சு முயல். அதுக்கு அந்த முயல்கள், `நீயும் உன் நண்பன் ஆமையும் தினமும் வாக்கிங் போய் ஸ்ட்ராங்கா இருக்கீங்க. உங்கள்ல யாரு பலசாலின்னு தெரிஞ்சுக்க நாங்க எல்லாரும் விரும்பறோம். எங்களுக்காக நீ ஆமையோட ரன்னிங் ரேஸ் ஓடுறியா'ன்னு கேட்டுச்சுங்க. முயலும் சரின்னு சொல்லிடுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

போட்டிக்காக ஆமையும் முயலும் ஒண்ணாவே பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்துச்சுங்க. பொறாமைக்கார முயல்களுக்கும் ஆமைகளுக்கும் இது இன்னும் கோபத்தை அதிகப்படுத்திடுச்சு. அதனால, அதுங்க இன்னொரு திட்டம் போட்டுச்சுங்க. பொறாமைக்கார முயல்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்துக்கிட்டு முயல்கிட்ட போச்சுங்க. `உன் நண்பன் ஆமை ரொம்ப மெதுவா நடப்பான். அவன் வரட்டும்னு நீ பாட்டுக்கு படுத்து தூங்கிட்டின்னா என்ன பண்றது. அதனால, நீ தூங்காம இருக்கிறதுக்கு நாங்க தர்ற மருந்தை சாப்பிடு'ன்னு சொல்லுச்சுங்க. முயலுக்கு, முதல் தடவையா `இதுங்க நம்மளை வெச்சு ஏதோ திட்டம் போடுதுங்க போல'ன்னு சந்தேகம் வந்துச்சு. உடனே கோபமா, `விளையாட்டை நேர்மையா விளையாடணும். திறமையாலதான் ஜெயிக்கணும். அதனால நீங்க தர்ற மருந்தை சாப்பிட முடியாது'ன்னு சொல்லி அதுங்களை விரட்டி விட்டுடுச்சு.

இன்னொரு பக்கம் பொறாமைக்கார ஆமைகள் என்ன பண்ணுச்சு தெரியுமா? ஓட்டப்பந்தயத்துக்காக பிராக்டிஸ் பண்ணிக்கிட்டிருந்த ஆமைகிட்ட போய், `நீ ரொம்ப ஸ்லோவா நடப்பே. உன் நண்பன் முயலோ ரொம்ப வேகமா ஓடுவான். அதனால, அவனுக்குத் தெரியாம உன்னோட கால்கள்ல ஸ்கேட்டிங் ஷூவை மாட்டிக்கோ. அப்பதான் நீ ஜெயிக்க முடியும்னு சொல்லுச்சுங்க. இதைக் கேட்ட ஆமைக்கு பயங்கர கோபம் வந்திடுச்சு. `உங்களுக்கு என்ன தைரியமிருந்தா விளையாட்டுல சீட்டிங் செய்யச் சொல்லுவீங்க. போயிடுங்க. என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க' அப்படின்னு கோபமா சொல்லிடுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

நடந்த விஷயங்களை எல்லாம் டின்னர் டைம்ல ஆமையும் முயலும் ஒண்ணுகிட்ட ஒண்ணு சொல்லுச்சிங்களாம். அப்போதான் பொறாமைக்கார முயல்களும் ஆமைகளும் தங்களைப் பிரிக்கிறதுக்கு திட்டம் போட்டிருக்குங்க அப்படிங்கிறது அதுங்களுக்குப் புரிஞ்சது. அதுக்கப்புறம் முயலும் ஆமையும், பொறாமைக்கார அனிமல்ஸோட பேச்சைக் கேட்கிறதே இல்லையாம்.

- நாளை சந்திப்போம்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு