Published:Updated:

குட்டி விலங்குகளுக்கு ராணித் தேனீ கொடுத்த பரிசு... ஒரு கதை சொல்லட்டுமா?! #BedTimeStories - 26

Bee
News
Bee ( Image by marian anbu juwan from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Published:Updated:

குட்டி விலங்குகளுக்கு ராணித் தேனீ கொடுத்த பரிசு... ஒரு கதை சொல்லட்டுமா?! #BedTimeStories - 26

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Bee
News
Bee ( Image by marian anbu juwan from Pixabay )

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு காட்ல பெரிய மலையொண்ணு இருந்துச்சாம். அந்த மலையில உயரமான மரம் ஒண்ணு இருந்துச்சு. அதுல ரொம்ப பெரிய்யய... தேனடை ஒண்ணு இருந்துச்சு. அந்த மலையில வாழ்ந்துகிட்டிருக்குற எல்லா விலங்குகளுக்கும் அந்தத் தேனடை மேல ஒரு கண்ணு. அங்கிருக்கிற தேனீக்களை விரட்டிட்டு எப்படியாவது அந்தத் தேனை டேஸ்ட் பண்ணிப் பார்க்கணும்னு அதுங்களுக்கு எல்லாம் ரொம்ப ஆசை. ஆனா, தேனீக்களோட கொடுக்கை நினைச்சா அதுங்களுக்கு பயத்துல கை, காலெல்லாம் கிடுகிடுன்னு நடுங்க ஆரம்பிச்சிடும். அதனால, தேனடை இருக்கிற மரம் பக்கமே பெரிய விலங்குகள் போகாது.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

சில நேரத்துல அந்தத் தேனடையில இருந்து தேன் துளிகள் சொட்டுச் சொட்டா கீழ சிந்த ஆரம்பிக்கும். அந்த நேரத்துல அந்த மலையில வாழ்ந்துகிட்டிருக்குற பெரிய விலங்குகளெல்லாம் ஓடி வந்து தலையை அண்ணாந்து அந்தத் தேன் துளிகளைக் குடிச்சிடும். பெரிய விலங்குகளோட போட்டி போட முடியாத குட்டி விலங்குகள், வாய்ல ஜொள்ளு வடிய அய்யோ பாவமா இதை வேடிக்கை பார்த்துட்டு நிக்குங்க.

ஒருநாள் அந்தப் பெரிய தேனடையில இருந்து ஒரு சின்னத்துண்டு உடைஞ்சு கீழே விழுந்துடுச்சு. அதை ஓர் ஆட்டுக்குட்டி பார்த்துடுச்சு. `ஆஹா தேனடை’ன்னு அதுகிட்ட ஓடி வந்த ஆட்டுக்குட்டி பயத்தோட அண்ணாந்து பார்த்துச்சு. தேனடையில இருந்த வேலைக்கார தேனீக்களெல்லாம் பூக்கள்ல இருந்து தேனைச் சேகரிக்க வெளியே போயிருந்ததால, தேனடை சத்தமில்லாம இருந்துச்சு. நாக்குல நீர் ஊற ஆட்டுக்குட்டி தேனடையில வாய் வைக்க போக, `நில்லு’ அப்படின்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. ஆட்டுக்குட்டி பயந்துபோய் தலையை நிமிர்த்திப் பார்த்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

எதிரே இருந்த புதர் மறைவுல இருந்து முயல் குட்டி ஒண்ணு வேகமா வெளியே வந்துச்சு. வந்த வேகத்துல `என்ன நீ மட்டும் தனியா தேனை சாப்பிடலாம்னு பார்க்கிறியா. அப்படி சாப்பிட்டா வயிறு வலிக்குமாம். எங்கம்மா சொன்னாங்க’ன்னு தன்னோட குட்டிக்கண்ணை உருட்டி சொல்லுச்சு முயல் குட்டி. `அப்ப வா ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்’னு முயல் குட்டியைக் கூப்பிட்டுச்சு ஆட்டுக்குட்டி. அந்த நேரம் பார்த்து `அப்ப நானு, எனக்கு தேனு’ அப்படின்னு சொல்லிக்கிட்டு வந்து நின்னுச்சு நரிக்குட்டி. சரி மூணு பேரும் ஆளுக்குக் கொஞ்சம் இந்த தேனடையைச் சாப்பிடலாம்னு ரொம்ப பெருந்தன்மையா சொல்லுச்சு முயல் குட்டி.

அதுக்கு நரிக்குட்டி, `ஃபிரெஷ் தேனா சாப்பிடறதைவிட இதுல ஏதாவது ரெசிப்பி செஞ்சு சாப்பிடலாமா'ன்னு கேட்டுச்சு. மத்த ரெண்டு குட்டிகளும் `எதுவாயிருந்தாலும் சீக்கிரமா சொல்லு. தேனீங்க பார்த்துட்டா நம்மளைக் கொட்டுக் கொட்டுன்னு கொட்டி முகத்தை வீங்க வெச்சிடும்’னு பயந்துகிட்டே சொல்லுச்சுங்க. உடனே நரிக்குட்டி, `இந்தத் தேனடையை இலைகளுக்கு நடுவுல வெச்சு சாண்ட்விச் செய்யலாமா, இல்ல பழங்களோட சேர்த்து டெசர்ட் செய்யலாமா’ன்னு கேட்டுச்சு. ஆட்டுக்குட்டி சாண்ட்விச் கேட்க, முயல் குட்டி டெசர்ட்தான் வேணும்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சது. அப்படியே பேச்சு வளர்ந்து மூணு குட்டிகளும் சத்தமா சண்டை போட ஆரம்பிச்சிதுங்க. கரெக்டா அந்த நேரம் பார்த்து பூக்கள்ல இருந்து தேனைச் சேகரிக்க போன வேலைக்கார தேனீக்கள் எல்லாம் திரும்பி வந்துச்சுடுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அதுங்களோட கண்ணுல கீழே கிடக்கிற தேனடையும் அதுக்காக சண்டை போட்டுக்கிட்டு இருந்த மூணு குட்டிகளும் பட்டுச்சு. அவ்வளவுதான், தேனீக்களுக்கு வந்துச்சே கோவம். சர்னு கீழே இறங்கி வந்த தேனீக்கள், குட்டிகளைத் தங்களோட கொடுக்கால கொட்ட வந்துச்சுங்க. பயந்துபோன மூணு குட்டிகளும் அதுங்களோட முன்னங்கால்களால முகத்தை மறைச்சுக்கிட்டு வீல் வீல்னு கத்த ஆரம்பிச்சதுங்க. இந்தச் சத்தத்தைக் கேட்டு தேனடையில இருந்த ராணித்தேனீ கீழே எட்டிப் பார்த்துச்சு. அதோட கண்ணுல மூணு குட்டி விலங்குகள் பயத்துல அழுதுகிட்டிருக்கிறதும் அதுங்களைக் கொட்டறதுக்காகத் தேனீக்கள் சுத்தி வர்றதும் பட்டுச்சு. உடனே தன்னோட வேலைக்காரத் தேனீக்களை கூட்டுக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டுச்சு ராணித் தேனீ. அதைக் கேட்டவுடனே கீழே கிடந்த தேனடைத் துண்டை எடுத்துக்கிட்டு பறந்து போயிட்டுச்சுங்க வேலைக்காரத் தேனீக்கள். ஆட்டுக்குட்டி, முயல் குட்டி, நரிக்குட்டி மூணும், `நாம சண்டை போட்டதால அபூர்வமா கிடைச்ச தேனடையையும் சாப்பிட முடியாம போயிடுச்சு'ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சிதுங்க. குட்டிகளோட அழுகை சத்தம் லேசா ராணித் தேனீ காதுல விழுந்துச்சு. அதுக்கு மனசு உருகிப் போயிடுச்சு. உடனே மூணுத் துண்டு தேனடைகளை எடுத்துட்டு கீழ வந்து ஆளுக்கொருத் துண்டு கொடுத்துட்டு, மூணு குட்டிகளோட கண்ணையும் துடைச்சு விட்டுட்டு மறுபடியும் தன்னோட தேனடைக்குப் பறந்துப் போயிடுச்சு. குட்டிகள் மூணும் தேனடைத் துண்டுகளை ரசிச்சு ருசிச்சு சாப்பிட ஆரம்பிச்சிதுங்க.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.